Friday, April 19மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கு: ”தலை வேறு உடல் வேறாக தம்பியின் சடலம் கிடந்தது!”; அண்ணன் பரபரப்பு சாட்சியம்! #Day3 #Gokulraj

 

கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கில் அரசுத்தரப்பு சாட்சியான அவருடைய அண்ணன் கலைச்செல்வன், ரயில் தண்டவாளத்தில் தன் தம்பி தலை துண்டமான நிலையில் சடலமாக கிடந்ததை நேரில் பார்த்ததாக பரபரப்பு நாமக்கல் நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்துள்ளார்.

 

இன்ஜினியரிங் பட்டதாரி:

 

சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த வெங்கடாச்சலம் – சித்ரா தம்பதிக்கு இரண்டு மகன்கள். தந்தை, பல ஆண்டுகளுக்கு முன்பே இறந்து விட்டார். இவர்களுடைய மூத்த மகன் கலைச்செல்வன். இரண்டாவது மகன் கோகுல்ராஜ் (23). திருச்செங்கோடு கேஎஸ்ஆர் இன்ஜினியரிங் கல்லூரியில் பி.இ., முடித்துள்ளார்.

கோகுல்ராஜ்

கடந்த 2015ம் ஆண்டு ஜூன் 23ம் தேதி காலையில், வீட்டில் இருந்து கிளம்பிய கோகுல்ராஜ் அன்று இரவு ஆகியும் வீடு திரும்பவில்லை. மறுநாளான 2015, ஜூன் 24ம் தேதி, நாமக்கல் மாவட்டம் கிழக்கு தொட்டிபாளையம் அருகே ரயில் தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சடலமாகக் கிடந்தார்.

 

ஆரம்பத்தில் சந்தேக மரணமாக பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது. பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த கோகுல்ராஜூம், நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரைச் சேர்ந்த சுவாதி என்பவரும் கல்லூரியில் ஒன்றாக படித்து வந்தவர்கள். மட்டுமின்றி, இருவரும் நெருக்கமான நண்பர்களும்கூட. சுவாதி, கொங்கு வேளாளர் சமூகத்தைச் சேர்ந்தவர்.

 

சிசிடிவி கேமராவில் பதிவு:

 

இவர்கள் இருவரும் 2015, ஜூன் 23ம் தேதியன்று திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயில் மலையடிவாரத்தில் பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது, சேலம் மாவட்டம் சங்ககிரியைச் சேர்ந்த தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் எஸ்.யுவராஜ் மற்றும் சிலர் கோகுல்ராஜை மிரட்டி கடத்திச்சென்றிருப்பது அங்குள்ள சிசிடிவி கேமரா ஃபுட்டேஜில் பதிவாகி இருந்தது.

 

இதை ஊர்ஜிதம் செய்த பிறகே, கோகுல்ராஜ் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற முடிவுக்கு வரும் போலீசார், சந்தேக மரண வழக்கை கொலை வழக்காக பதிவு செய்தனர். அதற்கு முன்பாக விடுதலைச் சிறுத்தைகள், பகுஜன் சமாஜ் கட்சி உள்ளிட்ட பல்வேறு தலித் இயக்கங்கள் கோகுல்ராஜூக்கு ஆதரவாக போராட்டங்களில் ஈடுபட்டிருந்தன.

 

அந்த இயக்கங்கள், கோகுல்ராஜ் கொலை என்பது சாதி ரீதியில் நடந்த அப்பட்டமான ஆணவக்கொலை என்பதையும் வலியுறுத்திக் கொண்டே இருந்தன. யுவராஜூம், கூட்டாளிகளும் கோகுல்ராஜை கொலை செய்து, தடயத்தை மறைக்க ரயில் தண்டவாளத்தில் சடலத்தை வீசியிருக்கலாம் என்ற முடிவுக்கு வந்தது காவல்துறை.

 

17 பேர் கைது:

 

இதையடுத்து, சந்தேகத்தின்பேரில் தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் எஸ்.யுவராஜ், அவருடைய சகோதரர் தங்கதுரை, அருள்செந்தில், செல்வக்குமார், குமார் என்கிற சிவக்குமார், கார் ஓட்டுநர் அருண், சங்கர், செல்வராஜ், ஜோதிமணி, ரவி என்கிற ஸ்ரீதர், ரஞ்சித், சதீஸ்குமார், சுரேஷ், பிரபு, கிரி, அமுதரசு, சந்திரசேகர் ஆகிய 17 போலீசார் கைது செய்தனர்.

