Monday, June 17மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

ஓராயிரம் வளர்மதிகள் வருவார்கள்!

மக்களை நேசிக்கும் யார் ஒருவரும் ஒரு கட்டத்தில், ஆளும் வர்க்கத்தை எதிர்க்கத் துணிந்தவர்களாக மாறி விடுவதுதான் காலம் போட்டுக்கொடுத்திருக்கும் பாதை. தன் குடும்பம், குழந்தைகள் என்று வட்டத்திற்குள்ளேயே வாழ்வோருக்கு இது பொருந்தாது. மாறாக, மக்களைப் பற்றிய சிந்தனை யாரிடம் மேலோங்கி இருக்கிறதோ அவர்களே சாமானியர்களின் குரலாக ஒலிக்கத் தொடங்கி விடுகின்றனர்.

சேலம் மாவட்டம் வீராணம் அருகே உள்ள பள்ளத்தானூரைச் சேர்ந்த மாதையன் மகள் வளர்மதி , பெரியார் பல்கலையில் எம்.ஏ., இதழியல் படித்து வந்தார். ‘இயற்கை பாதுகாப்புக்குழு’ அமைப்பின் பொறுப்பாளராக இயங்கி வந்த வளர்மதி, கடந்த மாதம் ஜூலை 12ம் தேதி, சேலம் அரசு மகளிர் கல்லூரி அருகே நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு துண்டு பிரசுரங்களை விநியோகித்தார். அரசுக்கு எதிராக மாணவிகளை தூண்டியதாக அவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

உளவுப்பிரிவு காவல் துறையினர் அவரை மாவோயிஸ்ட், நக்சலைட் இயக்கங்களுடன் தொடர்புப் படுத்தி தகவல்களை பரப்பி வந்த ஓரிரு நாட்களில், அவர் மீது குண்டர் சட்டமும் பாய்ந்தது.

ஏற்கனவே மாணவி வளர்மதி மீது ஆறு வழக்குகள் நிலுவையில் உள்ளதால்தான் அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்ததாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கமும் கொடுத்த ள்ளார். அரசுக்கு எதிராக மக்களை யார் தூண்டிவிட் டாலும் அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய் வோம் என்றும் பகிரங்கமாகவே எச்சரித்துள்ளார்.

இதன்மூலம் ஆளும் அதிமுக அரசு, மக்களின் பேச்சுரிமையை, கருத்துச் சுதந்திரத்தை முற்றாக நசுக்கப் பார்க்கிறது. மே-17 இயக்க நிர்வாகி திருமுருகன் காந்தியை குண்டாசில் அடைத்ததன் சூடு தணிவதற்குள் நெடுவாசல், கதிராமங்கலம் திட்டங்களை எதிர்த்துப் போராடிய பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்டோர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர்.

தமிழக அரசின் இத்தகைய போக்கின் மூலம் ஒன்று தெளிவாகிறது. மத்திய பாஜக அரசுத் திட்டங்களுக்கு எந்த வகையிலும் பங்கம் வந்து விடக்கூடாது என்பதில் சர்வ ஜாக்கிரதையாக செயல்படுவதையே காட்டுகிறது.

ஜல்லிக்கட்டு போராட்டம் வெடித்தபோது கூட மவுனம் காத்த இந்த அரசு, இப்போது மத்திய அரசுத் திட்டங்களுக்கு எதிராக யார் குரல் எழுப் பினாலும் குரல்வளையை கடித்துக் குதற தயாராகி விட்டது. அந்தளவுக்கு ஆளும் அதிமுக அரசு பாஜகவுக்கு எஜமான விசுவாசத்துடன் நட ந்து கொள்கிறது.

மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சேலம் வந்திருந்தபோது, இந்திய மக்கள் முன்னணியைச் சேர்ந்த சாலமன் என்ற இளைஞர் அவர் மீது செருப்பு வீசினார். இதையடுத்து சாலமன் கைது செய்யப்பட்டார். அவரை விடுதலை செய்யக்கோரி, மாணவி வளர்மதி உள்ளிட்டோர் சேலத்தில் சாலை மறியல் நடத்தினர். அந்த ‘செருப்பு வீச்சு’ சம்பவத்திற்கு பழி தீர்க்கும் விதமாகவும் வளர்மதியை கைது செய்து தமிழக அரசு தனது வக்கற்ற வஞ்சத்தைத் தீர்த்துக் கொண்டுள்ளது.

வளர்மதி மீதான முந்தைய வழக்குகள் பற்றிய விவரங்களைக் கேட்டால் இதற்கெல்லாமா குண்டர் சட்டத்தில் கைது செய்தார்கள்? என்று பாமரர்கள்கூட நகைப்பார்கள்.

