Friday, March 29மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

கோகுல்ராஜ் கொலை வழக்கு: சாட்சிகளிடம் விசாரணை தொடங்கியது; கதறி துடித்த ஏழைத்தாய்! #day1 #Gokulraj

 

தமிழக அளவில் முக்கிய கவனம் பெற்ற பொறியியல் பட்டதாரி இளைஞர் கோகுல்ராஜ் கொலை வழக்கில் சாட்சிகள் மீதான விசாரணை, நாமக்கல் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று (ஆகஸ்ட் 30, 2018) தொடங்கியது.

 

முதல் நாளில் மூன்று சாட்சிகளிடமாவது விசாரணை நடத்தி விடும் திட்டம் இருப்பதாக வழக்கறிஞர்கள் தரப்பில் எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், நீதிமன்ற விசாரணையே தாமதமாக பகல் 1.05 மணிக்கு மேல்தான் தொடங்கியது என்பதால், ஒரே ஒரு சாட்சியிடம் மட்டுமே விசாரணை நடத்தப்பட்டது.

சம்பவம் நடந்து கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் கழிந்த நிலையில், இப்போதுதான் வழக்கு அடுத்தக்கட்டத்திற்கு நகர்ந்துள்ளது. முன்னதாக இந்த வழக்கின் பின்னணியை சுருக்கமாக பார்ப்போம்…

 

சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த வெங்கடாச்சலம் – சித்ரா தம்பதியரின் இரண்டாவது மகன் கோகுல்ராஜ் (23). பொறியியல் பட்டதாரியான இவர் கடந்த 2015ம் ஆண்டு ஜூன் 24ம் தேதியன்று வீட்டில் இருந்து வெளியே சென்றவர் அன்று இரவு வீடு திரும்பவில்லை.

கோகுல்ராஜ்

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தை அடுத்துள்ள கிழக்கு தொட்டிபாளையம் பகுதியில் ரயில் தண்டவாளத்தில் குப்புற கவிழ்ந்து, தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கோகுல்ராஜ் சடலமாகக் கிடந்தார். தொடக்கத்தில் இதை ஒரு சந்தேக மரண வழக்காக பதிவு செய்த உள்ளூர் போலீசார், சேலம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனையும் நடத்தி முடித்தனர்.

 

சம்பவத்தன்று திருச்செங்கோடு கோயிலில் இருந்து கோகுல்ராஜையும், அவருடன் இருந்த தோழியையும் ஒருவர் மிரட்டி அழைத்துச் செல்வது அங்குள்ள சிசிடிவி கேமரா ஃபுட்டேஜில் பதிவாகி இருந்தது. அதன் அடிப்படையிலேயே கோகுல்ராஜை சிலர் திட்டமிட்டு கொலை செய்து, சடலத்தை ரயில் தண்டவாளத்தில் வீசியிருக்கும் முடிவுக்கு வந்தது காவல்துறை.

கோகுல்ராஜ் சடலமாக

இந்த வழக்கு தொடர்பாக சேலம் மாவட்டம் சங்ககிரியைச் சேர்ந்த தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனத் தலைவர் எஸ்.யுவராஜ், அவருடைய சகோதரர் தங்கதுரை, அருள்செந்தில், செல்வக்குமார், குமார் என்கிற சிவக்குமார், கார் ஓட்டுநர் அருண், சங்கர், செல்வராஜ், ஜோதிமணி, ரவி என்கிற ஸ்ரீதர், ரஞ்சித், சதீஸ்குமார், சுரேஷ், பிரபு, கிரி, அமுதரசு, சந்திரசேகர் ஆகிய 17 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

 

யுவராஜை போலீசார் கைது செய்தனர் என்பதை விட அவரே தானாக வந்து சரணடைந்தார் என்பதுதான் உண்மை. சம்பவம் நடந்து மூன்றரை மாதத்திற்கு மேலாகியும் யுவராஜை நெருங்கவே முடியாமல் சிபிசிஐடி போலீசார் தடுமாறினர். அவரும் வாட்ஸ்அப்பில் அடிக்கடி காவல்துறைக்கு சவால் விடும் வகையில் வீடியோக்களை வெளியிட்டுக் கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் அவரே அக்டோபர் 11ம் தேதி சரணடைவதாகக் முன்கூட்டியே வீடியோ மூலம் அறிவித்து, அதன்படியே 11.10.2015ம் தேதி நாமக்கல் மாவட்ட சிபிசிஐடி அலுவலகத்தில் நேரில் சரணடைந்தார்.

