Friday, April 19மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

படிக்காத விவசாயிக்கு அரசு வேலையில் முன்னுரிமை கிடைக்குமா?; போலீசாரிடம் பொதுமக்கள் சரமாரி கேள்வி  

 

சேலம் அருகே, எட்டு வழிச்சாலைக்கு நிலம் கொடுத்தால் அரசு வேலையில் முன்னுரிமை அளிக்கப்படும் எனக்கூறும் அதிகாரிகள், படிக்காத விவசாயிக்கு எந்த அடிப்படையில் முன்னுரிமை கொடுப்பார்கள்? என பொதுமக்கள் காவல்துறை, வருவாய்த்துறை அதிகாரிகளிடம் சரமாரியாக கேள்வி கேட்டு துளைத்தெடுத்தனர்.

 

சேலம் மாவட்டத்தில், சென்னை – சேலம் எட்டு வழிச்சாலை அமைய உள்ள இடங்கள், ஏற்கனவே அளக்கப்பட்டு எல்லைக்கற்கள் நடப்பட்டு உள்ளன. அந்தப் பகுதிகளில் தற்போது துல்லிய அளவீடு செய்யும் பணிகள் நடந்து வருகின்றன. குள்ளம்பட்டி பகுதியில் இன்று (ஜூலை 16, 2018) துல்லிய அளவீடு நடந்தது.

இதற்காக தாசில்தார் அன்புக்கரசி தலைமையில் வருவாய்த்துறை ஊழியர்கள், சர்வேயர்கள் இன்று காலை குள்ளம்பட்டி கிராமத்திற்கு வந்தனர். வாழப்பாடி போலீஸ் டிஎஸ்பி சூரியமூர்த்தி தலைமையில் காரிப்பட்டி இன்ஸ்பெக்டர் பாஸ்கர்பாபு உள்பட முப்பதுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணிக்கு வந்திருந்தனர்.

 

குள்ளம்பட்டி, மின்னாம்பள்ளி விவசாயிகள், எட்டு வழிச்சாலைக்கு நிலம் கொடுக்க தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருவதோடு, கால்நடைகளுக்கு கருப்புக்கொடி கட்டி ஆர்ப்பாட்டம், பெரியாண்டிச்சி அம்மனிடம் கோரிக்கை மனு அளிக்கும் போராட்டம் என தொடர்ந்து நூதன முறையில் போராடி வருகின்றனர்.

இந்நிலையில், இன்று அதிகாரிகள் நில அளவைக்கு வந்தபோதும் அவர்களை முற்றுகையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பாதுகாப்புக்கு வந்த டிஎஸ்பி சூரியமூர்த்தி, அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தால் கைது செய்ய வேண்டிய நிலை ஏற்படும் என்று எச்சரித்தார்.

 

விவசாயி பன்னீர்செல்வத்தின் மகள் நிவ்யா, ”காவல்துறையினரின் கடமை என்ன? மக்களுக்கு பாதுகாப்பு அளிப்பதும் உங்களின் கடமைதானே? நீங்கள் உங்கள் இஷ்டத்துக்கு மக்களை கைது செய்து வண்டியில் ஏறு என்கிறீர்கள்… இறங்கு என்கிறீர்கள்,” என்றார். அதற்கு மறுப்பு தெரிவித்த டிஎஸ்பி சூரியமூர்த்தி, ”அரசாங்கம் செய்யும் வேலைகளை தடுக்கக் கூடாது. தடுத்தால் அப்படித்தான் செய்வோம்,” என்று பதில் அளித்தார்.

மற்றொரு விவசாயி வீரமணி டிஎஸ்பியிடம், ”நிலம் அளக்கும் பணிகளை நிறுத்த வேண்டும்,” என்றார். அதற்கு டிஎஸ்பி சூரியமூர்த்தி, ”அப்படிலாம் நிறுத்த முடியாது. அதையெல்லாம் என்னால சொல்ல முடியாது. வேண்டுமானால் உரிய அதிகாரிகளிடம் சொல்லிப் பாருங்கள்,” என்றார்.

அப்போது அங்கிருந்த தாசில்தார் அன்புக்கரசியிடம், விவசாயிகள் மணிகண்டன், வீரமணி ஆகியோர், ”எட்டு வழிச்சாலையால் எங்கள் வாழ்வாதாரமே போய்விட்டது. நாங்கள் படிப்பறிவு இல்லாதவர்கள். ஆட்சேபனை மனுக்கள் மீது சட்டப்பூர்வ விசாரணை நடந்தபோது, அரசு வேலையில் சேரும்போது முன்னுரிமை அளிக்கப்படும் என சொன்னீர்கள். படிக்காத நாங்கள் எப்படி டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுத முடியும்? நான் எப்படி அரசு வேலையில் சேர முடியும்? எங்களுக்கு எந்த அடிப்படையில் முன்னுரிமை சான்றிதழ் கொடுப்பீர்கள்?

எங்களிடம் இருந்து எவ்வளவு நிலம் எடுக்கிறீர்களோ அதே அளவுக்கு எங்கள் பஞ்சாயத்து எல்லைக்குள்ளேயே மாற்று நிலத்தை கொடுத்துவிடுங்கள். இல்லை என்றால் எங்களுக்கு ரேஷன் கார்டு, வாக்காளர் அட்டை எதுவும் வேண்டாம். எல்லாத்தையும் எடுத்துட்டுப் போங்க. தமிழ்நாட்டுக்குள்ளேயே நாங்கள் குடியுரிமை இல்லாத அகதியாக இருந்துட்டுப் போறோம். அன்றைக்கு டிஆர்ஓ விசாரணைக்கு கூப்பிட்டு வெச்சி அசிங்கப்படுத்தினார். அவர் எங்களிடம் ஒரு நிமிடம் கூட அழைத்து கருத்து கேட்கவில்லை. எங்களுக்கு எங்கள் நிலம் வேண்டும். நிலத்தை அளக்க விடமாட்டோம்,” என்றனர்.

இதையடுத்து அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்ததாக பன்னீர்செல்வம், வீரமணி, தமிழ்ச்செல்வம், அரவிந்த், செல்வி, அமுதா, கிரிராஜன், மணிகண்டன் ஆகிய எட்டு பேரை கைது செய்து காவல்துறை வாகனத்தில் ஏற்றினர்.

வேறு யாரேனும் கைது ஆவதாக இருந்தால் வரலாம் என்று காவல்துறையினர் கூவி கூவி அழைத்தனர். சிலர் வாகனத்தில் ஏறுவதும், இறங்குவதுமாக இருந்தனர். பின்னர் மேற்கண்ட எட்டு பேரை மட்டும் அயோத்தியாப்பட்டணம் ராமர் கோயில் அருகே உள்ள தனியார் கல்யாண மண்டபத்தில் தங்க வைத்தனர். இன்று மாலை 6.30 மணியளவில் அனைவரிடமும் பெயர், முழு முகவரி விவரங்களை சேகரித்துக் கொண்டு அவர்களை விடுதலை செய்தனர்.