Monday, May 27மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

கோகுல்ராஜ் கொலை வழக்கு: சரமாரி கேள்விகளால் அரசு தரப்பு சாட்சி திணறல்! #Day2 #Gokulraj

 

கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கில், யுவராஜ் தரப்பு வழக்கறிஞர் கேட்ட சரமாரி கேள்விகளால் அரசுத்தரப்பு சாட்சி பதில் சொல்ல முடியாமல் தடுமாறினார்.

 

சடலமாக கோகுல்ராஜ்…

 

சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் கடந்த 2015ம் ஆண்டு ஜூன் 23ம் தேதி வழக்கம்போல் வீட்டில் இருந்து கிளம்பிச் சென்றவர் அதன்பின் வீடு திரும்பவில்லை. மறுநாளான 24.6.2015ம் தேதி நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே கிழக்கு தொட்டிபாளையத்தில் உள்ள ரயில் தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கோகுல்ராஜின் சடலம் கைப்பற்றப்பட்டது.

காவல்துறையினர் விசாரணையில் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த கோகுல்ராஜூம், அவருடன் கல்லூரியில் ஒன்றாக படித்து வந்த கொங்கு வெள்ளாளர் கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்த இளம்பெண்ணும் பழகி வந்ததால், அவர்கள் காதலித்து வருவதாக எண்ணி கோகுல்ராஜை ஒரு கும்பல் திட்டமிட்டு ஆணவக்கொலை செய்திருப்பது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.

 

சடலம் கைப்பற்றப்படுவதற்கு முதல்நாளன்று மாலை திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயில் மலையடிவாரத்தில் கோகுல்ராஜூம் அவருடைய தோழியும் பேசிக்கொண்டு இருந்துள்ளனர். அவர்களை மிரட்டி, அங்கிருந்து கோகுல்ராஜை மட்டும் தனியாக சேலம் மாவட்டம் சங்ககிரியைச் சேர்ந்த தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் எஸ்.யுவராஜ் மற்றும் சிலர் கடத்திச்சென்ற காட்சிகளும் அந்தப் பகுதியில் உள்ள ஒரு சிசிடிவி கேமரா ஃபுட்டேஜில் பதிவாகி இருந்தது.

கோகுல்ராஜ்

இதனால் யுவராஜ் மற்றும் அவரைச் சார்ந்தவர்கள்தான் கோகுல்ராலை ஆணவக்கொலை செய்து, தடயத்தை மறைக்க ரயில் தண்டவாளத்தில் சடலத்தை போட்டு நாடகமாடியிருக்க வேண்டும் என்ற முடிவுக்கு போலீசார் வந்தனர்.

 

இதையடுத்து, எஸ்.யுவராஜ், அவருடைய சகோதரர் தங்கதுரை, அருள்செந்தில், செல்வக்குமார், குமார் என்கிற சிவக்குமார், கார் ஓட்டுநர் அருண், சங்கர், செல்வராஜ், ஜோதிமணி, ரவி என்கிற ஸ்ரீதர், ரஞ்சித், சதீஸ்குமார், சுரேஷ், பிரபு, கிரி, அமுதரசு, சந்திரசேகர் ஆகிய 17 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இவர்களில் யுவராஜ் மட்டும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். மற்றவர்கள் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

 

சாட்சிகள் விசாரணை:

 

இந்த வழக்கில் சாட்சிகள் மீதான விசாரணை நாமக்கல் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆகஸ்ட் 30, 2018ம் தேதி தொடங்கியது. யுவராஜ் தரப்பில் தலைமறைவாக உள்ள அமுதரசு, சுட்டுக்கொல்லப்பட்ட ஜோதிமணி என்ற பெண் தவிர மற்ற 15 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.

சித்ரா

மொத்தம் 110 பேர் அரசுத்தரப்பு சாட்சிகளாக சேர்க்கப்பட்டு உள்ளனர். கோகுல்ராஜ் தரப்பில் ஆஜராகி வாதாட சேலத்தைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் பி.கருணாநிதியை தமிழக அரசு நியமித்துள்ளது. முதல் நாளன்று கோகுல்ராஜின் தாய் சித்ராவிடம் வழக்கறிஞர் கருணாநிதி விசாரணை நடத்தினார். நீதிபதி கே.ஹெச்.இளவழகன் முன்னிலையில் விசாரணை நடந்தது.

