Sunday, April 21மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

மாங்கனி மாவட்ட திமுகவில் யாருக்கு சீட்? விருப்ப மனுக்கள் பெறுவதில் உடன்பிறப்புகள் ஆர்வம்!

பத்து ஆண்டுகள் தொடர்ந்து
ஒரு கட்சி ஆட்சியில் இருக்கும்போது
அதன் மீது இயல்பாகவே எழும்
அதிருப்தி, ஜெயலலிதா என்ற
மிகப்பெரும் ஆளுமை இல்லாத
நிலை ஆகியவற்றால் எப்படியும்
வரும் சட்டமன்ற தேர்தலில்
ஆட்சி மாற்றம் நடந்தே தீரும்
என்ற அதீத எதிர்பார்ப்பு
திமுக தரப்பில் நிலவுகிறது.
இதனாலேயே வரும் தேர்தலில்
வேட்பாளர் சீட் கேட்டு,
திமுகவில் ‘பசையுள்ள’ விஐபிகள்
பலரும் விருப்பமனு தாக்கல்
செய்ய அறிவாலயத்துக்கு
படையெடுத்து வருகின்றனர்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமியின்
சொந்த மாவட்டமான சேலத்தில்
மொத்தம் 11 சட்டமன்ற
தொகுதிகள் உள்ளன. கடந்த
2016 சட்டமன்ற தேர்தலில்,
சேலம் வடக்கில் மட்டுமே
திமுக வெற்றி பெற்றது.
1996, 2006 தேர்தல்களில்
அதிமுக மீதான கடும்
அதிருப்தி நிலவிய காலக்கட்டத்தில்
மட்டுமே சேலம் மாவட்டத்தில்
திமுக கணிசமான இடங்களை
கைப்பற்றி இருக்கிறது.

மற்ற காலங்களில்,
மாங்கனி மாவட்டம் என்பது
அதிமுகவின் கோட்டையாகவே
விளங்கி வருகிறது. இந்தமுறை,
அந்த கோட்டையை சுக்கல் சுக்கலாக
தகர்த்து எறிய சூளுரைத்திருக்கிறது
திமுக. அதற்கேற்ப பணபலம்,
சாதி பலம், மக்கள் செல்வாக்கு,
குற்றப்பின்னணி உள்ளிட்ட
பல்வேறு அம்சங்களை ஆலசி ஆராய்ந்து,
வேட்பாளர் தேர்வில் மிகுந்த கவனம்
செலுத்துகிறது திமுக தலைமை.

சேலம் மாவட்டத்தில்,
திமுகவில் யார் யாருக்கெல்லாம்
வேட்பாளர் சீட் கிடைக்கலாம்
என மக்கள் மத்தியிலும், கட்சிக்குள்ளும்
சிலர் மீது எதிர்பார்ப்புகள்
நிலவுகின்றன. அதன் அடிப்படையில்
இருந்து…

ரேகா பிரியதர்ஷினி, சின்னதுரை, சிவராமன், மாறன்
கெங்கவல்லி:

 

தனித்தொகுதியான
கெங்கவல்லியில் கடந்த
2016 சட்டமன்ற தேர்தலில்
திமுக சார்பில் போட்டியிட்ட
முன்னாள் மேயர் ரேகா பிரியதர்ஷினி (38),
சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில்தான்
தோல்வியைத் தழுவினார்.
அதுவும், கட்சிக்குள் நடந்த
உள்ளடிகளால் அவருடைய
வெற்றிவாய்ப்பு நழுவியதாகச்
சொல்லப்படுகிறது. அதனாலேயே
அவர் மீது அறிவாலயம் வரை
ஒருவித அனுதாபம் உண்டு.

இந்த முறையும் அவருக்கே
கெங்கவல்லியில் சீட் தரப்படும் என
பலமாக பேசப்படுகிறது. அதைக்
குறிவைத்து ரேகா பிரியதர்ஷினியும்
சேலத்தில் இருந்து தன்னுடைய
ஜாகையை தொகுதிக்குள் மாற்றிவிட்டார்.
கடந்த ஓராண்டாகவே கெங்கவல்லியில்
கட்சிக்காரர்கள் வீடுகளில்
நடக்கும் அனைத்து நல்லது,
கெட்டதுகளிலும் கலந்து
கொண்டு வருகிறார்.

