Friday, March 29மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

பிரபல கல்லூரிகளின் பெயர்களில் ஆபாச வலைத்தளங்கள்! இளசுகளை சீரழிக்கும் சைபர் மாஃபியாக்கள்!!

EXCLUSIVE

 

டெபிட் கார்டுகளின்
கடவுச்சொல்லை ரகசியமாக
திருடி நூதனமாக பணம் பறிப்பது,
ரேன்சம்வேர், மால்வேர்
வைரஸ்கள் மூலம் கார்ப்பரேட்
நிறுவனங்களின் கம்ப்யூட்டர்களில்
தாக்குதல் நடத்துவது,
ஹேக்கர்கள் மூலம் வேவு
பார்த்தல் என சைபர்
மாஃபியாக்களின் குற்றங்கள்
தினுசு தினுசானவை.
ஆனால், இணையவழி
கிரிமினல்களின் கோர முகம்
அத்துடன் நிற்பதில்லை.

பண ஆதாயம், பழி தீர்த்தல்
என ஏதோ ஒன்றுக்காக அவர்கள்
எந்த எல்லைக்கும் போவார்கள்
என்பதற்கு, இணையதளங்களில்
மலிந்து கிடக்கும் ஆபாச
வலைத்தள பக்கங்களே
சைபர் மாபியாக்களின்
கோர முகத்தைக் காட்டி விடும்.
அதுவும் தமிழகத்தில் உள்ள
முன்னணி தனியார் கல்லூரிகளின்
பெயர்களில் நீலப்படங்களை
பதிவேற்றம் செய்வதும்,
அதன்மூலம் கோடிகளில்
புரள்வதும் அவ்வளவாக
வெளிச்சத்துக்கு வராதவை.

 

தமிழகத்தில்,
கடந்த சில மாதங்களுக்கு
முன்பு வரை பெண்கள் மற்றும்
குழந்தைகளுக்கு எதிரான
குற்றங்களைத் தடுக்கும்
வகையில் தமிழகக் காவல்துறை,
பல ஆபாச வலைத்தள பக்கங்களை
அதிரடியாக மூடின. அப்போது
இருந்த ஏடிஜிபி ரவி,
இந்தியாவில் புழக்கத்தில்
இருக்கும் ஆபாச வலைத்தளப்
பக்கங்களை மூடச்சொல்லி,
கூகுள் நிறுவனம் வரை
ஸ்பெஷல் டிரைவ் மேற்கொண்டார்.
சிறுவர்களின் பல ஆபாச
வீடியோக்கள், வலைத்தள
பக்கங்கள் மூடப்பட்டன.

 

”கல்லூரிகளின் பெயர்களில் பல்கிப் பெருகியிருக்கும் ஆபாசப்பட வலைத்தளங்கள் பக்கம் காவல்துறை ஏனோ தங்கள் கவனத்தை இதுவரை செலுத்தவில்லை. அதன் விளைவு, தற்போது கல்லூரி அட்மிஷன் நேரத்தில் முன்னணி கல்லூரிகளின் விவரங்களை தேடும்போது, அக்கல்லூரிகளின் பெயர்களில் இயங்கும் ஆபாச வலைத்தளங்களும் கண்களில் படுவதை தவிர்க்க முடியவில்லை,” என்கிறார், ஒரு மாணவியின் தந்தை.

 

தமிழகத்தில் பல முன்னணி தனியார் பொறியியல் கல்லூரிகள், பிரபலமான கலைக்கல்லூரிகளின் பெயர்களில் ஆபாசப்பட வலைப்பக்கங்கள் உலா வருகின்றன. சென்னை, கோவை, சேலம், ஈரோடு மாவட்டங்களில் முன்னணியில் உள்ள கல்லூரிகளின் பெயர்களில் மாணவிகளின் செக்ஸ் வீடியோக்கள், ஆசிரியைகள் – மாணவர்களின் அந்தரங்க சேட்டைகள் என பல்வேறு ‘கிளுகிளு’ பெயர்களில் பல வலைத்தளங்கள் இருக்கின்றன.