 

அன்றைய தினம், சம்பவத்தன்று கோகுல்ராஜ் கடைசியாக வீட்டில் இருந்து கிளம்பும்போது அணிந்து சென்ற பேண்ட், சட்டை, உள்ளாடைகளை அவருடைய தாய் சித்ரா அடையாளம் காட்டினார். அந்த உடைகளைப் பார்த்து அவர் மார்பில் அடித்துக்கொண்டு கண்ணீர் விட்டு கதறி அழுததால் மேற்கொண்டு அவரிடம் விசாரணை நடத்த முடியவில்லை. இதையடுத்து சாட்சிகள் விசாரணையை செப்., 1ம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார். மேலும், உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக் கொண்டு பேசுங்கள் என்றும் சித்ராவுக்கு நீதிபதி அறிவுரை கூறினார்.

 

குறுக்கு விசாரணை:

 

அதன்படி, சாட்சிகள் விசாரணை இரண்டாம் நாளாக இன்று (செப்டம்பர் 1, 2018) நடந்தது. பகல் 12 மணியளவில் விசாரணை தொடங்கியது. மதியம் 1.15 மணி வரை விசாரணை நடந்தது. உணவு இடைவேளைக்குப் பின்னர் மதியம் 2.30 மணிக்கு மீண்டும் குறுக்கு விசாரணை தொடங்கி, மாலை 3.30 மணிக்கு முடிவுற்றது. கோகுல்ராஜ் தாய் சித்ராவிடம் யுவராஜ் தரப்பில் ஆஜரான மதுரையைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் ஜி.கே. என்கிற கோபாலகிருஷ்ண லட்சுமண ராஜூ குறுக்கு விசாரணை நடத்தினார்.

 

பகலில் குறுக்கு விசாணை தொடங்கிய சில நிமிடங்களிலேயே யுவராஜ் தரப்பு வழக்கறிஞர் சித்ராவிடம் அடுக்கடுக்கான சில கேள்விகளை கேட்டார். கோகுல்ராஜ் அவருடைய நண்பர்கள் சிலரிடம் பத்தாயிரம் கடன் வாங்கியிருந்தார். அதனால் ஏற்பட்ட முன்விரோதத்தில்தான் இந்த கொலை நடந்துள்ளது என்றார்.

 

 

இதை சற்றும் எதிர்பாராத சித்ரா, என் பையன் அந்தளவுக்கு எல்லாம் கடன் வாங்க மாட்டான் என்று பதில் அளித்தார். பிறகு, கோகுல்ராஜிக்கும் அவருடைய அண்ணனுக்கும் விரோதம் இருந்தது என்றும் கேட்டார். இதுபோன்ற கேள்விகளை எதிர்பாராத சித்ரா பதில் அளிப்பதில் கொஞ்சம் திணறினார்.

ராஜேந்திரன்

உணவு இடைவேளைக்குப் பிறகு மீண்டும் குறுக்கு விசாரணை தொடங்கியது. அப்போதும் வழக்கறிஞர் கோபாலகிருஷ்ண லட்சுணராஜூ கேட்ட பல கேள்விகளுக்கு சித்ரா முன்னுக்குப் பின் முரணான பதில்களைச் சொன்னார்.

 

கடந்த 2015ம் ஆண்டு ஜூன் 23ம் தேதி கடைசியாக வீட்டில் இருந்து கிளம்பும்முன் கோகுல்ராஜ் உங்களிடம் என்ன சொல்லிவிட்டுச் சென்றார் என்ற கேள்விக்கு சித்ரா, கல்லூரிக்குச் செல்வதாகக் கூறிவிட்டுச் சென்றார் என்றும், பிறகு நண்பர்களைச் சந்தித்துவிட்டு வருவதாகக் கூறிவிட்டு வீட்டில் இருந்து கிளம்பிச் சென்றார் என்றும் மாற்றி மாற்றி கூறினார்.

 

‘கல்லூரிக்குச் செல்லும்போது கோகுல்ராஜ் கையில் புத்தகப்பை எடுத்துச்சென்றாரா?,’ என்ற கேள்விக்கு சித்ரா, ‘இல்லை. ஐடி கார்டு, பர்ஸ் ஆகியவற்றை கொண்டு சென்றார்,’ என்று கூறினார்.