அதேநேரம், கெங்கவல்லி
தொகுதியின் மண்ணின் மைந்தரும்,
முன்னாள் எம்எல்ஏவுமான
சின்னதுரையும் (54) தொகுதிக்குள்
ஸ்ட்ராங்க் ஆகவே இருக்கிறார்.
பி.இ. பட்டதாரியான இவர்
2006 – 2011ல் எம்எல்ஏ ஆக
இருந்தபோது, கெங்கவல்லி
அரசு மருத்துவமனைக்கு புதிய கட்டடம்,
தம்மம்பட்டி, தலைவாசலில் தரம்
உயர்த்தப்பட்ட ஆரம்ப சுகாதார
நிலையங்கள், பள்ளிகளுக்கு
புதிய கட்டடங்கள், அரசுக்கல்லூரிக்கு
விடுதிகள் என தொகுதி முழுவதும்
பல்வேறு அரசு கட்டடங்களை
கட்டிக் கொடுத்திருக்கிறார்.
தொகுதியிலும் நல்ல பெயரை
தக்க வைத்திருக்கிறார்.
அதனால் சின்னதுரைக்கு சீட்
கொடுத்தாலும் நிச்சயமாக வெற்றி
பெறுவார் என்கிறார்கள்
உள்ளூர் மக்கள். அவரும் சீட்
பெறும் முடிவில் கடந்த சில
மாதங்களாகவே கட்சிக்குள் சில
முக்கிய சோர்ஸ்கள் மூலம்
காய் நகர்த்தி வருகிறார்.

சின்னதுரைக்கு கெங்கவல்லியில்
வாய்ப்பு அளிக்கப்பட்டால்,
ரேகா பிரியதர்ஷினி ஆத்தூரில்
களமிறக்கப்படலாம் என்ற
பேச்சும் ஓடுகிறது.

அருண் பிரசன்னா, மகேந்திரன், குபேந்திரன், தமிழரசு
ஆத்தூர் (தனி):

 

ஆத்தூர் தனித்தொகுதியில்
போட்டியிட திமுக கூட்டணியில்
உள்ள காங்கிரஸ் கட்சியும்
தீவிர ஆர்வம் காட்டி வருகிறது.
கடந்த 2006, 2011 தேர்தல்களில்
காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட
அர்த்தனாரி தோல்வி அடைந்தார்.
கூட்டணியில் உள்ள ஒரு கட்சி,
ஒரு தொகுதியில் தொடர்ந்து
இரண்டுமுறை தோல்வி அடைந்திருந்தால்,
அந்த தொகுதியை திமுக எடுத்துக்
கொள்ளும் என வாய்மொழியாக
ஒரு தகவலை கசிய விட்டுள்ளது
திமுக. அதனால் இந்த முறை
ஆத்தூரில் திமுகவே களம் காணும்
எனத் தெரிகிறது. என்றாலும்,
ராகுல்காந்தி வரை நேரடியாகவே
பேசக்கூடிய அர்த்தனாரிக்கு,
மூன்றாவது முறையாக ஒரு வாய்ப்பு
கொடுக்கலாம் என யோசித்து
வருகிறது காங்கிரஸ்.

ஒருவேளை, ஆத்தூரில் திமுக களமிறங்கும் பட்சத்தில், கிழக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளரான சிவராமன் (34) போட்டியிடுவார் எனத்தெரிகிறது. தலைவாசல் அரசுக்கல்லூரியில் கவுரவ விரிவுரையாளராக இருந்த சிவராமன், தற்போது ஃபைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். காலம் காலமாக திமுக குடும்பம். இவருடைய தந்தை சிவாஜி, கிளை செயலாளர். சிவராமனின் மகனுக்கு, திமுக தலைவர் ஸ்டாலின்தான் செங்குட்டுவன் என பெயர் சூட்டினார். கிரிக்கெட், கபடி அணிகளுக்கு ஊக்கமளித்து வரும் சிவராமனுக்கு எஸ்.சி., சமூகத்தினர் மட்டுமின்றி, இதர சமூகத்தினர் மத்தியிலும் நல்ல பெயர் இருக்கிறது.

