Sunday, May 26மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

ஊரடங்கினால் சீரழிக்கப்பட்ட 2 சிறுமிகள்; 75 வயது முதியவர் முதல் பள்ளி மாணவர் வரை 12 பேர் கும்பல் வெறியாட்டம்!

நாமக்கல் அருகே,
ஓலை குடிசையில்
வசித்து வரும் இரண்டு
சிறுமிகளை 75 வயது
முதியவர் முதல் பிளஸ்-2
மாணவர் வரை 11 பேர் கும்பல்
கடந்த ஆறு மாதங்களாக
பாலியல் பலாத்காரம் செய்து
வந்துள்ள சம்பவம், முட்டை
மாவட்டத்தை உலுக்கி
எடுத்துள்ளது.

 

நாமக்கல் மாவட்டம்
ராசிபுரம் அருகே உள்ள
ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர்
செல்வாம்பாள்.
இவருடைய கணவர்,
மூட்டைத் தூக்கும்
தொழிலாளி.
இரு ஆண்டுகளுக்கு முன்பு
மாரடைப்பால் இறந்து விட்டார்.
பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த
செல்வாம்பாளுக்கு
மூன்று மகள்கள்;
இரண்டு மகன்கள்.
மூத்த மகள் திருமணம் ஆகி,
வெளியூரில் குடும்பத்துடன்
வசிக்கிறார். மற்ற இரு
மகள்களில் ஒருவர் ரேகா (13);
இன்னொரு மகள் ரஞ்சனி (12).
(தாயார் மற்றும் மகள்களின்
பெயர்கள் மாற்றப்பட்டு உள்ளன).

பாதிக்கப்பட்ட சிறுமிகளின் குடிசை

செல்வாம்பாள்,
மல்லூரில் உள்ள தனியார்
சேகோ ஆலையில் கூலி
வேலை செய்கிறார்.
தினசரி கூலி 250 ரூபாய்.
காலை 6 மணிக்கு வேலைக்குக்
கிளம்பினால் இரவு 10 மணிக்குதான்
வீடு திரும்புவார். இரவு ஷிப்டுக்குச்
சென்றால், மறுநாள் காலையில்
வீட்டுக்கு வருவார்.
வயதான மாமியார் மட்டுமே
துணையாக இருந்து வருகிறார்.
அவரும் வீட்டுக்குப் பின்பக்கத்தில்
உள்ள கோயில் திண்ணையில்
படுத்துக் கொள்வதால்,
வீட்டில் சிறுமிகள் ரேகா, ரஞ்சனி
மற்றும் அவர்களின் இரு தம்பிகளும்
தனிமையில்தான் இருந்துள்ளனர்.

 

அவர்கள் குடியிருக்கும்
இடத்தை வீடு என்றே சொல்லக்கூடாது.
பனை ஓலையால் எப்போதோ
வேயப்பட்ட மேற்கூரை. மழைக்கு
ஒழுகாமல் இருக்க மேற்கூரையை
தார் பாயால் மூடியிருக்கிறார்கள்.
கதவுகூட இல்லை.
15க்கு 8 அடி கொண்ட ஒரே அறை.
சமையல் பாத்திரம்,
துணிமணிகள் சிதறி கிடக்கிறது.
மிச்சமிருக்கும் இடத்தில்
ஒரு பாயைக்கூட போட முடியாது.
சுற்றிலும் மரங்கள்; முள் புதர்கள்.
இதுதான் அவர்களின் வாழிடச் சூழல்.

 

பெற்றோர் இல்லாததும்,
வறுமையும் சிறுமிகளின்
வாழ்வைத் தடம் புரளச்
செய்திருக்கிறது. உள்ளூரைச்
சேர்ந்த குடிபோதை ஆசாமிகள்
சிலர், வீட்டில் தனியாக இருக்கும்
சிறுமிகளை மயக்கி, அவர்களிடம்
தங்களின் இச்சையைத் தீர்த்துக்
கொண்டிருக்கிறார்கள். ஒருமுறை
இருமுறை அல்ல….
தொடர்ச்சியாக ஆறு மாதமாக
இந்த படுபாதகச் செயல்
நிகழ்ந்திருக்கிறது. கொரோனா
ஊரடங்கால் விளம்பு நிலை
மக்களின் வாழ்வாதாரம்
பாதிக்கப்பட்டு இருப்பது
ஒருபுறம் இருக்க, பள்ளிகள்
திறக்கப்படாததால் குடிசைக்குள்ளேயே
முடங்கிக் கிடந்த அப்பாவி
ஏழைச் சிறுமிகள், காமுகர்களிடம்
சிக்கி சீரழிந்து போகவும்
வழிவகுத்து விட்டது.

