Thursday, March 28மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

சேலம் – சென்னை வானூர்தி சேவை நாளை முதல் மீண்டும் தொடக்கம்! பயண நேரத்தில் மாற்றம்!!

கொரோனா ஊரடங்கால்
நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த,
சேலம் – சென்னை இடையேயான
பயணிகள் வானூர்தி சேவை
நாளை (மே 27, புதன்கிழமை)
முதல் மீண்டும் தொடங்குகிறது.
பயண நேரத்தில் மட்டும் சிறு
மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

 

ஊரடங்கு:

 

கொரோனா வைரஸ்
பரவல் அபாயம் காரணமாக
நாடு முழுவதும் கடந்த
மார்ச் 24ம் தேதி மாலை
6 மணி முதல் ஊரடங்கு
உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதுவரை நான்கு கட்டங்களாக
பல்வேறு தளர்வுகளுடன்
ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

 

நோய்ப்பரவல் அபாயம்
மட்டுமின்றி சமூக
இடைவெளியைக் கடைப்பிடிக்க
முடியாது என்பதால் பேருந்து,
ரயில், வானூர்தி சேவைகள்
உள்ளிட்ட அனைத்து வகையான
பொது போக்குவரத்துகளும்
நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
சேலம் காமலாபுரம் வானூர்தி
நிலையத்தில் இருந்து
சென்னை, திருப்பதிக்கு
இயக்கப்பட்டு வந்த
ட்ரூஜெட் வானூர்தி
சேவையும் நிறுத்தப்பட்டது.

 

மீண்டும்  வானூர்தி:

 

இந்நிலையில்,
நாளை (மே 27, புதன்கிழமை)
முதல் மீண்டும் சேலத்தில்
இருந்து வானூர்தி
போக்குவரத்தைத் தொடங்க
இந்திய வானூர்தி போக்குவரத்து
ஆணையம் அனுமதி அளித்துள்ளது.
தமிழக அரசும் இதற்கு
ஏற்பளித்துள்ளது. அதேநேரம்,
ஏற்கனவே நடைமுறையில்
இருந்து வந்த வானூர்தி
இயக்க நேரம் மட்டும்
கொஞ்சம் மாற்றி அமைக்கப்பட்டு
உள்ளது.

 

புதிய பயண அட்டவணைப்படி,
சென்னையில் இருந்து
காலை 7.25 மணிக்கு
புறப்படும் வானூர்தி,
சேலத்திற்கு 8.25 மணிக்கு
வந்தடையும். பின்னர்,
சேலத்தில் இருந்து காலை
8.50 மணிக்கு புறப்பட்டு,
சென்னைக்கு 9.50 மணிக்கு
சென்றடையும்.

 

இதற்கு முன்பு,
சென்னையில் காலை 9.50க்கு
புறப்படும் வானூர்தி சேலத்திற்கு
10.40 மணிக்கு வந்தடையும்.
பின்னர், சேலத்தில் இருந்து
காலை 11 மணிக்கு புறப்பட்டு
சென்னைக்கு 11.50 மணிக்கு
சென்றடையும். தற்போது
இதன் பயண நேரம் மாற்றி
அமைக்கப்பட்டு உள்ளது.
சேலம் – சென்னை இடையே
மீண்டும் வானூர்தி போக்குவரத்து
தொடங்கப்படுவதையொட்டி
தொழில் அதிபர்கள்,
வணிகர்களிடையே
மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

 

இத்தகவலை சேலம்
காமலாபுரம் வானூர்தி
நிலைய அதிகாரிகள்
தெரிவித்துள்ளனர்.