Monday, May 27மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

தட்டச்சு தெரியாவிட்டால் டிஸ்மிஸ்! துக்ளக் தர்பார் நடத்தும் பெரியார் பல்கலை.!! #PeriyarUniversity

 

சேலம் பெரியார் பல்கலையில் அனைத்து தொகுப்பூதிய, தினக்கூலி பணியாளர்களும் தட்டச்சு (டைப்ரைட்டிங்) தகுதியை பெற்றிருக்க வேண்டும் என்று திடீரென்று உத்தரவிடப்பட்டு உள்ளது, பல்கலை வட்டாரத்தில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

சேலம் பெரியார் பல்கலையின் கீழ் சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் 101 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், உறுப்புக்கல்லூரிகள் இணைவு பெற்று, செயல்பட்டு வருகின்றன. பல்கலை மற்றும் இணைவு பெற்ற கல்லூரிகளில் தேர்வுகளுக்குத் தேவையான பணிகளை மேற்கொள்வது, பல்கலை வரவு, செலவு கணக்குகளை மேற்கொள்வது உள்ளிட்ட பணிகளுக்காக தொகுப்பூதியம் மற்றும் தினக்கூலி ஒப்பந்த அடிப்படையில் 478 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இவர்களில் 282 பணியாளர்கள் தொகுப்பூதியத்திலும், மற்றவர்கள் தினக்கூலி ஒப்பந்தத்தின் பேரிலும் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி பல ஆண்டுகளாக பல்கலை நிர்வாகத்துடன் போராடி வருகின்றனர்.

 

ஆனால், சர்வமும் ஊழல் மயமாகிவிட்ட பெரியார் பல்கலையில், தொகுப்பூதிய / தினக்கூலி பணியாளர்களின் கோரிக்கை என்பது செவிடன் காதில் ஊதிய சங்காகவே உள்ளது. கோரிக்கை வலுப்பெற்று வருவதை அறிந்த பல்கலை நிர்வாகம், தொகுப்பூதிய பணியாளர்கள் சங்கத்தை சில்லு சில்லாக உடைக்கும் தந்திரங்களில் ஈடுபட்டதும், அதில் ஓரளவு வெற்றி பெற்றதும் வேறு கதை.

 

திடீர் சுற்றறிக்கை:

 

இது ஒருபுறம் இருக்க, தொகுப்பூதிய, தினக்கூலி பணியாளர்களை ஒடுக்கும் நோக்கில், நேற்று முன்தினம் (செப்டம்பர் 3, 2018) அவசர அவசரமாக ஒரு சுற்றறிக்கையை பதிவாளர் (பொறுப்பு) தங்கவேல் பெயரில் வெளியிட்டுள்ளது.

தங்கவேல்

அந்த சுற்றறிக்கையில், ‘தொகுப்பூதிய பணியாளர்கள், தினக்கூலி பணியாளர்கள் அனைவரும் கட்டாயமாக தட்டச்சு தகுதியைப் பெற்றிருக்க வேண்டும். அவ்வாறு தகுதி இல்லாதவர்களுக்கு பணி நீட்டிப்பு வழங்க இயலாது,’ என்று ஒருவித அடக்குமுறை தொனியுடன் தெரிவித்துள்ளது.

 

தட்டச்சுப் பயிற்சி பெற பல்கலை நிர்வாகம் குறிப்பிட்ட கால அவகாசம் வழங்குவதாகவும் கூறப்பட்டுள்ளதோடு, இதற்கென ஒரு படிவத்தையும் வழங்கியுள்ளது. அந்தப் படிவத்தில், பணியாளர்கள் தங்கள் பெயர், பிறந்த தேதி, கல்வித்தகுதி, தட்டச்சு தகுதி, கணினி இயக்கும் தகுதி ஆகிய விவரங்களைக் குறிப்பிட வேண்டும் என்றும் பணித்துள்ளது. இந்த படிவத்தை வரும் 10ம் தேதிக்குள் பூர்த்தி செய்து, பதிவாளர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

 

காலம்போன காலத்தில் இப்படி ஒரு சுற்றறிக்கை வெளியானதன் பின்னணியில் பல்கலையின் ஒடுக்குமுறையும், ஊழியர் விரோதப் போக்கும் மலிந்துள்ளதாக பரபரப்பு தகவல்களைச் சொல்கின்றனர் தொகுப்பூதிய பணியாளர்கள்.

பணி நிரந்தரம் கோரி, தொகுப்பூதிய பணியாளர்கள் சங்கத்தினர் இந்திய தொழிலாளர் நலச் சட்டம் – 1947, பிரிவு (2) (கே)- ன் கீழ், கடந்த ஜூலை 27, 2018ம் தேதி ஒரு மனுவைத் தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுதான் இப்போது பல்கலைக்கு பெரும் குடைச்சலை ஏற்படுத்தி இருக்கிறது. அதன் வெளிப்பாடுதான், தட்டச்சு தகுதி, கணினி தகுதி குறித்த சுற்றறிக்கை என்கிறார்கள் பணியாளர்கள்.

