Friday, March 29மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

வேலைக்காரன் – சினிமா விமர்சனம்; ‘கார்ப்பரேட்டுகளின் லாப வெறியை தோலுரிக்கிறது’

‘தனி ஒருவன்’ இயக்குநர் மோகன் ராஜா – சிவகார்த்திகேயன் கூட்டணியில், உலகம் முழுவதும் இன்று (டிசம்பர் 22, 2017) வெளியாகி இருக்கிறது, ‘வேலைக்காரன்’.

நடிகர்கள்: சிவகார்த்திகேயன், ஃபகத் ஃபாசில், நயன்தாரா, பிரகாஷ் ராஜ், சினேகா, ரோகிணி, சார்லி, விஜய் வசந்த், ‘ரோபோ’ சங்கர், சதீஷ், ‘மைம்’ கோபி, ‘ஆர்.ஜே.’ பாலாஜி, தம்பி ராமையா, சரத் லோஹித்ஸ்வா மற்றும் பலர். இசை; அனிருத்; ஒளிப்பதிவு: ராம்ஜி; கலை: முத்துராஜ்; தயாரிப்பு: 24 ஏஎம் ஸ்டூடியோஸ்; இயக்கம்: மோகன் ராஜா.

கதை என்ன?: வேலைக்காரர்கள், அந்தந்த நிறுவனத்தின் முதலாளிகளுக்கு விசுவாசமாக இருப்பதைக் காட்டிலும், பொருள்களை வாங்கும் நுகர்வோருக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என்பதையும், லாபவெறி கொண்டு அலையும் கார்ப்பரேட் நிறுவனங்கள் உண்ணும் உணவுப்பொருள்களை எப்படி தயாரிக்கின்றன? அதை வணிகப்படுத்த என்னவெல்லாம் செய்கின்றன என்பதையும் நேர்த்தியான திரை க்கதையுடன் சொல்கிறது ‘வேலைக்காரன்’.

வேற லெவல்: ‘தனி ஒருவன்’ படத்தில் மருத்துவத்துறையில் நடக்கும் ஊழலை பேசிய இயக்குநர் மோகன் ராஜா, இந்தப் படத்தில் உணவுத்துறையில் நடக்கும் ஊழலை அம்பலப்படுத்துகிறார். ‘தனி ஒருவன்’ படத்தின் பாதிப்பில் இருந்து இந்தப்படம் எழுதப்பட்டதாகவே திரையில் காட்டப்படுகிறது. அந்தப் படத்தின் இரண்டாம் பாகமாகக்கூட கருதலாம்.

இதுவரை சிவகார்த்திகேயனை காமெடி நாயகனாக மட்டுமே பார்த்துப் பழகிய ரசிகர்களுக்கு, நான் அவன் அல்ல என்று இந்தப்படத்தின் மூலம் சொல்லாமல் சொல்லியிருக்கிறார். அவருக்கு இது வேற லெவல் படம். ரசிகர்களுக்கும் அவரை மாறுபட்ட கோணத்தில் காண்பது புதிய அனுபவமாக இருக்கும்.

சென்னையில் உள்ள கொலைகார குப்பத்தில் வசிக்கும் சாதாரண குடும்பத்துப் பையன்தான் நாயகன் அறிவு (சிவகார்த்திகேயன்). பட்டதாரியும்கூட. அதே குப்பத்தைச் சேர்ந்த பிரபல ரவுடி காசியிடம் (பிரகாஷ் ராஜ்) அங்குள்ள மக்கள் பயந்து நடுங்கிக் கிடக்கின்றனர். குப்பத்து வாழ்க்கையில் இருந்து தானும் மீள வேண்டும்; சக மக்களும் புதிய வாழ்வைப் பெற வேண்டும் என்று எண்ணுகிறார் அறிவு.

அதனால், குப்பத்துவாழ் மக்களுக்கென ஒரு கம்யூனிட்டி ரேடியோ ஸ்டேஷன் அமைக்கிறார். அதன்மூலம் மக்களின் பிரச்னைகளையும், அதற்கு தீர்வையும் தருகிறார். இதனால் உள்ளூர் ரவுடிக்கும், அறிவுக்கும் மோதல் ஏற்படுகிறது.

இதற்கிடையே நாயகன், பிரபலமான ஒரு கார்ப்பரேட் உணவுப்பொருள் தயாரிப்பு நிறுவனத்தில் மார்க்கெட்டிங் எக்ஸிகியூட்டிவ் வேலைக்குச் சேர்கிறார். அதே இடத்தில் தன்னுடன் குப்பத்தில் வசிக்கும் நண்பர் விஜய் வசந்த்தையும் வேலைக்குச் சேர்த்து விடுகிறார். திடீரென்று ஒருநாள் விஜய் வசந்த், ரவுடி காசியால் கொல்லப்படுகிறார்.

