இலங்கைக்கு எதிரான நான்காவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியிலும் இந்திய அணி 168 ரன்கள் வித்தியாசத்தில் மகத்தான வெற்றி பெற்றது.
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, அந்நாட்டு அணியுடனான மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை முழுமையாக வென்றுள்ளது. தற்போது 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நடந்து வருகிறது. இந்த தொடரையும் ஏற்கனவே இந்திய அணி 3-0 கணக்கில் கைப்பற்றியுள்ளது.
இந்நிலையில், நான்காவது ஒரு நாள் போட்டி கொழும்பு மைதானத்தில் இன்று (31/8/17) நடந்தது. டாஸ் வென்ற இந்திய அணி, முதலில் பேட் செய்தது. ஷிகர் தவான், ரோஹித் ஷர்மா ஆகியோர் முதல் விக்கெட்டுக்கு களமிறங்கினர். 4 ரன்களில் ஷிகர் தவான் அவுட்டாகி வெளியேறினார்.
இரண்டாவது விக்கெட்டுக்கு களமிறங்கிய கேப்டன் விராட் கோஹ்லி ஆரம்பம் முதலே இலங்கை பந்து வீச்சை நாலாபுறமும் சிதறடித்தார். அவர் இந்த போட்டியில் 29வது சதத்தை பூர்த்தி செய்தார். 131 ரன்களில் அவர் அவுட் ஆனார். மலிங்கா, கோஹ்லி விக்கெட்டை வீழ்த்தினார். கோஹ்லி சதமடித்த சிறிது நேரத்தில் ரோஹித் ஷர்மாவும் சதத்தைப் பூர்த்தி செய்தார். அவருக்கு இது, 13வது சதமாகும். நடப்பு ஒரு நாள் போட்டித்தொடரில் அவர் அடிக்கும் இரண்டாவது சதம் இதுவாகும். 104 ரன்களில் ரோஹித் ஷர்மா அவுட் ஆனார்.
இதையடுத்து களமிறங்கிய லோகேஷ் ராகுல், ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா ஆகியோர் சொற்ப ரன்களில் அவுட் ஆகினர். விக்கெட் கீப்பர் டோனி, மனீஸ் பாண்டே ஜோடி கடைசி வரை அவுட் ஆகாமல் அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தியது. இந்திய அணி 50 ஓவர் முடிவில், 5 விக்கெட் இழப்பிற்கு 375 ரன்கள் எடுத்தது. மனீஷ் பாண்டே 50 ரன்களுடனும், டோனி 49 ரன்களுடனும் அவுட் ஆகாமல் களத்தில் இருந்தனர்.
அடுத்து, 376 ரன்கள் என்ற கடின இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணியில் மாத்யூஸ் மட்டுமே அதிகபட்சமாக 70 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். 42.4 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த இலங்கை அணி, 207 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன்மூலம் இந்திய கிரிக்கெட் அணி 168 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது.
பும்ரா, ஹர்திக் பாண்டியா, குல்தீப் யாதவ் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர். இந்தப் போட்டியில் கேப்டன் கோஹ்லியும் இரண்டு ஓவர்கள் பந்து வீசினார். இரு ஓவர்களிலும் அவர் 12 ரன்கள் விட்டுக்கொடுத்தார். விக்கெட்டுகள் எதுவும் கைப்பற்றவில்லை.