Tuesday, November 5மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

மெர்குரி – சினிமா விமர்சனம்; ‘கார்ப்பரேட் சுரண்டலை தோலுரிக்கிறது’

சினிமா துறையினரின் நீண்ட வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்த பிறகு வெளியாகி இருக்கும் மெர்குரி, போற்றக்கூடிய புதிய முயற்சி எனலாம்.

கதை என்ன?:

பாதரச (மெர்குரி) கழிவினால் செவித்திறன், பேச்சுத்திறன், பார்வையை இழக்கும் ஆறு முக்கிய பாத்திரங்களைச் சுற்றி பின்னப்பட்ட கதைதான் மெர்க்குரி. ஓசைகளற்ற உலகத்தில் குரலற்றவர்களுக்கு ஏற்படும் வலி நிறைந்த வாழ்வியல் எத்தகையது என்பதைச் சொல்கிறது மெர்குரி. இதுதான் படத்தின் ஒரி வரி கதையும் கூட.

நடிப்பு: பிரபுதேவா, ரம்யா நம்பீசன், இந்துஜா, ஷனந்த் ரெட்டி, ஷஷாங்க், தீபக், அனிஷ் மற்றும் பலர்.

தொழில்நுட்பக் கலைஞர்கள்: ஒளிப்பதிவு – திரு, இசை – சந்தோஷ் நாராயண், தயாரிப்பு: ஸ்டோன் பெஞ்ச், இயக்கம் – கார்த்திக் சுப்புராஜ்.

திரைமொழி:

இந்துஜா, ஷனந்த் ரெட்டி, ஷஷாங்க், தீபக், அனிஷ் ஆகிய ஐந்து பேரும் நண்பர்கள். இவர்களால் வாய் பேச இயலாது. காது கேட்கும் திறனும் அற்றவர்கள். பாதரச கழிவுகளினால் வந்த வினை. இவர்களில் இந்துஜாவும், ஷனந்த் ரெட்டியும் காதலிக்கின்றனர்.

இந்துஜாவின் பிறந்த நாளன்று நண்பர்கள் ஐவரும் ஒரே காரில் செல்கின்றனர். இந்துஜா, காரை ஓட்டிச்செல்கிறார். ஷனந்தின் குறும்புத்தனங்களால் திடீரென்று கார் நிலை தடுமாறுகிறது. அப்போது குறுக்கே வந்த ஒரு நாய் மீது மோதாமல் இருக்க, காரை வேறு பக்கம் திருப்புகிறார் இந்துஜா.

எதிர்பாராத விதமாக காரில் பிரபுதேவா கையில் மாட்டியிருக்கும் நாய் சங்கிலி காரின் கொக்கியில் சிக்கிக் கொள்கிறது. நாய் மீது மோதாமல் தப்பித்தோம் என்ற நிம்மதி பெருமூச்சுடன் கார் ஓட்டிச்செல்கின்றனர். ஆனால் அந்த காரின் பின்பக்கத்தில் நாய் சங்கிலியுடன் தரதரவென்று பிரபுதேவா இழுத்துச் செல்லப்படுவதை அவர்கள் கவனிக்கவே இல்லை.

ஓரிடத்தில் கார் நின்ற பிறகுதான் காருடன் பிரபுதேவாவும் இழுக்கப்பட்டு வந்ததையும், அவர் பேச்சு மூச்சற்றுக் கிடப்பதையும் அறிகின்றனர். பிரபுதேவா இறந்து விட்டதாகக் கருதும் அவர்கள், அதிலிருந்து மாட்டிக்கொள்ளாமல் இருக்க பிரபுதேவாவின் சடலத்தை காட்டுப்பகுதிக்குள் வீசிவிட முடிவு செய்கின்றனர்.

காட்டுப்பகுதிக்குள் செல்ல பயப்படும் இந்துஜா மட்டும் காருக்குள் தனியாக அமர்ந்திருக்க மற்ற நால்வரும் சடலத்துடன் காட்டுக்குள் செல்கின்றனர். சடலத்தை வீசிவிட்டு மீண்டும் காரை நோக்கிச் செல்லும்போதுதான் அவர்களில் ஒருவருடைய ஐபேடு காணாமல் போயிருப்பது தெரிய வருகிறது. மீண்டும் அதைத் தேடி காட்டுக்குள் செல்கின்றனர்.

அங்கே வீசப்பட்ட பிரபுதேவாவின் சடலம் காணாமல் போயிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைகின்றனர். தலைதெறிக்க காரை நோக்கி வரும் அவர்கள், அங்கே காத்திருந்த இந்துஜாவை காணாமல் மேலும் பதற்றம் அடைகின்றனர்.

