Monday, September 16மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

கனல் கக்கும் கதிராமங்கலம்! அலட்சிய அரசாங்கம்; கதறும் மக்கள்

கதிராமங்கலத்தில் கிட்டத்தட்ட 13 ஆண்டுகளாக எண்ணெய் துரப்பண பணிகள் நடந்து வரும் நிலையில், சமீப காலமாய் என்னதான் ஆச்சு அந்த ஊர் மக்களுக்கு? திடீரென்று அவர்கள் வெகுண்டெழக் காரணம் என்னவாக இருக்க முடியும்? இதுதான் இப்போதைக்கு எல்லோருடைய மனதிலும் எழும் மிகப்பெரிய கேள்வி.

இந்தக் கேள்விக்கு விடை தேடும் பயணமாக நாமும் அந்த கிராமத்திற்கு பயணப்பட்டோம். கதிராமங்கலத்திற்கு 2 கி.மீ. தொலைவிலேயே 20க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டு இருந்தனர். சந்தேகத்திற்கிடமானவர்கள் யாரும் ஊருக்குள் நுழைந்து விடக்கூடாது என்பதற்கான ஏற்பாடு இது என்றார்கள்.
காவல்துறையினர் இப்படி என்றால், அந்த கிராம மக்கள் ரொம்பவே உஷாராக இருந்தார்கள்.

நம்மை முழுவதும் விசாரித்து, நாம் காவல்துறையின் உளவாளிகளோ அல்லது சமூக விரோத கும்பலைச் சேர்ந்தவர்களோ இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்ட பின்னரே ஊருக்குள் மக்கள் போராடும் இடத்திற்கு வழிகாட்டினர். கதிராமங்கலத்தைச் சேர்ந்த ஐம்பதுக்கும் மேற்பட்டோர் அப்பகுதியில் உள்ள அய்யனார் கோயில் திடலில் அறப்போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

ஆண்களைக் காட்டிலும் பெண்கள் அதிகளவில் குழுமி இருந்தனர். போராட்டக் களத்திலேயே எலுமிச்சை அல்லது தக்காளி சோறு சமைத்து சாப்பிட்டுக் கொள்கின்றனர். எல்லோருமே தினக்கூலிக்குச் சென்றுவரும் சாமானியர்களே. அதனால் சுழற்சி முறையில், போராட்டத் திடலில் எப்போதும் மக்கள் கூடியிருக்கின்றனர்.

ஓஎன்ஜிசி நிறுவனம் கடந்த 2002ம் ஆண்டில் இருந்து கதிராமங்கலம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் கச்சா எண்ணெய் எடுத்து வருகிறது. அப்போது அவர்களுக்கு அதுபற்றி போதிய விழிப்புணர்வு இல்லாததால் எதையும் கண்டுகொள்ளவில்லை. இந்த நிலையில், கதிராமங்கலம் சுற்று வட்டார பகுதிகளில் நிலத்தடி நீர் மாசடைந்து சேற்று நீர்போல மாறியது. ஆழ்துளைக் குழாயில் இருந்து வரும் நீரில் பெட்ரோல் நெடி வீசியது.

இது இப்படி இருக்க, கடந்த மே 17ம் தேதியன்று கடைவீதியில் உள்ள 7ம் எண் எண்ணெய்க் கிணற்றுக்குத் தளவாடச் சாமான்களைக் கொண்டு வந்து இறக்கியது, ஓஎன்ஜிசி நிறுவனம். அடுத்தடுத்து ராட்சத கிரேன்கள், தொழிலாளர்கள் தங்குவதற்கான கேபின்கள் வந்திறங்கிய வண்ணம் இருந்தன. ஓஎன்ஜிசி நிறுவனம் புதிதாக 1000 அடி ஆழத்திற்கு பூமியில் குழாய் பதிக்கத் தயாராகி வருவதை அந்த ஊர் மக்கள் விசாரித்து தெரிந்து கொண்டனர். ஏற்கனவே நிலத்தடி நீர் மாசடைந்து உள்ள நிலையில், இன்னும் ஆழத்திற்கு குழாய் பதிப்பதால் ஒட்டுமொத்த நிலத்தடி நீர்வளமும், விளை நிலமும் பாதிக்கப்படும் என்று குமுறினார்கள்.

