Friday, March 29மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

நீட் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்; ஆதார் கார்டு அவசியம்; சிபிஎஸ்இ அறிவிப்பு

தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வு எனப்படும் நீட் (National Eligibility cum Entrance Test- NEET 2018) தேர்வுக்கு இன்றுமுதல் (பிப்ரவரி 8, 2018) விண்ணப்பிக்கலாம் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. ஆதார் கார்டு விவரங்கள் இருந்தால்தான் தேர்வு எழுத முடியும். மார்ச் 9ம் தேதி, கடைசி நாளாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் ஆகிய மருத்துவப்படிப்புகளுக்கு நீட் தேர்வு மூலமே மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்தது. கடந்த ஆண்டு முதல் தமிழகத்திலும் நீட் தேர்வு முடிவுகள் அடிப்படையிலேயே மருத்துவ படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டது.

இந்நிலையில், நடப்பு 2018-2019ம் கல்வி ஆண்டுக்கான நீட் தேர்வுக்கு இன்று முதல் (பிப்ரவரி 8, 2018) விண்ணப்பிக்கலாம் என சிபிஎஸ்இ (The Central Board of Secondary Education- CBSE) அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். வரும் மார்ச் 9ம் தேதி காலை 11.50 மணி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

தேர்வு நாள்:

நீட் தேர்வு, வரும் மே மாதம் 6ம் தேதி நாடு முழுவதும் நடக்கிறது. ஏப்ரல் மூன்றாவது வாரத்தில் இருந்து நீட் தேர்வர்களுக்கு தேர்வுக்கூட அனுமதி அட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தகுதிகள்:

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தேர்வர்கள் 31.12.2017ம் தேதியன்றோ அல்லது அதற்கு முன்னதாகவோ 17 வயது நிறைவு பெற்றிருத்தல் வேண்டும்.

பொதுப்பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு 25 என்றும், இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கு 30 வயதாகவும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இந்த வயது நிர்ணயத்தைவிட அதிகமானோர் தேர்வுக்கு விண்ணப்பிக்க இயலாது.

பிளஸ்-2 தேர்வை நேரடியாகவோ அல்லது திறந்தவெளி பள்ளி முறையிலோ படித்து தேர்ச்சி பெற்றவர்களும் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாது.

தேர்வுக்கட்டணம்:

பொதுப்பிரிவினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர் ரூ.1400ம், பட்டியல் இனத்தவர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.750ம் தேர்வுக்கட்டணம் செலுத்த வேண்டும். கட்டணச் சலுகை கோருவோர் அதுகுறித்த விவரங்களையும் இணையதளத்தில் அதற்குரிய இடத்தில் தெரிவிக்க வேண்டும்.

தேர்வுக்கட்டணத்தை ஆஃப்லைன், ஆன்லைன் மூலம் செலுத்தலாம். கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, நெட் பேங்கிங், இ-வாலட் மூலமும் கட்டணம் செலுத்தலாம்.

ஆதார் அவசியம்:

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தேர்வர்கள் கண்டிப்பாக ஆதார் அட்டையைத்தான் அடையாள ஆவணமாக பயன்படுத்த வேண்டும். அதில் உள்ளபடியே தங்கள் பெயர், பிறந்த தேதி, பாலின விவரங்களைக் குறிப்பிட வேண்டும். வட கிழக்கு மாநிலங்களுக்கு மட்டும் இதில் சில சலுகைகள் அளிக்கப்பட்டு உள்ளன.

ஏற்கனவே அமலில் உள்ளதுபோல், ஒரு தேர்வர் நீட் தேர்வை அதிகபட்சம் மூன்று முறை எழுதலாம். முதல் வாய்ப்பு என்பது கடந்த ஆண்டில் எழுதியிருந்தால் அதுவும் கணக்கில் அடங்கும்.

இணையதளம் முடங்கியது:

நீட் தேர்வு குறித்த அறிவிப்பு வெளியிட்ட சில மணி நேரங்களில் சிபிஎஸ்இ-ன் அதிகாரப்பூர்வ இணையதளமான www.cbseneet.nic.in முடங்கியது. அன்டர் கன்ஸ்ட்ரக்ஷன் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. சில மணி நேரங்களில் இந்த இணையதளம் வழக்கம்போல் பயன்பாட்டுக்கு வந்துவிடும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் விவரங்களுக்கும், விண்ணப்பிக்கவும் சிபிஎஸ்இ-ன் இணையதளத்தை பார்க்கவும்.