அவரைப்பிடித்து விசாரிக்கும் நாயகனிடம் பிரகாஷ் ராஜ், ‘நீ வேலை பார்க்கும் கம்பெனியின் முதலாளிதான் கொல்லச்சொன்னார். நான் கூலிக்கு வேலை செய்பவன்தான். ஒரு வகையில் நீயும், உன்னைப்போன்ற வேலைக்காரர்களும் என்னைப்போல் கூலிக்கு வேலை செய்யும் கொலைகாரர்கள்தான்,’ என அதிர்ச்சிகரமான சில தகவல்களைச் சொல்கிறார்.

சிவகார்த்திகேயன் வேலை செய்து வரும் நிறுவன அதிபர் உற்பத்தி செய்யும் உணவுப்பொருள்களில் செய்யப்படும் கலப்படத்தால் குப்பத்துவாழ் மக்கள் பாதிக்கப்படுவது குறித்து அறிந்து கொதித்தெழுகிறார் நாயகன் சிவகார்த்திகேயன். இதையடுத்து, தானும் ஒரு வேலைக்காரனாக சக வேலைக்காரர்களுடன் சேர்ந்து உணவுக்கலப்பட சதியை முறியடித்தாரா? அவர் வேலை பார்க்கும் நிறுவன அதிபருக்கு பாடம் கற்பித்தாரா? மக்களைக் காப்பாற்றினாரா? என்பதுதான் கிளைமேக்ஸ்.

”நீங்கள்லாம் எட்டு மணி நேரம் வேலை செய்யும் வேலைக்காரர்கள். மற்ற நேரம்லாம் எங்களோட பொருட்களுக்கு நுகர்வோர். ஆனால் நாங்க 24 மணி நேரமும் முதலாளிங்கதான்,” என வில்லன் ஆதி (ஃபகத் ஃபாசில்) பேசும் வசனம் ரொம்பவே ஈர்க்கிறது. கார்ப்பரேட்டுகளுக்கு எப்போதுமே லாப சிந்தனை மட்டும்தான் இருக்கும் என்பதை அவர் தனது அனாயசமான நடிப்பில் பார்வையாளர்களுக்கு எளிதில் கடத்தி விடுகிறார்.

படத்தின் இரண்டாம் பாதியில் இருந்துதான் ஃபகத் ஃபாசில் வருகிறார். அலட்டல் இல்லாத அவருடைய வில்லத்தனம், ‘தனி ஒருவன்’ அரவிந்த் சாமியை மிஞ்சுகிறது. இப்படி ஒரு எதிர்மறை கதாபாத்திரத்தின் மூலமாக அவர் தமிழில் அறிமுகமாவது யாருமே எதிர்பார்த்திருக்க முடியாது. மலையாளத்தில் தனி ரசிகர் பட்டாளத்தைக் கொண்டுள்ள அவரை, இனி தமிழ் ரசிகர்களும் கொண்டாடுவர்.

தெறிக்கும் வசனம்: இந்தப் படத்தை தூக்கிப்பிடிப்பதில் வசனங்களுக்கு ரொம்பவே பங்கு உண்டு. ”போன தலைமுறையில பயம், வறுமை காரணமா தப்பு பண்ணினது முடிஞ்சுபோய், இப்போ என்ஜாய் பண்ணி தப்பு பண்ண ஆரம்பிச்சாச்சு,” ”இனிமே கூலிப்படைங்கிற அடையாளமே வேணாம்…சூழ்நிலைக்காக நாம மாறினது போதும். இனிமே நமக்கேத்த மாதிரி இந்த சூழ்நிலைய மாத்துவோம்,” மிடில் கிளாஸ்காரன்கிட்ட 30ம் தேதி போயி நின்னா தேவையான பொருளக்கூட வாங்க மாட்டான். அதே 1ம் தேதி போயி கேட்டா, தேவையில்லாத பொருளக்கூட வாங்கி வெச்சிப்பான்,” என வசனங்கள் கவனிக்க வைக்கின்றன. ”தமிழனா இருந்தா பகிருங்கள்னு போடு. எத வேணும்னாலும் ஷேர் பண்ணுவான்,” என்ற கிண்டல் வசனம் வரும் காட்சிகளிலெல்லாம் விசில் பறக்கிறது. ஆனால், இரண்டாம் பகுதியில், வசனங்கள் பக்கம் பக்கமாக நீளும்போது சற்று அயற்சியை ஏற்படுத்தவும் செய்கிறது.

படத்தின் முதல் பாதியில், ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தின் வியாபார தந்திரம், போட்டி கம்பெனிகளை வீழ்த்தும் உத்திகள், பொருள்களை எப்படியெல்லாம் சந்தைப்படுத்துகின்றன என்ற விவரணைகள் ரசிக்கும்படி இருக்கிறது. படக்குழுவின் உழைப்பை உணர முடிகிறது.