யுவராஜ்

இவர்கள் மீது கொலை, கூட்டுச்சதி, தடயங்களை மறைத்தல், போலியான ஆவணங்களை தயாரித்தல், ஆள்கடத்தல் உள்ளிட்ட பிரிவுகள் மட்டுமின்றி 1989ம் ஆண்டின் வன்கொடுமை தடுப்புச்சட்டம் பிரிவு 3 (2) (5) பிரிவின் கீழும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் இந்த வழக்கு விசாரணை, திருச்செங்கோடு போலீசாரிடம் இருந்து நாமக்கல் சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டது.

 

சாட்சிகள் விசாரணை தொடக்கம்:

 

இது ஒருபுறம் இருக்க, ஆணவக்கொலை வழக்குகளை 18 மாதங்களுக்குள் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேறு ஒரு வழக்கில் உச்சநீதிமன்றம் கடந்த 10.10.2017ம் தேதி தீர்ப்பு அளித்து இருந்தது. அதன்படி கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கின் சாட்சிகள் மீதான விசாரணை கடந்த 30.8.2018ம் தேதி முதல், நாமக்கல் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி கே.ஹெச்.இளவழகன் முன்னிலையில் தொடர்ந்து நடந்து வருகிறது.

 

குற்றம் சாட்டப்பட்டவர்களில், சொத்துப்பிரச்னையில் கணவர் சந்திரசேகரால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட ஜோதிமணி, ஜாமினில் விடுதலையான பின்பு தலைமறைவாகிவிட்ட அமுதரசு ஆகியோர் தவிர மற்ற 15 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.

 

இந்த வழக்கில் அரசுத்தரப்பில் மொத்தம் 110 சாட்சிகள் சேர்க்கப்பட்டு உள்ளனர். அரசுத்தரப்பு சிறப்பு வழ க்கறிஞர் சேலத்தைச் சேர்ந்த கருணாநிதி மற்றும் மற்றொரு அரசுத்தரப்பு வழக்கறிஞர் மாதேஸ்வரன், சிறப்பு வழக்கறிஞருக்கு உதவியாக சந்தியூர் பார்த்திபன், நாராயணன் ஆகியோர் ஆஜராகினர்.

 

முதல் சாட்சியாக கோகுல்ராஜின் தாயார் சித்ராவிடம் கடந்த 30ம் தேதி அரசுத்தரப்பு வழக்கறிஞர் விசாரணை நடத்தினார். அன்று சித்ரா, கோகுல்ராஜ் காணாமல் போன நாளன்று அணிந்திருந்த உடைகளை அடையாளம் காட்டினார். அப்போது பலமுறை மகனை நினைத்து கண்ணீர் விட்டு கதறி அழுதார்.

கலைச்செல்வன்

அதன்பின்னர் செப்டம்பர் 1ம் தேதி, எதிரிகள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜி.கே. என்கிற கோபாலகிருஷ்ண லட்சுமணராஜூ, சித்ராவிடம் குறுக்கு விசாரணை செய்தார். அப்போது அவர் கேட்ட சில கேள்விகளுக்கு சித்ரா, சற்று முன்னுக்குப்பின் முரணான பதில்களைக் கூறினார்.

 

இந்நிலையில், இன்று (செப்டம்பர் 4, 2018) கோகுல்ராஜின் சடலம் கண்டெடுக்கப்பட்டபோது காவேரி ஆர்எஸ் ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டராக பணியாற்றி வந்த ராஜஸ்தானைச் சேர்ந்த கைலாஷ்சந்த் மீனாவிடம் காலையில் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது ரயில் தண்டவாளத்தில் கிடந்த கோகுல்ராஜின் சடலம் பற்றியும், அதுபற்றி ஈரோடு ரயில்வே போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது பற்றியும் சாட்சியம் அளித்தார்.

 

கோகுல்ராஜின் அண்ணன் சாட்சியம்:

 

இதையடுத்து, கோகுல்ராஜின் அண்ணன் கலைச்செல்வன் சாட்சியம் அளிக்க அழைக்கப்பட்டார். நீதிமன்றத்தில் அவர் கூறியது:

 

என் தம்பி கோகுல்ராஜ், 2015ம் ஆண்டு ஏப்ரல் மாதமே கல்லூரி படிப்பை முடித்து விட்டார். பிறகு வேலை தேடி அடிக்கடி நண்பர்களைச் சந்திக்க செல்வதுண்டு. அவன் எங்கே போனாலும் அம்மாவிடம் சொல்லிவிட்டுத்தான் போவான். சாயங்காலத்திற்குள் வீடு திரும்பி விடுவான்.