சிறுமிகள் நாசப்படுத்தப்பட்ட விவகாரம் கடந்த 9.10.2020ம் தேதிதான் காவல்துறை கவனத்துக்கு செல்கிறது. அதற்கடுத்த 48 மணி நேரத்திற்குள் ராசிபுரம் மகளிர் காவல் ஆய்வாளர் இந்திரா மற்றும் காவலர்கள் முதல்கட்டமாக சிறுமிகளின் கிராமத்தைச் சேர்ந்த ஊமையன் என்கிற முத்துசாமி (75), பெரியசாமி (70), சிவா என்கிற சங்கர் (26), சண்முகம் (45), மணிகண்டன் (30), செந்தமிழ்ச்செல்வன் (31), வரதராஜ் (55) ஆகிய 7 பேரை கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடையவர்களில் 11 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். ஒருவர் தாமாக சரணடைந்தார். ஆக மொத்தம் சிறுமிகளை சீரழித்தது 12 மிருகங்கள்.

 

ராசிபுரம் அணைப்பாளையத்தைச் சேர்ந்த திமுக பிரமுகர்கள் மாணிக்கம், சாமிப்பன்னி என்கிற பெரியசாமி ஆகிய இருவரும்தான் சிறுமிகளுக்கு நேர்ந்த கொடுமைகளை முதலில் பொதுவெளியில் அம்பலப்படுத்தியவர்கள். அவர்களைச் சந்தித்துப் பேசினோம்.

 

”பாதிக்கப்பட்ட சிறுமிகளின் வீட்டுக்கு அருகில் தூய்மைப் பணியாளர் ஒருவர் இருக்கிறார். சிறுமிகளின் அம்மா, வேலைக்குச் சென்ற பிறகு அந்த வீட்டுக்கு அடிக்கடி ஆள்கள் வந்து போவதை அவர் பார்த்திருக்கிறார். ஒருநாள் சந்தேகத்தின்பேரில் அங்கு சென்று பார்த்தபோது, ஊமையன் என்கிற முத்துசாமி வீட்டுக்குள் கீழே படுத்துக்கொண்டு, சிறுமிகள் இருவரையும் தன் மீது ஏறி படுக்கச் சொன்னதையும், ஏதேதோ செய்யும்படி மிரட்டியதையும் அவர் பார்த்துவிட்டார். அதைப் பார்த்தபிறகு அவர், ‘அய்யோ… அம்மா…’ என்று அலறியடித்துக்கொண்டு எங்களிடம் ஓடிவந்து நடந்த சம்பவத்தைச் சொன்னார். அதன்பிறகு நாங்கள் ஊரைக் கூட்டினோம். அதற்குள் ஊமையன் தப்பி ஓடிவிட்டார்.

 

சிறுமிகளிடம் விசாரித்தபோது அவர்கள் பயந்து கொண்டு பேசவே தயங்கினாங்க. மெல்ல பேச்சுக்கொடுத்து யார் யார் அவர்களிடம் தப்பாக நடந்தார்களோ அவர்களின் விவரங்களை வாங்கினோம். அந்தப் பிள்ளைங்க பாவம்ங்க. சோத்துக்கே வழி இல்லாத குடும்பம்ங்கய்யா. வீட்டுல ஆள் இல்லாத நேரமாக பார்த்து இந்த நாசமா போறவனுங்க உள்ளே நுழைஞ்சு சின்ன பிள்ளைகளுக்கு ரொட்டி, முறுக்கு, மிட்டாய்னு வாங்கிக் கொடுத்திருக்கானுங்க.

 

கைச்செலவுக்கு
அஞ்சு ரூபாய், பத்து ரூபாய்னு
அப்பப்ப கொடுத்து,
கெடுத்திருக்கானுங்க.
முழுசா மூணு வேளை
சோத்துக்கே வழியில்லாத
பிள்ளைங்க, முறுக்கு, மிச்சர்னு
தின்பண்டங்களுக்கு ஆசைப்பட்டு
வாழ்க்கையையே தொலைச்சிடுச்சிங்க.
அதுல ஒரு பொண்ணு இன்னும்
வயசுக்கே வரலைங்கய்யா.
நாங்க எல்லாரும் ஒரே சாதிதாங்க.
கொள்ளுப் பேத்தியாட்டம்
இருக்கிற பிள்ளைகள்ட்ட கூட
தப்பா நடந்துக்கிட்டானுங்களேனு
நினைக்கும்போதே மனசு
பதறுதுங்கய்யா. இதுக்கப்புறமும்
விட்டு வச்சா ஊருக்குள்ள
இன்னும் பல பிள்ளைகளை
நாசப்படுத்திடுவானுங்க.
அதனாலதான் போலீஸ்கிட்ட போனோம்,”
என்கிறார்கள் மாணிக்கமும்,
பெரியசாமியும்.