யுவராஜ்

இத்தனைக்கும் அவரை பிடிக்க நாமக்கல் வரும் வழியில் 16 செக்போஸ்டுகளை காவல்துறையினர் போட்டு கண்காணித்தனராம். எல்லோர் கண்களிலும் மண்ணை தூவிவிட்டு, மாறு வேடத்தில் வந்து சரணடைந்தார் யுவராஜ்.

 

காவல்துறையினர் கைது செய்தவர்களில் அப்பநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த ஜோதிமணி (40) ஜாமினில் விடுதலை செய்யப்பட்டு இருந்தார். அப்போது சொத்துப் பிரச்னையில் ஜோதிமணியை அவருடைய கணவர் சந்திரசேகர் கடந்த 7.2.2018ம் தேதி சுட்டுக்கொன்று விட்டார்.

 

இது ஒருபுறம் இருக்க, கோகுல்ராஜ் கொலை வழக்கின் விசாரணை அதிகாரியான திருச்செங்கோடு டிஎஸ்பி விஷ்ணுபிரியா, கடந்த 2015ம் ஆண்டு செப்டம்பர் 18ம் தேதி அவருடைய முகாம் அலுவலகத்திலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

 

இதையடுத்து, கோகுல்ராஜ் கொலை வழக்கையும், டிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கையும் சேர்த்து விசாரிக்கும் பொறுப்பு சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர், விஷ்ணுபிரியா வழக்கு மட்டும் சிபிஐ போலீசாருக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

காவல்துறையில் சந்தேக மரண வழக்கு ஒன்று கொலை வழக்காக மாறுவது ஒன்றும் புதிதில்லை. ஆனால், கோகுல்ராஜ் வழக்கோ தலித் சமூகத்தைச் சேர்ந்த இளைஞர் சாதி மாறி காதலித்ததால் ஆணவக்கொலை செய்யப்பட்டார்… பெண் டிஎஸ்பியின் திடீர் தற்கொலை… போலீசாருக்கு தண்ணீ காட்டும் முக்கிய குற்றவாளி என எதிர்பாராத திசைகளில் எல்லாம் பயணிக்கத் தொடங்கியது. அதனாலேயே இந்த வழக்கு மாநிலம் முழுவதும் பரவலாக கவன ஈர்ப்பைப் பெற்றது.

 

இது ஒருபுறம் இருக்க, இந்த வழக்கை 18 மாதங்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என கடந்த 10.10.2017ம் தேதி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதுவரை எந்த நீதிமன்றமும் யுவராஜிக்கு ஜாமின் வழங்கக்கூடாது என்பதும் அந்த தீர்ப்பின் மற்றொரு சாராம்சம்.

 

உச்சநீதிமன்ற தீர்ப்பு வெளியாகி பத்து மாதங்கள் கடந்த நிலையில், நாமக்கல் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கோகுல்ராஜ் கொலை வழக்கில் சாட்சிகளிடம் விசாரணை இன்று (ஆகஸ்ட் 30, 2018) தொடங்கியது. மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி இளவழகன் முன்னிலையில் விசாரணை நடந்தது.

 

இந்த வழக்கில் கோகுல்ராஜின் தாய் சித்ரா, சகோதரர் கலைச்செல்வன், சம்பவத்தன்று கோகுல்ராஜ் உடன் இருந்த தோழி உள்பட மொத்தம் 110 பேர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டு உள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர்களில் அமுதரசு மற்றும் சுட்டுக்கொல்லப்பட்ட ஜோதிமணி தவிர மற்ற 15 பேரும் ஆஜராகினர்.

