Tuesday, March 2மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

காஸ் சிலிண்டர் விலை ஒரே மாதத்தில் இரண்டாம் முறையாக உயர்வு; சேலத்தில் 803; சென்னையில் 785 ஆக நிர்ணயம்!

வீடுகளில் பயன்படுத்தப்படும்
மானியமில்லா எல்பிஜி காஸ்
சிலிண்டர் விலை, நடப்பு
பிப்ரவரி மாதத்தில் இரண்டாவது
முறையாக உயர்த்தப்பட்டு உள்ளது.
தற்போது மேலும் 50 ரூபாய்
அதிகரிக்கப்பட்டு உள்ளது.

சர்வதேச சந்தையில்
நிலவும் கச்சா எண்ணெய்யின்
விலை நிலவரம், டாலருக்கு
நிகரான இந்திய ரூபாயின்
மதிப்பு, உள்நாட்டு சந்தையில்
தேவை அளவு, உற்பத்தித்திறன்
உள்ளிட்ட அம்சங்களின்
அடிப்படையில் காஸ் சிலிண்டர்
விலை மாதத்திற்கு ஒருமுறை
நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது.
எண்ணெய் நிறுனங்களின்
கூட்டமைப்பு கூடி, விலை
நிர்ணயம் செய்கின்றன.

 

நடப்பு பிப்ரவரி முதல் தேதியில்
புதிய விலை அறிவிக்கப்படும்
என வழக்கம்போல் எதிர்பார்ப்பு
நிலவியது. ஆனால், அன்றைய நாளில்,
காஸ் சிலிண்டர் விலையில்
மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை.
நடைமுறைக்கு மாறாக,
பிப். 4ம் தேதியன்று
எல்பிஜி சிலிண்டர் விலை
25 ரூபாய் உயர்த்தி
அறிவிக்கப்பட்டது.

 

இதனால், சேலத்தில்
ஏற்கனவே 728 ரூபாய்க்கு
விற்கப்பட்டு வந்த காஸ் சிலிண்டர்,
753 ரூபாயாக அதிகரித்தது.

 

இந்நிலையில்,
பிப். 14ம் தேதி நள்ளிரவில்
திடீரென்று மானியமில்லா
காஸ் சிலிண்டர் விலை
50 ரூபாய் உயர்த்தி,
எண்ணெய் நிறுவனங்களின்
கூட்டமைப்பு அறிவித்தது.
புதிய விலை பிப். 15ம் தேதி
பகல் 12 மணி முதல் அமலுக்கு
வந்துள்ளது.

 

இதன்படி,
சேலத்தில் வீடுகளில்
பயன்படுத்தப்படும் 14.2 கிலோ
எடை கொண்ட எல்பிஜி
காஸ் சிலிண்டர் விலை
753 ரூபாயில் இருந்து
ஒரேயடியாக 803 ரூபாயாக
உயர்ந்துள்ளது.

 

சென்னையில்,
இவ்வகை சிலிண்டர் விலை
785 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டு
உள்ளது. மும்பை மற்றும்
டெல்லியில் 769 ரூபாயாகவும்,
கொல்கத்தாவில் 795.50 ரூபாயாகவும்
நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
நடப்பு பிப்ரவரியில் இதுவரை
எல்பிஜி சிலிண்டர் விலை
75 ரூபாய் உயர்ந்திருக்கிறது.
ஏற்கனவே கடந்த ஆண்டு
டிசம்பரில் மாதத்தின் துவக்கத்தில்
50 ரூபாயும், 15ம் தேதி 50 ரூபாயும்
என ஒரே மாதத்தில் இரண்டு
முறை உயர்த்தப்பட்டது
குறிப்பிடத்தக்கது.

 

இந்த கடும் விலையேற்றம்
நடுத்தர வர்க்கத்தினரிடையே
பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
அதேநேரம், வணிக நோக்கிலான
19 கிலோ எடை கொண்ட
காஸ் சிலிண்டர் விலையில்
பெரிதாக மாற்றம் ஏதும்
செய்யப்படவில்லை.

 

வரும் காலங்களில்,
வீட்டு உபயோக காஸ் சிலிண்டர்
விலை மேலும் உயரக்கூடும்
என இந்தியன் ஆயில் அதிகாரிகள்
தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

 

– பேனாக்காரன்