 

ஏற்காடு (தனி):

 

பழங்குடியின தனித்தொகுதியான
ஏற்காட்டில் சேலத்தை அடுத்துள்ள
பூவனூரைச் சேர்ந்த மாறன் (43)
களமிறக்கப்படலாம் என்ற பேச்சு
வலுவாக இருக்கிறது. ஐபேக் டீமும்
அவரை மேலிடம் வரை சிபாரிசு
செய்திருக்கிறது என்கிறார்கள்.

எம்பிஏ பட்டதாரியான மாறன்,
எல்பிஜி சிலிண்டர் ஏஜன்சி
நடத்தி வருகிறார். சொந்தமாக
லாரிகளும் உள்ளன. கடந்த 2013ல்
நடந்த ஏற்காடு இடைத்தேர்தலில்
முதன்முதலாக தேர்தல் களத்தில்
இறக்கிவிடப்பட்டார். அப்போதே
1.50 கோடி ரூபாய் வரை செலவழித்தும்,
அதிமுகவிடம் வெற்றி வாய்ப்பை
இழந்தார். இடைத்தேர்தலில்
ஆளுங்கட்சியுடன் மல்லுக்கட்ட
முடியாது எனத் தெரிந்ததால்
அப்போது திமுகவில் முன்னாள்கள்
யாரும் சீட் கேட்க முன்வராதபோது,
இளைஞரான மாறன்தான் துணிச்சலாக
இடைத்தேர்தலில் போட்டியிட்டார்.
அதனால் அவருக்கே 2016ல்
மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படும்
என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், கட்சி மேலிடம் ஏனோ
அப்போது மாறனுக்கு சீட்
கொடுக்கவில்லை. தற்போது
அவருக்கான காலம்
கனிந்திருப்பதாகச் சொல்கிறார்கள்
உடன்பிறப்புகள்.

தவிர, கடந்த தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்த வீரபாண்டி ராஜா ஆதரவாளரான தமிழ்ச்செல்வன், ஏற்காடு ஒன்றிய பொறுப்பாளர் தங்கசாமி ஆகியோரும் சீட் ரேஸில் இருக்கிறார்கள்.

வீரபாண்டி ராஜா, வீரபாண்டி பிரபு, மருத்துவர் தருண்
ஓமலூர்:

 

வன்னியர் சமூகத்தினர் ஆதிக்கம் மிகுந்த ஓமலூர் தொகுதியில், சேலம் மத்திய மாவட்ட திமுக மாணவரணி அமைப்பாளர் அருண் பிரசன்னாவுக்கு (37) சீட் கிடைக்கலாம் என்கிறார்கள் மூத்த உ.பி.க்கள். பி.இ., பட்டதாரி; இளைஞர் மற்றும் கிளீன் ஹேண்ட். எல்லாவற்றுக்கும் மேல் மத்திய மாவட்டத்துடன் நெருக்கமாக இருக்கிறார். பெட்ரோல் பங்க் மற்றும் கட்டுமானத் தொழில் நிறுவனம் நடத்தி வரும் அருண் பிரசன்னாவுக்கு சீட் கிடைத்தால் 10 கோடி ரூபாய் வரை செலவு செய்யவும் தயாராக இருப்பதாகச் சொல்கிறார்கள்.

 

கொரோனா ஊரடங்கின்போது அருண் பிரசன்னா, விளிம்பு நிலை மக்களை தேடித்தேடிச் சென்று நிவாரண உதவிகள் வழங்கியதை தொகுதி மக்கள் பரவலாக கவனத்தில் வைத்திருக்கின்றனர்.

 

இவருக்கு வாய்ப்பு
இல்லாதபட்சத்தில், கன்னங்குறிச்சியை
சேர்ந்த குபேந்திரன் (41)
களமிறக்கப்படலாம் என்றும்
சொல்கிறார்கள். சீட்டை எதிர்பார்த்து,
ஓராண்டாகவே தொகுதிக்குள்
பலரையும் சந்தித்துப் பேசி
வருகிறார். கொரோனா காலத்தில்
சத்தமில்லாமல் மக்களுக்கு
நிவாரண உதவிகளை வழங்கினார்.
இவருடைய தாயாரின் சொந்த ஊர்
ஓமலூர் என்பதால், அந்த வகையில்
சொந்த, பந்தங்கள் தொகுதிக்குள்
இருப்பது தனக்கு சாதகமாக
இருக்கும் என நம்புகிறார்.
ஓமலூர் தொகுதியில்
பெரும்பான்மையாக இருக்கும்
அரசு வன்னியர் சமூகத்தைச்
சேர்ந்தவர் என்பதும் கூடுதல்
பலமாக கருதுகிறார் குபேந்திரன்.

