Sunday, May 26மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

எட்டு வழிச்சாலைக்கு எதிராக தற்கொலை போராட்டம்! விவசாயிகளின் பிரம்மாஸ்திரம்!!

 

எட்டு வழிச்சாலைக்கு எதிராக தற்கொலை போராட்டத்திற்கும் தயாராகி விட்டதாக விவசாயிகள் போர்ப்பறை முழங்கியுள்ளது, இப்பிரச்னையை மீண்டும் விசுவரூபம் எடுக்க வைத்துள்ளது.

 

2343 ஹெக்டேர்

 

சேலம் முதல் சென்னை வரை எட்டு வழிச்சாலையாக பசுமைவழி விரைவுச்சாலை (பாரத்மாலா பரியோஜனா) அமைக்கும் பணிகளை பணிகளை மத்திய, மாநில அரசுகள் முடுக்கி விட்டுள்ளன.

சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களின் ஊடாக சென்னை படப்பையில் முடிவடைகிறது இந்த சாலைத்திட்டம். இதற்காக மேற்சொன்னை ஐந்து மாவட்டங்களிலும் 2343 ஹெக்டேர் நிலங்களை கையகப்படுத்தும் பணிகளில் அந்தந்த மாவட்ட வருவாய்த்துறை இறங்கியுள்ளது.

 

ஒரே வாழ்வாதாரம்

 

இத்திட்டத்துக்காக கையகப்படுத்தப்படும் நிலங்களில் பெரும்பகுதி, அதாவது 90 விழுக்காடு நிலமானது ஏழை சிறு, குறு விவசாயிகள் உடையது. அவர்களிடம் இருக்கும் கடைசி நம்பிக்கையும், ஒரே வாழ்வாதாரமும் இந்த சிறு நிலப்பகுதி மட்டுமே.

 

என்னதான், மேடைக்கு மேடை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இந்த திட்டத்தால் சென்னைக்கு பயண தூரம், நேரம், எரிபொருள் மிச்சமாகும் எனக்கூறினாலும், வெகுசன மக்களுக்கானது அல்ல இந்த சாலை. அதை இதுவரை மத்திய, மாநில அரசுகள் தெளிவுபடுத்தவும் இல்லை.

 

இதனால்தான் சேலம் உள்ளிட்ட ஐந்து மாவட்ட விவசாயிகளும் ஆரம்பம் முதலே இந்தத் திட்டத்தை எதிர்த்து களமாடி வருகின்றனர்.

 

கண்டனம்

 

கடந்த மாதம் சேலத்திற்கு வந்திருந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ‘உயர்நீதிமன்ற தீர்ப்பு வந்த பிறகு, எட்டு வழிச்சாலை கண்டிப்பாக அமைக்கப்படும்,’ என்றார். அப்போதே விவசாயிகள் அவருக்கு எதிராக, அவருடைய சொந்த மண்ணிலேயே கூட்டம் போட்டு கண்டனத்தை பதிவு செய்திருந்தனர்.

நாராயணன்

இந்நிலையில், டிசம்பர் 13ம் தேதியன்று சேலத்தில் நடந்த அரசு விழாவில் பேசிய முதல்வர், ‘இந்த திட்டத்தால் பயண நேரம் குறையும் என்றும், சாலை விபத்துகள், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளை கட்டுப்படுத்தவும், எரிபொருளை மிச்சப்படுத்தவும் எட்டு வழிச்சாலை அவசியம்,’ என்று மீண்டும் ஒருமுறை தன்னிலை விளக்கம் கொடுத்தார்.

 

உண்ணாவிரத போராட்டம்

 

இப்படி முதல்வர் பேசி வருவது எல்லாமே கடைந்தெடுத்த பொய் என்பதுதான் இத்திட்டத்தால் நிலத்தை இழக்கப்போகும் விவசாயிகளின் ஒருமித்த கருத்தாக உள்ளது. இதனால் கொதிப்படைந்த விவசாயிகள், வெள்ளிக்கிழமையன்று (டிசம்பர் 14, 2018) சேலத்தை அடுத்த நாழிக்கல்பட்டியில் விவசாயி செல்வராஜ் என்பவருக்குச் சொந்தமான நிலத்தில் ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.

 

இத்தனைக்கும் முதல்வர் சொந்த ஊரில் சுற்றுப்பயணத்தில் இருக்கும்போதே அவர்கள் இத்திட்டத்துக்கு எதிராக களமாடுவதை உளவுத்துறையும் தீவிரமாக கண்காணித்துக் கொண்டுதான் இருந்தது. அவர்கள் ஆட்சியர் அலுவலகத்திற்கோ, சாலை மறியலிலே ஈடுபட்டு விடக்கூடாது என்பதில் மட்டும் காவல்துறையினர் உன்னிப்பாக கவனித்துக்கொண்டனர்.