 

கடந்த 2015ம் ஆண்டு ஜூன் 23ம் தேதி வீட்டில் இருந்து காலையில் கிளம்பிச் சென்றான். அவன் எங்கே சென்றான் எனத்தெரியாததால் செல்போனில் தொடர்பு கொண்டோம். சுவிட்ச்ஆப் என வந்தது. பிறகு காலை 10.30 மணியளவில் அவனே என் அம்மாவுக்கு போன் செய்து, நண்பர்களைப் பார்க்க போய்விட்டேன். சாயங்காலம் வீட்டுக்கு வந்து விடுகிறேன் என்று கூறினான்.

 

அன்று இரவாகியும் கோகுல்ராஜ் வீடு திரும்பவில்லை. அவனுடைய நண்பர்கள் சிலரிடம் விசாரித்தோம். அப்போது அவன் காலையில் ஓமலூரில் இருந்து கேஎஸ்ஆர் கல்லூரி பேருந்தில் ஏறிச்சென்றதும், திருச்செங்கோடு ஓம் காளியம்மன் கோயில் அருகே இறங்கிக் கொண்டதும் தெரிய வந்தது.

வழக்கறிஞர் பார்த்திபன்

அவனுடைய வேறு நண்பர்களின் செல்போன் நம்பர்கள் கிடைக்குமா என்று கோகுல்ராஜின் ஃபேஸ்புக் பக்கத்தில் தேடிப்பார்த்தேன். பாலமுருகன் என்ற மாணவரின் செல்போன் நம்பர் கிடைத்தது. அதைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, தான் வேறு செக்ஷன் என்பதால் கோகுல்ராஜை பற்றி அவ்வளவாக தெரியாது. அவனுக்கு நெருக்கமான நண்பர் கார்த்திக்ராஜா என்பவரை தொடர்பு கொண்டால் ஏதாவது விவரங்கள் தெரியும் என்று கூறி, அவருடைய செல்போன் நம்பரை கொடுத்தார்.

 

ஆமாம், அந்த பொண்ணை காதலிக்கிறேன்…:

 

அதன்பிறகு கார்த்திக்ராஜாவை தொடர்பு கொண்டு பேசினேன். அவர், ”என் தம்பியும், அவனுடன் படித்து வந்த சுவாதியும் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் பேசிக்கொண்டு இருந்தபோது, சிலர் அங்கு வந்து யுவராஜ் என்பவர் உன்னை கூப்பிடுகிறார் என்று கூறி அழைத்துச்சென்றனர். அங்கே யுவராஜூம் மற்றும் அஞ்சாறு பேரும் இருந்தனர்.

 

கோகுல்ராஜிடம் நீ என்ன ஜாதி? நீயும் அந்த பொண்ணும் லவ்வர்ஸா? என்று யுவராஜ் கேட்டார். அதற்கு கோகுல்ராஜ் இல்லை என்று சொன்னதால், அவனை தலையில் அடித்தாராம். அதன்பிறகு அவனும், ‘ஆமாம், நான் அந்தப் பொண்ணை காதலிக்கிறேன்’ என்று கூறினான். அதையடுத்து சுவாதியிடம் இருந்த செல்போனை பிடுங்கிக் கொண்டு அவரை மட்டும் தனியாக வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர். தனது செல்போனை தருமாறு யுவராஜிடம் கேட்டதற்கு, நானே வீட்டுக்கு நேரில் வந்து தருகிறேன் என்று சொல்லிவிட்டார்.

 

கோகுல்ராஜின் செல்போனையும் அவர்கள் பறித்துக்கொண்டனர். அவனை வெள்ளை நிற காரில் கடத்திச்சென்றனர். அந்த காரில் ‘தீரன் சின்னமலை’ என்று எழுதியிருந்தது. முன்பக்கம் பச்சை, சிவப்பு நிறத்தில் கொடி கட்டப்பட்டு இருந்தது,” என்று கார்த்திக்ராஜா சொன்னார். இந்த விவரங்களை எல்லாம் அவர் சுவாதியிடம் கேட்டுத் தெரிந்து கொண்டதாக என்னிடம் கூறினார்.