இவர்கள் இருவரைக்
காட்டிலும் ஓமலூர் தொகுதியில்
எப்படியும் சீட் பெற்றே தீர வேண்டும்
என்பதில் மேலும் இருவர் தீவிர
முனைப்பு காட்டுகின்றனர்.
அவர்களில் ஒருவர்,
முன்னாள் எம்எல்ஏ தமிழரசு.
பாமகவில் இருந்து வெளியேறிய
அவர், கடந்த மக்களவை
தேர்தல் நெருக்கத்தில் சேலத்தில்
திமுக தலைவர் ஸ்டாலின்
முன்னிலையில் கட்சியில்
இணைந்தார். அப்போதே,
2021 தேர்தலில் எம்எல்ஏ சீட்
தரப்படும் என வாக்குறுதி
அளித்ததன் பேரில்தான் அவர்
கட்சிக்குள் சேர்க்கப்பட்டார்
என்கிறார்கள். மேலும்,
தொகுதியில் பெரும்பான்மையாக
உள்ள அரசு வன்னியர் பிரிவைச்
சேர்ந்தவர் என்பதும், தொகுதிக்குள்
தனக்குள்ள தனிப்பட்ட செல்வாக்கும்
எப்படியும் தன்னை கரை சேர்த்தி
விடும் என கணக்கு போட்டு
காய் நகர்த்தி வருகிறார்
தமிழரசு.

தீவிரமாக சீட் எதிர்பார்க்கப்படும் மற்றொரு முக்கிய திமுக பிரமுகர், கே.ஆர்.மகேந்திரன். கொரோனா ஊரடங்கின்போது, சொந்த செலவில் 20 லட்சம் ரூபாய்க்கு மேல் வீடு வீடாக அரிசி, மளிகை பொருள்கள், காய்கறி உள்ளிட்ட நிவாரணப் பொருள்களை வழங்கினார். மேலும், கோயில் கட்டுமானப் பணிக்கு நன்கொடை என்று யார் வந்து கேட்டாலும் அதை முன்னின்று அவரே கட்டிக்கொடுத்து விடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார். தொகுதிக்கு உட்பட்ட கணவாய்புதூர், குண்டுக்கல், முத்துனம்பட்டி, நாச்சனம்பட்டி, தாத்தியம்பட்டி, சின்னமாரப்பம்பட்டி, பெரியேரிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் 25க்கும் மேற்பட்ட கோயில் கோபுர பணிகளுக்கு நன்கொடை அளித்திருக்கிறார்.

அதேபோல் கல்விக்காக அவர் வீட்டுக்கதவை எப்போது யார் தட்டினாலும் முழு செலவையும் ஏற்றுக்கொள்கிறார். இந்த உதவிகளை எல்லாம் அவர், தளபதி நற்பணி மன்றம் என ஸ்டாலின் பெயரில் கட்சி பேதமின்றி செய்து வருவதால் தொகுதிக்குள் தனிப்பட்ட செல்வாக்குடன் உள்ளார். பல்பாக்கிதான் சொந்த ஊர். பிஏ., எல்எல்பி பட்டதாரி. மண்ணின் மைந்தர் என்பது அவருடைய கூடுதல் பலம். பந்தல் வன்னியர் பிரிவை சேர்ந்தவர்.

ஓமலூர் சட்டமன்ற தொகுதியை பொறுத்தவரை மற்ற கட்சிகளில் இல்லாத வித்தியாசமான சென்டிமெண்ட் திமுகவில் நிலவுகிறது. ஓமலூர் தொகுதியைச் சேர்ந்தவராக இருந்தாலும் கூட, கடந்த தேர்தல்களில் ஓமலூருக்கு வெளியே இருந்து போட்டியிட்ட அம்மாசி, வழக்கறிஞர் ராஜேந்திரன் ஆகியோர் கடந்த தேர்தல்களில் தோல்வி கண்டுள்ளனர். அதனால் யாருக்கு சீட் கொடுத்தாலும், ஓமலூரை சேர்ந்தராக பார்த்து நிறுத்தினால் வெற்றி பெறலாம் என்ற வித்தியாசமான நம்பிக்கையும் உள்ளூர் திமுகவினரிடம் நிலவுகிறது.

