பாரதியார் பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியர் பணி நியமனங்களில் ஊழல் நடந்ததாகக் கூறப்படும் புகார் குறித்து சிபிஐ விசாரணை தேவை இல்லை என்று தமிழக உயர்கல்வித்துறை செயலாளர் சுனில் பாலிவால் கூறியுள்ளார்.
கோயம்பத்தூர் பாரதியார் பல்கலை துணை வேந்தராக இருந்த கணபதியை, லஞ்ச ஒழிப்புப்பிரிவு காவல்துறையினர் கடந்த 3ம் தேதி கைது செய்தனர். உதவி பேராசிரியர் சுரேஷ் என்பவரிடம் 30 லட்சம் ரூபாய் லஞ்சமாக பெற்றபோது கையும் களவுமாக பிடிபட்டார்.
தமிழக உயர்கல்வித்துறை வரலாற்றில் பணியில் இருக்கும் துணை வேந்தர் ஒருவர், லஞ்ச புகாரில் கைது செய்யப்படுவது இதுவே முதல்முறை.
கணபதி, துணை வேந்தராக பொறுப்பேற்றதில் இருந்து நடந்த அனைத்து பணி நியமனங்களிலும் லஞ்சமும், ஊழலும் தலைவிரித்தாடியதாகவும், ஆட்சியாளர்களுக்கும் அதில் தொடர்பு இருப்பதாகவும் எதிர்க்கட்சிகள் புகார்கள் கூறின. மேலும், இது தொடர்பாக சிபிஐ போலீசார் விசாரணை நடத்த வேண்டும் என்றும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றன.
இந்த பரபரப்புகளுக்கு இடையே, பாரதியார் பல்கலையில் ஆட்சிமன்றக் குழு கூட்டம் உயர்கல்வித்துறை செயலாளர் சுனில் பாலிவால் தலைமையில் இன்று (பிப்ரவரி 8, 2018) நடந்தது. பல்கலை நிர்வாகம் மற்றும் கைதான துணை வேந்தர் மீதான நடவடிக்கைகள் குறித்து இந்த கூட்டத்தில் விவாதித்ததாக தெரிகிறது.
கூட்டம் முடிந்ததும் வெளியே வந்த சுனில் பாலிவால் ஊடகங்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ”பாரதியார் பல்கலையை நிர்வகிக்க மூன்று பேர் கொண்ட ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழுவில் உயர்கல்வித்துறை செயலாளர், பாரதியார் பல்கலை தரப்பில் இருந்து பயோஇன்ஃபர்மேஷன் துறைத்தலைவர் ஜெயக்குமார், கல்லூரிகள் தரப்பில் இருந்து ராமகிருஷ்ணா வித்யாலயா கலை அறிவியல் கல்லூரி எலக்ட்ரிகல் துறை இணை பேராசிரியர் திருநாவுக்கரசு ஆகியோர் உள்ளனர்.
கல்வித்தகுதி, பணி அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையிலேயே துணை வேந்தர்கள் நியமிக்கப்படுகின்றனர்.
கணபதி, பணி நியமனங்களுக்காக லஞ்சம் பெற்றதாக தொடர்ந்து புகார்கள் வந்ததால், லஞ்ச ஒழிப்புப் பிரிவு காவல்துறை அவரை கைது செய்துள்ளது.
தமிழக அரசின் மேலிடத்தின் அனுமதி இல்லாமல் இதுபோன்ற நடவடிக்கையை காவல்துறை எடுத்திருக்காது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அப்படி இருக்கும்போது, இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவையற்றது,” என்றார்.