வழக்கறிஞர் கோபாலகிருஷ்ண லட்சுமண ராஜூ

கார்த்திக்ராஜாவிடம் சுவாதியின் செல்போன் நம்பர் கேட்டுப் பெற்றேன். 24.6.2015ம் தேதி காலை சுவாதியை செல்போனில் அழைத்தபோது சுவிட்ச்ஆப் என்று வந்தது. பிறகு கார்த்திக்ராஜாவிடம் சுவாதியை தொடர்பு கொள்ள வேறு ஏதாவது செல்போன் நண்பர் கிடைக்குமா என்று கேட்டதற்கு, அவருடைய அம்மா நம்பரை கொடுத்தார். அந்த செல்போன் நம்பருக்கு தொடர்பு கொண்டு பேசியபோது, சுவாதியே எடுத்துப் பேசினார்.

 

கோகுல்ராஜ் பற்றி விசாரித்தபோது, கார்த்திக்ராஜா என்னிடம் சொன்ன எல்லா விவரங்களையும் அவரும் சொன்னார். அவர் செல்போனில் பேசியதை என் நண்பர் ஒருவருடைய செல்போன் மூலம் குரல் பதிவு செய்து கொண்டேன். பின்னர் அந்த பதிவை புளூடூத் மூலம் எனது செல்போனில் பதிவேற்றம் செய்து கொண்டேன்.

 

அதன்பிறகே நாங்கள் கோகுல்ராஜை காணவில்லை என்று திருச்செங்கோடு காவல் நிலையத்தில் புகார் அளித்தோம். அப்போது வழக்கறிஞர் சந்தியூர் பார்த்திபன் என்பவரும் எங்களுக்கு உதவியாக காவல் நிலையம் வந்திருந்தார்.

 

நாங்கள் அங்கு இருக்கும்போதே, ஈரோடு ரயில்வே போலீசார் என் அம்மாவின் செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு, கிழக்கு தொட்டிபாளையம் என்ற இடத்தில் ரயில் தண்டவாளத்தில் ஒரு சடலம் கிடப்பதாகவும், அங்கே இருந்து எடுக்கப்பட்ட அடையாள அட்டையில் இருந்த செல்போன் எண் மூலம் தொடர்பு கொண்டு பேசுவதாகவும் கூறினர்.

யுவராஜை பார்த்து கோகுல்ராஜின் தாய் சித்ரா மனவேதனையில் சாபமிட்டு கதறி அழுதார்

நாங்கள் போலீசார் குறிப்பிட்ட இடத்திற்குச் சென்று பார்த்தபோது, அங்கே கோகுல்ராஜ் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சடலமாக கிடந்தான். தலை மற்றும் நீல நிற ஜீன்ஸ் பேண்ட், சாம்பல் மற்றும் ஊதா நிற சட்டை, கருப்பு நிற காலருடன் கூடிய பனியன் ஆகிய உடைகளை வைத்து சடலத்தை அடையாளம் காட்டினோம்.

 

அந்த இடத்தில் இருந்து அவனுடைய செல்போன், கல்லூரி அடையாள அட்டை ஆகியவற்றை எடுத்ததாக போலீசார் கூறினர். ஆனால் அவன் எப்போதும் வைத்திருக்கும் கருப்பு நிற பர்ஸ் பற்றி போலீசார் கூறவில்லை. அதில்தான் அவனுடைய ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, அடையாள அட்டை ஆகியவற்றை வைத்திருப்பான். அந்த ஓட்டுநர் உரிமம், வேறு ஒரு வீட்டில் குடியிருந்தபோது அந்த முகவரியில் எடுக்கப்பட்டு இருந்தது.

 

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த திருச்செங்கோடு போலீஸ் இன்ஸ்பெக்டர், யுவராஜ் என்பவர் கொங்கு வேளாளர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்று கூறினார். அவருக்கு போலீசார் போன் செய்து உடனடியாக வருமாறும் அழைத்தனர். இதற்கிடையே நாங்கள் கோகுல்ராஜ் வழக்கை சந்தேக மரணமாக பதிவு செய்யாமல் கொலை வழக்காக பதிவு செய்ய வலியுறுத்தி போராடினோம். பகுஜன் சமாஜ், விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும் போராடினர்.

 

கோகுல்ராஜின் உடலை மூன்று டாக்டர்கள் கொண்ட குழுவின் முன்னிலையில் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்ததால், அதன்படியே பிரேத பரிசோதனையும் நடந்தது. இந்நிலையில், 2.7.2015ம் தேதி, இந்த வழக்கில் 6 பேரை கைது செய்திருப்பதாக திருச்செங்கோடு போலீசார் கூறினர். அதன்பிறகே நாங்கள் கோகுல்ராஜின் சடலத்தை அரசு மருத்துவமனையில் இருந்து பெற்றுச்சென்று எங்கள் ஊரில் அடக்கம் செய்தோம்.