 

குறிப்பாக,
சென்னை காட்டாங்கொளத்தூரில்
உள்ள ஒரு பல்கலைக்கழக
மாணவிகளின் ஆபாசப்படங்கள்
என்ற பெயரிலும், குரூப் ஸ்டடி
என்ற பெயரில் ஆண்களும்,
பெண்களும் நெருக்கமாக
இருக்கும் பல வீடியோக்களும்
வேகமாக பரவி வருகின்றன.
மூன்றெழுத்து பெயர் கொண்ட
அந்த கல்லூரியின் இளம்பெண்
ஒருவர், ஒரே நேரத்தில்
இரண்டு ஆண்களுடன் ‘இருப்பது’
போன்ற ஆபாசப்படங்கள்,
அதே பல்கலை வளாகத்தில்
உள்ள ஏடிஎம் மையத்தில்
ஆணும், பெண்ணும் ‘நெருக்கமாக’
இருக்கும் காட்சிகள்,
அக்கல்லூரியின் பேராசிரியை
ஒருவர், வாலிபருடன்
காருக்குள்ளேயே கசமுசாக்களில்
ஈடுபடுவது என பல்வேறு
தலைப்புகளில் ஆபாசப்படங்கள்
‘போர்னோ’ பக்கங்களில்
கொட்டிக்கிடக்கின்றன.

 

சேலத்தில்,
மாநகரில் இரண்டெழுத்து
கொண்ட பிரபல தனியார்
பொறியியல் கல்லூரி,
நாமக்கல்லில் பெண்ணுக்கு
மாற்றுப் பெயர் கொண்ட
ஒரு பொறியியல் கல்லூரி,
பெண் பெயரிலேயே அமைந்த
இன்னொரு பொறியியல் கல்லூரி,
ஈரோட்டில் ஒரு தனியார்
கல்லூரி, கோவையில்
பாரம்பரியான ஒரு பொறியியல்
கல்லூரி உள்பட கூகுள்
தேடுதளமே சூடாகிப் போகும்
வகையில் பல்வேறு கல்லூரிகளின்
பெயர்களில் போர்னோ
வீடியோக்கள் பதிவேற்றப்பட்டு
உள்ளன. பல வலைத்தளங்கள்
தமிழ் செக்ஸ் என்ற பெயரிலும்,
கல்லூரிகளின் பெயரிலும்
நீலப்படங்களை எக்கச்சக்கமாக
பதிவேற்றி இருக்கிறார்கள்
சைபர் கும்பல்.

 

கல்லூரிகளின் பெயர்களில் உலாவும் ஆபாசப்பட வலைத்தளங்களை ஆய்வு செய்ததில் நமக்கு சில நுட்பமான விஷயங்களும் தெரிய வந்தன. குறிப்பிட்ட கல்லூரிகளின் மாணவிகள், ஆசிரியைகளின் செக்ஸ் என்ற பெயரில் பதிவேற்றப்பட்டு உள்ள ஆபாச வீடியோக்களில் சில பக்கங்கள் மட்டுமே இளம்பெண்கள் அல்லது தமிழ்நாட்டுப் பெண்கள் சார்ந்தவையாக இருக்கின்றன. பெரும்பாலும், வெளிநாட்டுப் பெண்களும், ஆண்களும் அந்தரங்க லீலைகளில் ஈடுபடும் காட்சிகளே மலிந்து கிடக்கின்றன.

 

தமிழ்நாட்டுப் பெண்களின் ஆபாச வீடியோக்களில் பலவும் அலுவலக அறைகள், விடுதி அறைகள், வகுப்பறைகள், பூங்கா, புதர் மறைவுகள் என பல இடங்களில் அரங்கேறிய லீலைகளாகவும், அவற்றிலும் பெண்களின் முகம் மட்டுமே முழுமையாக தெரியும் வகையிலும் படம்பிடிக்கப்பட்டு உள்ளன. அவை, சம்பந்தப்பட்ட பெண்களுக்கு தெரியாமல் ரகசியமாகவோ அல்லது தெரிந்தோ படம்பிடிக்கப்பட்டு இருக்கலாம். 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட நீலப்படங்களில் ஆண்களின் முகம் தெரியாத வண்ணம், மிக கவனமாக கேமரா கோணங்கள் வைக்கப்பட்டு இருந்தன.

 

தவிர, பெரும்பாலும் வெளிநாட்டுப் பெண்களின் நீலப்படங்களாகவும் இருந்தன. தமிழ்நாட்டு கல்லூரிகளின் பெயர்களில் ஆபாச வீடியோக்களை பதிவேற்றினால், அதிகமானோர் தேடிப்பார்க்க வாய்ப்பு உள்ளதாக கருதி, சைபர் மாஃபியாக்கள் அவ்வாறான குறுக்கு வழியைக் கையாண்டிருக்கலாம் என்ற அய்யமும் எழாமல் இல்லை.

