Friday, April 19மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

அரசுப்பள்ளிகள் மேம்பட என்ன செய்ய வேண்டும்? – டான்சீன் யோசனை

தமிழ்நாடு கத்தோலிக்க கல்வி நிலையங்கள் சங்கம் (டான்சீன் – TANCEAN-Tamilnadu Catholic Educational Association ), தமிழ்வழிப் பள்ளிகளின் மேம்பாட்டிற்காக சில யோசனைகளை தமிழ்நாடு, புதுச்சேரி மாநில அரசுகளுக்கும், கல்வித்துறை அதிகாரிகளுக்கும் தெரிவித்துள்ளது.

இந்த அமைப்பின் கீழ், தமிழகம், புதுவையில் 2630 கல்வி நிலையங்கள் இயங்கி வருகின்றன. டான்சீன் கல்வியாளர்கள் கூட்டம் கடந்த மே, ஜூன், ஜூலை மாதங்களில் தமிழகம், புதுவையில் நடந்தது. தமிழ்மொழி, தமிழர் பண்பாடு, கலாச்சாரம் காக்கப்பட வேண்டும் என்றும் இக்கூட்டத்தில் தீர்மானித்துள்ளனர். அந்த கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளில் முக்கிய அம்சங்கள்:

தமிழ்வழிப் பள்ளிகளின் இன்றைய நிலை:

பொதுமக்களிடையே ஆங்கிலவழிக் கல்வி மீதான மோகம் அதிகரித்துள்ளது. ஆங்கிலத்தில் பேசுவது, படிப்பது பெருமை என மக்கள் எண்ணுகிறார்கள். மிகவும் ஏழை குழந்தைகளின் தேர்வாக மட்டுமே தமிழ்வழிப் பள்ளிகள் உள்ளன. தமிழ்வழிக் கல்வியில் பொது அறிவு, உலகளாவிய அறிவைப் பெறமுடியாது என்ற எண்ணமும் மக்களிடம் உள்ளது.

தமிழ்வழிப் பள்ளிகளில் ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு உணர்வு குறைவாக இருத்தலும், திறமையான ஆசிரியர்கள் இல்லாததும் அதன் பின்னடைவுக்கு முக்கிய காரணம். சிறு குடும்ப முறையால் இயல்பாகவே அரசுப்பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை குறைந்து வருகிறது. நகரத்திற்கு குடிபெயர்வது அதிகரித்துள்ளதும் மாணவர் சேர்க்கை குறைய காரணமாகிறது. மாணவர்களின் பல திறன்களை. வளர்த்துக் கொள்ள, தமிழ்வழிப் பள்ளிகளில் போதிய வசதிகள் இல்லை. ஊக்கப்படுத்துதல் இல்லை. மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் பெற்றோரின் பங்களிப்பும் குறைவு.

மாவட்ட, மாநில, தேசிய திறனாய்வு போட்டித் தேர்வுகள் குரூப் 1, 2, 3, 4, நீட் தேர்வு, டான்செட், காட், மேட் போன்ற தேர்வுகள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டும் நடைபெறுவதால், தமிழ்வழி மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். தமிழகத்திலுள்ள அனைத்து பல்கலைக் கழகங்களிலும், கல்லூரிகளிலும் ஆங்கிலமே பயிற்று மொழியாக உள்ளது.

பள்ளி வளாகம், தலைமை ஆசிரியர் / முதல்வர் அறைகள், மாணவர் வகுப்பறைகள் தூய்மையாகவும், உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாததும் பெரும் பின்னடைவாகும். நவீன கற்பிக்கும் சாதனங்கள், விளையாட்டு சாதனங்கள் இல்லாததாலும் தமிழ்வழிப் பள்ளிகள் சோபிக்க முடியாமல் போகின்றன. தமிழ்வழிப் பள்ளிகளில் பாதுகாப்பு குறைவாக இருத்தலும் முக்கிய காரணம். இவை மட்டுமின்றி கட்டட வசதி, கழிப்பறை வசதிகள் இல்லாத அரசுப்பள்ளிகள் இன்னும் இருக்கின்றன. சி.பி.எஸ்.இ-க்கு இணையான பாடத்திட்டங்கள் இல்லாததும், மேல்படிப்பிற்கு தேவையான புத்தகங்கள் தமிழில் இல்லாததும் தமிழ்வழிப் பள்ளிகள் புறக்கணிக்கப்பட்டு வருகின்றன.

