Thursday, April 25மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

திமுக கிராம சபை: அழையா விருந்தாளியான வீரபாண்டி ராஜா; கண்டுகொள்ளாத மா.செ.,!

சேலம் அருகே நடந்த
திமுக மக்கள் கிராமசபைக்
கூட்டத்தில் அழையா
விருந்தாளியாக உள்ளே
நுழைந்த வீரபாண்டி ராஜாவால்,
அவருக்கு எதிர்தரப்பினர்
மத்தியில் சிறிது நேரம்
சலசலப்பு உருவானது.

விரைவில் வர உள்ள
தமிழக சட்டமன்றத்
தேர்தலையொட்டி,
திமுக வகுத்துள்ள பரப்புரை
வியூகங்கள் மக்களிடம் வெகுவாக
கவனம் பெற்றுள்ளன.
அந்த வகையில் மக்கள்
கிராமசபைக் கூட்டங்கள்
வாயிலாக அக்கட்சியினர்
நேரடியாக மக்களை சந்தித்து,
இப்பொழுதே அந்தந்தப் பகுதிகளில்
உள்ள குறைகளையும்,
ஆளுங்கட்சியின் அவலங்களையும்
கேட்டு வருகின்றனர்.
இதற்கு மக்களிடமும் நல்ல
வரவேற்பு கிடைத்திருக்கிறது.

 

கட்சி அளவில் மக்கள்
கிராமசபைக் கூட்டங்கள் வெற்றி
பெற்றிருக்கும் அதேநேரம்,
கட்சிக்குள் இருக்கும் கோஷ்டி
பூசல்களும் வெட்டவெளிச்சமாகத்
தவறவில்லை. சேலம் கிழக்கு
மாவட்ட திமுகவைப் பொருத்தவரை
அயோத்தியாப்பட்டணம் மிக
முக்கியமான ஒன்றியம்.
கிட்டத்தட்ட 32 பஞ்சாயத்துகளைக்
கொண்ட ‘மினி’ சட்டமன்ற
தொகுதி போன்றது.

 

கடந்த மாதம் 23ம் தேதி
மக்கள் கிராமசபையின் துவக்க
நிகழ்ச்சியில் மட்டுமே
கலந்து கொண்ட கிழக்கு
மாவட்ட திமுக பொறுப்பாளர்
சிவலிங்கம், அதன்பின்
ஒன்றியத்தைக் கண்டுகொள்ளவில்லை.
கெங்கவல்லி, ஆத்தூர் ஆகிய
இரு இடங்களில் நடந்த மக்கள்
கிராமசபைக் கூட்டங்களில்
பெயரளவுக்கு கலந்து
கொண்டார் என்கிறார்கள்
கட்சியினர்.

 

இது ஒருபுறம் இருக்க,
வியாழனன்று (ஜன. 7)
அயோத்தியாப்பட்டணம் ஒன்றியம்
சார்பில் மக்கள் கிராமசபையின்
கடைசி கூட்டம் மின்னாம்பள்ளியில்
நடந்தது. ஒன்றிய பொறுப்பாளர்
விஜயகுமார் தலைமையில்
இக்கூட்டங்கள் சிறப்பாக
நடத்தப்பட்டு வந்தன.

இந்நிலையில்,
சேலம் கிழக்கு மாவட்ட
முன்னாள் பொறுப்பாளரும்,
தேர்தல் பணிக்குழு நிர்வாகியுமான
வீரபாண்டி ராஜா மின்னாம்பள்ளியில்
நடந்த மக்கள் கிராமசபைக்
கூட்டத்திற்கு வந்திருந்தார்.
மைக் பிடித்த அவர்,
தனது தந்தை மறைந்த
முன்னாள் அமைச்சர்
வீரபாண்டி ஆறுமுகம்
சேலம் மாவட்டத்திற்கு ஆற்றிய
கட்சி மற்றும் வளர்ச்சிப்பணிகள்
பற்றி பத்து நிமிடங்கள்
பேசிவிட்டு கிளம்பினார்.

 

வீரபாண்டி ராஜா,
தனியொரு நபராக
கூட்டத்திற்கு சென்றிருந்தாலும்
கூட, அவருடைய திடீர்
வருகையை ஒன்றியம் தரப்பில்
பெரிதாக ரசிக்கவில்லை.
ராஜாவும் இறுக்கமான
முகத்துடனேயே அங்கிருந்து
கிளம்பிச் சென்றிருக்கிறார்
என்கிறார்கள் கழக உடன்பிறப்புகள்.

