Thursday, April 18மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

5வது ஒருநாள்: ரோஹித் ஷர்மா அபார சதம்; இந்தியா 274 ரன்கள் குவிப்பு

போர்ட் எலிசபெத்தில் நடந்து வரும் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான ஐந்தாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா, 7 விக்கெட் இழப்பிற்கு 274 ரன்கள் எடுத்துள்ளது. அபாரமாக ஆடிய ரோஹித் ஷர்மா 115 ரன்களை குவித்தார்.

இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகள் இடையேயான ஐந்தாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி, போர்ட் எலிசபெத்தில் இன்று (பிப்ரவரி 13, 2018) நடந்து வருகிறது.

இதில், டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா கேப்டன் மார்க்ராம் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

ஆறு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா தொடர்ச்சியாக முதல் மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. நான்காவது போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி வென்றது. தொடரில் இந்தியா 3-1 கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால், தென்னாப்பிரிக்கா மண்ணில் ஒருநாள் தொடரை கைப்பற்றிய முதல் ஆசிய அணி என்ற வரலாறு படைக்க வாய்ப்பு இருக்கிறது. அதே முனைப்புடன் இந்திய வீரர்கள் களமிறங்கி விளையாடி வருகின்றனர்.

இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. தென்னாப்பிரிக்கா தரப்பில் ஒரேயொரு மாற்றம் மட்டும் செய்யப்பட்டுள்ளது. ஆல் ரவுண்டர் க்ரிஸ் மோரிசுக்கு பதிலாக ஷம்சி சேர்க்கப்பட்டுள்ளார்.

அபார தொடக்கம்:

இந்திய தொடக்க ஆட்டக்காரர்களான ஷிகர் தவான், ரோஹித் ஷர்மா ஆகியோர் அதிரடிகளை நிகழ்த்தாமல் நிதானமாக ரன் சேர்க்க தொடங்கினர். முதல் ஓவரை வீசிய மோர்ன் மோர்கல், அந்த ஓவரில் ரன்களை விட்டுக்கொடுக்காமல் மெய்டனாக வீசினார்.

இந்த தொடரில் தொடர்ந்து சொதப்பி வரும் ரோஹித் ஷர்மா, பத்து பந்துகளை சந்தித்து 1 ரன் எடுத்தார். 5வது ஓவரில் மோர்ன் மோர்கல் பந்து வீச்சில் ஒரு பவுண்டரி அடித்த பிறகே அவர் சீரான வேகத்தில் ரன் குவிக்கத் தொடங்கினார். 8வது ஓவரில் இந்த இணை பிரிந்தது. ரபாடா பந்து வீச்சில் ஷிகர் தவான் ஆட்டமிழந்தார். அவர், 23 பந்துகளில் 8 பவுண்டரிகள் உள்பட 34 ரன்கள் எடுத்தார்.

ரோஹித் ஷர்மாவும், ஷிகர் தவானும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 48 ரன்களை சேர்த்தனர். தென்னாப்பிரிக்கா மண்ணில் கடந்த 2003 உலகக்கோப்பைக்குப் பிறகு அந்த நாட்டுடன் விளையாடிய 19 ஒருநாள் ஆட்டங்களில் இதுதான் முதல் விக்கெட் பார்ட்னர்ஷிப்புக்கு எ டுக்கப்பட்ட இரண்டாவது அதிகபட்ச ரன்களாகும். அப்போது, டெண்டுல்கர் & ஷேவாக் இணை 74 ரன்களை திரட்டி இருந்தது.

இதையடுத்து, கேப்டன் விராட் கோலி களம் இறங்கினார். நிதானமாக விளையாடிய அவர் 36 ரன்கள் எடுத்திருந்தபோது எதிர்பாராதவிதமாக ‘ரன் அவுட்’ ஆனார். அப்போது 26 ஓவர்களில் இந்தியா 2 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்திருந்தது.

அதன்பிறகு அஜின்க்யா ரஹானே களம் புகுந்தார். அவரும் 8 ரன்களில் ரன் அவுட் ஆகி பெவிலியன் திரும்பினார். அதையடுத்து ஸ்ரேயாஸ் அய்யர், ரோஹித் ஷர்மாவுடன் இணைந்தார்.

