Saturday, April 20மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

அரசு டாக்டர்கள் 10 பேருக்கு எம்.எஸ். பதவி உயர்வு! பீலா ராஜேஷ் உத்தரவு!!

அரசு மருத்துவக்கல்லூரி
மருத்துவமனைகளில் பணியாற்றி வரும்
பேராசிரியர் நிலையிலான
மூத்த மருத்துவர்கள் பத்து பேருக்கு,
மருத்துவமனைக் கண்காணிப்பாளராக (எம்.எஸ்.)
பதவி உயர்வு வழங்கி, சுகாதாரத்துறை செயலர்
பீலா ராஜேஷ் வெள்ளிக்கிழமை
(ஜூன் 14, 2019) உத்தரவு
பிறப்பித்துள்ளார்.

 

முன்னதாக, மருத்துவக் கண்காணிப்பாளராக (Medical Superintendent) பணியாற்ற விரும்புவோரிடம் இருந்து விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. மாநிலம் முழுவதும் 20 மூத்த மருத்துவர்கள் கண்காணிப்பாளராக பணியாற்ற இசைவு தெரிவித்து விண்ணப்பம் அளித்திருந்தனர். அவர்களில் பணிமூப்பு, நிர்வாகப் பணிகளில் முன் அனுபவம் உள்ளிட்ட தகுதிகளின் அடிப்படையில் பத்து பேருக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டு உள்ளது.

சுந்தரவேல்

பதவி உயர்வு பெற்றவர்களில் மூன்று பேர் மயக்க மருந்தியல் துறையைச் சேர்ந்தவர்கள். மற்றவர்களில் இருவர் கண் மருத்துவத்துறையையும், இருவர் பொது மருத்துவத்துறையையும் சேர்ந்தவர்கள்.

 

பதவி உயர்வு பெற்றவர்கள் விவரம்:

 

தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மருத்துவர் ராமசுப்ரமணியன், அதே மருத்துவமனையில் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டு உள்ளார். சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மருத்துவர் சுந்தரவேல், திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கண்காணிப்பாளராக மாற்றப்பட்டு உள்ளார்.

 

வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி
மருத்துவமனை மருத்துவர் ராஜவேலு,
அதே மருத்துவமனையில் கண்காணிப்பாளராக
நியமிக்கப்பட்டு உள்ளார். சென்னை ஸ்டான்லி
அரசு மருத்துக்கல்லூரி மருத்துவமனை
பேராசிரியர் ஹரிஹரன், செங்கல்பட்டு அரசு
மருத்துவக்கல்லூரி மருத்துவமனை
கண்காணிப்பாளராக மாற்றப்பட்டு உள்ளார்.
சென்னை எம்எம்சி அரசு மருத்துவக்கல்லூரி
மருத்துவமனை மயக்க மருந்தியல் துறை
பேராசிரியர் ராஜஸ்ரீ, ஓமந்தூரார் அரசு
மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கும்,
கோவை அரசு மருத்துவக்கல்லூரி
மருத்துவமனை மயக்க மருந்தியல் துறை
பேராசிரியர் சடகோபன், அதே மருத்துவமனையிலும்
கண்காணிப்பாளர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.

 

சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக்கல்லூரி
மருத்துவமனை மயக்க மருந்தியல் துறை
பேராசிரியர் தனசேகரன், அதே மருத்துவமனைக்கும்,
கோவை இஎஸ்ஐ மருத்துவக்கல்லூரி
மருத்துவமனை பொது மருத்துவத்துறை
பேராசிரியர் ரவிக்குமார் அதே மருத்துவமனைக்கும்,
சென்னை எம்எம்சி அரசு மருத்துவக்கல்லூரி
மருத்துவமனை கண் மருத்துவத்துறை
பேராசிரியர் மணி, ராயப்பேட்டை
அரசு மருத்துவமனைக்கும்
கண்காணிப்பாளர்களாக
நியமிக்கப்பட்டு உள்ளனர்.

 

திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கண் மருத்துவத்துறை பேராசிரியர் சிவக்குமார், தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கண்காணிப்பாளராக மாற்றப்பட்டு உள்ளார்.

 

சேலம் அரசு மருத்துவர் சுந்தரவேல், எம்பிபிஎஸ் முடித்துவிட்டு முதன்முதலில் 1991ம் ஆண்டு சேலம் மாவட்டம் ஏத்தாப்பூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவ அலுவலராக பணியில் சேர்ந்தார். பிறகு, இரண்டு ஆண்டுகள் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக்கல்லூரியில் எம்.டி. பொது மருத்துவம் பயின்றார். அதையடுத்து, நாமக்கல் மாவட்டம் வடுகம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியில் சேர்ந்தார்.

 

அங்கிருந்து இடமாறுதல் பெற்ற மருத்துவர் சுந்தரவேல், சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 1998ம் ஆண்டு முதல் பணியாற்றி வருகிறார். இவர் ஏற்கனவே விடுதி காப்பாளர், கல்விக்குழு ஆலோசகர், மருத்துவக் கண்காணிப்பாளர் என நிர்வாக அனுபவமும் பெற்றுள்ளார். இந்நிலையில் அவர், கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்று திருவண்ணாமலைக்குச் செல்கிறார். இன்னும் நான்கு மாதங்களில் அவர் பணி ஓய்வு பெற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.