தமிழ்வழிப் பள்ளிகளைப் பாதுகாக்கவும், வளர்க்கவும் தேவையான வழிமுறைகள்:

தமிழர்களின் பாரம்பரியம், பண்பாடு, மொழி அழியாமல் காத்திட, தமிழ் இலக்கிய, இலக்கணங்களை முழுமையாக அறிந்திட தமிழ்வழிப் பள்ளிகள் தேவை. வளர்ந்த நாடுகளில் தாய்மொழிக் கல்வியே பின்பற்றப்படுகிறது. தேசப்பற்று வளர தாய்மொழிலேயே கல்வி வேண்டும். தாய்மொழியில் கல்வி பயின்றவர்கள் கருத்தாளமிக்கவர்களாக, சிந்தனை உடையவர்களாக, புதியன கண்டுபிடிப்பவர்களாக திகழ முடியும்.

ஆங்கிலவழிப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு இணையாக, தமிழ்வழிப் பள்ளி ஆசிரியர்களும் திறமையாக பணியாற்ற வேண்டும். ஆங்கிலவழிப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு இணையாக ஆங்கிலத்தில் புலமை பெற கற்பித்தல் வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக் கழகங்கள், கல்லூரிகளில் தமிழிலேயே கற்பித்தல் வேண்டும். தமிழ்வழிப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் செய்த சாதனைகளை மக்களுக்குத் தெரியப்படுத்துதல் வேண்டும். சுத்தமான கழிப்பறை, காற்றோட்டமான வகுப்பறை, விளையாட்டு மைதானம் போன்றவற்றை அமைத்தல் வேண்டும்.

தொடக்கப் பள்ளிகளில் இருட்டடைப்பு வகுப்பறைகளை வெளிச்சமானதாகவும், கரும்பலகை அளவை குறைக்கவும், அனைத்து மாணவர்களுக்கும் நாற்காலிகள், மேசைகள் வழங்கவும் வேண்டும். ஆங்கிலப் பள்ளிகளுக்கு இணையான உள் கட்டமைப்பு வசதிகளும், அனைத்து தமிழ்வழிப் பள்ளிகளிலும் மழலையர் தமிழ்வழிப் பள்ளிகளும் தொடங்க வேண்டும். ஆசிரியர்களுக்கு ஆங்கில மொழியிலும் நல்ல பயிற்சி கொடுத்தல் வேண்டும்.

எல்லாப் பள்ளிகளிலும் திறன்மிகு மொழி ஆசிரியர்கள் (தமிழ், ஆங்கிலம்) கட்டாயம் நியமிக்கப்பட வேண்டும். புதிதாக ஆங்கில வழி பள்ளிகளை ஆரம்பிக்காதிருக்க வேண்டும். உடற்பயிற்சி, விளையாட்டு, நன்னெறி மற்றும் கூடுதல் செயல்பாடுகளில், திறன் வளர்த்தலில் ஆசிரியர்கள் மிகுந்த ஆர்வத்துடன் செயல்பட வேண்டும். கற்பித்தல் முறை இனிமையாக, எளிமையாக, புதுமையாக இருத்தல் வேண்டும். கற்பித்தல் பணியில் நவீன ஊடகங்களைப் பயன்படுத்த வேண்டும்.