 

இதில் வேடிக்கை என்னவெனில், கொரோனா ஊரடங்கு காலத்தில் இந்தியாவில் ஆபாச இணையதள பக்கங்களை தேடிப் பார்ப்பது 20 சதவீதம் அதிகரித்து உள்ளதாக கூறுகிறது ஓர் ஆய்வு. மேலும், இந்தியாவில் 95 சதவீதம் பேருக்கு ஆபாச இணையதளங்களைப் பார்க்கும் ஆர்வம் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

 

”பெண்கள், குழந்தைகளுக்கு
எதிரான குற்றங்கள் மட்டுமின்றி,
கல்லூரிகள் பெயரிலான
ஆபாசப்பட இணையதள
பக்கங்கள் இருக்கிறது என்பதை
நினைச்சாலே பதற்றமாக இருக்கிறது.
கொரோனா ஊரடங்கு காலத்தில்
பிள்ளைகள் வீடுகளில்
முடங்கிக் கிடக்கின்றனர்.
நிறைய நேரம் கிடைப்பதும்,
எல்லோர் கையிலும்
ஸ்மார்ட் போன்கள் இருப்பதும்கூட
அவர்களை ஆபாசப்பட
வலைத்தளங்கள் மீது
ஆர்வத்தைத் தூண்டியிருக்கலாம்.
வளரிளம் பருவ பிள்ளைகளின்
நிலை ‘ரியலி பேத்தடிக்’.
அவர்கள் வேறு ஒரு
உலகத்தில் இருக்கிறார்கள்.
அவர்கள் தவறான வழியில்
செல்லாமல் இருக்க ஜெபம்
செய்வதைத்தவிர எனக்கு
வேறு வழி தெரியவில்லை,”
என்கிறார், சேலத்தைச் சேர்ந்த
குடும்ப நல ஆலோசகர்
ரூபி தியாகராஜன்.

ஏடிஜிபி ரவி

தமிழகத்தில் சில மாதங்களுக்கு முன், சிறுவர்கள் ஆபாசப்பட வலைப்பக்கங்களை மூடியதன் மூலம் பலரின் கவனத்தை ஈர்த்து இருந்தார், ஏடிஜிபி ரவி. தற்போது எஸ்டிஎப் பிரிவில் பணியாற்றுகிறார். பிரபல கல்லூரிகளின் பெயர்களில் ஆபாச வலைத்தளப் பக்கங்கள் உள்ளது குறித்து கூறியதுமே, முன்னாடியே சொல்லி இருந்தால் அந்தத் தளங்களையும் மூடியிருக்கலாம் என்றார். தொடர்ந்து அவரிடம் பேசினோம்.

 

”ஸ்மார்ட் போன்
வைத்திருக்கும் யார்
வேணும்னாலும் ஆபாச
இணையதளங்களை பார்க்க
வாய்ப்புகள் இருக்கின்றன.
இவை எல்லாமே கட்டுப்பாடு
இல்லாத கலாச்சார சீரழிவுதான்.
அடிப்படையிலேயே இப்போது
நம்மிடம் குழந்தைகள்
வளர்ப்பு முறை சரியில்லை.
தாய், தந்தை இருவரும்
வேலைக்குப் போகும் வீடுகளில்
குழந்தைகளை கவனிக்க
முடிவதில்லை, பள்ளிகளிலும்
குந்தைகளின் நடத்தையில்
ஏற்படும் மாற்றங்களை
கண்டுக்கறதில்ல. உலகமய
தாக்கமும் இதுபோன்ற
சீரழிவுக்குக் காரணம்.

 

உலகளவில் இந்தியாவில்தான்
இளைஞர்கள் அதிகம்.
அவர்கள் தங்கள் திறன்களை
ஆக்கப்பூர்வமாக பயன்படுத்துவதை
விட்டுவிட்டு, ஆபாசப்படங்கள்
பார்ப்பது போன்ற பயனற்ற
செயல்களில் கவனம்
செலுத்துகின்றனர். சைபர்
குற்றங்களை கட்டுப்படுத்த
விழிப்புணர்வு ஏற்படுத்துவது
மட்டும்தான் ஒரே வழி.
இவ்வகை குற்றங்கள்
திரும்பத் திரும்ப முளைத்துக்
கொண்டேதான் இருக்கும்.
இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த,
பள்ளிகள் அளவிலேயே
சைபர் குற்றங்கள் குறித்து
பாடத்திட்டம் கொண்டு
வர வேண்டும்.