கல்லூரி, விடுதிக் கட்டணத்தைக் குறைக்க வலியுறுத்தி வகுப்பு புறக்கணிப்பு செய்ததாகவும், அனுமதியின்றி பல்கலைக் கழகத்துக்குள் நுழைய முயன்ற போது அங்கிருந்த பாதுகாவலர்களை மிரட்டியதாகவும் வளர்மீது மீது 7.8.2014 மற்றும் 8.8.2014ம் தேதிகளில் சிதம்பரம் அண்ணாமலை நகர் காவல்நிலையத்தில் முதன்முதலில் வழக்குப்பதிவு செய்யப் பட்டது. (கு.எண்: 218/2014 மற்றும் 219/2014). அதன்பிறகு, ‘செருப்பு வீச்சு’ சாலமனை விடுவிக்கக்கோரி, சாலை மறியலில் ஈடுபட்டதாக சேலம் பள்ளப்பட்டி காவல்நிலையத்தில் ஒரு வழக்கு (16.3.2017);

நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்தைக் கண்டித்து சாலை மறியல் செய்ததாக, சேலம் நகர காவல் நிலையத் தில் ஒரு வழக்கு (30.3.2017, கு.எண்: 148/17); இதே பிரச்னைக்காக குளித் தலை காவல்நிலையத்தில் ஒரு வழக்கு (15.3.17, கு.எண்:277/17). திருமுருகன் காந்தியை விடுதலை செய்யக்கோரி கோவையில் சாலை மறியல் நடத்தியதாக பந்தையச் சாலை காவல்நிலையத்தில் ஒரு வழக்கு (6.6.2017, கு.எண்:740/17). இந்த ஆறு வழக்குகளும்தான் வளர்மதியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய முக்கியக் காரணம் என்கிறது தமிழக அரசு.

பிரச்னைகளின் அடிப்படையில் கோரிக்கைகளை வலியுறுத்தி மேற்கொள்ளப்படும் ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் போன்ற போராட்டங்களின் மற்றோர் வடிவம்தான் சாலை மறியலும். மறியல் போராட்டங்களுக்கு பொதுவாகவே காவல்துறை அனுமதி தருவதில்லை; மறியலால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கும் என்பதால்தான் அத்தகையதொரு நிலை ஆணை நடைமுறையில் இருக்கிறது. எனினும், மறியல் போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்படுவதும், அன்றைய தினமே மாலையில் விடுவிக்கப்படுவதும் வாடிக்கையானதுதான்.

இந்தியாவில் அதிகளவில் போராட்டங்களை சந்தித்த மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் முதலிடத்தில் இருக்கிறது. கடந்த 2015ம் ஆண்டில் மட்டும் தமிழ்நாட்டில் ஒட்டுமொத்தமாக 20450 போராட்டங்கள் நடந்துள்ளதாக கூறுகிறது, காவல்துறை ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிப்பிரிவு. இது மத்திய உள்துறை அமைச்சகத்தின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கும் துறையாகும். 2009ம் ஆண்டில் இருந்தே, இந்த பட்டியலில் தமிழகம்தான் முதலிடத்தில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

எனில், அரசுக்கு எதிரான போராட்டங்களில் எங்கேயுமே பேருந்து, ரயில், சாலை மறியல் போராட்டங்கள் நடக்கவே இல்லை என்கிறதா மத்திய, மாநில அரசுகள்?. பொதுச்சொத்துகள் மீது சேதம் விளைவிக்கப்பட்டதே இல்லையா? இத்தகைய நிகழ்வுகளில் ஈடுபட்டவர்களில் எத்தனை பேரை இதுவரை அரசுகள் குண்டர் சட்டத்தில் கைது செய்திருக்கின்றன?

பிறகு எதற்காக சாலை மறியலில் ஈடு பட்டதற்காகவும், துண்டு அறிக்கைகள் வெளியிட்டதற்காகவும் மாணவி வளர்மதியை குண்டர் சட்டத்தில் அடைக்க வேண்டும்?
முதல்வர் ஜெயலலிதா சிகிச்சையில் இருக்கும்போதே, மத்திய அரசின் உணவுப் பாதுகாப்புச்சட்டம், உதய் மின் திட்டம், நீட் தேர்வு, ஜிஎஸ்டி ஆகியவற்றுக்கு ஓ.பன்னீர் செல்வம் தலைமையிலான அரசு இரவோடு இரவாக இசைவு தெரிவித்தது.

ஜெயலலிதா சுய நினைவுடன் இருந்தவரை மேற்சொன்ன திட்டங்களை கடுமையாக எதிர்த்து வந்தார். அவர் மறைவுக்குப் பின்னர், வரலாற்றில் இல்லாத நிகழ்வாக தலைமைச் செயலாளர் ராமமோகனராவ் வீடு, தலைமைச் செயலகம் ஆகிய இடங்களில் வருமானவரித்துறை, அமலாக்கத்துறைகள் மூலம் சோதனைகள் நடத்தப்பட்டது. பலம் பொருந்திய அதிமுகவுக்குள் ஏற்பட்ட பிளவின் பின்னணியில் மத்திய பாஜக அரசு இருப்பதை சிறுபிள்ளைகள்கூட அறியும்.

