Friday, March 29மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

நிச்சயமாக மோடி ஒரு பாசிசவாதிதான்! ஜாவேத் அக்தர் அதிரடி தாக்கு!!

கலை, இலக்கியத் துறைகளில்
இயங்கி வரும் படைப்பாளிகள்
தொடக்கத்தில் இருந்தே
நடுவண் பாஜக அரசையும்,
பிரதமர் நரேந்திர மோடியையும்
கடுமையாக சாடி வருகின்றனர்.
பாலிவுட்டில் பாடலாசிரியர்,
திரைக்கதை ஆசிரியர் என
பன்முகம் காட்டும் ஜாவித் ஆக்தர்
மற்றும் அவருடைய சகாவும்,
பிரபல இயக்குநருமான
மகேஷ் பட் ஆகியோர்,
மோடியை குடியுரிமை
திருத்தச் சட்டம் தொடர்பாக
வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம்
போட்டுத் தாக்கி வருகின்றனர்.

 

இந்நிலையில், அவர்கள்
இருவரும் அல் ஜஸீரா செய்தி
சேனலுக்கு வியாழனன்று (பிப். 13)
அளித்த நேர்காணலில்,
மோடி மீது மீண்டும்
கடும் விமர்சனங்களை
முன்வைத்தனர். ஜாவேத் அக்தர்,
‘சந்தேகமே இல்லாமல் மோடி
ஒரு பாசிசவாதிதான்’ என்று
கடுமையாக விமர்சித்து
இருந்தார்.

அந்த டிவி சானலின் நெறியாளர் ஜாவேத் ஆக்தரிடம், ”மோடி ஒரு பாசிசவாதி என்று ஜாவேத் கருதுகிறாரா?,” என்று கேட்டார்.

 

அதற்கு ஜாவேத் ஆக்தர், ”நிச்சயமாக. சந்தேகமே வேண்டாம்… நரேந்திர மோடி ஒரு பாசிசவாதிதான். அதாவது, பாசிசவாதிகளின் தலையில் கொம்புகள் இருக்காது. அவ்வளவுதான். பாசிசவாதி என்பதே ஒரு சிந்தனைதான்.

 

இன்னும் தெளிவாகச் சொல்வதானால், மற்றவர்களைக் காட்டிலும் நாங்களே சிறந்தவர்கள். நாங்கள் மட்டுமே கெட்டிக்காரர்கள் என்று எண்ணிக்கொள்வது. எங்களிடம் என்ன பிரச்னைகள் வேண்டுமானாலும் இருக்கலாம். அந்த பிரச்னைகள் எல்லாமே இந்த மக்களால்தான் என்று கருதிக் கொள்வது. மொத்தமாக மக்கள் மீது வெறுப்புணர்வுடன் நடந்து கொள்வோரைத்தான் பாசிசவாதிகள் என்கிறேன்,” என்று அதிரடித்தார்.

 

”இந்தியாவில் ‘இஸ்லாமிய போபியா’ இருக்கிறதா?,” என்று இயக்குநர் மகேஷ் பட்டிடம் கேட்கப்பட்டது.

 

அதற்கு அவர்,
”உலக நாடுகளில்
இஸ்லாமியர்கள் மீதான பயம்
(இஸ்லாமோபோபியா) என்பது,
அமெரிக்காவில் நடந்த 9/11
சம்பவத்திற்குப் பிறகு உருவாகி
இருக்கலாம் என கருதுகிறேன்.
ஆனால், இந்தியாவில்
இஸ்லாமியர்கள் மீதான பயம்
என்பது திட்டமிட்டு
உருவாக்கப்பட்டது. என்னளவில்,
இந்தியாவில் உள்ள எந்த
சராசரி குடிமகனும்
இஸ்லாமியர்களைக் கண்டு
அஞ்சுவதில்லை என்று
நினைக்கிறேன். இங்கே
இஸ்லாமியர்களும், மற்ற
மதத்தவர்களும் சகஜமாகத்தான்
உறவாடிக் கொள்கின்றனர்,”
என்றார்.

 

மேலும் அவர்,
”அதாவது, இந்தியாவில்
இஸ்லாமியர்கள் மீது இந்துக்கள்
உள்ளிட்ட மற்ற மதத்தவர்க்கு
ஒருவித வெறுப்புணர்வு அல்லது
அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளதுபோல்
சித்தரிக்கப்பட்டு வருகிறது;
கட்டமைக்கப்பட்டு வருகிறது.

 

இங்குள்ள ஊடகங்கள்
நாள்தோறும், 24 மணி நேரமும்,
ஆட்சியதிகாரத்தில்
இருப்பவர்களுக்காகவே வேலை
செய்கின்றனர். பாஜக, அதிகார
மையத்தில் இருக்க வேண்டும்
என்பதை இந்திய ஊடகங்கள்
விரும்புகின்றன. உண்மையில்,
பாஜகதான் இஸ்லாமியர்களை
வெறுத்து ஒதுக்குவதை உயிர்நாடி
பிரச்னையாக கருதி
செயல்பட்டு வருகிறது,”
என்றார் மகேஷ் பட்.

 

நன்றி: இந்தியா டுடே
தமிழில்: பேனாக்காரன்