 

பெண்களுக்கு எதிரான
குற்றத்தடுப்பு சிறப்பு
நடவடிக்கையின்போது
ஆஸ்திரேலியாவில் இருந்து,
இணைய வழியில் தமிழச்சி
என்பவர் குரூப் செக்ஸை
புரமோட் செய்து வந்தார்.
அவருடைய வலைத்தள
பக்கத்தை அதிரடியாக மூடினோம்.
இதுவரை கிட்டத்தட்ட 4500க்கும்
மேற்பட்ட ஆபாச இணையதளங்கள்,
யுடியூப் பக்கங்களை மூடி
இருக்கிறோம். பெண்கள்,
குழந்தைகளுக்கு எதிரான
குற்றங்கள் செய்ததாக
28 பேர் கைது செய்யப்பட்டு
உள்ளனர். ஆனாலும், பெண்கள்,
சிறுவர்கள் ஆபாச இணையப்
பக்கங்கள் லட்சக்கணக்கில்
இருக்கின்றன. எல்லாவற்றையும்
ஊடுருவி தடை செய்வதும்
கஷ்டம்,” என்றார்
ஏடிஜிபி ரவி.

 

”இந்திய பெண்கள், குறிப்பாக தமிழ்நாட்டுப் பெண்கள் பெயரில் ஆபாச வீடியோக்கள் தெரிந்தோ, ரகசியமாகவோ படம் பிடிக்கப்பட்டு, வெளிநாடுகளில் இதற்கென்றே உள்ள ஆபாசப்பட வலைத்தள நிறுவனங்களுக்கு விற்கப்படுகிறது. அதன்மூலம், இந்தியப் பெண்களின் உடல் கோடிக்கணக்கில் வியாபாரம் பேசப்படுகிறது,” என்கிறார் சேலத்தைச் சேர்ந்த வெப் டெவலப்பர் வெங்கடேசன்.

 

இது தொடர்பாக வெங்கடேசன் மேலும் சில விவரங்களை பகிர்ந்து கொண்டார்.

 

”ஒவ்வொரு வெப்சைட்டுக்கும் தனித்தனி ஐ.பி. முகவரி இருக்கு. இங்குள்ள இணையதளங்களின் ஐ.பி. அட்ரஸ், இந்தியாவில் பதிவு செய்யப்பட்டதாக காட்டும். ஒரு நாட்டின் ஐ.பி. முகவரியை முடக்கினால், சைபர் மாஃபியாக்கள் வேறு நாட்டின் ஐ.பி. முகவரியில் உடனடியாக தொடங்கி அதே பக்கங்களை தொடங்கி விட முடியும். தமிழக காவல்துறையினர் ஆபாசப்பட வலைத்தளங்களை மூடியதாகச் சொல்வதும் கூட முழுமையான நடவடிக்கை அல்ல. அவர்கள் முடக்கியதாகச் சொல்லப்படும் பல ஆபாச வீடியோக்கள் வேறு வேறு தளங்களில் வெவ்வேறு பெயர்களில் இப்போதும் வலம் வருகின்றன.

 

இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட எந்த ஒரு படமும், வீடியோவும் சர்வர்களில் நிரந்தரமாக பதிவாகி இருக்கும். அதனால் அதை மீண்டும் மீளுருவாக்கம் செய்ய முடியும். உதாரணமாக, தமிழ் ராக்கர்ஸ் வலைத்தளம் பற்றி சொல்லலாம். அரசாங்கம், என்னதான் தமிழ் ராக்கர்ஸை முடக்கினாலும், அவர்கள் வேறு வேறு பெயர்களில் திருட்டுத்தனமாக சினிமா படங்களை வெளியிடுவதை நிறுத்துவதில்லை.

 

கல்வி நிலையங்களின் பெயர்களில் ஆபாசப்பட வலைத்தளங்கள் இருப்பதன் பின்னணியில் அதன் போட்டியாளர்கள் இருக்கலாம். அல்லது கல்லூரிக்கு கெட்டப் பெயர் ஏற்படுத்தும் நோக்கில் மாணவர்களும்கூட அவ்வாறான வீடியோக்களை பதிவேற்றம் செய்யலாம். சிலர், பெண்களை அச்சுறுவதற்காகவோ அல்லது அவர்களிடம் மீண்டும் ‘ஆதாயம்’ அடைவதற்காகவோ கூட ஆணும், பெண்ணும் உல்லாசமாக இருக்கும் காட்சிகளை பதிவேற்றம் செய்திருக்கலாம்,” என்கிறார் வெங்கடேசன்.

