ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் பிரஷ்ஷர் குக்கர் சின்னத்தில் சுயேட்சையாக போட்டியிட்ட டிடிவி தினகரன், 89013 வாக்குகள் பெற்று அமோக பெற்றி பெற்றார். ஆளும் அதிமுக வேட்பாளர் மதுசூதனனைவிட அவர் 40707 வாக்குகள் கூடுதலாக பெற்றார். எதிர்த்துப் போட்டியிட்ட திமுக உள்ளிட்ட அனைத்து வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர்.
கடந்த 2016ல் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் சென்னை ஆர்.கே. நகர் தொகுதியில் ஜெயலலிதா போட்டியிட்டு வெற்றி பெற்றார். கடந்த ஆண்டு டிசம்பர் 5ம் தேதி அவர் உடல்நலக்குறைவால் இறந்தார். கடந்த ஓராண்டாக அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது.
இதற்கிடையே ஆளும் அதிமுகவுக்குள் ஏற்பட்ட உள்கட்சி பிரச்னைகளால் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஓரணியாகவும், டிடிவி தினகரன் தலைமையில் மற்றொரு அணியாகவும் பிளவு பட்டது. முடக்கப்பட்டு இருந்த இரட்டை இலை சின்னம், அதிமுக கட்சிப்பெயர் ஆகியவை எடப்பாடி பழனிசாமி அணிக்கு அண்மையில் கிடைத்தது.
இதையடுத்து ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதிமுக தரப்பில் மதுசூதனன், திமுக தரப்பில் மருதுகணேஷ், நாம் தமிழர் தரப்பில் கலைக்கோட்டுதயம், பாஜக தரப்பில் நாகராஜன் போட்டியிட்டனர். சுயேட்சை வேட்பாளராக சசிகலா அணியைச் சேர்ந்த டிடிவி தினகரன் போட்டியிட்டார். இவர்கள் உள்பட மொத்தம் 52 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். டிடிவி தினகரனுக்கு பிரஷ்ஷர் குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டது.
கடந்த 21ம் தேதி ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடந்தது. 77.68 சதவீத வாக்குகள் பதிவானது. லயோலா கல்லூரி நடத்திய தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பில், சுயேட்சை வேட்பாளர் டிடிவி தினகரனுக்கு அதிக ஆதரவு இருப்பது தெரியவந்தது. இந்நிலையில், ராணி மேரி கல்லூரியில் ஆர்.கே.நகர் தொகுதியில் பதிவான வாக்குகள் இன்று (டிசம்பர் 24, 2017) எண்ணப்பட்டது.
மொத்தம் 19 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்பட்டன. முதல் சுற்றில் இருந்தே டிடிவி தினகரன் கணிசமான வாக்குகள் பெற்று முன்னிலையில் இருந்தார். தபாலில் நான்கு வாக்குகள் பதிவாகி இருந்தன. அதைப் பிரித்து எண்ணப்பட்டபோது மூன்று வாக்குகள் செல்லாததாக இருந்தன. ஒரே வாக்கு மட்டும் திமுகவுக்கு கிடைத்திருந்தது. தபால் வாக்கைத் தவிர, கடைசிவரை திமுக எந்த சுற்றிலும் முன்னிலை பெறவில்லை.
ஐந்து சுற்றுகள் முடிவில் டிடிவி தினகரன் (சுயே) 29267, மதுசூதனன் (அதிமுக) 15187, மருதுகணேஷ் (திமுக) 7983, நாகராஜன் (பாஜக) 408, கலைக்கோட்டுதயம் (நாம் தமிழர்) 1245 ஓட்டுகள் பெற்றிருந்தனர். அதாவது ஆர்.கே.நகர் மண்ணின் மைந்தரும், ஆளுங்கட்சி வேட்பாளரான மதுசூதனனைக் காட்டிலும் டிடிவி தினகரன் 14083 ஓட்டுகள் அதிகம் பெற்றிருந்தார்.
இந்த தேர்தல் அதிமுகவுக்கும் திமுகவுக்கும் என்ற நிலையாக இல்லாமல் இபிஎஸ்-ஓபிஎஸ் அணிக்கும், டிடிவி தினகரன் அணிக்குமான மோதலாகத்தான் பார்க்கப்பட்டது. ஒவ்வொரு சுற்றுகளின் வாக்கு எண்ணிக்கையும் அதையே வெளிப்படுத்தின.
பத்தாவது சுற்று முடிவில் மதுசூதனன் (25367) பெற்ற வாக்குகளைக் காட்டிலும் டிடிவி தினகரன் 23441 வாக்குகள் கூடுதலாக பெற்றிருந்தார். அதாவது 48808 ஓட்டுகள் பெற்றிருந்தார். இருவருக்குமான இடைவெளி தொடர்ந்து அதிகரித்து வந்தது. 15வது சுற்று முடிவில் டிடிவி தினகரன் 72518 வாக்குகளும், மதுசூதனன் 38966 வாக்குகளும் பெற்றனர்.
19வது மற்றும் கடைசி சுற்று எண்ணிக்கை முடிவில் டிடிவி தினகரன் 89013 வாக்குகள் பெற்று வெற்றி ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் அமோக வெற்றி பெற்றார். அதிமுகவின் மதுசூதனன் 48306 வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் பெற்றார். மதுசூதனனைக் காட்டிலும் டிடிவி தினகரன் 40707 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி அடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், திமுகவின் மருதுகணேஷ் 24581 வாக்குகளும், பாஜக வேட்பாளர் நாகராஜன் 1368 வாக்குகளும், நாம் தமிழர் கலைக்கோட்டுதயம் 3802 வாக்குகளும் பெற்றனர்.
டிடிவி தினகரன், மதுசூதனன் ஆகிய இருவரையும் தவிர எதிர்த்துப் போட்டியிட்ட திமுக, பாஜக, நாம் தமிழர் உள்ளிட்ட அனைத்து வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர்.
திமுகவுக்கு காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகள் ஆதரவுடன் போட்டியிட்டும் திமுக மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.