சுரேந்திரன், வெண்ணிலா, விஜயகுமார்
மேட்டூர்:

 

மேட்டூர் தொகுதியில்,
இந்த முறை சீனியர்களில்
ஒருவருக்கு சீட் தரப்படலாம்
என்கிறார்கள். திமுக கிளை
செயலாளர் துபாய் கந்தசாமி (74)
ஒவ்வொரு தேர்தலிலும் சீட் கேட்டு
வந்துள்ளார். இந்தமுறை அவருக்கு
ஜாக்பாட் அடிக்கலாம் என்ற
பேச்சும் உள்ளது. அல்லது,
முன்னாள் எம்எல்ஏவான கோபால் (70)
வேட்பாளராக்கப்படலாம் என்றும்
சொல்லப்படுகிறது. மேற்கு மாவட்ட
அவைத்தலைவராக உள்ள கோபால்,
ரெட்டியார் சமூகத்தைச் சேர்ந்தவர்.
தொகுதியில் சிறுபான்மையினர்தான்
என்றாலும், மக்களுக்கு நன்கு அறிமுகம்
ஆனவராக உள்ளதால், அவருக்கு
கூடுதல் வாய்ப்பு இருப்பதாக
சொல்கிறார்கள் தொகுதி மக்கள்.

 

எடப்பாடி:

 

முதல்வர் எடப்பாடி பழனிசாமியின்
சொந்த தொகுதி என்பதால்
அனைத்துக் கட்சிகளின் ஒட்டுமொத்த
பார்வையும் எடப்பாடி தொகுதி
மீது உள்ளது. வரும் தேர்லில்
எடப்பாடியார், தொகுதி மாறுகிறார்
என அவ்வப்போது தகவல்கள்
கசிந்தாலும் அவர், மீண்டும் சொந்த
தொகுதியிலேயே களம் காண
இருப்பதாகச் சொல்லி, அங்கிருந்தே
பரப்புரையையும் துவங்கி விட்டார்.

வன்னியர்கள் பெரும்பான்மையாக
உள்ள தொகுதி இது. அடுத்து,
கொங்கு வெள்ளாள கவுண்டர்கள்,
நாடார்கள், மீனவர், பட்டியல்
சமூகத்தினர் கணிசமாக உள்ளனர்.
வெற்றியைத் தீர்மானிக்கும் இடத்தில்
வன்னியர்களே இருக்கிறார்கள்.
அவரை சொந்த தொகுதியிலேயே
மண்ணைக் கவ்வச் செய்ய வேண்டும்
என்பதில் திமுகவும் குறியாக இருக்கிறது.

அதற்கு சரியான ஆள் முன்னாள்
எம்எல்ஏவும் வீரபாண்டியாரின்
வாரிசுமான ராஜாவை களத்தில்
இறக்க தீர்மானித்து இருக்கிறது
திமுக தலைமை. அவரோ, எடப்பாடியில்
போட்டியிட விரும்பவில்லை என்று
சொல்லிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து, கொங்கணாபுரத்தைச்
சேர்ந்த காண்டிராக்டரும், திமுக
பொதுக்குழு உறுப்பினருமான
சுப்ரமணியம் (51), எடப்பாடிக்கு
எதிராக நிறுத்தப்படலாம் என்கிறார்கள்.
1996 – 2001ல் மாவட்ட கவுன்சிலராகவும்
இருந்திருக்கிறார். தொழில் ரீதியாக
எடப்பாடியார் மீதே வழக்கு
தொடர்ந்த துணிச்சல்காரர் என்பதால்
அவர்தான் எடப்பாடிக்கு சரியான
சாய்ஸ் ஆக இருப்பார் எனக்கருதுகிறது
அறிவாலயம் தரப்பு.

எனினும், எடப்பாடியில் இரண்டுமுறை போட்டியிட்டு தோல்வி அடைந்த முருகேசன், நகரச் செயலாளர் டி.எஸ்.எம். பாஷா ஆகியோரும் வேட்பாளர் வாய்ப்பு பெறுவோர் பட்டியலில் உள்ளனர்.

