Friday, April 26மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

ஏழை மாணவர்கள் வாழ்வில் உயர்ந்தால் எங்கள் குடும்பத்துக்கே பெருமை! நம்ம ஊர் ஹீரோ!!

பரோபகாரம் வெகுவாக
அருகிவிட்ட இன்றைய சூழலில்,
தங்களது உத்தியோகத்தைக் கடந்து,
சமூகத்தின் நலன் கருதி
செயல்படுதல் என்பதெல்லாம்
சாத்தியமே இல்லை என்ற
மனோபாவம் பெரிதாக
உருவெடுத்திருக்கிறது.
அவரவரின் நிதிநிலை ஒன்றே
தனிநபர்களின் அளவீடாக
கருதும் காலம் மேலோங்கி
இருக்கிறது. அதனால்
எல்லோருமே பணத்தின்
பின்னால் ஓடுவது என்பது
கிட்டத்தட்ட காலத்தின்
கட்டாயம் என்று தங்களுக்குத்
தாங்களே நியாயம்
கற்பித்துக் கொள்கிறார்கள்.

இதெல்லாம் ஒருபுறம் இருக்க,
கோவையைச் சேர்ந்த
தொழில் அதிபர் ராமமூர்த்தி
என்பவர், தன் சொந்த
கிராமத்துப் பிள்ளைகளின்
கல்வி நலனுக்காக பள்ளிக்கூடம்
கட்ட தனக்குச் சொந்தமான
நிலத்தை தானமாக வழங்கி
நாயக அவதாரம் எடுத்திருக்கிறார்.
சித்திரமும் கைப்பழக்கம்,
செந்தமிழும் நாப்பழக்கம் என்ற
அவ்வையாரோ,
‘நட்பும் தகையும் கொடையும்
பிறவிக்குணமாம்’ என்கிறார்.
அதுபோல, ராமமூர்த்திக்கு
இத்தகைய ஈகையுணர்வு
என்பது பிறவியில் இருந்தே
இருந்து வந்திருக்கிறது.

 

கோவை மாவட்டம்
எலச்சிப்பாளையத்தைச் சேர்ந்த
அவர், சொந்தமாக கட்டுமான
நிறுவனம் நடத்தி வருகிறார்.
கட்டுமானத் துறையில்
அவருக்கென தனி அந்தஸ்து
இருக்கிறது. கருமத்தம்பட்டி
சுற்றுவட்டார கிராமங்களில்
உள்ள மாணவர்கள் அரசு
உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில்
படிக்க வேண்டுமானால் பல கி.மீ.
தொலைவில் இருக்கும் தெக்கலூர்,
அரசூர், வாகராயம்பாளையத்திற்குதான்
செல்ல வேண்டும்.
அதிகபட்சமாக எலச்சிப்பாளையத்தில்
ஒரே ஒரு அரசு
நடுநிலைப்பள்ளி உள்ளது.

எலச்சிப்பாளையம்
நடுநிலைப்பள்ளியையாவது
உயர்நிலைப்பள்ளியாக தரம்
உயர்த்தினால் உள்ளூர் மாணவ,
மாணவிகள் குறிப்பாக
பெண் பிள்ளைகள் பாதுகாப்பாக
சென்று படிக்கும் சூழல் உருவாகும்
என சுற்றுவட்டார கிராம மக்கள்
தொடர்ந்து போராடி வந்தனர்.
அவர்களின் தொடர் முயற்சிக்கு
பள்ளிக்கல்வித்துறையும் செவி சாய்த்தது.
எலச்சிப்பாளையம் பள்ளியை
தரம் உயர்த்த ஒப்புக்கொண்டது.
ஆனாலும், ஜான் ஏறினால் முழம்
சறுக்கிய கதையாக,
உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தும்
அளவுக்கு போதிய இட வசதி இல்லை
என்று கூறி, அத்திட்டத்தை
கிடப்பில் போட்டுவிட்டது
பள்ளிக்கல்வித்துறை.