 

இதுகுறித்து
அயோத்தியாப்பட்டணம் ஒன்றிய
திமுக மூத்த நிர்வாகிகள்
சிலர் கூறுகையில்,
”அயோத்தியாப்பட்டணத்தில்
ஒவ்வொரு மக்கள் கிராமசபைக்
கூட்டமும் ஒன்றிய பொறுப்பாளர்
விஜயகுமார் தலைமையில்தான்
நடத்தப்பட்டு வருகிறது.
கூட்டத்தில் கலந்து கொண்ட
மக்களுக்கு சில இடங்களில்
மதிய உணவு உபசரிப்பும்
நடந்துள்ளது. ஷாமியானா
பந்தல் முதல் கூட்டத்துக்கான
செலவுகளை அவரே செய்து
விடுகிறார். இப்படியான
நிலையில் மாவட்ட
பொறுப்பாளர் கூட வராத
நிலையில், திடீரென்று கிழக்கு
மாவட்ட முன்னாள்
பொறுப்பாளர் வீரபாண்டி ராஜா
கூட்டத்திற்கு வந்ததால்தான்
அங்கு ஒரு இறுக்கமான
சூழ்நிலை ஏற்பட்டது.

 

மின்னாம்பள்ளி வார்டு
கவுன்சிலர் ‘ஹாஃப்பாயில்’ ஆறுமுகம்,
ஐடி விங் துணை அமைப்பாளர்
உதயகுமார் ஆகியோர் மாவட்ட
பொறுப்பாளர் சிவலிங்கத்திடம்
சொல்லி, அவரின் அனுமதி
பெற்றுதான் வீரபாண்டி ராஜாவை
அழைத்ததாகச் சொல்கிறார்கள்.
ஆனால் அழைப்பு விடுக்கும்
பொறுப்பு ஒன்றிய
பொறுப்பாளருக்குதானே தவிர
மற்றவர்களுக்கு அல்ல.
அப்படியே மற்றவர்கள்
அழைத்தாலும் அது
அதிகாரப்பூர்வமானதும்
அல்ல.

 

முன்பெல்லாம் வீரபாண்டியார்
என்று பெயரைச் சொன்னாலே
கூட்டத்தில் விசில் சத்தம் பறக்கும்.
மின்னாம்பள்ளி கூட்டத்தில்
வீரபாண்டி ராஜா அவருடைய
தந்தை பெயரைச்
சொன்னபோதும்கூட மக்கள்
அமைதியாகத்தான் இருந்தனர்.
அதில் ராஜாவும் கொஞ்சம்
அப்செட்தான். மேலும்,
மாவட்ட பொறுப்பாளர் சிவலிங்கமும்
கிராமசபைக் கூட்டங்களில்
பெரிய அளவில் கண்டுகொள்ளாததும்
கட்சியினர் மத்தியில் கொஞ்சம்
அதிருப்திதான்,” என்றார்கள்
கழக உடன்பிறப்புகள்.

 

வீரபாண்டி ராஜா கிளம்பியதும்,
கூட்டத்திற்கு வந்திருந்த மக்கள்
தங்கள் பகுதிகளில் உள்ள
அடிப்படை பிரச்னைகள் குறித்து
பேசினர். பொன்மலை நகர்
பகுதியில் மேட்டூர் காவிரி
குடிநீர் வசதியின்மை, சாக்கடை
கால்வாய் வசதி இல்லாதது
ஆகிய பிரச்னைகள் பற்றி
குறிப்பிட்டனர். மின்னாம்பள்ளியில்
200க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு
பட்டா கிடைக்கவில்லை என்ற
புகார்கள் பரவலாக
கூறப்பட்டது.

 

கூட்ட முடிவில்,
அதிமுகவை நிராகரிக்கிறோம்
என்ற அச்சிட்ட பதாகையில்
மக்கள் ஆர்வத்துடன்
கையெழுத்திட்டு ஆட்சி மீதான
அதிருப்தியை பதிவு செய்தனர்.
கட்சியினர் வீடு வீடாகச் சென்று
ஆளுங்கட்சி மீதான ஊழல்
புகார்கள் அச்சிட்ட
துண்டறிக்கைகளை வழங்கி,
வாக்கு சேகரிப்பில்
ஈடுபட்டனர்.

 

– பேனாக்காரன்