Thursday, March 28மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

வினாத்தாள் லீக்: சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு கணித பாடத்திற்கு மறுதேர்வு கிடையாது!

சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு கணிதத் தேர்வுக்கான வினாத்தாள் முன்கூட்டியே வெளியானதாக கூறப்பட்ட புகாரைத் தொடர்ந்து அந்தப்பாடத்திற்கு மறுதேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று கணித பாடத்திற்கு மறுதேர்வு கிடையாது என சிபிஎஸ்இ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

சிபிஎஸ்இ மாணவ, மாணவிகளுக்கு கடந்த மார்ச் 5ம் தேதி முதல் நாடு முழுவதும் பொதுத்தேர்வு தொடங்கி நடந்து வந்தது. இதில் பிளஸ்2 பொருளியல் மற்றும் பத்தாம் வகுப்பு கணிதம் ஆகிய பாடத்தேர்வுகளுக்கான வினாத்தாள்கள் முன்கூட்டியே வாட்ஸ் அப், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் வெளியானதாக புகார்கள் எழுந்தன.

சிபிஎஸ்ஐ நிர்வாகத்தைக் கண்டித்து டெல்லியில் பெற்றோர்கள், மாணவர்கள் தரப்பில் போராட்டம் நடந்தது. மத்திய மனித வளத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் வீட்டையும் பலர் முற்றுகையிட்டு போராடினர்.

இதையடுத்து, பிளஸ்2 பொருளியல் மற்றும் பத்தாம் வகுப்பு கணிதம் ஆகிய பாடங்களுக்கு மறுதேர்வு நடத்தப்படும் என்று சிபிஎஸ்இ அறிவித்தது. இதில், பிளஸ்2 பொருளியல் பாடத் தேர்வு மட்டும் இம்மாதம் (ஏப்ரல்) 25ம் தேதி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

பத்தாம் வகுப்பு கணித பாடத்திற்கும் மறுதேர்வு தேதி குறித்த அறிவிப்பு வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்தப் பாடத்திற்கு மறுதேர்வு கிடையாது என்று சிபிஎஸ்இ நிர்வாகம் இன்று (ஏப்ரல் 3, 2018) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

எனினும், வினாத்தாள் முன்கூட்டியே வெளியான விவகாரம் குறித்து தொடர்ந்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.