வேலை வாய்ப்புக்கான வழிகாட்டுதல், தமிழ்வழிப் பள்ளிகளில் வழங்கப்பட வேண்டும். பொது அறிவு பெறுவதற்கான பயிற்சி அளித்தல் வேண்டும். தமிழ்வழிப் பள்ளிகளில் படித்து உயர்ந்த நிலையில் உள்ள சான்றோர்கள் பற்றிய தகவல்களை மாணவர்களின் பார்வைக்கு காட்சியாக அமைத்தல் வேண்டும். பெற்றோர்களுக்கும் மாணவர்களுக்கும் தமிழ்வழிக் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் கருத்தரங்குகள் ஏற்பாடு செய்தல் வேண்டும்.

செ.அருளப்பன்

அரசின் கவனத்திற்கு:

தமிழ்மொழி, தமிழர் பண்பாடு, கலாச்சாரம் மற்றும் தமிழ் மாணாக்கர்கள் வாழ்வு மேம்பட, தொடக்கப் பள்ளியிலிருந்து முனைவர் ஆய்வு படிப்பு வரைக்கும் பொறியியல், மருத்துவம், கணிப்பொறி, அறிவியல் போன்ற அனைத்துத் துறைகளிலும் தமிழில் புத்தகங்கள் எழுதப்படல் வேண்டும். கற்பிக்கப்படல் வேண்டும்.

மாணவர் தேர்வுபோன்று, ஆசிரியர்களுக்கும் கற்பித்தல் கணிப்பு வருடத்திற்கு மூன்று முறை செய்தால், ஆசிரியர்களின் கற்பித்தல் திறன் மேம்படும். வருடத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை ஆசிரியர்களுக்கு திறனாய்வு கருத்தரங்குகள் நடத்தப்படவேண்டும். 12-ஆம் வகுப்புவரை உள்ள அனைத்து தமிழ்வழி பள்ளிகளுக்கும் அரசு மானியம் வழங்கிட வேண்டும். நுழைவுத் தேர்வுகள், தமிழிலேயே நடைபெற வேண்டும். தரம் வாய்ந்த இலவசங்களை வழங்க வேண்டும்.

ஆங்கிலப் பள்ளிகளுக்கு இணையான உள் கட்டமைப்பு வசதிகள் அனைத்து தமிழ்வழிப் பள்ளிகளிலும் அமைக்கப்படல் வேண்டும். மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப அரசு ஆசிரியர் பணியிடங்களை உடனுக்குடன் வழங்க வேண்டும். மாணவர்கள் கல்வி ஊக்கத்தொகையை உயர்த்த வேண்டும்.

பள்ளிகளுக்கு தற்காலிக அங்கீகாரத்திற்கு பதிலாக பள்ளிகளின் கட்டிட உறுதிச்சான்றை, அடிப்படையாகக் கொண்டு 5 ஆண்டுகள் அல்லது 10 ஆண்டுகள் அல்லது நிரந்தர அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும். தமிழ்வழிக் கல்வியில் பயின்றாலும் வேலைகிடைக்கும் என்ற நம்பிக்கையை அரசாங்கம் உருவாக்க வேண்டும்.

அலுவலகங்களில் தமிழே பயன்பாட்டு மொழியாக இருத்தல் வேண்டும். தமிழை தமிழ் நாட்டில் ஆட்சி மொழியாக்க வேண்டும். தமிழ்நாட்டில் இயங்கும் மாநில அரசு, மத்திய அரசு அலுவலகங்களில் தமிழ் ஆட்சி மொழியாக்கப்பட வேண்டும். சென்னை உயர்நீதிமன்றத்திலும், மாவட்ட நீதிமன்றங்களிலும் தமிழ் வழக்காடு மொழியாக்கப்பட வேண்டும். தமிழ் உள்பட அனைத்து மாநில மொழிகளும் தேசிய மொழியாக்கப்பட வேண்டும். தேசிய கீதத்தை தமிழிலும் மொழி பெயர்த்து பாடப்படல் வேண்டும்.

மேற்கண்ட ஆலோசனைகளை அரசுக்கு அனுப்பியுள்ளதாக, தமிழ்நாடு கத்தோலிக்கக் கல்வி நிலையங்கள் சங்கத்தின் செயலர் செ.அருளப்பன் தெரிவித்தார்.