 

இதுகுறித்து நாமக்கல் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ரஞ்சித பிரியாவிடம் புகார் செல்ல, அதன்பிறகே கைது படலம் தீவிரம் அடைந்து இருக்கிறது. உடனடியாக சிறுமிகள் இருவரும் மீட்கப்பட்டு, எருமைப்பட்டியில் உள்ள ஒரு காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். குற்றவாளிகள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

”பெற்றோரின் அக்கறையின்மையும், அவர்களின் அறியாமையும்தான் இந்த சம்பவத்திற்கு முக்கிய காரணம். 6 மாத காலமாக 12, 13 வயதுள்ள சிறுமிகள் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்டு உள்ளார்கள் எனும்போது, அவர்களுக்கு என்ன நடக்கிறது என்று தெரியாமல் இருந்திருக்காது. என்றாலும், இந்த சம்பவத்தில் அந்தச் சிறுமிகள் மீது நாம் எந்த குற்றமும் சொல்ல முடியாது. அவர்களை பாதிக்கப்பட்டவர்களாகத்தான் (விக்டிம்) கருத வேண்டும். சிறுமிகளின் குழந்தைத்தனத்தையும், அறியாமையையும் குற்றவாளிகள் தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டனர்.

 

சின்னச்சின்ன அற்ப விஷயங்களைக் காட்டி குழந்தைகளை மயக்கி இருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. பெற்றோரிடம் இருந்து அரவணைப்பும் அன்பும் கிடைக்காதபோது, குழந்தைகள் அவற்றை இன்னொருவரிடம் எதிர்பார்க்கின்றனர். வெளியில் இருந்து தானாக அந்த அரவணைப்பு கிடைக்கும்போது, அவர்கள் பக்கம் மயங்கி விடுகிறார்கள்.

 

குழந்தை பெற்றுக்கொள்வதோ,
நல்ல பள்ளியில் சேர்ப்பது
மட்டுமோ போதாது. குழந்தைகளிடம்,
பெற்றோர் தங்களது பொறுப்பை
உணர்ந்து செயல்பட வேண்டும்.
அவர்களுக்கு வழிகாட்டியாக
பெற்றோரும், குடும்பத்தினரும்
ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.
அப்படி இல்லாவிட்டால்
பெண் குழந்தைகளை
மூன்றாம் நபர் யார் வேண்டுமானலும்
தவறாக பயன்படுத்திக் கொள்ளும்
அபாயம் இருக்கிறது. அதற்கு
இந்த சம்பவமே பெரிய உதாரணம்,”
என்கிறார் ரஞ்சித பிரியா.

 

இது ஒருபுறம் இருக்க, இந்த விவகாரத்தை அம்பலப்படுத்தியதாக மாணிக்கம், வெள்ளையன் மற்றும் சாமிப்பன்னி என்கிற பெரியசாமி ஆகியோரை கைது செய்யப்பட்ட குடும்பத்தினர் மிரட்டத் தொடங்கி உள்ளனர். மிரட்டலுக்கு பயந்து வெள்ளையன் என்பவர் வெளியூருக்கு ஓடிவிட்டார் என்கிறார்கள். பெரியசாமியோ, பாச்சல் கிராமத்தில் இருக்கும் தன் மகளுடைய வீட்டிற்குச் சென்றுவிட்டதாகச் சொன்னார்.

 

இதற்கிடையே, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மெகராஜ் அக். 17ம் தேதியன்று, பாதிக்கப்பட்ட சிறுமிகளின் வீட்டிற்கு தனியொரு நபராக நேரில் சென்று பார்வையிட்டுச் சென்றார்.

ஆட்சியர் மெகராஜ்

”இந்த வழக்கில் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட நபர்கள் ஓலை குடிசையில் தங்கி இருப்பது பாதுகாப்பானதாக தெரியவில்லை. அதனால், அவர்கள் ராசிபுரத்தில் உள்ள ஒரு தனியார் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அங்கு குடிநீர், கழிப்பறை வசதிகள் உள்ளன. அவர்களின் குடிசை ஒதுக்குப்புறமாக இருந்ததுதான், இந்தக் குற்றம் நடக்கக் காரணமாக அமைந்து விட்டது.