இந்துஜா, ஆளரவமற்ற இடத்தில் உள்ள ஒரு பாழடைந்த பாதரச ஆலைக்குள் இருப்பதுபோல் தெரிய வர, அங்கே செல்கின்றனர். காட்டுக்குள் வீசப்பட்ட பிரபுதேவாவின் சடலம், அந்த ஆலைக்குள் இருக்கிறது. இந்துஜாவை தேடிச்சென்ற ஒவ்வொரு நபரும் மர்மமான முறையில் கொல்லப்படுகின்றனர்.

பிரபுதேவாவுக்கு என்ன நடந்தது? இந்துஜாவின் நண்பர்கள் கொல்லப்படுவது ஏன்? என்பதை சைலன்ட் திரில்லராகச் சொல்லி இருக்கிறார் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்.

அத்தனை பேரும் அசத்தல்:

‘மேயாத மான்’ என்ற ஒரே படத்தில் அறிமுகம் ஆகியிருந்தாலும் இந்துஜா தேர்ந்த நடிப்பை வழங்கி இருக்கிறார். அவருடன் வரும் நண்பர்களும், கதைக்கேற்ற கச்சிதமான நடிப்பை கொடுத்திருக்கின்றனர். காது கேட்காத, வாய் பேச முடியாத நண்பர்கள் உரையாடிக்கொள்ளும் அத்தனை காட்சிகளும் அற்புதம். பார்வையாளர்கள் குழம்பிவிடக் கூடாது என்பதற்காக சைகை மொழிகளுக்கு தமிழில் சப்&டைட்டில் போடப்படுகிறது. அதையும் தவிர்த்து இருக்கலாம்.

பிரபுதேவா, வித்தியாசமான ஒப்பனையில் அதிரடிக்கிறார். அவருக்கு என்ன நடந்தது என்பதை விளக்கும் காட்சிகளில் பாதரச கழிவுகளினால் மக்களுக்கு ஏற்படும் அபாயத்தையும், அதன் பின்னணியில் உள்ள கார்ப்பரேட் முதலாளிகளின் லாப வெறியையும் லேசான தொட்டுச் செல்கிறார் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்.

கார்ப்பரேட் கும்பலின் வெறி:

பாதரச கழிவுகளால் பாதிக்கப்பட்டவர்களுக்காக இந்தப்படத்தை சமர்ப்பித்து இருப்பது வரவேற்கக் கூடியது. வெகுசன ஊடகத்தின் மூலம் பரப்புரை நெடி இல்லாமல் ஒரு கருத்தை மக்கள் மனதில் விதைக்கும் வித்தையை சரிவர கையாண்டிருக்கிறார் இயக்குநர்.

மேலும், நியூட்ரினோ, தூத்துக்குடி ஸ்டெர்லைட், ஹைட்ரோகார்பன், மீத்தேன் போன்ற திட்டங்களுக்காக மக்கள் போராடி வரும் இந்த சூழ்நிலையில், மெர்குரி படம் வெளியாகியிருப்பது வரவேற்புக்குரியது.

பின்னணி இசை அற்புதம்:

இது ஒரு சைலன்ட் திரில்லர் வகைமையிலான படம் என்பதால், அதற்கேற்ப பின்னணி இசையால் மிரட்டி இருக்கிறார்.

அடுத்து குறிப்பிடப் பட வேண்டியது, திருவின் ஒளிப்பதிவு. காட்டுப்பகுதி, கும்மிருட்டு, பாழடைந்த பாதரச ஆலை என துல்லியமாக படம் பிடித்திருக்கிறார். இரண்டாம் பாதியில் பெரும் பகுதி பாழடைந்த கட்டடத்திற்குள்தான் கதை நகர்கிறது என்றாலும் அதை அலுப்பு தட்டாத வகையில் வித்தியாசமான கோணங்களில் படமாக்கியிருக்கிறார் திரு.

கமல் நடிப்பில் ‘பேசும் படம்’ என்ற வசனங்களே இல்லாமல் ஒரு படம் முன்பு வெளியாகியது. அதன்பிறகு, கார்த்திக் சுப்புராஜின் நல்லதொரு முயற்சி மெர்குரி. கார்ப்பரேட் கும்பலின் சுரண்டலை சொன்னதற்காகவே படத்தையும், படைப்பாளியையும் பாராட்டலாம்.

 

– வெண்திரையான்.