Thursday, April 25மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

இந்தியாவின் கோடீஸ்வர முதல்வர்கள் யார் யார்?; ஏழை முதல்வர் மாணிக் சர்க்கார்!

தேர்தல் சீர்திருத்தத்திற்காக போராடி வரும் ஏடிஆர் அமைப்பும், தேசிய தேர்தல் கண்காணிப்பகம் அமைப்பும் இணைந்து அண்மையில் ஓர் ஆய்வை மேற்கொண்டன. இந்திய ஒன்றிய அரசில் உள்ள மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் என மொத்தமுள்ள 31 முதலமைச்சர்களைப் பற்றிய ஆய்வு அது.

அவர்களின் சொத்துமதிப்பு, அவர்களுக்கு எதிரான வழக்குகள், கல்வித்தகுதி போன்ற அம்சங்களை அவ்விரு அமைப்புகளும் ஆய்வு செய்தன.

இன்றைய நிலையில் 25 முதலமைச்சர்கள் கோடீஸ்வரர்களாக உள்ளனர் என்கிறது அந்த ஆய்வு. அவர்களில் இருவர், 100 கோடி ரூபாய்க்கும் அதிகமாக சொத்துக்களை வைத்திருப்பவர்கள்.

ஒருவர், ஆந்திரா மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு. அவருடைய சொத்து மதிப்பு 177 கோடி ரூபாய். மற்றொருவர், அருணாச்சல பிரதேச மாநில முதல்வர் பீமா காண்டு. அவருடைய சொத்து மதிப்பு 129 கோடி ரூபாய்.

மூன்றாம் இடத்தில் இருக்கும் பஞ்சாப் மாநில முதல்வர் அம்ரீத்தர் சிங், 48 கோடி ரூபாய் சொத்துக்களை வைத்துள்ளார். இதெல்லாமே தேர்தலில் போட்டியிடும்போது அவர்கள் சமர்ப்பித்த பிரமாண பத்திரங்களின் அடிப்படையில் சொல்லப்படுவது.

நம் நாட்டு அரசியல்வாதிகள் பினாமிகள் மூலமாக குவித்து வைத்திருக்கும் சொத்துக்கள் எப்போதும் வெளியே தெரிவதில்லை.

சொத்துக் குவிப்பில் பெரிய அளவில் ஆசைப்படாத முதல்வர்களும் இருக்கவே செய்கின்றனர். அதுதான் இந்த நூற்றாண்டின் ஆகப்பெரிய அதிசயம். இப்படிச் சொன்னதும் யாரோ ஒரு கம்யூனிஸ்ட்காரர் ஆகத்தான் இருக்க முடியும் என்று நீங்கள் யூகித்து இருந்தால் உங்களுக்கு நீங்களே ஒரு செவ்வணக்கம் சொல்லிக்கொள்ளலாம்.

உங்கள் யூகம் ரொம்ப சரி.

திரிபுரா மாநில முதல்வர் மாணிக் சர்க்கார்தான் இந்தப் பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கிறார். உயர்வு நவிற்சியாக சொல்வதெனில், பாவம்…. பிழைக்கத் தெரியாத மனிதர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த அவர்தான் இன்றைய நிலையில் இந்தியாவின் பரம ஏழையான முதல்வர். அவருடைய சொத்து மதிப்பு வெறும் 27 லட்சம் ரூபாய்தான்.

முதல்வருக்குரிய சம்பளமாக கிடைக்கும் பணத்தையும் அவர் கட்சி நிதியாக கொடுத்துவிட்டு, கட்சி கொடுக்கக்கூடிய சொற்ப ஊதியத்தில் குடும்பம் நடத்துகிறார். இன்று வரை அவருக்கென சொந்தமாக வீடோ, வாகனமோ கிடையாது. 1998ம் ஆண்டில் இருந்து திரிபுராவில் தொடர்ந்து நான்கு முறை முதலமைச்சர் ஆகியிருக்கிறார்.