ஒன்றுபட்ட அதிமுகவை பல்வேறு அணிகளாக உடைத்ததில் வெற்றி பெற்றதோடு, ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் பணம் விளையாடியதாகக் கூறி தினகரனை கைது செய்தது; அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு, அலுவலகத்தில் வருமானவரித் துறை மூலம் சோதனை நடத்தியது என தொடர்ந்து அக்கட்சியின் முக்கிய துருப்புக்களை ஒருவித பதற்ற நிலையிலேயே வைத்திருக்கிறது பாஜக. இவற்றின் மூலம் குடியரசுத் தலைவர் தேர்தலில் மகத்தான அறுவடை யையும் செய்துவிட்டது பாஜக.

என்றாலும், அதிமுக அரசை எப்போதும் பதற்றத்தில் வைத்திருப்பதன் மூலம், தமிழகத் தில் மத்திய அரசின் திட்டங்களை எந்த வித சிக்கலு மின்றி நிறைவேற்றிடத் துடிக்கிறது பாஜக.
இந்தியாவின் 75 சதவீத நிலப்பரப்பை தன் ஆளுகைக்குள் வைத்திருக்கும் பாஜகவிடம் பகைத்துக் கொள்வதன் மூலம், எங்கே ஆட்சி அதிகாரம் பறிபோய்விடுமோ என்ற அச்சத்தில் அதிமுக அரசு இருக்கிறது.

அதனாலேயே மத்திய அரசுக்கு எல்லாவிதத் திலும் ராஜ விசுவாசத்தை நிரூபிக்கும் நெருக்க டியில் தமிழக அரசு இருக்கிறது. அதற்காகத்தான் மத்திய அரசுத் திட்டங்களை எதிர்ப்போர் யாராக இருந்தாலும் அவர்களின் குரல்வளையை குண்டாஸ் மூலம் கடித்துக் குதறத் தயாராகிவிட்டது.

”குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ள வளர்மதி, நன்றாக படிக்கக்கூடியவர். இயல்பாகவே, யார் தப்பு செய்தாலும் அதைத் தட்டிக் கேட்கும் குணம் கொண்டவர்,” என்கிறார் அவருடைய தந்தை மாதையன்.

மாதையன்

மாதையன் வீட்டிற்கு நாம் சென்றிருந்தோம். வீட்டு வரவேற்பறை ஷோகேஸில் வளர்மதி, பேச்சுப்போட்டிகளில் மாவட்ட, மாநில அளவில் வெற்றி பெற்று, அப்போதைய போலீஸ் கமிஷனர் சுனில்குமார்சிங், மறைந்த அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் ஆகியோரிடம் கேடயம் பரிசு பெற்ற படங்களும், சில பரிசு கோப்பைகளும், சான்றிதழ்களும் இருந்தன.

”ஆமா…இயற்கை பாதுகாப்புக்குழு என்ற பெயரில் நம் சுற்றுச்சூழலையும், இயற்கையையும் பாதுகாக்க போராடுவதில் என்ன தப்பு? இந்த கியூ பிராஞ்ச் போலீஸ்காரங்கதான் என் மகளைப் பற்றி நக்சலைட், மாவோயிஸ்ட் அது இதுன்னு இல்லாததையும் பொல்லாததையும் சொல்கின்றனர். என் மகளுக்கு எந்த தீவிரவாத இயக்கத்துடனும் தொடர்பு கிடையாது,” என்கிறார் மாதையன்.

சில நாட்களுக்கு முன், ‘கக்கூஸ்’ ஆவணப்பட இயக்குநர் திவ்யபாரதியைக் கைது செய்த காவல்துறை, அவரை பிணையில் விடுவித்தது. வளர்மதி கைதான அன்றே மதுரையில் இயற்கை பாதுகாப்புக் குழுவைச் சேர்ந்த வழக்கறிஞர் அகராதியும் கைது செய்யப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்டார்.

வளர்மதி போன்றோரின் கைதுகள் மூலம், அரசுக்கு எதிராக யார் பேசினாலும் அவர்களை கைது செய்வோம் என்று மத்திய, மாநில அரசுகள் பகிரங்கமாகவே எச்சரிக்கின்றன. உண்மையில் இதுதான், நெருக்கடி நிலையின் இன்றைய வடிவம்.

போராடுபவர்களை ஒடுக்குவது அரசின் வீரமாகாது. மாறாக, போராட்டத்திற்கான தேவையே இல்லாமல் செய்வதில்தான் ஆண்மையுள்ள அரசுக்கு அடையாளமாகும்.
இப்போது ஆளும் அரசுகளும் ஒன்றைத் தெரிந்து கொள்ள வேண்டும்: இனிதான் ஓராயிரம் வளர்மதிகள் வரப்போகிறார்கள்.

இணையத்தில் படிக்க: www.puthiyaagarathi.com

தொடர்புக்கு: selaya80@gmail.com