யுவராஜ்

இந்த நீதிமன்றத்தில் நீங்கள் அளித்த சாட்சியங்கள் அனைத்தும் காவல்துறையில் புகார் அளித்தபோதும் கூறியிருக்கிறீர்களா? என்ற கேள்விக்கு, சித்ரா எதையோ நீண்ட விளக்கமாக சொல்ல முன்வந்தார். அதற்கு யுவராஜ் தரப்பு வழக்கறிஞர், ‘கேட்கும் கேள்விக்கு ஆமாம் அல்லது இல்லை என்று மட்டும் பதில் சொல்லுங்கள் என்றார். ஆனால் சித்ரா மீண்டும் ஏதோ பேச முயல, நீதிபதி குறுக்கிட்டு, ஏற்கனவே நீங்கள் விளக்கமாக பதில் சொல்லி விட்டீர்கள். இப்போது கேட்கப்படும் கேள்விகளுக்கு ஆம், இல்லை என்று சொன்னால் மட்டும் போதுமானது என்றார்.

 

அதன்பிறகும் சித்ரா, இப்படி சொன்னால் எப்படிங்க அய்யா எங்கள் தரப்பு விளக்கத்தை சொல்ல முடியும்? என்றவாறே ஏதோ பேசத் தொடங்கினார். அதை ஏற்காத யுவராஜ் தரப்பு வழக்கறிஞர், சரிங்க சார்… அவர் சொல்வதை ரெக்கார்டு பண்ணுங்க. பிறகு பேசுகிறேன் என்று தன் வாதத்தில் இருந்து சற்று விலகிச் சென்றார். அதன்பின் நீதிபதி குறுக்கிட்டு சித்ராவுக்கு அறிவுரை கூறினார். இதைத்தொடர்ந்து, யுவராஜ் தரப்பு வழக்கறிஞர் மேலும் சில கேள்விகளைக் கேட்டார். சித்ரா சொன்ன சில பதில்கள் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டது.

 

செப்டம்பர் 4ம் தேதி:

 

இதையடுத்து இன்றைய குறுக்கு விசாரணை முடிவுக்கு வந்தது. சாட்சிகள் மீதான அடுத்தக்கட்ட விசாரணை செப்டம்பர் 4ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி கே.ஹெச். இளவழகன் உத்தரவிட்டார். அன்றைய தினம் இரண்டாவது சாட்சியான கோகுல்ராஜின் தோழி சுவாதி, மூன்றாவது சாட்சியான கோகுல்ராஜின் அண்ணன் கலைச்செல்வன் ஆகியோரிடம் குறுக்கு விசாரணை நடத்தப்பட உள்ளது.

நாராயணன்

குறுக்கு விசாரணை முடிந்த நிலையில் யுவராஜ் தரப்பு வழக்கறிஞர்களுள் ஒருவரான உடுமலை கே.எம்.ராஜேந்திரன் நம்மிடம் கூறுகையில், ”இன்று விசாரணை தொடங்கிய கொஞ்ச நேரத்தில் கோகுல்ராஜின் தாயார் சித்ரா, அரசுத்தரப்பு வழக்கறிஞருடன் தங்கள் தரப்பில் வாதாட தனியாக ஒரு வழக்கறிஞரை அனுமதிக்க வேண்டும் என்று மனுத்தாக்கல் செய்தார். அதற்கு சாட்சி விசாரணை தொடங்கிய நிலையில் உங்கள் தரப்புக்கென தனி வழக்கறிஞரை நியமிக்க முடியாது. வேண்டுமானால் அரசு வழக்கறிஞருக்கு உதவியாக ஒருவரை நியமிக்கலாம் என்று கூறினார்,” என்றார்.

 

இதுகுறித்து சித்ரா தரப்பைச் சேர்ந்த வழக்கறிஞர் நாராயணனிடம் கேட்டபோது, ”சித்ரா தரப்பில் ஆஜராகி வாதாட அரசே, மூத்த வழக்கறிஞரை நியமித்து இருக்கிறது. இந்த நிலையில் நாங்கள் தனியாக சித்ரா தரப்புக்கு ஆஜராகக்கோரி மனுத்தாக்கல் செய்யவில்லை.

 

இந்த வழக்கில் அரசு சிறப்பு வழக்கறிஞருக்கு உதவியாக ஆஜராக அனுமதிக்கக்கோரிதான மனுத்தாக்கல் செய்திருந்தோம். இதை நீதிபதியும் ஏற்றுக்கொண்டார். இந்த மனு மீதான முடிவு என்ன என்பது குறித்து நீதிமன்ற இணையதளத்தில் வெளியிடப்படும் என்று கூறியிருக்கிறார்,” என்றார்.

 

– பேனாக்காரன்.