அடுத்து, மே 19-ம் தேதி, ஓஎன்ஜிசி நிறுவனத்தைக் கண்டித்து கதிராமங்கலம் மக்கள் திடீரென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவாக, மீத்தேன் திட்ட எதிர்ப்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமனும் களத்தில் இறங்கி, அதிகாரிகளை கேள்விகளால் துளைத்தெடுத்தார். அதையடுத்து மே 25-ம் தேதி அதிகாரிகளுடன் நடந்த பேச்சுவார்த்தையின்போது, ”கச்சா எண்ணெய் எடுக்கும் குழாயில் கசிவு ஏற்பட்டதால் அதை சரிசெய்யத்தான் தளவாடங்களைக் கொண்டு வந்திருக்கிறோம்; மீத்தேன் திட்டம் எதையும் செயல்படுத்தவில்லை,” என்று உறுதி அளித்தனர்.

அதன்பின் நடந்ததை, போராட்டக் களத்தில் இருந்த அனிதா முருகன் என்ற பெண்மணி, ”கடந்த ஜூன் 1-ம் தேதி இரவு திடீரென்று சுமார் 2000 போலீசார் ஊருக்குள் வந்திறங்கினர். நிறைய போலீஸ் வாகனங்களும் வந்து சேர்ந்தன. கிட்டத்தட்ட ஊரடங்கு உத்தரவுபோல் இருந்தது. மறுநாள் ஜூன் 2ம் தேதி, ஓஎன்ஜிசி நிறுவனத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம், கடையடைப்பு, சாலை மறியல் போராட்டம் நடத்தினோம். அப்போது பேராசிரியர் ஜெயராமன் உள்பட 9 பேரை போலீசார் கைது செய்தனர். காவல்துறையைக் கண்டித்து நாங்கள் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றினோம்.

ஜூன் 3ம் தேதி, ஒட்டக்காரத் திடலில் ஊர் மக்கள் எல்லோரும் கூடினோம். மாவட்ட ஆட்சியர் நேரில் வர வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். ஆனால் உதவி ஆட்சியர் பிரவீன்குமார் மட்டுமே எங்களை நேரில் சந்தித்துப் பேசினார். கைது செய்யப்பட்ட பேராசிரியர் ஜெயராமன் உள்பட 9 பேரை விடுதலை செய்ய வேண்டும்; போலீசாரை திரும்பப் பெற வேண்டும்; ஓஎன்ஜிசி நிறுவனம் எண்ணெய் எடுக்கும் பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று மூன்று கோரிக்கைகளை முன்வைத்தோம்,” என்றார்.

இதையடுத்து, பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்ட 9 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டனர். பேச்சுவார்த்தையின்போது அதிகாரிகள், எண்ணெய் எடுப்பதற்கான குழாய்கள் உலகத்தரம் வாய்ந்தது; 30 ஆண்டுகள் வரை உழைக்கக் கூடியது என்றும் கூறினார்களாம். ஆனால், துரதிர்ஷ்டவசமாக ஜூன் 30ம் தேதியன்று, பந்தநல்லூர் சாலையில் உள்ள 35வது எண்ணெய்க் கிணற்றில் இருந்து சற்று தொலைவில் கச்சா எண்ணெய்க் கசிவு ஏற்பட்டது.

இந்த எண்ணெய் கசிவால், அப்பகுதி முழுவதும் ஒருவித நெடி ஏற்பட்டது. பலருக்கு கண் எரிச்சல் ஏற்பட்டுள்ளது. திடீரென்று அந்த எண்ணெய்க் கிணறு இருந்த பகுதியில் காய்ந்த முட்செடிகள், புல் பூண்டுகள் தீப்பிடித்து எரியத் தொடங்கின. இந்த சந்தர்ப்பத்திற்காகவே காத்திருந்ததுபோல், போலீசார் அங்கு திரண்டிருந்த மக்கள் மீது கண்மூடித்தனமாக தடியடி நடத்தி விரட்டினர். காவல்துறையினரே முட்செடிகளுக்குத் தீ வைத்துவிட்டு மக்கள் மீது பழி போடுவதாகக் கதிராமங்கலம் மக்கள் கூறுகின்றனர்.

தடியடி நடந்தபோது மாலை 6.30 மணி இருக்கும் என்கிறார்கள். அரை மணி நேர்ததுக்கும் மேலாக இந்த களேபரம் நடந்துள்ளது. விளக்கு வெளிச்சம் இல்லாததால் அப்பாவி மக்கள் வயல்வெளிகளில் விழுந்தடித்து நாலாபுறமும் சிதறி ஓடியுள்ளனர். இதில் குணசுந்தரி (32), கஸ்தூரி (38), அமுதா (48) ஆகியோர் பலத்த காயம் அடைந்துள்ளனர்.