ரோஹித் ஷர்மா சதம்:

மற்றொரு முனையில் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோஹித் ஷர்மா, சதம் அடித்து அசத்தினார். இந்த சதத்தின் மூலமாக அவர் மீண்டும் ஃபார்முக்கு திரும்பினார்.

முன்னதாக அவர் 97 ரன்கள் எடுத்திருந்தபோது ரபாடா வீசிய பந்தில் (33.5வது ஓவர்) அவர் ஒரு ஹூக் ஷாட் அடித்தார். அந்த பந்து எல்லைக்கோடு அருகே நின்றிருந்த ஷம்சி வசம் சென்றது. ஆனாலும், பந்து அவர் கையில் இருந்து நழுவியதால் ரோஹித் ஷர்மா கண்டம் தப்பினார். பின்னர் அவர் சதம் அடித்தார். ஒரு நாள் போட்டியில் அவர் அடித்த 17வது சதம் இதுவாகும்.

லுங்கிசனி நிகிடி அசத்தல்:

பிறகு, ரோஹித் ஷர்மா 103 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ‘ரன் அவுட்’ கண்டத்தில் இருந்து தப்பினார். ஆனாலும், அவருக்கு அதிர்ஷ்டம் கைகொடுக்கவில்லை. 43வது ஓவரை வீசிய லுங்கிசனி நிகிடி அவருக்கு எமனாக மாறினார். அவருடைய பந்து வீச்சில் பேட்டின் விளிம்பில் பட்ட பந்து, விக்கெட் கீப்பர் கிளாசன் வசம் தஞ்சம் புகுந்தது.

ரோஹித் ஷர்மா, 126 பந்துகளில் 11 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் உள்பட 115 ரன்கள் எடுத்தார். அவருக்கு அடுத்து களம் புகுந்த ஹர்டிக் பாண்ட்யாவின் விக்கெட்டையும் லுங்கிசனி நிகிடி வீழ்த்தினார். அடுத்தடுத்த இரு பந்துகளில் இரண்டு விக்கெட்டுகள் வீழ்ந்ததை அடுத்து, இ ந்திய அணி 300 ரன்கள் இலக்கை எட்டுவதே சந்தேகம் என்ற நிலை ஏற்பட்டது.

நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்ரேயாஸ் அய்யரும் 30 ரன்களில் வெளியேறினார். அவருடைய விக்கெட்டையும் லுங்கிசனி நிகிடி கபளீகரம் செய்தார். அப்போது இந்தியா 45 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 240 ரன்கள் எடுத்திருந்தது.

274 ரன் குவிப்பு:

மூன்று ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த மஹேந்திரசிங் டோனி 13 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். கடைசி பத்து ஓவர்களில் இந்தியா 4 விக்கெட்டுகளை இழந்து 55 ரன்களை மட்டுமே சேர்த்தது. அபார பந்துவீச்சு மற்றும் ஃபீல்டிங் மூலம் தென்னாப்பிரிக்கா அணி கடைசிக்கட்ட ஓவர்களில் கணிசமான ரன்களை கட்டுப்படுத்தினர். 50 ஓவர்கள் முடிவில் இந்தியா 7 விக்கெட் இழப்பிற்கு 274 ரன்களை குவித்தது.

தென்னாப்பிரிக்கா அணி தரப்பில் லுங்கிசனி நிகிடி அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளையும், ரபடா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். 275 ரன்கள் இலக்குடன் தென்னாப்பிரிக்கா அணி விளையாடி வருகிறது.

அதிகபட்ச துரத்தல்:

போர்ட் எலிசபெத் மைதானத்தில் 327 ரன்களை துரத்திப்பிடித்து ஆஸ்திரேலியா அணி, தென்னாப்பிரிக்காவை (2002) வீழ்த்தி இருக்கிறது. இன்றைய போட்டியில் இந்தியா வெல்லும் பட்சத்தின் புதிய சரித்திரம் படைக்கும்.