 

உளவுத்துறை மிரட்டல் 

 

இப்படி ஒரு போராட்டம் நடத்த இருப்பதை முன்பே ஊகித்திருந்த உளவுத்துறையினர், பூலாவரியில் முக்கிய விவசாயிகள் சில அதிகாலையிலேயே சந்தித்து, போராட்டத்தை கைவிடுமாறு மிரட்டியதாகவும், பிறகு சாமியானா பந்தல் போடாமல், மைக் செட் கட்டாமல் வேண்டுமானால் அமைதி வழியில் ஆலோசனைக் கூட்டம் மட்டும் நடத்திக் கொள்ளுமாறு வாய்மொழியாக சொல்லிவிட்டுச் சென்றதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

 

வெள்ளிக்கிழமையன்று (டிச. 14) நடந்த அடையாள உண்ணாவிரத போராட்டத்தில், நாழிக்கல்பட்டி, பூலாவரி, வீரபாண்டி, குள்ளம்பட்டி, ராமலிங்கபுரம், குப்பனூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். கணிசமான பெண் விவசாயிகளும் பங்கேற்றனர்.

 

விவசாயிகளை அழிக்காதே!

 

‘வாழவிடு வாழவிடு மக்களை வாழவிடு’, ‘வேண்டாம் வேண்டாம் எட்டுவழிச்சாலை வேண்டாம்’, ‘அழிக்காதே அழிக்காதே விவசாயிகளை அழிக்காதே’ என்று முழக்கங்களை எழுப்பினர். முதன்முதலில் நிலம் அளவீடு செய்வதற்காக ஆச்சாங்குட்டப்பட்டிக்குச் சென்ற வருவாய்த்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகளை கலங்கடித்த மூதாட்டிதான் இந்த போராட்டத்தின் மையமாக இருந்தார். அவரின் போராட்ட படம், பிளக்ஸ் பேனரில் அலங்கரித்தது.

 

போராட்டம் குறித்து விவசாயிகள் மோகனசுந்தரம், நாராயணன் ஆகியோர் கூறுகையில், ”எட்டு வழிச்சாலைக்கு எதிராக கடந்த ஆறு மாதங்களாக போராடி வருகிறோம். விவசாயிகள் ஒன்று சேர்ந்து போராட காவல்துறை அனுமதிக்க மறுக்கிறது. எட்டுவழிச்சாலையே வேண்டாம் என்று கோரி வரும் நிலையில், இப்போது கூடுதலாக நிலங்களை கையகப்படுத்த மீண்டும் தேசிய நெடுஞ்சாலைகள்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

 

சேலத்தில் இருந்து சென்னை வரை எட்டுவழிச்சாலை திட்டம் என்பதே தவறானது. இந்த சாலை சேலம் முதல் படப்பை வரைதான் போடப்படுகிறது. படப்பையில் இருந்து சென்னைக்குள் செல்ல மூன்று மணி நேரம் ஆகும் என்பதை முதல்வர் மறந்துவிட்டார்.

 

பழனிசாமியும் பச்சை பொய்களும்…

 

எட்டு வழிச்சாலை வந்தால் தொழில்கள் அபிவிருத்தி ஆகும் என்பதையும் ஏற்க முடியாது. இந்த சாலைத்திட்டம் இல்லாமலேயே திருப்பூர், கோவை மாவட்டங்கள் தொழில்துறையில் வளர்ந்துள்ளன. மக்களின் உழைப்புதான் முக்கியம். இத்திட்டம் பற்றி முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசுவது எல்லாமே பச்சைப் பொய்தான்.

மோகனசுந்தரம்

எட்டு வழிச்சாலைத் திட்டத்திற்கு எதிரான இந்த போராட்டத்தை மத்திய, மாநில அரசுகள் கவனத்தில் எடுத்துக்கொண்டு உடனடியாக இத்திட்டத்தைக் கைவிட வேண்டும்.

 

இல்லாவிட்டால் நாங்கள் அடுத்தக்கட்டமாக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் வீட்டை முற்றுகையிடும் போராட்டம் நடத்துவோம். தமிழக சட்டப்பேரவை கட்டடத்தை முற்றுகையிட்டும் போராடுவோம். எங்கள் மீது அடக்குமுறைகள் தொடர்ந்தால் தற்கொலை போராட்டம் நடத்தவும் தயாராக இருக்கிறோம். எதற்காகவும் எங்கள் நிலத்தை விட்டுத்தர மாட்டோம்,” என்றனர்.

 

 

– பேனாக்காரன்.