Tuesday, December 3மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

ஆர்.கே.நகரில் 20 ரூபாய் டோக்கன் கொடுத்துதான் ஜெயித்தோம்!; டிடிவி தினகரன் ஆதரவாளர் ஒப்புதல்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போது வாக்காளர்களுக்கு 20 ரூபாய் டோக்கன் கொடுத்துதான் வெற்றி பெற்றோம். எல்லாமே டிடிவி தினகரனின் திட்டம்தான் என்று அவருடைய ஆதரவாளரான முன்னாள் எம்எல்ஏ தொட்டியம் ராஜசேகரன் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளது அரசியல் அரங்கில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கு கடந்த டிசம்பர் 21ம் தேதி இடைத்தேர்தல் நடந்தது. இந்த தேர்தல் முடிவுகள் பல்வேறு கோணங்களில் புதிய கவன ஈர்ப்பை பெற்று இருந்தது. அதில் முக்கியமானது, சுயேட்சையாக பிரஷ்ஷர் குக்கர் சின்னத்தில் போட்டியிட்ட டிடிவி தினகரன், ஆளுங்கட்சி வேட்பாளரை தோற்கடித்து, வெற்றி பெற்றதுதான். கடந்த 13 ஆண்டுகளில் ஓர் இடைத்தேர்தலில் ஆளுங்கட்சி தோற்பதும் இந்த இடைத்தேர்தலில்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆர்.கே. நகர் தொகுதியில் வாக்காளர்களுக்கு ஆளுங்கட்சி தரப்பில் ஓட்டுக்கு ரூ.6000 விநியோகிக்கப்பட்டதாக கூறப்பட்டது. டிடிவி தினகரன் தரப்பில் இருந்து ஒவ்வொரு ஓட்டுக்கும் தலா 10 ஆயிரம் ரூபாய் தருவதாக ஒப்புக்கொண்டு, அதற்கு சான்றாக 20 ரூபாய் டோக்கன்களை விநியோகித்ததாகவும், ஆளுங்கட்சி உள்பட அனைத்து எதிர்க்கட்சிகளும் குற்றம்சாட்டின. தேர்தல் முடிந்ததும், அந்த டோக்கனை கொடுத்துவிட்டு, 10 ஆயிரம் ரூபாயை பெற்றுக்கொள்ளலாம் என தினகரன் தரப்பு வாக்காளர்களிடம் கூறியிருந்ததாகவும் எதிர்க்கட்சிகள் கூறின.

இந்த புகார்களையெல்லாம் அப்போதே டிடிவி தினகரன் மறுத்து இருந்தார். இந்நிலையில் அவருடைய ஆதரவாளரான முன்னாள் எம்எல்ஏ தொட்டியம் ராஜசேகரன், செயல்வீரர்கள் கூட்டத்தில், ஆர்.கே.நகர் தேர்தலின்போது வாக்காளர்களுக்கு 20 ரூபாய் டோக்கன் கொடுத்தது உண்மைதான் என்று பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளார்.

செயல்வீரர்கள் கூட்டம் என்பதால் அவருடைய இந்தப் பேச்சு வெளியே கசியாது என்ற எண்ணத்தில் அவர் இவ்வாறு பேசியிருக்கக் கூடும். ஆனால், செல்போன் கேமரா மூலமாக பதிவு செய்யப்பட்ட அவருடைய பேச்சு அடங்கிய வீடியோ, இன்று காட்சி ஊடகங்களில் வெளியாகி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

டிடிவி தரப்பு நிர்வாகிகள் அமர்ந்து பேசி செய்த மாஸ்டர் பிளான் அடிப்படையில் ரூ20 கொடுக்கப்பட்டதாகவும் ராஜசேகரன் கூறியிருக்கிறார். தவிர, டிடிவி தினகரன் சொன்னபடியே ஜெயலலிதா சிகிச்சை வீடியோவை வெற்றிவேல் வெளியிட்டதாகவும், தேர்தலில் தினகரன் வெற்றிக்கு இவை உதவியதாகவும் கூறியிருக்கிறார் ராஜசேகரன்.

டிடிவி தினகரன் ஆதரவு நிர்வாகி ஒருவரே ஆர்.கே.நகர் அத்துமீறல்களை ஒப்புக்கொண்டிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த வீடியோ ஆதாரத்தை வைத்துக்கொண்டு, டிடிவி தினகரன் வெற்றியை எதிர்த்து திமுக அல்லது அதிமுக தரப்பு நீதிமன்றத்தை நாடவும் வாய்ப்பு இருக்கிறது.

இந்த சர்ச்சை பேச்சு குறித்து டிடிவி தினகரனிடம் இன்று (ஜனவரி 19, 2017) செய்தியாளர்கள் கேட்டபோது, ‘’தவறாக கூறியிருக்கிறார்” என எளிமையாக முடித்துக் கொண்டார்.

உண்மைக்கு புறம்பானதாம்…!:

டிடிவி தினகரன் பேட்டியளித்த சிறிது நேரத்தில் தொட்டியம் ராஜசேகரன் ஊடகத்தினரை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ”செயல்வீரர்கள் கூட்டத்தில் தொண்டர்களை உற்சாகப்படுத்துவதற்காக அப்படி பேசினேன். ஆறாயிரம் ரூபாய் கொடுத்தவர்களுக்கே ஓட்டுப்போட மக்கள் 20 ரூபாய் டோக்கன் கொடுத்தவர்களுக்கா ஓட்டுப்போடுவார்கள்?.

ஆனாலும், டிடிவி தினகரன் மீது வைத்த நம்பிக்கையால்தான் மக்கள் அவரை வெற்றி பெறச்செய்தார்கள் என்ற அர்த்தத்தில்தான் சொன்னேன். ஆனால் உண்மைக்கு புறம்பாக ஊடகங்களில் செய்தி வெளியானது என் மனசை கஷ்டப்படுத்துகிறது.

அம்மாவின் வீடியோ கொடுங்க என்றெல்லாம் அவர்கிட்ட (டிடிவி தினகரன்) நான் போய் கேட்க முடியுமா? நானும் வெற்றிவேலும் நண்பர்கள். அதனால் அம்மா சிகிச்சை பெறும் வீடியோவை வெற்றிவேல் வெளியிட்டார் என்று சொன்னேன்,” என்று மழுப்பலாக பதில் அளித்தார்.

Leave a Reply