 

கைது செய்யப்படுவதற்கு முன்பே வாட்ஸ்அப் வீடியோ மூலம் போலீசாருக்கே கெத்து காட்டிய யுவராஜ், ஆரம்பம் முதலே எவ்வித அச்ச உணர்வையும் காட்டிக்கொள்ளாமல்தான் இருந்து வருகிறார். இன்று நீதிமன்றத்திற்கு துப்பாக்கி ஏந்திய பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து வந்தபோதும்கூட, போலீசாரின் வாகனத்தை விட்டு இறங்கியதும், அங்கு கூடியிருந்த தனது ஆதரவாளர்களைப் பார்த்து இரு கைகளையும் கூப்பி, அரசியல் கட்சித் தலைவர்போல வணக்கம் போட்டபடியே நீதிமன்றத்திற்குள் நுழைந்தார்.

 

பகல் 1.05 மணிக்கு சாட்சிகளிடம் விசாரணை தொடங்கியது. முதல் நாளான இன்று கோகுல்ராஜின் தாய் சித்ரா சாட்சியம் அளித்தார். இந்த வழக்கில் கோகுல்ராஜ் தரப்பில் வாதாட சிறப்பு வழக்கறிஞராக, சேலத்தைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞரான பி.கருணாநிதி நியமிக்கப்பட்டுள்ளார். அவர் சித்ராவிடம் கோகுல்ராஜை கடைசியாக எப்போது பார்த்தீர்கள்? வீட்டில் இருந்து கிளம்பும்போது அவர் என்ன சொல்லிவிட்டுச் சென்றார்? என்பன உள்ளிட்ட கேள்விகளைக் கேட்டார்.

 

மகனை பறிகொடுத்த வேதனை ஒருபுறமும், நினைவுகள் மறுபுறமும் உந்தித்தள்ள பல கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் நெஞ்சு நெஞ்சாக அடித்துக்கொண்டு கண்ணீர் விட்டுக் கதறி அழுதார். மதியம் 1.40 மணிக்கு முதல் கட்ட விசாரணை முடிவுக்கு வந்தது. இதையடுத்து உணவு இடைவேளை அறிவிக்கப்பட்டது.

கோகுல்ராஜின் தாய் சித்ரா

குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் போலீஸ் வாகனத்தில் ஏற்றப்பட்டனர். அவர்களுக்கு காவல்துறையினரே மதிய உணவு வாங்கிக் கொடுத்தனர். அந்த வாகனத்தில் அமர்ந்தபடியே உணவு அருந்தினர். போலீஸ் வாகனத்தில் அமர்ந்தபடி தனது ஆதரவாளர்களிடம் யுவராஜ் ரொம்பவே சகஜமாக பேசிக்கொண்டிருந்தார். ”ஏன் எல்லாரும் வெயிலில் நின்று கொண்டிருக்கிறீர்கள்? நிழலில் போய் உட்காருங்கள். எனக்கு ஒன்றும் ஆகாது. எல்லாம் நல்லபடியாக முடியும். யாரும் பயப்பட வேண்டாம்,” என்றார்.

 

அவருடைய ஆதரவாளர்கள் சிலர் ஆர்வத்தில், உங்களுக்கு சாப்பிட என்ன வேண்டும்? வாங்கி வருகிறோம் என்றனர். அதற்கு யுவராஜ், சிறையில் மூன்று நாள்கள் வெறும் தண்ணீரை மட்டுமே குடித்து உயிர் வாழ்ந்திருக்கிறேன். இப்போது சாப்பாடு இல்லாவிட்டால் ஒன்றும் ஆகிவிடாது என்றார். பிறகு காவல்துறையினர் அவருக்கும் மதிய உணவு வாங்கிக் கொ டுத்தனர்.

 

மதிய உணவு இடைவேளை முடிந்து மீண்டும் 2.50 மணிக்கு விசாரணை தொடர்ந்தது. கோகுல்ராஜின் தாய் உள்ளே நுழைந்தபோது அவரிடம் நீதிபதி இளவழகன், இன்று காலையில் நீங்கள் வந்தபோது, குற்றம்சாட்டப்பட்டவர்களைப் பார்த்து பேசிய முறை சரிதானா?. இந்த இடத்தில் வந்து அவ்வாறு பேசலாமா? உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக் கொண்டு பேசுங்கள். இனிமேல் அப்படி பேசினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மென்மையாக கடிந்து கொண்டார். அதற்கு சித்ரா, அவரைப் பார்த்து, ‘இருகரங்களைக் கூப்பியபடி இனிமேல் அப்படி பேசமாட்டேன் அய்யா மன்னித்து விடுங்கள் அய்யா…’ என்றார்.

