Friday, April 26மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

டீ குடிப்பதற்கே 68 லட்சம் ரூபாய் செலவழித்த பாஜக அரசு!

நாமெல்லாம் நம்ம ஊர் எம்எல்ஏக்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் சம்பளத்தை லட்சத்து அஞ்சாயிரமாக உசத்திட்டாலே கூச்சல் போடுகிறோம். உண்மை என்னவெனில், தமிழ்நாட்டை விட பல மாநிலங்களில் எம்எல்ஏக்களின் சம்பளம் ரொம்பவே அதிகம்.

ஆனால், இப்போது சொல்லப்போகும் சேதி கொஞ்சம் வித்தியாசமானது. கேட்டால், அம்மாடியோவ்! என வாய் பிளக்கும் சமாச்சாரம்தான் இது.

உத்தராகண்ட் மாநிலத்தில் பாஜகதான் ஆட்சியில் இருக்கிறது. அதன் முதலமைச்சர் திரிவேந்திர சிங் ராவத். கடந்த 2017ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் ஜெயித்து, ஆட்சிக்கு வந்தார்கள். அதற்குமுன்பு அங்கு காங்கிரஸ் கட்சிதான் ஆட்சியில் இருந்தது.

ஆட்சிக்கு வந்த கடந்த 9 மாதத்தில் உத்தராகண்ட் மாநில அரசாங்கம், டீ, பஜ்ஜி, போண்டா, வடை, முறுக்கு, வருத்த முந்திரி போன்ற நொறுக்குத் தீனிகள் (ஸ்னேக்ஸ்), கார வகைகளுக்கு மட்டுமே 68 லட்சத்து 59 ஆயிரத்து 865 ரூபாய் செலவழிச்சிட்டாங்களாம்.

அதை, ஹேமந்த் சிங் கானியா என்கிற சமூக ஆர்வலர், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலமாக கேட்டு, நாட்டுக்கு அம்பலப்படுத்தியிருக்கிறார்.

இது தொடர்பாக பாஜக கட்சி நிர்வாகிகள் சிலரிடம் கேட்டபோது, ”இதெல்லாம் ஒரு மேட்டரா?” என்கிற ரீதியில் உதட்டை சுளித்துள்ளனர்.

முதலமைச்சர் திரிவேந்திர சிங் ராவத், மக்களிடம் குறைகேட்பு மனுக்கள் பெறும் கூட்டம், அதிகாரிகள் கூட்டத்தை எல்லாம் தன்னோட அலுவலக அறையில்தான் நடத்துறார். அதனால் அங்கு வரக்கூடியவர்களுக்கு கொஞ்சம் டீ, வடை கொடுத்து உபசரிக்கிறதுல என்ன தப்பு? அது மட்டும் என்ன சும்மாவா கிடைக்குது?. இதையெல்லாம் போய் பெரிசா கணக்குக் கேட்கிறீர்களே,” என்று பலர் அசால்டாக பதில் அளித்துள்ளனர்.

இதுக்கு முன்னாடியும் இப்படி நடந்திருக்கு. எல்லா மோசமான நிகழ்வுகளுக்கும் டக்கென்று நாம் உதாரணமாகச் சொல்வது உத்தரபிரதேசம் மாநிலத்தைதான். இதற்கும் அதுதான் முன்னுதாரணம்.

முன்பு ஆட்சியில் இருந்த சமாஜ்வாடி கட்சியின் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ், கடைசி நான்கு ஆண்டுகளில் டீ, சமோசா, குலோப் ஜாமூன் வாங்கி உபசரிப்பு அளித்த வகையில் 9 கோடி ரூபாய் செலவானதாக கணக்கு எழுதியிருந்தார்.

உத்தராகண்ட் மாநிலத்தில் முன்பு ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முதலமைச்சர் ஹரீஷ் ராவத், 2014ம் ஆண்டில் இருந்து 2016ம் ஆண்டு வரை டீ, காபி, ஸ்னேக்ஸ் உபசரிப்புக்காக 1.50 கோடி செலவிட்டதாக சொல்லியிருந்தார்.

ம்….எல்லாமே மக்கள் தலையில்தானே விடியும்.