Friday, April 26மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

சேலம் தொகுதியில் ஹாட்ரிக் அடிப்பாரா எடப்பாடி?; குஸ்தி போடும் திமுக – அமமுக!

சேலம் மக்களவை தொகுதியில்
திமுக, அதிமுக, அமமுக என
மும்முனை போட்டி ஏற்பட்டுள்ள
நிலையில், இந்த தொகுதியை
தொடர்ச்சியாக மூன்றாவது
முறையாக தக்க வைத்துக்கொள்வதில்
எடப்பாடியின் அதிமுகவுக்கு
கடும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

 

மக்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை திமுகவும், அதிமுகவும் அடுத்தடுத்து வெளியிட்டு, அரசியல் களத்தை சூடேற்றி இருக்கின்றன. முதல்வர் மாவட்டம் என்பதால், மற்ற தொகுதிகளைக் காட்டிலும் சேலம் மக்களவை தொகுதி அனைத்து தரப்பினராலும் கூர்ந்து கவனிக்கப்பட்டு வருகிறது.

 

மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில், 39 ஆண்டுகளுக்குப் பிறகு திமுக நேரடியாக சேலம் மக்களவை தொகுதியில் போட்டியிடுகிறது என்பதாலும் இந்த தொகுதி நட்சத்திர அந்தஸ்தைப் பெற்றுள்ளது. திமுக சார்பில், முன்னாள் எம்எல்ஏ எஸ்.ஆர்.பார்த்திபன் களம் இறங்குகிறார். அதிமுக சார்பில், கே.ஆர்.எஸ். சரவணன் போட்டியிடுகிறார். மேலும், எடப்பாடிக்கு எதிராக தீவிரமாக கம்பு சுழற்றி வரும் டி.டி.வி.தினகரனின் அமமுக சார்பில் வீரபாண்டி எஸ்.கே.செல்வம் களமிறக்கப்பட்டு உள்ளார்.

”அதிமுக தலைவர் ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது, கடந்த 2009, 2014 மக்களவை தேர்தல்களில் தொடர்ச்சியாக இரண்டு முறை, சேலம் மக்களவை தொகுதியை அதிமுக கைப்பற்றி இருந்தது. ஆனால், இந்த முறை அதிமுக அத்தனை எளிதாக இங்கே வெற்றி பெற்று விட முடியாது. இந்த தொகுதியில் 55 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் வன்னியர் சமூகத்தினர் என்பதால்தான் அதே சமூகத்தைச் சேர்ந்த கே.ஆர்.எஸ். சரவணனுக்கு அதிமுக வாய்ப்பு அளித்திருக்கிறது.

 

ஆனாலும், முன்னாள் எம்எல்ஏ
வீரபாண்டி எஸ்.கே. செல்வம்,
அமமுக சார்பில் களம் இறக்கப்பட்டு
உள்ளதால், அக்கட்சி சுமார்
ஒரு லட்சம் வாக்குகளைப் பிரித்து
விடும் வாய்ப்பும் இருக்கிறது. ஒருவேளை,
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் போல
டி.டி.வி. தினகரன் கவுரவப் பிரச்னையாக கருதி,
பழையபடி டோக்கன் ஃபார்முலாவை
பின்பற்றினால் மேலும் வாக்குகள்
சிதறிப்போகும். அவ்வாறு சிதறும்
வாக்குகள் அனைத்துமே அதிமுக உடையதுதான்.
இப்படி வாக்குகள் சிதறிப்போனால் அது
திமுகவுக்குதான் சாதகமாக இருக்கும்.

 

அதற்கேற்ப, அமமுகவினரும் வாக்குச்சாவடி
முகவர் நியமனம், புதிய உறுப்பினர் சேர்க்கை
என ஓராண்டாகவே சேலம் மாவட்டம்
முழுக்க தீவிரமாக வேலை செய்து வருகின்றனர்.
கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு,
தினகரனை வீரபாண்டிக்கு வரவழைத்த
எஸ்.கே.செல்வம், இரண்டாயிரத்துக்கும்
மேற்பட்டவர்களை திரட்டி வரவேற்பு அளித்தார்.
அவர் அமமுக கட்சிக்கொடி ஏற்றிய பிறகு
அதே இடத்தில் போட்டியாக அதிமுகவும்
கட்சிக்கொடி ஏற்றியது.