 

தங்கள் கிராமத்துப் பிள்ளைகள் தொடர்ந்து அரசுப்பள்ளியில் படிப்பதில் இப்படி ஒரு சிக்கல் இருப்பது குறித்து உள்ளூர்க்காரர்கள் மூலமாக தெரிந்து கொண்ட தொழில் அதிபர் ராமமூர்த்தி, அரசு நடுநிலைப்பள்ளிக்கு அருகில் இருந்த தனக்குச் சொந்தமான 1.50 ஏக்கர் நிலத்தை பள்ளிக்கே தானமாக எழுதிக் கொடுத்துவிட்டார். இது நடந்தது 2018ல். அந்த நிலத்தின் தற்போதைய மதிப்பு 3 கோடி ரூபாய். இப்படி ஒரு நிகழ்வு நடந்திருப்பதே தற்போதுதான் வெளி உலகுக்கு தெரிய வந்திருக்கிறது. இதையறிந்த உள்ளூர் மக்கள் அவரை உள்ளார்ந்து கண்ணீர் பெருக்குடன் பாராட்டி, வாழ்த்து தெரிவித்தும் நன்றி சொல்லியும் வருகின்றனர்.

 

”பள்ளி கட்டடம் கட்ட தானமாக நிலத்தை வழங்கிய தொழில் அதிபருக்கு எப்படி நன்றி சொல்வது என்று தெரியவில்லை. உயர்நிலைப்பள்ளி அமைந்தால், பெண் குழந்தைகள் கல்வி பயில வெளியூர்களுக்குச் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது. உள்ளூரில் படிப்பதால் அவர்களும் பாதுகாப்பு உணர்வுடன் இருப்பார்கள். இதன்மூலம், படிப்பை பாதியிலேயே நிறுத்தி விடாமல் தொடர்ந்து படிக்கவும் வாய்ப்பாகவும் அமையும்,” என்கிறார்கள் எலச்சிப்பாளையம் கிராமத்தினர்.

 

தொழில் அதிபர் ராமமூர்த்தியிடம் பேசினோம்.

 

”எங்கள் சொந்த ஊரான
எலச்சிப்பாளையத்தில் விவசாயமும்,
விசைத்தறியும் முதன்மைத்
தொழில்களாக உள்ளன.
ஏழைகள், நடுத்தர மக்கள்
அதிகம் வசிக்கும் எங்கள் ஊரில்,
1957ம் ஆண்டில் எங்கள் தந்தை
பள்ளிக்காக இடம் கொடுத்ததோடு,
கட்டடமும் கட்டிக் கொடுத்தார்.
அவர் வழியில் வந்த நாங்கள்
உழைப்பால் இன்றைக்கு நல்ல
நிலையில் இருக்கிறோம்.
அப்பாவிடம் இருந்த தர்ம
சிந்தனை, எங்களிடமும்
இருந்து வருகிறது.

 

ஊர் மக்களின்
கோரிக்கை மூலமாக,
சிந்தனையை செயல்படுத்த
நேரமும் வந்தது. பள்ளிக்கூடம்
கட்டுவதற்காக எனக்குச் சொந்தமான
இடத்தை தானம் செய்ய
முடிவு செய்தேன். 2018ம் ஆண்டே,
அந்த நிலத்தை பள்ளிக்கூடம்
கட்டுவதற்காக தான செட்டில்மெண்ட்
ஒப்பந்தம் எழுதிக் கொடுத்துவிட்டேன்.

 

இதன்மூலம் எங்கள் ஊரில்
உயர்நிலைப்பள்ளியும்,
அதன் தொடர்ச்சியாக
மேல்நிலைப்பள்ளியும் வந்தால்
ஏழை மாணவர்கள் சிரமமின்றி
உயர்கல்வி பெறுவார்கள்
என்ற நம்பிக்கை உள்ளது.
அங்கு படித்து மாணவர்கள்
வாழ்க்கையில் உயர்ந்தால் எங்கள்
குடும்பத்துக்கே பெருமை.
கட்டுமானப் பணிக்கு ஏதேனும்
உதவிகள் தேவை என்றாலும்
செய்யத் தயாராக இருக்கிறோம்,”
என்றார் ராமமூர்த்தி.

 

மனிதர்கள் இன்னும் இருக்கிறார்கள்.

 

– பேனாக்காரன்

%d bloggers like this: