கிருஷ்ணகிரி மாவட்டத்தின்
குக்கிராமங்களில் ஒன்று,
பூதொட்டிக்கொட்டாய்.
இந்த ஊரைச்சேர்ந்த சங்கீதா,
எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வில்
470 மதிப்பெண்கள் பெற்று,
பள்ளி அளவில் முதலிடம்
பெற்றாள். அடுத்தடுத்து
மேல்நிலை வகுப்பு, கல்லூரிக்குச்
செல்ல வேண்டியவள்,
நேராகச்சென்ற இடம்
எது தெரியுமா? வயல்வெளி.
ஆமாம். தினசரி 60 ரூபாய்
கூலிக்கு களைப்பறிக்கச்
சென்று வந்தாள். தோழிகள்
புத்தகப்பையைச் சுமந்து செல்ல,
இவளோ மதிய உணவுக்கான
தூக்குச்சட்டியையும்,
களைக்கொத்தையும்
சுமந்து சென்றாள்.
கடும் பொருளாதார நெருக்கடி சங்கீதாவை கூலி வேலைக்குச்செல்லவே நிர்ப்பந்தித்தது. இனி புத்தக வாசனையே கிடைக்காது என்றிருந்த நிலையில், ‘ஓசூர் வித்யூ கல்வி, சமூக அறக்கட்டளை‘யின் கண்களில் படுகிறாள். அந்த நாள், தன் கனவுகளை நனவாக்கும் என்று அப்போது அவள் அறிந்திருக்கவில்லை. ஆனால் அதன்பிறகு அவள் வாழ்வு வண்ணமயமானது என்றால் அதற்கு, வித்யூ அறக்கட்டளைதான் முழு காரணமாக இருக்க முடியும்.
ஓசூர் நகரை மையமாகக் கொண்டு இயங்கி வருகிறது, ‘வித்யூ கல்வி, சமூக அறக்கட்டளை’. கடந்த 2014ம் ஆண்டு பிப்ரவரி திங்கள் 6ம் தேதிதான் பதிவு பெற்ற அமைப்பாக வெளியுலகுக்கு முகம் காட்டுகிறது. வறுமை காரணமாக யார் ஒருவரின் கல்வியும் தடைப்பட்டு விடக்கூடாது என்பதுதான் இந்த அமைப்பின் நோக்கம்.
அமைப்பின் தோற்றுவாய்க்குப் பி(மு)ன்னணியில் கோபி, ரமேஷ் (எ) கிருஷ்ணமூர்த்தி, தேவிசோனா, இவருடைய கணவர் முருகேசன், செண்பகமுத்துக்குமார், அகிலா ஆகிய ஆறு பேர் இருக்கின்றனர். இவர்களில் தேவிசோனா, கூட்டுறவுத்துறையில் முதுநிலை ஆய்வாளர். மற்றவர்கள், தனியார் நிறுவன தொழிலாளர்கள்.
ஒரு நாள் ஓசூர் இஎஸ்ஐ குடியிருப்பில் உள்ள காய்கறி கடைக்கு அகிலா, காய்கறி வாங்கச் சென்றார். அங்கே, காய்கறி கடைக்காரம்மாவிற்கு மூன்று பெண் பிள்ளைகள் இருப்பதும், அவர்கள் படிப்பை பாதியிலேயே கைவிட்டுவிட்டதும் தெரியவருகிறது.
காய்கறிக் கடைக்காரம்மாவின் கணவர், வேறு ஒரு பெண்ணுடன் ஏற்பட்ட தொடர்பு காரணமாக மூன்று பெண் குழந்தைகளுடன் மனைவியை நிர்க்கதியாய் தவிக்கவிட்டு ஓடிப்போய் விட்டார். அவன் கொடுத்த பிள்ளைகளை ஆளாக்கும் பொறுப்புடன், அவன் விட்டுச் சென்ற கடன்களை தீர்க்கும் சுமையும் கூடிவிட, பிள்ளைகளைப் பள்ளியைவிட்டு நிறுத்தி விட்டார்.
இதுபற்றி அகிலா, சக தோழர்களிடம் பகிர்ந்து கொள்ள, அவர்களோ தங்களின் சேமிப்பில் இருந்து 28 ஆயிரம் ரூபாயை தயார் செய்கின்றனர். அந்த மாணவிகள் படித்த பள்ளியில் சென்று நிலைமையை விளக்குகின்றனர். பள்ளி நிர்வாகமும் மனம் இறங்கிவந்து, நிலுவைக் கட்டணம் வாங்காமலேயே மாற்றுச்சான்றிதழும் கொடுத்து விடுகிறது. அதன்பின்னர் மூன்று குழந்தைகளையும் அந்த ஆறு பேரும், ஓசூர் ஜான் போஸ்கோ மேல் நிலைப்பள்ளியில் சேர்த்துப் படிக்க வைத்தனர். இது நடந்தது, 2013ம் ஆண்டு.
இதன் பிறகுதான், ‘ஏன் நாமே ஓர் அமைப்பைத் தொடங்கி, அதன்பேரில் நம்மால் இயன்ற கல்வி உதவிகளைச் செய்யக்கூடாது?’ என்று சிந்தித்தனர். அந்த சிந்தனையின் முழு வடிவம்தான் வித்யூ கல்வி, சமூக அறக்கட்டளை.
இப்போதுவரை இந்த அமைப்பில் தலைவர், செயலாளர், பொருளாளர் என யாருக்கும் எந்த தனிப்பட்ட பொறுப்பும் கிடையாது. எல்லோரும் இங்கே சமம். கல்வி நிதியுதவி பெறும் பயனாளிகளின் வீட்டிற்கு நேரில் சென்று ஒருமுறைக்கு இருமுறை திடீர் ஆய்வு செய்கின்றனர்.
குழு உறுப்பினர்களிடம் இருந்து ஆண்டு சந்தாவாக ஆயிரம் ரூபாயும், மாத சந்தாவாக ரூ.100ம் வசூலிக்கப்படுகிறது. தன்னார்வலர்கள் முன்வந்து கொடுக்கும் நிதியையும் ஏற்றுக் கொள்கின்றனர். எனினும் இதுவரை உறுப்பினரல்லாதோரிடம் நன்கொடை கேட்டுச் செல்லாமல் தனித்துவத்துடன் இயங்குகிறது, இந்த அறக்கட்டளை.
”எதற்கும் ஓர் ஆரம்பப்புள்ளி
என்று ஒன்று வேண்டுமல்லவா?
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த
மூன்று மாணவிகளுக்கு
உதவியதுதான் எங்களின்
தொடக்கம். என்னால்
என்றைக்கும் மறக்க
முடியாத நிகழ்வும் அதுதான்,”
என்கிறார் செண்பக முத்துக்குமார்.
அமைப்பின் முக்கிய
களப்பணியாளர்களில்
ஒருவரான ரமேஷ் நம்மிடம்
விரிவாகவே பேசினார்.
”சமூகத்தின் அறியாமை
இருளைப் போக்கும் ஒரே
திறவுகோல் கல்விதான்.
வறுமையால் வாடுபவனுக்கு
பொருளுதவிச் செய்வதைக்
காட்டிலும், அதன் பொருட்டு
தடைப்பட்டு நிற்கும் கல்வியைத்
தொடரச் செய்யலாமே என்று
முடிவெடுத்தோம். அப்படி
தொடங்கியது தான்
இந்த அமைப்பு.
நல்ல விதை, செடியாகி,
மரமாகி, கனிகளைத் தரும்.
ஏழை மாணவர்களுக்கு
கல்வி உதவி செய்வதை
நாங்கள் விதை விதைப்பது
போலத்தான் கருதுகிறோம்.
அதற்காகவே, ‘வித்து’ என்றும்,
‘உங்களுடன் இருப்போம்’
என்பதைக் குறிக்கும் நோக்கில்
‘வித் யூ’ (WITH U) என்று
அமைப்பிற்கு பெயர் வைத்தோம்.
நாங்கள் ஊன்றிய விதைகள்,
ஒருநாள் இந்த சமுதாயத்திற்கு
மிகுந்த பலனளிக்கும்.
பெற்றோரை இழந்த அல்லது பெற்றோரில் யாரேனும் ஒருவரை இழந்து தவிக்கும் பிள்ளைகள், உழைக்கும் திறனற்ற பெற்றோர்களது பிள்ளைகளின் படிப்புச்செலவுக்கு உதவுகிறோம். குறைந்தபட்சம் ரூ.5000 முதல் உதவித்தொகை வழங்குகிறோம். வறுமையின் கோரப் பிடியில் இருக்கும் சில மாண வர்களுக்கு அவர்களின் முழு கல்விச்செலவையும்கூட ஏற்றுக் கொண்டிருக்கிறோம்.
பூதொட்டிக்கொட்டாயைச் சேர்ந்த சங்கீதா, எங்களின் முயற்சியால் வெற்றிகரமாக டிப்ளமோ முடித்துவிட்டு, இப்போது பி.இ., படிப்பையும் தொடர்ந்து வருகிறார். அதற்கான கல்விச்செலவையும் ஏற்றுக்கொண்டிருக்கிறோம். கடந்த மூன்று ஆண்டுகளில் 108 மாணவர்களுக்கு, கிட்டத்தட்ட 11 லட்ச ரூபாய் கல்வி உதவித்தொகை வழங்கி இருக்கிறோம். முழு கல்வியையும் முடித்து முதல்கட்டமாக 6 பேர் வேலைக்குச் சென்றிருக்கிறார்கள்,” என்று அர்த்தச் செறிவுடன் பேசினார் ரமேஷ்.
