Friday, March 29மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

சதம் அடித்த மேட்டூர் அணை நீர்மட்டம்!; விவசாயிகள் மகிழ்ச்சி

 

கர்நாடகா அணைகளில் இருந்து திறந்து விடப்படும் உபரி நீர் காரணமாக மேட்டூர் அணை நீர்மட்டம், நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு இன்று (ஜூலை 17, 2018) இரவு 100 அடியை எட்டியுள்ளது. விவசாயப் பயன்பாட்டுக்காக வரும் 19ம் தேதி அணை திறக்கப்பட உள்ள நிலையில், டெல்டா விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

 

கர்நாடகா மாநிலத்தில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளிலும், கேரளா மாநிலத்தில் வயநாடு பகுதியிலும் கடந்த பத்து நாள்¢களாக தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் அந்த மாநிலங்களில் உள்ள அணைகள் நிரம்பியுள்ளன. குறிப்பாக, கர்நாடகா மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பி வழிகின்றன.

 

பாதுகாப்பு கருதி அந்த அணைகளில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. கர்நாடகா அணைகளில் இருந்து நேற்று வினாடிக்கு ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 212 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் தமிழகத்தை நோக்கி ஒகேனக்கல் காவிரி ஆற்றில் சீறிப்பாய்ந்து வந்தவண்ணம் உள்ளது.

 

இதனால் ஓகேனக்கல் காவிரி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கடந்த பல மாதங்களாக வறண்டுபோய் பாறைகளாகக் காட்சி அளித்த ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தற்போது சினி ஃபால்ஸ், மெயின் அருவி, ஐந்தருவிகளை மூழ்கடிக்கும் வகையில் புதுவெள்ளம் பாய்ந்து ஓடுகிறது.

 

கர்நாடகா அணைகளில் இருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர் ஒகேனக்கல் காவிரி ஆறு வழியாக மேட்டூர் அணைக்கு வருகிறது. இதனால் மேட்டூர் அணை நீர் மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நேற்று காலை 87.92 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம், இன்று காலை நிலவரப்படி 95.73 அடியாக உயர்ந்தது. கிட்டத்தட்ட ஒரே நாளில் நீர்மட்டம் 8 அடி உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.

மேட்டூர் அணைக்கு நேற்றைய நிலவரப்படி ஒரு லட்சம் கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று மேலும் 7064 கன அடியாக அதிகரிக்கப்பட்டது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1000 கன அடி நீர் திறக்கப்படுகிறது. நீர் திறப்பை விட நீர் வரத்து 100 மடங்குக்கு மேல் இருந்த நிலையில், இன்று இரவு 8.05 மணிக்கு அணை நீர் மட்டம் 100 அடியை எட்டியது.

 

கடைசியாக கடந்த 2014ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 8ம் தேதிதான் மேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடியைத் தொட்டு இருந்தது. அதன்பிறகு, தமிழகத்தில் பருவமழை பொய்த்தது, கர்நாடாகா அணைகளில் இருந்து நீர் திறப்பு குறைந்தது உள்ளிட்ட காரணங்களால் மேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடியைக்கூட தொடவில்லை. நான்கு ஆண்டுகள் கழித்து அணை நீர்மட்டம் 100 அடியை எட்டியதால் டெல்டா மாவட்ட விவசாயிகள், பொதுமக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

 

மேட்டூர் அணை வரலாற்றில் 64வது முறையாக அதன் நீர்மட்டம் 100 அடியை எட்டியுள்ளதும் குறிப்பிடத்தக்கது. இதையடுத்து சம்பா சாகுபடிக்காக நாளை மறுநாள் (ஜூலை 19ம் தேதி) மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட உள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணையை திறந்து வைப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

 

மேட்டூர் அணை திறக்கப்பட்டால் தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் உள்ள 16 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும். மேட்டூர் அணையின் அதிகபட்ச நீர் மட்ட அளவு 120 அடியாகும். இப்போதுள்ள நிலையில் தொடர்ந்து அணைக்கு நீர் வரத்து இருக்குமானால் அணை முழுமையாக நிரம்பவும் வாய்ப்பு உள்ளது.