 

இதையடுத்து, அவரிடம் சம்பவத்தன்று கோகுல்ராஜ் அணிந்திருந்த உடைகளைக் காட்டி, அடையாளம் காட்டுமாறு கூறினர். ரத்தக்கறை படிந்த ஜீன்ஸ் பேன்ட், சட்டை, உள்ளாடை, பனியன் ஆகியவற்றைப் பார்த்ததும் தாள முடியாமல் மீண்டும் தனது மார்பில் அடித்துக்கொண்டு கதறி அழுதார். மேற்கொண்டு அவரால் பேச முடியாமல் சாட்சி கூண்டில் சரிந்தார்.

 

கோகுல்ராஜின் உடைகள் ஒரு லினன் உறைக்குள் சுற்றி சீல் வைக்கப்பட்டு இருந்தது. அதைப் பிரித்தபோது துர்நாற்றம் வீசியதால், அங்கிருந்த போலீசார், வழக்கறிஞர்கள் மூக்கை கர்சீப் துணியால் மூடிக்கொண்டனர். பிறகு துர்நாற்றத்தை சமாளிக்க ஊதுவத்தி ஏற்றி வைத்தனர்.

கருணாநிதி

மகனின் உடைகளைப் பார்த்ததும் பேச முடியாமல் கதறி அழுத சித்ராவை ஆசுவாசப்படுத்த சிறிதுநேரம் அவரை வெளியே அழைத்துச்செல்லும்படி நீதிபதி கூறினார். பின்னர் அவரை கைத்தாங்கலாக பெண் போலீசார் வெளியே அ-ழைத்து ச்சென்றனர்.

 

பின்னர் மீண்டும் சாட்சி கூண்டிற்கு வந்த சித்ராவிடம் நீதிபதி, ”உடைகளை பார்த்து ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா? இன்று சொல்கிறீர்களா… உங்களால் பேச முடியுமா?… அல்லது வேறு ஒரு நாளில் பேசுகிறீர்களா?,” என்று கேட்டார். அதற்கு சித்ரா, ‘வேறு ஒரு நாளில் சொல்கிறேன்” என்று பதில் அளித்தார்.

 

இதையடுத்து, சாட்சி விசாரணையை வரும் செப்டம்பர் 1, 2018ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி இளவழகன் உத்தரவிட்டார். அன்று முதல் யுவராஜ் தரப்பிலும் குறுக்கு விசாரணை நடைபெறும் என்றும் நீதிபதி கூறினார். விசாரணை நேரம் முன்கூட்டியே எடுத்துக்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார். மாலை 3.05 மணிக்கு நீதிமன்றம் கலைந்தது. அப்போது சித்ராவிடம், ”அடுத்த முறை நீதிமன்றம் வரும்போது உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக்கொண்டு பேச வேண்டும்,” என்று அறிவுரை வழங்கினார்.

 

முன்னதாக காலையில் சாட்சியம் அளிக்க வந்த கோகுல்ராஜின் தாய் சித்ரா, விசாரணை அரங்கத்திற்குள் நுழைந்தபோது மகனை பறிகொடுத்த வேதனையில் குற்றம் சாட்டப்பட்டுள்ள யுவராஜ் உள்ளிட்டோரை பார்த்து, ஆபாச வார்த்தைகளால் திட்டினார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

 

தீரன் சின்னமலை கவுண்டர் பேரவையைச் சேர்ந்த யுவராஜின் ஆதரவாளர்கள் ஐம்பதுக்கும் மேற்பட்டோர் விசாரணை முடியும் வரை நீதிமன்ற வளாகத்தில் காத்திருந்தனர்.

 

யுவராஜ் உள்¢ளிட்ட குற்றம் சாட்டப்பவர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் ஜி.கே. என்கிற கோபாலகிருஷ்ண லட்சுமண ராஜூ, எல்.ஆர்.பாலசுப்ரமணியம் மற்றும் பாரிவேலன், ராமகிருஷ்ணன், பிரேம்குமார், உடுமலை ராஜேந்திரன், சேலம் அரவிந்த் ஆகியோர் ஆஜராகினர்.

 

– ஞானவெட்டியான்