Thursday, March 28மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

சேலம்: பிளஸ்-2 விடைத்தாள் மதிப்பீடு இன்று தொடக்கம்! 200 மையங்களில் நடக்கிறது!

தமிழகத்தில்,
பிளஸ்-2 பொதுத்தேர்வு
விடைத்தாள் திருத்தும்
பணிகள் இன்று
(புதன்கிழமை, மே 27)
தொடங்குகிறது. கொரோனா
தொற்றின் தாக்கம்
அதிகமுள்ளதால்,
சென்னை நீங்கலாக மற்ற
மாவட்டங்களில் மொத்தம்
200 மையங்களில் இப்பணிகள்
நடக்கிறது. விடைத்தாள்
மதிப்பீட்டுப் பணிகள் ஜூன்
23ம் தேதி நிறைவு
பெறுகின்றன.

 

தமிழகத்தில்
கடந்த மார்ச் மாதம்
பிளஸ்-2 பொதுத்தேர்வு நடந்தது.
அதன்பிறகு, கொரோனா தொற்று
அபாயத்தால் ஊரடங்கு உத்தரவு
பிறப்பிக்கப்பட்டது. இதனால்
விடைத்தாள் திருத்தல்,
எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு
பணிகள் முடங்கின. தற்போது
ஊரடங்கு படிப்படியாக
தளர்த்தப்பட்டுள்ள நிலையில்,
பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும்
பணிகளை பள்ளிக்கல்வித்துறை
இன்று தொடங்குகிறது.

 

விடைத்தாள் மதிப்பீட்டுப்
பணிகளில் மொத்தம்
40 ஆயிரம் ஆசிரியர்கள்
ஈடுபடுத்தப்படுகின்றனர்.
இன்று முதன்மைத் தேர்வர்கள்
விடைத்தாள்களை மதிப்பீடு
செய்வர். நாளை
துணைத்தேர்வர்கள் மதிப்பீடு
செய்கின்றனர். அதன்பிறகே
ஆசிரியர்கள் விடைத்தாள்
திருத்தும் பணிகளில்
ஈடுபடுத்தப்படுவர்.
இன்று காலை 8 மணிக்கு
விடைத்தாள் மதிப்பீட்டுப்
பணிகள் தொடங்குகிறது.

சேலத்தில் எத்தனை மையம்?:

 

சேலம் மாவட்டத்தில்,
மொத்தம் 6 மையங்களில்
பிளஸ்-2 விடைத்தாள்
திருத்தும் பணிகள் நடக்கின்றன.
இம்மாவட்டத்தைப் பொருத்தவரை,
விடைத்தாள் மதிப்பீட்டு
முகாம்களில் 266 முதன்மைத்
தேர்வாளர்கள், 266 கூர்ந்தாய்வு
அலுவலர்கள்,
1544 உதவித்தேர்வாளர்கள்,
275 இதர பணியாளர்கள்
மதிப்பீட்டுப் பணிகளில்
ஈடுபடுகின்றனர்.

 

சேலம் கல்வி மாவட்டத்தில் மாசிநாயக்கன்பட்டி ஸ்ரீசுவாமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, நோட்ரிடேம் பள்ளி ஆகிய மையங்களில் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் நடக்கின்றன.

 

ஆத்தூர் கல்வி மாவட்டத்தில் தேவியாக்குறிச்சியில் உள்ள தாகூர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பாரதியார் மெட்ரிக் பள்ளி ஆகிய இரண்டு மையங்கள் விடைத்தாள் மதிப்பீட்டுக்காக அமைக்கப்பட்டு உள்ளன.

 

எடப்பாடி கல்வி மாவட்டத்தில், மேட்டூர் மால்கோ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, எம்ஏஎம் ஹைடெக் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆகிய இரண்டு மையங்களில் பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணிகள் நடக்கின்றன.

 

இதற்கான முன் ஆயத்தக் கூட்டம், சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் செவ்வாய்க்கிழமை (மே 26) நடந்தது. விடைத்தாள் திருத்தும் பணிகளை பாதுகாப்பான முறையில் மேற்கொள்ளும் வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அறிவுறுத்தப்பட்டன. கொரோனா தொற்று பரவாமல் தடுக்க செய்யப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆட்சியர் ராமன் கூறியதாவது:

விடைத்தாள் மதிப்பீட்டு
மையங்களில் ஒவ்வொரு
நாளும் விடைத்தாள்
திருத்தும் பணிகள்
தொடங்குவதற்கு முன்பும்,
பணிகள் முடிந்த பின்பும்
இருமுறை கிருமி நாசினி
தெளிக்க வேண்டும்.

 

விடைத்தாள் திருத்தும்
பணிகளில் ஈடுபடும் ஆசிரியர்கள்,
ஆசிரியர் அல்லாத
பணியாளர்களுக்கு மீளப்
பயன்படுத்தக்கூடிய 3
முகக்கவசங்கள் வழங்கப்படும்.
மேலும், ஒவ்வொரு நபருக்கும்
தனித்தனியாக கிருமி நாசினி
வழங்கப்பட உள்ளது.

 

விடைத்தாள் மதிப்பீட்டு
முகாம்களில் சமூக
இடைவெளியை பின்பற்றும்
வகையில், ஓர் அறையில்
ஒரு முதன்மைத் தேர்வாளர்
(சிஇ), ஒரு கூர்ந்தாய்வாளர்
(எஸ்ஓ), 6 உதவித்தேர்வாளர்கள்
(ஏஇ) என மொத்தம் 8 பேர்
மட்டுமே அமர்ந்து விடைத்தாள்
மதிப்பீட்டுப் பணிகள்
மேற்கொள்ளப்படும்.

 

ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் விடைத்தாள் மதிப்பீட்டு மையத்திற்கு வருகைபுரியும்போது, தங்களது கைகளை சோப்பு போட்டு சுத்தம் செய்வதற்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

வெளிமாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிக்கு ஊருக்குத் திரும்ப வரும் ஆசிரியர்கள், தங்களது அடையாள அட்டை காண்பிக்கும்பட்சத்தில் அவர்கள் TNepass இல்லாமல் அனுமதிக்கப்படுவர்.

 

விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் மதிப்பீட்டு முகாம்களுக்கு வந்து செல்ல தேவையான 23 வழித்தடங்களில் 26 அரசுப்பேருந்துகள் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் இயக்கப்பட உள்ளன.

 

மதிப்பீட்டு மையங்களில் பணியாற்றும் அனைவருக்கும் சுத்தரிக்கப்பட்ட குடிநீர் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 

இம்மையங்களில் உள்ள கழிவறைகள் இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை கிருமி நாசினி மூலம் தூய்மைப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

தன்னார்வலர்கள் மூலம்
விடைத்தாள் மதிப்பீட்டு
மையங்களில் பணியாற்றும்
பணியாளர்களிடையே
சமூக இடைவெளியை
பின்பற்றுதல், முகக்கவசம்
மற்றும் கிருமி நாசினி
பயன்படுத்துவதை உறுதி
செய்திட நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளது.

 

இவ்வாறு ஆட்சியர் ராமன் தெரிவித்தார்.