 

அதேபோல் எதிர்பார்த்த தொகுதிகளை தராததால்
அதிமுக மீது கடும் அதிருப்தியில்
இருக்கிறது தேமுதிக. பாஜகவின்
அழுத்தம் காரணமாகவே அதிமுகவுடன்
தேமுதிக கூட்டணி வைத்திருக்கிறது.
அதனால் அக்கட்சியினரின் வாக்குகள்
ஆளும்தரப்புக்கு சாதகமாகுமா என்பதும்
சந்தேகம்தான். கடந்த 2009 தேர்தலின்போது
அதிமுகவின் உள்ளடி வேலைகளால்
பாமக ஒரு தொகுதியில்கூட வெற்றி
பெறவில்லை. அதனால் அக்கட்சியும்
இம்முறை அதிமுகவுக்காக வேலை
செய்யாது. என்னதான் இரட்டை இலை
சின்னத்தை தக்க வைத்துக்கொண்டாலும்,
எடப்பாடி தலைமையிலான அதிமுக மீது
நகர்ப்புற மக்களிடையே அவ்வளவாக
வரவேற்பு இல்லை. அத்துடன்
ஆளும் தரப்பு மீது இயல்பாகவே எழும்
அதிருப்தியும் அதிமுக கூட்டணிக்கு
எதிர்மறை விளைவையே ஏற்படுத்தும்,”
என்கிறார் அதிமுக முன்னாள்
எம்எல்ஏ ஒருவர்.

திமுகவும் இம்முறை வன்னியர் சமூகத்தைச் சார்ந்த எஸ்.ஆர்.பார்த்திபனை வேட்பாளராக களம் இறக்கியுள்ளது. சேலம் மத்திய மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் எம்எல்ஏ, மதிமுகவில் இருந்து திமுகவுக்கு தாவிய கு.சீ.வெ.தாமரைகண்ணனை வேட்பாளராக்க வேண்டும் என்று கடுமையாக முயற்சித்தார். அதேநேரம், சேலம் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் வீரபாண்டி ராஜா, கனிமொழி மூலமாக தனது அண்ணன் செழியனின் மருமகன் டாக்டர் தருண் அல்லது சென்னையில் வசிக்கும் தனது தம்பி டாக்டர் பிரபு ஆகிய இருவரில் ஒருவருக்கு சீட் பெற கடுமையாக முயற்சிகளை மேற்கொண்டார்.

 

ஆனாலும், தாமரைகண்ணன்தான் முன்னுரிமை பட்டியலில் இருந்தார். கடைசி நேரத்தில் தேர்தல் செலவுக்கான பட்ஜெட்டை புரட்ட முடியாமல் தடுமாறிப் போகவே, அந்த வாய்ப்பு எஸ்.ஆர்.பார்த்திபனுக்கு கிடைத்ததாகச் சொல்கிறார்கள் திமுகவினர். நாமக்கல் தொகுதி பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட எஸ்.ஆர்.பார்த்திபன், அத்தொகுதியில் சின்னச்சின்ன கிராமங்கள்தோறும் சென்று கூட்டங்களை நடத்தியது, அவர் மீது கட்சித் தலைமைக்கு நம்பிக்கையை ஏற்படுத்தி இருப்பதும் அவரை வேட்பாளராக்க முக்கிய காரணம் என்கிறார்கள் திமுகவினர்.

 

இது தொடர்பாக திமுக தரப்பினரிடம் பேசினோம்.

 

”திமுக கூட்டணி அமைத்து போட்டியிட்ட காலங்களில் எல்லாம் சேலம் தொகுதியை கூட்டணி கட்சிக்குத்தான் விட்டுக் கொடுத்து வந்தது. இந்த முறையாவது திமுகவுக்கு சேலம் தொகுதி கிடைக்குமா? என்று எதிர்பார்த்து இருந்தோம். இப்போது கிடைத்துவிட்டது என்பதில் மகிழ்ச்சிதான். எஸ்.ஆர்.பார்த்திபனுக்கு சீட் கிடைத்ததில் சேலம் மத்திய மாவட்ட செயலாளருக்கு பெரிய வருத்தம் இருக்காது. இரண்டாவது முன்னுரிமை பட்டியலில் ராஜேந்திரன் எம்எல்ஏ, எஸ்.ஆர்.பார்த்திபனைத்தான் பரிந்துரை செய்திருந்தார்.