கல்வி உதவித்தொகை வழங்குவதுடன் நிறுத்திக் கொள்ளாமல், சமூக விழிப்புணர்வுப் பணிகளிலும் ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறது வித் யூ அறக்கட்டளை.
அஞ்செட்டி பகுதியில் ஓர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த 2014ம் ஆண்டு நடந்த 80 பிரசவங்களில், 36 மரணங்கள் நிகழ்ந்துள்ளன. இவற்றில் சில, மகப்பேறின்போது தாயும் சேயும் பலியானது; சில, தாய் அல்லது சேய் மட்டும் பலியானதாக இருக்கும். இவை அரசின் அதிகாரப்பூர்வ ஆவணங்களில் பதியப்படாதது. இதுபற்றி வித் யூ அமைப்புக்குத் தகவல் கிடைக்க, அதனுடைய ஆய்வில் குழந்தைத் திருமணங்கள்தான் இந்த அசம்பாவிதங்களுக்குக் காரணம் எனத் தெரியவருகிறது. இதன் மீது சினிமா பாணியில் எதிர்வினையாற்றுவதைக் காட்டிலும், விழிப்புணர்வு பிரச்சாரம் செய்வதே சிறந்தது என தீர்மானித்தனர்.
அதன்பிறகு, தொடர்ச்சியாக தளி ஒன்றியத்திற்கு உள்பட்ட உரிகம், நூரொந்து சாமி மலை, அஞ்செட்டி, ஜவளகிரி, தக்கட்டி, கேரட்டி, கரடிக்கல், பாண்டுரங்கன்தொட்டி, தொட்டமஞ்சி, கொடகரை, கோட்டையூர், நாட்றம்பாளையம், சிவபுரம், கும்மளாபுரம், பாலதொட்டனப்பள்ளி, திக்கனஹள்ளி, டி.கொத்தூர், தளி ஆகிய பகுதிகளில் அனைத்து மலைக்கிராமப் பள்ளிகளுக்கும் நேரில் சென்று, வித் யூ அறக்கட்டளைக் குழுவினர் தீவிர விழிப்புணர்வுப் பிரசாரம் செய்துள்ளனர்.
பெண் குழந்தைகளுக்கு நல்ல தொடுகை, தீய தொடுகை குறித்து பயிற்சி வழங்குகின்றனர். முதலுதவி சிகிச்சை, தேர்வை எதிர்கொள்வது எப்படி?, குழந்தைத் திருமணம், குழந்தைத் தொழிலாளர்கள் ஒழிப்பு, தன் சுத்தம் குறித்தும் பயிற்சி அளித்து வருகின்றனர்.
அமைப்பின் மற்றொரு களப்பணியாளரான தேவிசோனா, ”கொடகரை மலைக்கிராமத்தில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வுக்காக பல கி.மீ. தூரம் நடந்து சென்று பிரசாரம் செய்தோம். சூளகிரி அருகே நடந்த ஒரு விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் இறந்து விட்டனர். தாயும் அவரின் இரு குழந்தைகளும் மட்டுமே உயிர் பிழைத்தனர். அந்த இரு குழந்தைகளுக்கும் கல்வி உதவித்தொகை வழங்கியதை மறக்க முடியாது,” என்று நினைவு கூர்ந்தார். அமைப்பில் உள்ள ஒவ்வோர் அங்கத்தினரையும் களப்பணியாளராக மாற்ற வேண்டும் என்று தன்னுடைய விருப்பத்தையும் கூறினார்.
”பிறந்தோம்; இருந்தோம்;
செத்தோம் என்றில்லாமல்
இந்த மண்ணுக்கு ஏதாவது
ஆக்கப்பூர்வமாக செய்ய
வேண்டும் என்ற புள்ளியில்
ஒத்த சிந்தனையுள்ள தோழர்கள்
ஒன்றிணைந்தோம்.
இதை புரிந்து கொண்டவர்கள்
எங்களுக்கு கரம் கொடுத்து
உதவுகிறார்கள்.
அரசுப்பள்ளி ஆசிரியர்கள் பலர்
ஆர்வத்துடன் இப்போது
எங்களுடன் இணைந்துள்ளனர்.
வறுமை காரணமாக யாருக்கும்
இங்கே கல்வி கிடைக்காமல்
போய்விடக்கூடாது என்பதை
லட்சியமாகக் கொண்டு
தொடர்ந்து இயங்கிக் கொண்டு
இருக்கிறோம்,”
என்கிறார் ரமேஷ்.
வித்யூ டிரஸ்ட் தொடர்புக்கு: 9597008558, 9842845507
– பேனாக்காரன்
contact: selaya80@gmail.com