 

சிறுமிகளின் தாயார்
வேலைக்குப் போய்டறாங்க.
வீட்டில் எழுந்து நடக்க முடியாத
பாட்டி மட்டும்தான் இருப்பார்.
சிறுமிகள் தனியாக இருந்திருக்கிறார்கள்.
அந்தச் சூழ்நிலையை குற்றவாளிகள்
தப்பாக பயன்படுத்திக் கொண்டார்கள்.
சிறுமிகள் தற்போது காப்பகத்தில்
இருக்கிறார்கள். அவர்களின் தம்பிகள்
இருவரையும் நல்ல பள்ளியில்
சேர்க்கவும், வயதான மூதாட்டிக்கு
முதியோர் ஓய்வூதியம் கிடைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. தனிப்பட்ட முறையில் நானும் சில உதவிகளைச் செய்திருக்கிறேன்,” என்றார் ஆட்சியர் மெகராஜ்.

 

சிறுமிகள் மீதான பாலியல் குற்றங்கள் ஏன் நிகழ்த்தப்படுகிறது என்பது குறித்து அனைத்து இந்திய மாதர் சங்க சேலம் மாவட்ட செயலாளர் ஞானசவுந்தரியிடம் பேசினோம்.

ஞானசவுந்தரி

”பெண் குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களை தடுப்பது குறித்தும், நல்ல தொடுகை, தீய தொடுகை குறித்தும் தொடர்ந்து பரப்புரைகளைச் செய்து வருகிறோம். ஆனாலும், பாதிக்கப்பட்ட பெண் குழந்தைகளின் பெற்றோர்களே பல நேரங்களில் எங்களுக்கு ஒத்துழைப்பு தருவதில்லை எனும்போது ஏமாற்றம் அளிக்கிறது.

 

சிறுமிகள் மீதான பாலியல் குற்றங்களுக்கு செல்போன் பயன்பாடும், மதுப்பழக்கமும் முக்கிய காரணமாக கருதுகிறோம். ராசிபுரம் சம்பவத்தில் கூட குடிபோதைதான் காரணம். சிறுமியிடம் தவறாக நடக்கும் முதியவர் எல்லாம் என்ன ஜென்மம்னே தெரியல. பெத்த மகளிடமே தகப்பன் தப்பாக நடக்கும்போது மற்றவர்களின் பார்வை மட்டும் எப்படி இருக்கும்? பிறரின் குழந்தைகளையும் நம் குழந்தைகளாகப் பார்க்க வேண்டும். முதலில் மதுவை ஒழித்தாலே, பாலியல் குற்றங்களை கட்டுப்படுத்தி விடலாம்.

 

தமிழகத்தில் தினமும்தான்
பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான
குற்றங்கள் நடந்துக்கிட்டு
இருக்கிறது. ஆனால், முதல்வர்
எடப்பாடி பழனிசாமி
இதுபோன்ற குற்றங்களைக்
கட்டுப்படுத்துவது தொடர்பாக
ஒரு அறிக்கைகூட விடவில்லை.
காவல்துறையின் அலட்சியப்
போக்கும்கூட பாலியல்
குற்றங்கள் பெருக வாய்ப்பாக
இருக்கிறது,” என்றார் ஞானசவுந்தரி.

 

உத்தரபிரதேசத்திலோ, தலைநகர் டெல்லியிலோ ஒரு பெண், பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும்போது தமிழகத்தில் உள்ள ஒட்டுமொத்த அரசியல் கட்சிகளும் போராட்டம் நடத்துகின்றன. ராசிபுரத்தில் ஆறு மாதங்களாக இரண்டு சிறுமிகளுக்கு தின்பண்டங்களை கொடுத்து, பாலியல் ரீதியாக சூறையாடி இருக்கிறார்கள் கயவர்கள். இதுவரை எதிர்க்கட்சிகளோ, பட்டியல் சமூக இயக்கங்களோ இடதுசாரிகளோகூட இச்சம்பவத்தைக் கண்டித்து குரல் கொடுக்காமல் மவுனம் சாதிக்கிறார்கள். அரசியல்வாதிகள், அமைப்புகளிடம் ஏதோ ஒரு வகையில் ‘செலக்டிவ்னஸ்’ தன்மை அப்பிக்கிடக்கிறது.

 

ஏதுமற்று, திக்கற்று
நிற்கும் ராசிபுரம் சிறுமிகளுக்கு
ஏற்பட்ட கொடுந்துயரத்தைக்
கண்டு இச்சமூகம் குரல் எழுப்பாதது,
சமூகத்தின் சுய ஒழுங்கின் மீதே
அய்யத்தை ஏற்படுத்துகிறது.
இந்தச் சமூகம், கள்ள மவுனம்
என்ற செயலுக்காக தன் மீதே
காறி உமிழும் நிலைக்குத்
தள்ளப்பட்டிருக்கிறது.

 

– பேனாக்காரன்