 

‘நாக்’ குழு வருகை:

 

இதுபற்றி தொகுப்பூதிய பணியாளர்கள் சிலர் நம்மிடம் உள்ளக்குமுறல்களைக் கொட்டித் தீர்த்தனர்.

 

பெரியார் பல்கலையில் தட்டச்சு இயந்திரங்களே இல்லாதபோது அதில் பயிற்சி எடுத்து எங்கே பிரயோகப்படுத்தப் போகிறார்கள்? ‘நாக்’ குழுவினர் இப்பல்கலைக்கு ஆய்வுக்கு வந்தபோது, இப்போதுள்ள தொகுப்பூதிய, தினக்கூலி பணியாளர்களை எல்லாம் நிரந்தர பணியாளர்களாக போலியாக கணக்கு காட்டித்தான் ‘ஏ கிரேடு’ அந்தஸ்தை பெற்றனர். அப்போதெல்லாம் எங்களுக்கு தட்டச்சு தெரியுமா? என்று கேட்காத பல்கலை நிர்வாகம், இப்போது சாட்டையைச் சுழற்றுவது மனிதாபிமானற்ற செயல்.

 

கழிப்பறையை சுத்தம் செய்பவருக்கும் கணினி?:

 

அதேநேரம், எங்களில் பலருக்கு தட்டச்சு தெரியாது. ஆனால் கணினியில் ஓரளவு பயிற்சி பெற்றிருக்கிறோம். அதை வைத்துக்கொண்டுதான் ‘நாக்’ குழு வருகையின்போது இரவு பகல் பாராமல் வேலை செய்து கொடுத்தோம். தேர்வாணையர் அலுவலகத்தில் பணியாற்றும் ஓர் ஊழியர், வினாத்தாள்களை கட்டு கட்டி, கல்லூரிகளுக்குக் கொண்டு செல்வார். விடைத்தாள் திருத்தும்போது விடைத்தாள் கட்டுகளை பிரித்து வழங்குவார். இதுபோன்ற ‘அன் ஸ்கில்டு’ ஊழியருக்கு தட்டச்சும், கணினி பயிற்சியும் ஏதற்கு?.

 

அனைத்து தொகுப்பூதிய, தினக்கூலி பணியாளர்களுக்கும் கணினி, தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும் என்பதை எப்படி புரிந்து கொள்வது என்றும் தெரியவில்லை. கழிப்பறையை சுத்தம் செய்பவருக்கும் கணினி அறிவு தேவை என்கிறார்களா? சுற்றறிக்கையில், ‘பணிக்கப்பட்டுள்ளேன்’ என்று நுட்பமாக குறிப்பிட்ட பதிவாளர் (பொ) தங்கவேல், ‘அனைத்து பணியாளர்களும்’ என்பதில் கழிப்பறை சுத்தம் செய்பவர்களும், துப்புரவு தொழிலாளர்களும் அடங்குவார்களா? என்பதையும் தெளிவு படுத்தியிருக்க வேண்டும்.

எட்டாம் வகுப்பு மட்டுமே கல்வித்தகுதி கொண்ட ஏறக்குறைய 20 ஆண்டுகளாக பணியாற்றி ஓய்வு பெறும் நிலையில் உள்ளவர்கள் எப்படி இதுபோன்ற பயிற்சியைக் கற்றுக்கொள்ள முடியும்? ஏற்கனவே குறிப்பிட்ட சில தொகுப்பூதிய பணியாளர்களை மட்டும் டிரான்ஸ்பர் என்ற பெயரில் பந்தாடிய பல்கலை நிர்வாகம், இப்போது தொகுப்பூதிய பணியாளர்களின் குரல்வளையை நசுக்குவதற்கும் தயாராகிவிட்டது,” என்றனர்.

 

தட்டச்சு, கணினி போன்ற தொழில்நுட்ப பயிற்சிக்கு கால வரையறை நிர்ணயிக்காமல் பயிற்சி அளிக்க வேண்டும் என்பதும், பணி நீக்கம் போன்ற நடவடிக்கையில் ஈடுபடுவதை அறவே தவிர்க்க வேண்டும் என்பதும் அவர்களின் கோரிக்கையாக இருக்கிறது. இத்தனைக்கும் பத்தாண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் தொகுப்பூதிய பணியாளர்களின் ஊதியம் அதிகபட்சமாக 10 ஆயிரத்தைத் தாண்டவில்லை என்பதுதான் வேதனையான சேதி.

 

அது சரி…. கல்லூரி நூலகத்தில் புத்தகம் எடுத்துக் கொடுத்தவர்கள், ஒரே நேரத்தில் ஆசிரியர், ஓதுவார் என்றெல்லாம் தசாவதாரம் கமல்போல ‘கெட்-அப்’ போட்டவர்கள், போலி அனுபவ சான்றிதழ் கொடுத்தவர்கள் எல்லாம் பேராசிரியர் ஆகும்போது, கக்கூஸ் சுத்தம் செய்பவர்களுக்கும் கணினியை கட்டாயமாக்காமல் பெரியார் பல்கலை வேறு என்னதான் செய்யும்?

 

– பேனாக்காரன்.