Friday, April 19மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

உள்ளாட்சி தேர்தலை நவ. 17க்குள் நடத்த ஹைகோர்ட் உத்தரவு

உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை, வரும் நவம்பர் 17ம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம், தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்பட வேண்டும். இதன்படி கடந்த 2011ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த அதிமுக, அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தேர்தலை நடத்தி முடித்தது. அதைத்தொடர்ந்து கூட்டுறவு அமைப்புகளுக்கும் தேர்தலை நடத்தி முடித்தது.

இந்நிலையில், உள்ளாட்சி மன்ற மக்கள் பிரதிநிதிகளின் பதவிக்காலம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்தது. அடுத்த தேர்தலை நடத்துவதற்கான அறிவிக்கையும் வெளியிடப்பட்ட நிலையில், பழங்குடியினருக்கான இட ஒதுக்கீடு சரியாக பின்பற்றப்படவில்லை என்று திமுக தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இதன்பின், உயர்நீதிமன்ற உத்தரவின்பேரில் இட ஒதுக்கீடு பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டது. இதற்கிடையே முதல்வராக இருந்த ஜெயலலிதா உடல்நலக்குறைவால் மரணம் அடைந்ததாலும், அதிமுக பல அணிகளாக பிரிந்ததாலும் ஆளுங்கட்சித் தரப்பில் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதில் ஆர்வம் காட்டப்படவில்லை.

இதனால் மீண்டும் திமுக தரப்பில் கடந்த பிப்ரவரி மாதம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் மே 14ம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்தும்படி உத்தரவிட்டது. ஆனால், வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணிகள் முடிவடையாததால் அவகாசம் வேண்டும் என்று கேட்டது. பின்னர், அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சி பூசல்களால் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது. இதனால் இந்த வழக்கின் இறுதி விசாரணை முடிக்கப்படாமல் இருந்து வந்தது.

இந்நிலையில் நேற்று (செப். 4) இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வு தமிழக அரசுக்கு பின்வருமாறு உத்தரவு பிறப்பித்தது:

தமிழகத்தில் உள்ள அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் வரும் நவம்பர் மாதம் 17ம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும். தேர்தல் தொடர்பான அறிவிக்கையை செப்டம்பர் 18ம் தேதிக்குள் வெளியிட வேண்டும். குற்றப்பின்னணி உள்ளவர்களின் விவரங்களையும் வெளியிட வேண்டும். இவ்வாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.