Friday, April 19மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல்; ஏப். 6ல் வாக்குப்பதிவு; மே 2ல் வாக்கு எண்ணிக்கை!

தமிழகம், புதுவையில்
ஒரே கட்டமாக சட்டப்பேரவைத்
தேர்தல் நடக்கிறது. ஏப்ரல் 6ம் தேதி
வாக்குப்பதிவும், மே 2ம் தேதி
வாக்கு எண்ணிக்கையும்
நடத்தப்படும் என்று இந்திய
தேர்தல் ஆணையம்
அறிவித்துள்ளது.

தமிழக சட்டப்பேரவைக்கு
கடந்த 2016ம் ஆண்டு
ஏப். மாதம் தேர்தல் நடந்தது.
நடப்பு சட்டப்பேரவையின்
ஆயுள் காலம் வரும் மே 24, 2021ம்
தேதியுடன் முடிவடைகிறது.
இதையொட்டி, தமிழகத்தில்
திமுக, அதிமுக உள்ளிட்ட
முக்கிய கட்சிகள்
வழக்கத்தை விட
முன்கூட்டியே தேர்தல்
பரப்புரைகளை
தொடங்கி விட்டன.

 

தேர்தல் குறித்த அறிவிப்பு
எப்போது வேண்டுமானாலும்
வெளியாகலாம் என கடந்த
சில நாள்களாகவே எதிர்பார்ப்பு
நிலவி வந்தது. இந்நிலையில்,
இந்திய தலைமை தேர்தல் ஆணையர்
சுனில் அரோரா வெள்ளிக்கிழமை
(பிப். 26) மாலை டெல்லியில்
சட்டப்பேரவைத் தேர்தல் குறித்த
அறிவிப்பை வெளியிட்டார்.

 

தமிழகம், புதுச்சேரி, கேரளா,
மேற்கு வங்கம், அஸாம் ஆகிய
ஐந்து மாநிலங்களில் விரைவில்
சட்டப்பேரவை தேர்தல் நடக்கிறது.
இவற்றில் தமிழகம் மற்றும் புதுச்சேரி
மாநிலங்களுக்கு ஒரே கட்டமாக
தேர்தல் நடத்தப்படுகிறது.

 

தமிழகத்தில் 234 சட்டப்பேரவை
தொகுதிகள் உள்ளன. இவற்றில்
44 தனித்தொகுதிகளும்,
2 பழங்குடியினருக்கான
தனித்தொகுதிகளும்
உள்ளன.

தமிழகத்தில் வேட்புமனுத் தாக்கல்
மார்ச் 12ம் தேதி தொடங்குகிறது.
மனுத்தாக்கல் செய்ய கடைசி நாள்
மார்ச் 19. மனுக்கள் மீதான
பரிசீலனை நாள் மார்ச் 20.
வேட்புமனுக்களை திரும்பப் பெற
கடைசி நாள் மார்ச் 22.
ஏப்ரல் 6ம் தேதி வாக்குப்பதிவு
நடக்கிறது. வாக்கு எண்ணிக்கை
மே மாதம் 2ம் தேதி
நடைபெறுகிறது.

 

கன்னியாகுமரி மக்களவை
உறுப்பினர் வசந்தகுமார்
மறைந்ததையொட்டி, அந்த
தொகுதிக்கான இடைத்தேர்தலும்
சட்டப்பேரவைத் தேர்தலுடன்
நடத்தப்படுகிறது. அத்தொகுதிக்கு
ஏப்ரல் 6ம் தேதி வாக்குப்பதிவு
நடக்கிறது. அதன் முடிவும்
மே 2ல் வெளியாகிறது.

 

மேற்கு வங்க மாநிலத்தில்
மட்டும் 8 கட்டங்களாக
தேர்தல் நடக்கிறது.
அஸாமில் 3 கட்டங்களாக
தேர்தல் நடக்கிறது. இவ்வாறு
தேர்தல் ஆணையம்
அறிவித்துள்ளது.

 

முக்கிய அம்சங்கள்:

 

வழக்கமாக வேட்பாளர்,
வேட்புமனுவை நேரில் மட்டுமே
சமர்ப்பிக்க வேண்டும்.
இதுதான் காலம்காலமாக
உள்ள நடைமுறை.
வரும் சட்டப்பேரவைத் தேர்தலில்
முதன்முதலாக ஆன்லைன்
மூலமாகவும் வேட்புமனுக்களை
தாக்கல் செய்யலாம் என
அறிவிக்கப்பட்டு உள்ளது.