 

கடந்த பத்து ஆண்டுக்கு முன்பு, வந்தவாசியில் உள்ள ஒரு பாலிடெக்னிக் கல்லூரியில் படிக்கும் மாணவியும், மாணவரும் கதவிடுக்கில் திருட்டுத்தனமாக ‘உறவில்’ ஈடுபடும் ஒரு வீடியோ, அப்போது இணையங்களில் வேகமாக பரவியது. அந்த வீடியோ காட்சிகள், இன்றும் அதே கல்லூரியின் பெயரில் வலைத்தள பக்கங்களில் உள்ளன. அந்த மாணவி, இப்போது மனைவியாக, தாயாக அல்லது சமூகத்தின் முக்கிய பிரமுகராகக்கூட இருக்கலாம். ஆனால், ஏதோ சபலத்தில் செல்போனில் பதிவு செய்யப்பட்ட அந்த வீடியோ, இன்றும் உயிர்ப்புடன் உலா வருவது, அவர்களின் வாழ்க்கையை முற்றாக சிதைத்து விடும் ஆபத்து இருப்பதை நம்மில் பலரும் உணர்வதில்லை.

 

ஊரடங்கு காலத்திலும் ஆபாசப்பட வலைத்தளங்கள் மீது ஆர்வம் அதிகரிக்கக் காரணம் என்ன என்பது குறித்து நாம் சேலத்தைச் சேர்ந்த மனநல மருத்துவர் பிரதீப்பிடம் கேட்டோம்.

மருத்துவர் பிரதீப்

”போர்னோகிராபி பார்ப்பது என்பது ஆரம்பத்தில் ஒருவித ஜாலி என்பது போலதான் தொடங்கும். நாளடைவில், மன அழுத்தம் ஏற்படும் போதெல்லாம் ஆபாச வீடியோக்களை பார்ப்பது தொடரும். அதற்கே அடிமையாகிவிடும் அபாயமும் இருக்கிறது. ஆண்கள் சிலருக்கு பெண்களிடம் சகஜமாக பழகுவது கூச்சமாக இருக்கலாம். அவர்கள் ஆபாச வீடியோக்களை பார்த்து அந்த கூச்சத்தை போக்கிக்கொள்ள முயற்சிப்பார்கள். உண்மையில், அப்படி செய்வதால் எல்லாம் கூச்சம் போகாது. யதார்த்த வாழ்வில் பெண்களுடன் இயைந்து போக முடியாதவர்கள் போர்னோகிராபி பார்ப்பதன் மூலம் கற்பனை உலகில் தாங்கள் நினைத்தபடி வாழ்ந்து கொள்கிறார்கள்.

 

ஊரடங்கு காலத்தில் மன அழுத்தத்தை இலகுவாக்கும் வழிகள் எல்லாம் அடைப்பட்டு விட்டது. ஒரு வீட்டுக்குள்ளேயே ஒவ்வொருவரும் கையில் ஸ்மார்ட் போன்களை வைத்துக்கொண்டு தனித்தனி தீவுகளாக முடங்கி இருக்கிறார்கள். அதனால் அவர்கள் எளிதில் போர்ன் வீடியோக்கள் பக்கம் கவனம் செலுத்துகிறார்கள். ஆபாச வீடியோக்களைப் பார்ப்பதால் பெரிய அளவில் தீங்கு இல்லை. என்றாலும், அதுவே அதிகமாக போனால், ஒருகட்டத்தில் ஆபாச படக்காட்சிகளைப் பார்க்காவிட்டால் அந்த நபர் பயங்கரமாக எரிந்து விழுவது, கோபப்படுவது மட்டுமின்றி அவர்களின் இயல்பான பணிகள் பாதிக்கும் அபாயமும் இருக்கு. சமூகத்தில் இருந்து தனிமைப்பட்டுக் கொள்ளவும் வாய்ப்பு உள்ளது. எதுவுமே ஒரு அளவுக்குள் இருந்தால் பிரச்னை இல்லை,” என்கிறார் மனநல மருத்துவர் பிரதீப்.

 

ஆண், பெண் அந்தரங்க உறவுகளை கிளர்ச்சிக்காகவோ, மீண்டும் போட்டுப் பார்க்கும் ஆவல் காரணமாகவோ செல்போனில் பதிவு செய்வது என்பது, ஒருபோதும் பாதுகாப்பானது அல்ல. அந்தக் காட்சிகள் செல்போனுக்கு உரியவரின் அனுமதி இல்லாமலேயே பொதுவெளியில் காட்சிப் பொருளாகும் ஆபத்து இருக்கிறது என்கிறார்கள் தொழில்நுட்ப வல்லுநர்கள். மேலும், கல்லூரிகளின் பெயர்களில் வரிசை கட்டி நிற்கும் ஆபாச வலைத்தளங்களை காவல்துறையும், கல்லூரி நிர்வாகமும் உடனடியாக முடக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே, பெற்றோர்கள், மாணவிகளின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

 

– பேனாக்காரன்