Friday, April 19மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

பாஜக 100 சதவீதம் மதவாத கட்சியேதான்!: திருமாவளவன்

குஜராத் வன்முறையில் இந்து பயங்கரவாதிகளால் தீக்கிரையான சபர்மதி எக்ஸ்பிரஸ்.

திராவிட கட்சிகளிடம் சாதிய உணர்வு இருந்தாலும், ஜனநாயகத் தன்மை கொண்டது; ஆனால் பாஜக அப்படி அல்ல. அது முழுக்க முழுக்க மதவாதம் பேசக்கூடிய கட்சி என்கிறார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், இன்று (நவம்பர் 5, 2017) ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார். திராவிடக் கட்சிகள், பாஜக, தலித் அரசியல், ரஜினி, கமல் அரசியல், மதவாதம், சாதியம் என பல்வேறு கேள்விகளுக்கும் பதில் அளித்தார். அவருடைய பேட்டியில் இருந்து…

திருமாவளவன்

பாஜக தலித் கட்சிகளை வளைக்கும் திட்டத்துடன்தான் செயல்பட்டு வருகிறது. ராம்விலாஸ் பாஸ்வான் முதல் மாயாவதி வரை அதற்கு பல உதாரணங்களைச் சொல்ல முடியும்.

தமிழ்நாட்டிலும் அதற்கு முயற்சித்தார்கள். அதை குறிப்பிடும் வகையில்தான் என்னை வளைக்க முடியாமல் தோற்றுப்போன வருத்தத்தில் என் மீது பாஜக தலைவர் தமிழிசை விமர்சனங்களை முன்வைக்கிறார்.

தமிழ்நாட்டில் உள்ள திராவிடக் கட்சிகள் மதவாதத்தை எதிர்க்கின்றன. ஆனால், சாதியவாதத்தை ஆதரிக்கின்றன. மதவாதத்தின் அடித்தளமே சாதியவாதம்தான். ஆகையால் சாதியவாதத்தை எதிர்க்காமல் வெறுமனே மதவாதம் எதிர்ப்பு என்பது பயனளிக்காது.

திமுக, அதிமுக போன்ற திராவிடக் கட்சிகள் சாதி பார்த்துதான் தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்துகின்றன. ஆனாலும் அவர்களிடம் ஜனநாயகத்தன்மையும் இருக்கிறது.

சாதி மோதலால் தேர்தலே நடத்த முடியாமல் இருந்த பாப்பாப்பட்டி, கீரிப்பட்டி ஊராட்சிகளில் தேர்தல் நடத்த திமுகவிடம் கோரினோம். அவர்களும் தேர்தல் நடத்திக் காட்டினார்கள்.

எம்ஜிஆர்தான் சாதியை வளர்த்தார் என்று இப்போதும் சொல்கிறேன். அவர் சந்தித்த முதல் தேர்தல், திண்டுக்கல் மக்களவை இடைத்தேர்தல்தான். அந்த தேர்தலில் அவர் மாயத்தேவர் என்பவரைத்தான் வேட்பாளராக்கினார். ஆனால் அதே எம்ஜிஆர்தான் தெருக்கள், கடைகளில் உள்ள சாதி பெயர்களை நீக்க உத்தரவிட்டார்.

சாதி ஆதிக்கத்துடன் இருந்த கர்ணம், முன்சீப் போன்ற பதவிகளை எம்ஜிஆர் ஒழித்துக் கட்டியதால்தான் இப்போது தலித்துகளும் விஏஓ அதிகாரிகளாக செயல்பட முடிகிறது.

இதுபோன்ற ஜனநாயக போக்கும், சமூகநீதியும் திராவிடக் கட்சிகளிடம் உண்டு. கலைஞர், ஜெயலலிதா, ஸ்டாலின், இப்போதுள்ள அதிமுக தலைவர்களிடமும் இத்தகைய ஜனநாயகத் தன்மை இருக்கிறது.