 

இவ்வாறு கலைச்செல்வன் சாட்சியம் அளித்துள்ளார்.

 

இதன்பிறகு, சம்பவத்தன்று கோகுல்ராஜ் அணிந்திருந்த உடைகளை கலைச்செல்வன் நேரில் பார்த்து அடையாளம் காட்டுமாறு நீதிபதி உத்தரவிட்டார். ரத்த சகதியுடன் கூடிய அந்த உடைகளை முக்கிய ஆதாரமாக கருதி போலீசார் பிளாஸ்டிக் பைகளில் கட்டி வைத்துள்ளனர்.

 

உடைகளை அடையாளம் காட்டினார்:

 

அந்த பார்சலை பிரித்தால் துர்நாற்றம் வீசும் என்பதால் நீதிபதி கே.ஹெச்.இளவழகன், அந்த உடைகளை நீதிமன்ற அறைக்குள் வைத்து பிரிக்காமல் சற்று வெளியே சென்று பிரித்துக் காட்டுமாறு அறிவுறுத்தினார்.

 

துர்நாற்ற வீச்சைத் தவிர்க்க நீதிமன்ற ஊழியர்கள் இன்றும் ஊதுவத்தி கொளுத்தினர். பின்னர் பார்சலில் இருந்து பிரித்துக் காண்பிக்கப்பட்ட உடைகளை கலைச்செல்வன் அடையாளம் காட்டினார். இத்துடன் இன்றைய சாட்சி விசாரணை முடிந்தது.

 

வழக்கு 6ம் தேதிக்கு ஒத்தி வைப்பு:

 

இதையடுத்து, வரும் 6ம் தேதி சாட்சி மீதான குறுக்கு விசாரணை நடைபெறும் என்று கூறி வழக்கை நீதிபதி கே.ஹெச்.இளவழகன் ஒத்தி வைத்தார். அன்று கலைச்செல்வனிடம் எதிர் தரப்பு வழக்கறிஞர் குறுக்கு விசாரணை மட்டும் நடைபெறும் எனத் தெரிகிறது.

 

நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு:

 

சாட்சிகள் விசாரணை முடிந்து குற்றம் சாட்டப்பட்ட யுவராஜ் உள்ளிட்ட 15 பேரையும் சிறையில் அடைக்க போலீசார் வாகனத்தில் ஏற்றுவதற்காக அழைத்துச்சென்றனர். அப்போது அவர்களைப் பார்த்த கோகுல்ராஜின் தாயார் சித்ராவும், அவருடைய உறவினர்களும் மண்ணை வாரி தூற்றி சாபமிட்டனர்.

சித்ராவை தேற்றுகிறார் உறவினர் வசந்த்

இதைப் பார்த்த அங்கு பாதுகாப்புப் பணிக்கு வந்திருந்த போலீசார் நீதிமன்ற வளாகத்தில் இதுபோல் செய்யக்கூடாது என்று அவர்களைக் கண்டித்தார். அதற்கு கோகுல்ராஜின் உறவினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அந்த இடத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

 

சுவாதியிடம் ரகசிய விசாரணை!

 

கோகுல்ராஜ் வழக்கைப் பொறுத்தமட்டில் அவர் கொலை செய்யப்பட்டதற்கான கண்ணால் கண்ட சாட்சிகள் இல்லை. ஆனால், சம்பவத்தன்று கோகுல்ராஜை யுவராஜ் உள்ளிட்டோர் கடத்திச்சென்றதற்கான ஒரே நேரடி சாட்சி சுவாதி மட்டுமே. அதனால் அவர் இந்த வழக்கில் அதிமுக்கிய சாட்சியாக கருதப்படுகிறார்.

 

பாதுகாப்பு கருதி, சுவாதியிடம் திறந்தவெளி நீதிமன்றத்தில் சாட்சியம் பெறாமல், இன்கேமரா எனப்படும் ரகசியமாக விசாரித்து, சாட்சியம் அளிக்க அனுமதிக்க வேண்டும் என்று மனுத்தாக்கல் செய்யும் முடிவில் சிசிசிஐடி காவல்துறையும், அரசுத்தரப்பு வழக்கறிஞர்களும் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

 

– பேனாக்காரன்.