அதேநேரம், கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் வீரபாண்டி ராஜா, மேற்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம், தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர் டி.எம்.செல்வகணபதி ஆகியோர் மத்திய மாவட்ட செயலாளருக்கு ஒருபோதும் ஒத்துழைப்பு தருவதில்லை. அவர்கள் தனி ஆவர்த்தனமாக செயல்படுவதால் ஓமலூர், எடப்பாடி, வீரபாண்டி ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் திமுகவுக்கு கொஞ்சம் சறுக்கல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஊராட்சி சபை கூட்டங்களின்போதே அவர்கள் தரப்பில் போதிய ஒத்துழைப்பு கிடைக்கவில்லை,” என்கிறார்கள் உடன்பிறப்புகள்.

 

மற்றொரு தரப்பினரோ, ”திமுகவில் நிலவும் கோஷ்டி பிரச்னைகளால் தோற்கடித்து விடுவார்கள் என்பதால்தான் காங்கிரஸ் கட்சி, இந்த முறை சேலம் தொகுதியை கைகழுவிவிட்டது. என்றாலும், அமமுக எப்படியும் அதிமுக வாக்குகளை சிதறடிக்கும். மேலும், எஸ்.ஆர்.பார்த்திபன் பரவலாக அறியப்பட்ட வேட்பாளர், எட்டுவழிச்சாலை திட்டம் போன்ற ஆளும்தரப்பு மீது ஏற்பட்டுள்ள அதிருப்தி ஆகிய காரணங்களால் எஸ்.ஆர்.பார்த்திபன் வெற்றி பெற வாய்ப்புகள் உள்ளன. யார் வெற்றி பெற்றாலும் பெரிய அளவிலான வாக்கு வித்தியாசம் இருக்காது,” என்றனர்.

 

”அரசியலில் சந்தர்ப்பவாதத்தை தவிர்க்க முடியாது. திமுகவும் விதிவிலக்கு அல்ல. ஆனாலும், அதிமுக கூட்டணி என்பது முற்றிலும் பொருத்தமில்லாத கூட்டணி. பாஜகவுடன் கூட்டணி வைத்தால் அதிமுகவுக்கு இருக்கின்ற செல்வாக்கும் சரிந்துவிடும் என்ற பதற்றம் ஆரம்பத்தில் இருந்தே அக்கட்சியின் மூத்த தலைகளிடம் இருந்தது.

 

போதாக்குறைக்கு ஆளும்தரப்பு மீது ஊழல் பட்டியல் வாசித்த பாமக, ஜெயலலிதாவை கடுமையாக விமர்சித்த தேமுதிக ஆகிய கட்சிகளுடன் வம்படியாக அதிமுக கூட்டு வைத்ததை அக்கட்சித் தொண்டர்களே ரசிக்கவில்லை.. இவை எல்லாமே திமுகவுக்கு சாதகமாகும்.

 

திமுகவுக்கு ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் சராசரியாக 50000 முதல் 60000 வரை நிலையான வாக்குவங்கி இருக்கிறது. மேலும், இடதுசாரிகள், காங்கிரஸ் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சிகளின் வாக்குகளும், சிறுபான்மையினரின் வாக்குகளும் திமுக கரையேற துணைபுரியும்,” என்றும் கணக்குப் போடுகிறார்கள் உ.பி.க்கள்.

 

நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் போன்ற சிறு கட்சிகளும் கோதாவில் இறங்குகின்றன. இளம் வாக்காளர்களின் கணிசமான வாக்குகள், இவ்விரு கட்சிகளுக்கும் கணிசமாக செல்ல வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது. அதனால் திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளுமே, மூத்த வாக்காளர்களையே தங்களின் வெற்றிக்கு சார்ந்து இருக்கின்றன.

 

இரு திராவிட கட்சிகளும் 60 சதவீத வாக்காளர்களுக்கு கடைசி நேரத்தில் 500 ரூபாய் வரை பணத்தை வாறியிறைக்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் உலா வருகின்றன. இவை ஒருபுறமிருக்க, இந்த தேர்தலில் எடப்பாடி மற்றும் டிடிவி தினகரன் அணி ஆகியோரில் யாருக்கு அதிமுக தொண்டர்களின் ஆதரவு இருக்கிறது என்பதிலும் தெளிவு கிடைத்துவிடும்.

 

கடும் போட்டியை சமாளித்து, சொந்த மண்ணில் பேரை காப்பாற்றிக்கொள்ள எடப்பாடி பழனிசாமியின் பரிவாரங்கள் எந்த எல்லைக்கும் போவார்கள் என்பதால், சேலம் மக்களவை தொகுதி இப்போதே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

– பேனாக்காரன்