காமராஜரையே கவிழ்த்த தமிழக மக்களைப் போன்றவர்கள் திரிபுராவில் இல்லாதது இப்போதைக்கு ஆறுதலான செய்தியாகக் கொள்ளலாம்.

மாணிக் சர்க்காருக்கு அடுத்த இடத்தில் இருப்பவர், மம்தா பானர்ஜி. சாதாரண பருத்தி சேலையும், ஹவாய் செருப்பும்தான் அணிகிறார். அவருடைய தோற்றமே சொல்லிவிடும், டாம்பீகம் இல்லாத எளிய பெண்மணி என்று. அவருடைய சொத்து மதிப்பு 30 லட்சம் ரூபாய் என்கிறது ஆய்வு.

இவருக்கு அடுத்த நிலையில் உள்ள ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் மெஹபூபா முஃப்தியிடம் 56 லட்சம் ரூபாய் சொத்துகள் இருக்கிறதாம். இந்த மூவரும்தான் இன்றைய நிலையில் இந்தியாவில் வறுமையில் உள்ள முதல்வர்கள்.

31 முதல்வர்களில் 11 பேர் மீது அதாவது 35 சதவீதம் பேர் மீது கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. 26 சதவீதம் பேர் மீது கொடுங்குற்ற வழக்குகளும்கூட நிலுவையில் இருக்கின்றன. பெரும்பாலும் கொலை, கொலை முயற்சி, மோசடி, வருமானத்திற்கு அதிகமான சொத்துக்குவிப்பு, கொலை மிரட்டல் போன்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.

அதிகமான கிரிமினல் வழக்குகளை தக்க வைத்திருக்கும் பெருமை பாஜகவை சேர்ந்த மஹாராஷ்டிரா மாநில முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிசுக்கு உண்டு. அவர் மீது 22 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, விசாரணையின்றி கிடப்பில் உள்ளன.

அவருக்குப் பிறகு, சிபிஎம் கட்சியைச் சேர்ந்த கேரளா மாநில முதல்வர் பினராயி விஜயன் மீது 11 வழக்குகளும், ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் மீது 10 வழக்குகளும் உள்ளன. இவர்கள் மீது பதிவு செய்யப்பட்டு உள்ள வழக்குகளில் பெரும்பாலும் சட்ட விரோதமாக கூடுதல், அவமதிப்பு, மான நஷ்ட வழக்குகளே அதிகம். உத்தரபிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் (பாஜக) மீதும் 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கிரிமினல் வழக்கு, சொத்து சேர்ப்பு போன்ற புகார்கள் ஒருபுறம் இருந்தாலும், இப்போதெல்லாம் படித்தவர்கள் முதல்வர் இருக்கையில் அமர்வது என்பது ஓர் ஆறுதலான விஷயம். 31 முதலமை ச்சர்களில் 10 சதவீதம் பேர் மட்டும்தான் பிளஸ்&2 கல்வித்தகுதி உடையவர்கள்.

இப்போதுள்ளவர்களில், 39 சதவீதம் பேர் பட்டதாரிகள்; 32 சதவீதம் பேர் பி.இ., எம்பிபிஎஸ் போன்ற தொழில்முறை படிப்பு படித்தவர்கள். 16 சதவீதம் பேர் முதுநிலை படிப்பை முடித்தவர்கள். 3 சதவீதம் பேர் பிஹெச்.டி.யும் முடித்திருக்கிறார்கள் என்கிறது ஏடிஆர் ஆய்வு.

வரும் காலங்களில் ஐஐடி, ஐஐஎம் போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் படித்து முடித்த நிபுணர்கள்தான் முதல்வர் அரியணையை அலங்கரித்தாலும் ஆச்சர்யமில்லை. யார் வேண்டுமானாலும் வரட்டும்; ஊழல் இல்லாத ஆட்சியை வழங்கினால் சரிதானே!