சுப்ரமணியம், துபாய் கந்தசாமி, கோபால், ராஜேஷ்
சங்ககிரி:

 

கொங்கு வெள்ளாள கவுண்டர்கள் பெரும்பான்மையாக உள்ள சங்ககிரி தொகுதியில் திமுக, அதிமுக கூட்டணிகள் தரப்பில் அதே சமூகத்தினருக்கே சீட் தரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. திமுக தரப்பில் அக்கட்சியின் ஒன்றிய பொறுப்பாளர் கே.எம்.ராஜேஷ் (41) வேட்பாளராக்கப்படலாம் என வலுவாக பேசப்படுகிறது.

கட்சிக்குள் சேர்ந்த குறுகிய காலத்திலேயே இளைஞரணி, ஒன்றியம் என வளர்ந்திருக்கிறார். பள்ளிக்கூட அதிபர். சொந்தமாக பேருந்துகளும் ஓடுகின்றன. உள்ளூர் செல்வாக்கும், கட்சி மற்றும் சமுதாய பலமும் அவருக்கு சாதகமாக இருக்கின்றன. கிளீன் இமேஜ், தேர்தல் களத்தில் புதியவர் என்பதும் சாதகமாக பார்க்கப்படுகிறது.

ராஜேந்திரன், அசோகன், லோகநாதன்
சேலம் மேற்கு:

 

வன்னியர்கள் பெரும்பான்மையாக உள்ள சேலம் மேற்கு தொகுதியில் சீட் கேட்டு இந்தமுறை திமுகவில் கடும் போட்டி நிலவுகிறது. மறைந்த முன்னாள் அமைச்சர் வீரபாண்டியார் மகன் வீரபாண்டி ராஜா, வீரபாண்டியாரின் மூத்த மகன் மறைந்த செழியனின் மருமகன் மருத்துவர் தருண், மெய்யனூர் பகுதி பொறுப்பாளர் சர்க்கரை ஆ.சரவணன், தலைமை பொதுக்குழு உறுப்பினர் ராஜேந்திரன், கன்னங்குறிச்சி பேரூராட்சி முன்னாள் தலைவர் குபேந்திரன், தீர்மானக்குழு உறுப்பினர் தாமரைக்கண்ணன், அயோத்தியாப்பட்டணம் ஒன்றிய பொறுப்பாளர் விஜயகுமார் என இந்த பட்டியல் நீள்கிறது.

எனினும், சர்க்கரை ஆ.சரவணன் (51) பெயர் பலமாக அடிபடுகிறது. கட்டுமானத் தொழில் செய்து வருகிறார். காலங்காலமாக இத்தொழிலில் இருப்பதால், தொகுதிக்குள் இருக்கும் பெரும்பாலான கட்டடத் தொழிலாளர்களை பெயர் சொல்லி அழைக்கும் அளவுக்கு நெருக்கமாக இருக்கிறார். கடந்த டிசம்பர் மாதம் தயாநிதிமாறன் சேலம் வந்திருந்தபோது, கட்டடத் தொழிலாளர்களுடனான உரையாடல் நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்திருந்தார்.

மத்திய மாவட்ட செயலாளர் ராஜேந்திரனின் நம்பிக்கைக்குரிய தளபதிகளுள் ஒருவராக இருக்கிறார். கொரோனா காலத்தில் 35 லட்சம் ரூபாய்க்கு மேல் சொந்த பணத்தில் இருந்து மக்களுக்கு நிவாரண உதவிகளைச் செய்திருக்கிறார் சர்க்கரை ஆ.சரவணன். இதனால் சரவணனுக்கு சீட் கிடைக்க கூடுதல் வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.

அதேபோல், வீரபாண்டியார் குடும்பத்து மாப்பிள்ளை, முன்னாள் ஐஏஎஸ் காசி விஸ்வநாதனின் மகன், மருத்துவர் என்ற செல்வாக்கால் சீட் கிடைத்தால் எப்படியும் கரையேறி விடலாம் என்ற எதிர்பார்ப்பு மருத்துவர் தருணுக்கும் உள்ளது. கட்சியின் ஐடி பிரிவில் மாநில பொறுப்பில் இருக்கிறார். எல்லா வழிகளிலும் சீட் பெற முயற்சித்து வருவதாக சொல்லப்படுகிறது.

