Thursday, April 25மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

3வது ஒருநாள்: விராட் கோலி, ஷிகர் தவான் அரை சதம்

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான மூன்றாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான், கேப்டன் விராட் கோலி ஆகியோர் அரை சதம் கடந்தனர்.

இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகள் இடையேயான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி கேப்டவுன் நகரில் இன்று (பிப்ரவரி 7, 2018) தொடங்கியது. இதில் ‘டாஸ்’ வென்ற தென்னாப்பிரிக்க கேப்டன் எய்டன் மார்க்ரம் பவுலிங்கை தேர்வு செய்தார்.

ஆறு போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் தொடரில் முதல் இரண்டு போட்டிகளிலும் வென்றுள்ளதால், இந்திய அணியில் எந்த மாற்றமும் இல்லை.

விராட் கோலி, ஒருநாள் போட்டியில் 46வது அரை சதம் அடித்த மகிழ்ச்சியை ஷிகர் தவானுடன் பகிர்ந்து கொள்கிறார்.

அதேசமயம், தென்னாப்பிரிக்க அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. புதிய விக்கெட் கீப்பராக ஹெய்ன்ரிச் கிளாசீன் என்பவரும், ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ள லுங்கி நிகிடியும் முதல் முறையாக தென்னாப்பிரிக்க ஒருநாள் அணியில் இடம் பிடித்துள்ளனர்.

இப்போட்டியிலும் ரோஹித் ஷர்மா சொதப்பினார். 6 பந்துகளை சந்தித்த ரோஹித், ரன் ஏதும் எடுக்காமல் ரபாடா பந்தில் இன்சைட் எட்ஜ் ஆகி விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

இந்த ஒருநாள் தொடரில் 20, 15, 0 என மொத்தம் மூன்று போட்டிகளில் 35 ரன்களே எடுத்துள்ளார். இந்திய அணி 16 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 87 ரன்கள் எடுத்துள்ளது.

ரோஹித் ஷர்மா பெவிலியன் திரும்பியதை அடுத்து, ஷிகர் தவானுடன் இரண்டாவது விக்கெட்டுக்கு கேப்டன் விராட் கோலி களம் இறங்கினார். இருவரும் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன், அரை சதம் கடந்தனர்.

ஷிகர் தவான் 63 பந்துகளில் 76 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதில், 12 பவுண்டரிகள் அடங்கும். மாலை 6.20 மணி நிலவரப்படி கேப்டன் விராட் கோலி, 59 ரன்களுடனும், அஜின்க்யா ரஹானே 2 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். அப்போது இந்திய அணி, 23.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் எடுத்திருந்தது.

ஹாட்ரிக் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்புடன் இந்திய அணி விளையாடி வருகிறது.