நயன்தாரா – சிவகார்த்தியேன் ஜோடி செட் ஆகுமா? என்று படம் வெளிவருவதற்கு முன்பு பலரும் யோசித்தார்கள். ஆனால், அதற்கான நியாயம் செய்திருக்கிறது இந்தப்படம். அவர்களின் ஜோடி வெகு இயல்பாக பொருந்தியிருக்கிறது. ஆனால், நயன்தாராவுக்கு மொத்தமே பத்து பதினைந்து நிமிட காட்சிகள்தான். அதிலும் அவர் வழக்கம்போல் தன் பாத்திரத்தை உணர்ந்து மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார்.

சார்லியும், ரோஹிணியும் சிவகார்த்தியேனின் பெற்றோர்களாக வருகின்றனர். நீண்ட இடைவேளைக்குப் பிறகு நடித்திருக்கும் சினேகாவுக்கு, அழுத்தமான வேடம். அவரும் மிகச்சிறப்பாகவே அந்தப் பாத்திரத்தை செய்திருக்கிறார்.

தொழில்நுட்பம் அபாரம்: இசை, அனிருத். இந்தப்படத்தில் இடம்பெறும் பாடல்கள் அனைத்தும் ஏற்கனவே பெரிய அளவில் ரசிகர்களிடம் போய்ச்சேர்ந்து இருக்கிறது. சிவகார்த்திகேயன் பாடியிருக்கும் ‘கருத்தவன்லாம் கலீஜா…’ குப்பத்து பாடலில் தெறிக்கவிடுகிறார். இரண்டாம் பாதியில் வரும் ‘எழு வேலைக்காரா…’ பாடலில், திரையரங்கில் கைத்தட்டல் அள்ளுகிறது.

பாடல்களை விட, பின்னணி இசையில் பெரிதும் கவனம் ஈர்க்கிறார் அனிருத். வில்லன் பாத்திரம் வரும்போதெல்லாம் அவருக்கென தனியாக கொடுக்கப்பட்டு இருக்கும் பின்னணி இசையும் கவனிக்க வைக்கிறது.

ஒளிப்பதிவும் பெரிய அளவில் கவனம் ஈர்க்கிறது. ராம்ஜியின் கேமரா, குப்பத்து மக்களின் வாழ்வியலையும், கார்ப்பரேட் முதலாளிகளின் நடவடிக்கைகளையும் நேர்த்தியாக காட்சிப்படுத்துகிறது. இரண்டுக்கும் வேறு வேறு நிறம் கொடுத்திருப்பது ஒளிப்பதிவாளரின் புத்திசாலித்தனத்தைக் காட்டுகிறது.

படத்தின் இன்னொரு பலமான அம்சம், கலை. இந்தப்படத்தில் வரும் குப்பம் பகுதி, படத்துக்காக போடப்பட்ட செட். ஆனால், சென்னை மக்கள் அந்த குப்பம் எங்கு இருக்கிறது என்று விசாரித்ததாகவும்கூட தகவல்கள் வெளியாயின. அந்தளவுக்கு தத்ரூபமாக குப்பத்தை செட் அமைத்திருந்தார் கலை இயக்குநர் முத்துராஜ்.

தனி ஒருவன்: தமிழில் கவனம் ஈர்த்த பெரிய நட்சத்திரப் பட்டாளங்கள் இருந்தாலும், அவர்களுக்கு திரையில் போதிய வாய்ப்பு அளிக்கப்படவில்லையோ என்று தோன்றுகிறது. அதேபோல், காமெடிக்கு நிறைய பேர் இருந்தும், அந்த ஏரியாவிலும் கொஞ்சம் வறட்சி. ‘ரோபோ’ சங்கர் மட்டும் அவ்வப்போது சிரிப்பு வெடிகளை கொளுத்திப் போடுகிறார். பெரிய பட்ஜெட் என்பதால், அதற்கேற்ப பெரிய நட்சத்திரங்களை நடிக்க வைத்ததுபோல் இருக்கிறது.

அதேபோல் படத்தின் இரண்டாம் பாதியின் நீளத்தையும் கொஞ்சம் குறைத்திருக்கலாம். 2 மணி நேரம் 40 நிமிடங்கள் ஓடுகின்றன. எனினும், தமிழ்த்திரை உலகில் மருந்து, உணவுப்பொருள் வணிகம் என கார்ப்பரேட் முதலாளிகளின் சுரண்டலை தோலுரிப்பதில் தனி ஒருவனாக தனித்து தெரிகிறார் இயக்குநர் மோகன் ராஜா. அதில் அவர் வெற்றியும் பெற்றிருக்கிறார். வேலைக்காரனை, குடும்பத்துடன் பார்த்து ரசிக்கலாம்.

– வெண்திரையான்.