தவிர, தீர்மானக்குழு உறுப்பினர் தாமரைகண்ணனை தேடி கடந்த மக்களவை தேர்தலின்போது எம்பி வேட்பாளராக வாய்ப்பு கிடைத்தது. துரதிர்ஷ்டவசமாக அப்போது அந்த வாய்ப்பை அவர் நழுவவிட்டார். இந்தமுறை அவருக்கு சேலம் மேற்கில் வாய்ப்பு அளிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. கிரஷர் தொழில் செய்து வரும் அவர், பொது வாழ்வில் கிளீன் இமேஜை தக்க வைத்திருக்கிறார்.

 

சேலம் வடக்கு:

 

கடந்த 2016ல் நடந்த தேர்தலில் திமுக வெற்றி பெற்ற ஒரே தொகுதி சேலம் வடக்கு மட்டுமே. இதன் சிட்டிங் எம்எல்ஏவும், மத்திய மாவட்ட செயலாளருமான வழக்கறிஞர் ராஜேந்திரனுக்குதான் இந்த தொகுதியில் மீண்டும் சீட் என்பது எப்போதோ முடிவாகி விட்டது.

கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோதே, மாணவர் பேரவை தேர்தலில் திமுகவுக்கு வெற்றியை தேடிக்கொடுத்தவர் என்பதால், அப்போதே கட்சி முன்னோடிகளின் கவனம் பெற்றவர். தொடர்ந்து எவ்வித சர்ச்சைகளிலும் சிக்காமல் ‘மிஸ்டர் கிளீன்’ ஆக உள்ள ராஜேந்திரன், மீண்டும் இத்தொகுதியை வசப்படுத்துவார் என்ற நம்பிக்கை திமுகவை கடந்தும் உள்ளது.

‘சர்க்கரை’ சரவணன், தாமரைகண்ணன்
சேலம் தெற்கு:

 

அதிமுகவின் கோட்டையாக கருதப்படும் சேலம் தெற்கு தொகுதியில் முதலியார், செட்டியார், பிள்ளை, வன்னியர், பட்டியல் சமூகத்தினர் என பலதரப்பட்ட சமூகத்தினரும் கணிசமாக உள்ளனர்.

திமுக தரப்பில் முதலியார் அல்லது பிள்ளை சமூகத்தில் இருந்து யாராவது ஒருவர் நிறுத்தப்படலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. பிள்ளை சமூகத்திற்கு முக்கியத்துவம் தரப்படும்பட்சத்தில், தாதகாப்பட்டியைச் சேர்ந்த ‘அசோக் டெக்ஸ்’ அசோகன் (51), வேட்பாளராக்கப்படலாம் என்கிறார்கள்.

சுற்றுச்சூழல் ஆர்வலரான அசோகன், அரசியலைக் கடந்து இதுவரை 1 லட்சம் மரக்கன்றுகளை இலவசமாக வழங்கியிருக்கிறார். மாநகராட்சி கவுன்சிலராக இருந்தபோது வார்டு முழுவதும் மரக்கன்றுகளை நட்டு, பசுமையாக்கி இருக்கிறார். கல்வி உதவி கேட்டு யார் சென்றாலும், மறுக்காமல் உதவி செய்யும் அவர், கட்சியில் நெசவாளர் அணி மாவட்ட துணை அமைப்பாளராக உள்ளார். மூன்று தலைமுறையாக இவருடைய குடும்பத்தினர் டெக்ஸ்டைல் தொழில் செய்து வருகின்றனர். 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு நேரடியாக வேலைவாய்ப்பு அளித்து வருகிறார். சர்ச்சைகளில் சிக்காத ஜென்டில்மேன் என்பது அவருடைய அடையாளமாக சொல்லப்படுவதால், அவருக்கு சீட் கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளதாக பார்க்கப்படுகிறது.

ஒருவேளை, முதலியார் சமூகத்தினருக்கு முக்கியத்துவம் அளிப்பதாக இருந்தால் நெசவாளர் அணி மாவட்ட அமைப்பாளரான லோகு என்கிற லோகநாதனுக்கு சீட் கிடைக்கலாம் என்கிறார்கள். பொறியியல் கல்லூரி அதிபர். ஃபைனான்ஸ் தொழிலும் செய்து வருகிறார்.