ஆனால், பாஜகவை அப்படிச் சொல்ல முடியாது. அவர்கள் முஸ்லீம்களுக்கு எதிராகவும், கிறிஸ்தவர்களுக்கு எதிராகவும்தான் அரசியல் நடத்துகின்றனர். ஒரு முஸ்லீம் வேட்பாளரைக்கூட நிறுத்தாமல் தேர்தலைச் சந்திக்கிறது பாஜக. அக்கட்சிக்கு 100 சதவீதம் மதவாதம்தான் மூலதனம்.

பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது…

இந்து தீவிரவாதம் குறித்து நடிகர் கமல்ஹாஸன் துணிச்சலாகப் பேசியதை வரவேற்கிறேன். தீவிரவாதம் வேறு; பயங்கரவாதம் வேறு. ஒருவருடைய வீட்டில் குழம்பு பாத்திரத்தில் கையை விட்டு இது மாட்டுக்கறிதான் என்று சொல்லி தாக்குதல் நடத்துவது பயங்கரவாதம்தானே?

பாபர் மசூதியை இடித்துவிட்டு, அது ராமர் பிறந்த இடம் என்றும், அங்கு ராமர் கோயிலை கட்டியே தீருவோம் என்றும் சொல்வது எந்த வகையிலானது? கோத்ரா ரயில் எரிப்பையொட்டி 3000க்கும் மேற்பட்ட முஸ்லீம்கள் கொன்று குவிக்கப்பட்டார்களே அதுதான் மதவாதம்; பயங்கரவாதம்.

இந்து பயங்கரவாதிகளால் எரித்துக் கொல்லப்பட்ட அப்பாவி முஸ்லிம்கள்.

நடிகர்கள் அரசியலுக்கு வருவதில் தவறில்லை. ரஜினி, கமல் ஆகியோர் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறோம். விஜய்கூட கட்சி தொடங்குவதாக சொல்லப்படுகிறது. அவரையும் வரவேற்கிறேன்.

ஆனால், கட்சி ஆரம்பித்த உடனே முதல்வர் ஆகிவிட வேண்டும் என்று கருதுவதை நான் ஏற்கவில்லை. அவர்கள் மக்களுக்கு தொண்டு செய்வதை நோக்கமாகக் கொள்ள வேண்டும்.

தமிழ்நாட்டில் மக்கள் இளிச்சவாயர்களாக இருக்கிறார்கள்; சினிமாவின் மீது மோகம் கொண்டிருக்கிறார்கள் என்பதை பயன்படுத்திக் கொண்டு முதல்வர் ஆகிவிடலாம் என்று நடிகர்கள் கனவு காணக்கூடாது.

ரஜினி கட்சி தொடங்கினால் திமுகவுக்கு வாக்கு வங்கி பாதிக்கும் என்று சொல்லவில்லை. ஒவ்வொரு கட்சிக்கும் குறிப்பிட்ட சதவீதம் நிலையான வாக்கு வங்கி இருக்கிறது. அதை யாராலும் ஒன்று செய்துவிட முடியாது.

அதேநேரம், கட்சி சாராத பொது வாக்காளர்களின் ஓட்டுகளும், பெரிய கட்சிகளில் இருந்து பதவியை எதிர்பார்த்துச் செல்லக்கூடிய நபர்களின் ஓட்டுகளும்தான் ரஜினிக்குக் கிடைக்கும்.

கமல்ஹாஸன் கட்சி தொடங்கினால் அவருடைய கொள்கைகள் என்ன?, சமூகநீதி, பாஜக உடனான உறவு, தலித் அரசியல் ஆகியவற்றின் மீதான நிலைப்பாடுகள் என்ன என்பதை கவனிப்போம்.

அதன்பிறகே அதைப்பற்றி கருத்து சொல்ல முடியும். அவர் பாஜகவுடன் போக மாட்டார் என்று இப்போதே சொல்ல முடியாது. தேவைப்பட்டால் நிர்வாக நலனுக்காக பாஜகவுடன் இணைந்தும் செயல்படுவோம் என்று கமல் ஒருமுறை கூறியிருக்கிறார்.

இவ்வாறு திருமாவளவன் கூறினார்.