 

தமிழக தேர்தலில்
ஒரு வேட்பாளர் அதிகபட்சமாக
30.80 லட்சம் ரூபாய் வரை செலவு
செய்யலாம். புதுச்சேரியில்
22 லட்சம் ரூபாய் வரை செலவு
செய்யலாம் என்கிறது தலைமைத்
தேர்தல் ஆணையம்.

 

வேட்புமனுத் தாக்கல்
செய்யும்போது வேட்பாளருடன்
அதிகபட்சமாக 2 பேர் மட்டுமே
உடன் செல்ல அனுமதி.
இரண்டு வாகனங்கள் மட்டுமே
செல்ல அனுமதிக்கப்படுகிறது.

 

வேட்புமனுத் தாக்கலுக்கு
ஆன்லைனில் பணம்
செலுத்தலாம்.

 

வீடு வீடாக பரப்புரை
செய்யும்போது வேட்பாளரையும்
சேர்த்து 5 பேர் மட்டுமே
செல்ல வேண்டும்.

 

80 வயதுக்கு மேற்பட்ட
வாக்காளர்கள் தபால் மூலம்
வாக்களிக்கும் வசதியும்
முதன்முதலாக கொண்டு
வரப்பட்டுள்ளது. என்றாலும்,
அது கட்டாயமில்லை என்றும்,
தனி நபர்களின் விருப்பத்தின்
அடிப்படையில் வாக்களிக்கலாம்.

 

தமிழக தேர்தல் களத்தில்
அதிக செலவு செய்யப்படும்
என்பதால், முக்கிய மாநிலமாக
பார்க்கப்படுகிறது. ஆர்.கே. நகர்,
வேலூர் தேர்தலின்போது
பணப்பட்டுவாடா காரணமாக
ரத்து செய்யப்பட்டது. ஆகவே,
தமிழகத்திற்கு இரண்டு செலவின
பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு
உள்ளனர்.

 

தேர்தல் நடத்தை விதிகள்
உடனடியாக நடைமுறைக்கு
வருகிறது. தனிநபர் ஒருவர்
அதிகபட்சம் 50 ஆயிரம் ரூபாய்க்கு
மேல் கொண்டு செல்ல தடை
விதிக்கப்படுகிறது. அதற்கு மேல்
கொண்டு செல்லப்படும் தொகைக்கு
உரிய ஆவணங்களை
சமர்ப்பிக்க வேண்டும்.

 

தமிழகத்தில் மொத்தம்
88936 வாக்குச்சாவடிகள்
அமைக்கப்படும். இது கடந்த
தேர்தலை விட 34.73
சதவீதம் அதிகம்.

 

அனைத்து வாக்குச்சாவடிகளும்
தரைத்தளத்தில் அமைக்கப்படும்.
வாக்காளர்களின் பாதுகாப்புக்கு
முக்கியத்துவம் அளிக்கப்படும்.

 

கொரோனா தடுப்பு
முன்னெச்சரிக்கையாக வாக்குப்பதிவு
நேரம் ஒரு மணி நேரம்
அதிகரிக்கப்படும். இது தொடர்பாக
அந்தந்த மாவட்ட தேர்தல்
அதிகாரி முடிவு செய்து
கொள்ளலாம்.

 

தேர்தல் பணியில் ஈடுபடும்
அனைத்து பணியாளர்களுக்கும்
கொரோனா தடுப்பூசி போடப்படும்.
வாக்குச்சாவடி மையங்களில்
கூடுதலாக துணை ராணுவப்படையினர்
பாதுகாப்புப் பணியில்
ஈடுபடுவர்.

 

பண்டிகை, தேர்வுகள் ஆகிய
அம்சங்கள் குறித்தும் ஆலோசித்த
பிறகே தேர்தல் தேதி
அறிவிக்கப்பட்டு உள்ளது.

 

தமிழகத்திற்கு தேர்தல்
பார்வையாளர்களாக
தர்மேந்திரகுமார் மற்றும்
அலோக் வர்தன் நியக்கப்பட்டு
உள்ளனர்.

 

– பேனாக்காரன்