 

வீரபாண்டி:

 

சேலம் மாவட்டத்தில்
எடப்பாடியைக் காட்டிலும்
அதிக சென்சிடிவ் தொகுதி என்றால்
அது வீரபாண்டிதான். மறைந்த
வீரபாண்டியாரின் குடும்பத்தில்
இருந்தே இந்தமுறை நான்கு பேர்
இந்த தொகுதியில் சீட் கேட்டு முட்டி
மோதுகிறார்கள். முன்னாள் எம்எல்ஏ
என்ற தகுதியுடன் வீரபாண்டி ராஜா,
வீரபாண்டியாரின் இரண்டாவது
மனைவியின் மகன் மருத்துவர் பிரபு (34),
வீரபாண்டியாரின் தம்பி மகன்
பாரப்பட்டி சுரேஷ்குமார், மறைந்த
செழியன் மருமகன் மருத்துவர் தருண்
ஆகியோர் சீட் கேட்கின்றனர்.
தவிர, வீரபாண்டியாரிடம் அப்போது
பொலிடிகல் பி.ஏ., ஆக இருந்த
ஆத்துக்காடு சேகர், தனது மனைவி
வெண்ணிலா, அயோத்தியாப்பட்டணம்
ஒன்றிய பொறுப்பாளர் விஜயகுமார்
ஆகியோரும் சீட் கேட்கின்றனர்.

கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு
வீரபாண்டி பிரபுவுக்கு திடீரென்று
கட்சியின் கிழக்கு மாவட்ட இளைஞரணி
பொறுப்பாளராக நியமித்திருக்கிறது
திமுக தலைமை. கட்சிக்குள் கிடைத்துள்ள
இந்த திடீர் அங்கீகாரம்,
அவருக்குதான் வீரபாண்டி தொகுதியில்
சீட் என்பதை சொல்லாமல் சொல்வதாக
கூறுகிறார்கள் உடன்பிறப்புகள்.
அதற்கேற்ப அவரும் தொகுதி
முழுக்க சுழன்றடித்து பரப்புரையில்
ஈடுபட்டு வருகிறார்.

வீரபாண்டி பிரபுவுக்கு சீட் கிடைக்காத பட்சத்தில், மல்லூர் பேரூர் நிர்வாகி சுரேந்திரன் (54) பெயரும் பலமாக அடிபடுகிறது. கொங்கு வெள்ளாள கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்தவர். வீரபாண்டி தொகுதியில் வன்னியருக்கு அடுத்து பெரும்பான்மையாக உள்ள சமூகம். கடந்த 2016 தேர்தலின்போதே இவருக்கு சீட் எதிர்பார்க்கப்பட்டது. கடைசி நேரத்தில் வாய்ப்பு நழுவியதாகச் சொல்கிறார்கள். கிளீன் இமேஜ் கொண்ட சுரேந்திரன், வீரபாண்டியில் வேட்பாளர் ஆனாலும் ஆச்சரியமில்லை என்கிறார்கள்.

அதேநேரம், வீரபாண்டி ராஜா தனக்கு மீண்டும் ஒருமுறை வீரபாண்டியில் வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதில் கட்சித் தலைமையை பல சோர்ஸ்கள் மூலம் அணுகி வருகிறார். அவரும், வேட்பாளர் ரேஸில் இருக்கிறார்.

இதெல்லாம் ஒருபுறம் இருக்க, சேலம் மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளிலும் இந்தமுறை திமுகவே நேரடியாக களமிறங்கும் என்ற பேச்சும் கட்சிக்குள் பலமாக உலா வருகிறது. திமுக பெரிய மனது வைத்தால், காங்கிரஸ் கட்சிக்கு ஆத்தூர் அல்லது சேலம் தெற்கு ஆகியவற்றில் ஏதாவது ஒரு தொகுதி ஒதுக்கப்படலாம் என்கிறார்கள்.

விருப்ப மனு தாக்கல் வரை
நெருங்கிவிட்ட திமுகவின்
தேர்தல் பணிகள், இன்னும்
15 நாள்களில் அக்கட்சியின்
வேட்பாளர்கள் யார் யார் என்பது
இறுதி செய்யப்பட்டு விடும்.
அதுவரை யூகத்தின் பேரில்
பலரும் நம்பிக்கையுடன் அவரவர்
எதிர்பார்க்கும் தொகுதிகளில்
கட்சிப் பணிகளை சுழன்றடித்து
வேலை செய்து வருகின்றனர்.

 

– பேனாக்காரன்