அன்று இரவு 9 மணியளவில் நிகழ்விடத்திற்கு வந்த தஞ்சை மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை, ஓஎன்ஜிசி மற்றும் காவல்துறை அதிகாரிகளைச் சந்தித்தாரே தவிர, மக்களிடம் பேசவில்லை என்பதும் அவர்களின் கொதிநிலையை அதிகப்படுத்தியுள்ளது. போதாக்குறைக்கு கூட்டத்தில் இருந்த காவலர் ஒருவர், ”போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை எல்லாம் விபச்சார வழக்கில் கைது செய்ய வேண்டும்,” என்று மிரட்டியதாகவும் கூறுகின்றனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக பேராசிரியர் ஜெயராமன், மீண்டும் கைது செய்யப்பட்டார். அவருடன் தர்மராஜ், செந்தில்நாதன், ரமேஷ், சுவாமிநாதன், சிலம்பரசன், வெங்கட்ராமன், முருகன், விடுதலைச்சுடர், சந்தோஷ் என மொத்தம் 10 பேர் கைது செய்யப்பட்டனர்.

கைதான அனைவரையும் பிணையில் விடுவிக்கக்கோரி கதிராமங்கலம் கிராம மக்கள் கடந்த மாதம் 17ம் தேதி முதல் தொ டர்ந்து மூன்று நாட்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். பிணையில் விடுவிக்க நடவடிக்கை எடுப்பதாக அரசு நிர்வாகம் ஒப்புக்கொண்டதை அடுத்து உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிட்டனர். ஆனால், ஓஎன்ஜிசி நிறுவனத்தை வெளியேற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட ஏனைய கோரிக்கைகளை வலியுறுத்தி, அவர்கள் தொடர்ந்து அறவழியில் போராடி வருகின்றனர்.

கதிராமங்கலத்தின் உக்கிரமே இன்னும் தணியாத நிலையில், இப்போது கடலூர், நாகை மாவட்டங்களில் 45 கிராமங்களை உள்ளடக்கி பெட்ரோ கெமிக்கல் மண்டலத்தைத் தொடங்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.

இப்பகுதிகளில் மீத்தேன் அல்லது ஷேல் எரிவாயு எடுக்கப்பட மாட்டாது; எண்ணெய் சுத்திகரிப்பு பணிகள் மட்டுமே நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதற்காக 57 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பையும் வளைத்து போட்டிருக்கிறது.

காவில் டெல்டா மாவட்டங்களை விவசாய மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்ற குரல் ஒலிக்கத் தொடங்கியுள்ள நிலையில், பெட்ரோ கெமிக்கல் மண்டலம் கொண்டு வர நினைப்பது, மக்களின் உணர்வுகளை மத்திய, மாநில அரசுகள் கொஞ்சம் கூட மதிக்கவில்லை என்றே தெரிகிறது.

இந்த நேரத்தில் இன்னொன்றையும் நாம் கவனிக்க வேண்டும். ஏற்கனவே மீத்தேன் ஆய்வுப்பணிகள் மேற்கொள்ளப்பட்ட திருவாரூர், நீடாமங்கலம், தஞ்சாவூர், ஒரத்தநாடு, மன்னார்குடி, பட்டுக்கோட்டை ஆகிய பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஆழ்துளைக் கிணறுகள் பாதிக்கப்பட்டுள்ளன.

தொடர்ந்து மேற்கொள்ளப்படும் எண்ணெய் மற்றும் எரிவாயு ஆய்வுப்பணிகள், சுத்திகரிப்பு பணிகளால் காவிரி டெல்டா மாவட்டங்களில் விவசாயம் அடியோடு முடங்கும் அபாயம் உள்ளது. கதிராமங்கலத்தில்தானே பிரச்னை என்றில்லாமல் அவர்களுக்காக ஒட்டுமொத்த தமிழக மக்களும் இப்பிரச்னையில் ஒன்று திரண்டு ஆட்சியாளர்களிடம் முறையிட வேண்டிய தருணம் இது.

மக்களிடம் கலந்தாலோசிக்காமலேயே அவர்களின் மண்ணில் ஒரு திட்டத்தை செயல்படுத்தும் அரசு எப்படி மக்களுக்கானதாக இருக்க முடியும்?

– இளையராஜா.எஸ்

contact: selaya80@gmail.com