Sunday, April 21மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

சிங்கம் களம் இறங்கிடுச்சே!; வைகோவை நொறுக்கும் ‘நெட்டிஸன்’கள்

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை முதலமைச்சர் ஆக்குவதுதான் தனது நோக்கம் என்ற மதிமுக தலைவர் வைகோவை, சமூகவலைத்தளத்தில் கடுமையாக கிண்டல் செய்து ‘மீம்’கள் பதிவிட்டுள்ளனர். பலர் திமுகவுக்கு அறிவுரையும் வழங்கியுள்ளனர்.

பேருந்து கட்டணம் உயர்வைக் கண்டித்து மதுரையில் நேற்று (பிப்ரவரி 13, 2018) பொதுக்கூட்டம் நடந்தது. அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட மதிமுக தலைவர் வைகோ, இரண்டு முக்கிய முழக்கங்களை முன்வைத்தார்.

ஒன்று, திராவிடம் இல்லாத தமிழ்நாடு என்று யார் நினைத்தாலும் அது முடியாது. மற்றொன்று, திமுக செயல் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலினை தமிழகத்தின் முதலமைச்சர் ஆக்குவதுதான் என் நோக்கம் என்றும் கூறினார்.

சும்மாவே வைகோவை கேலி, கிண்டல் செய்யும் சமூகவலைத்தள பதிவர்களுக்கு இது போதாதா? இன்று நாள் முழுக்க அவரை கடுமையாக கிண்டல் செய்து எக்கச்சக்கமாக மீம்களை பதிவிட்டுள்ளனர்.

ஒரு காலத்தில் திமுகவின் முன்னணி தலைவர்களுள் ஒருவராக விளங்கிய வைகோ, 1993ம் ஆண்டு அக்கட்சியில் இருந்து வெளியேறினார். தமிழீழ போராளிகள் ஆதரவும், கள்ளத்தோணியில் பிரபாகரனை சந்தித்துவிட்டு வந்ததும் அப்போது திமுகவில் வைகோ மீது கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தது.

அதேநேரம், மு.க.ஸ்டாலின் தனது அரசியல் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருப்பாரோ என்ற குமைச்சலும் வைகோவிடம் இருந்தது. ஒரு கட்டத்தில் திமுகவில் இருந்து வைகோ அதிரடியாக வெளியேற்றப்பட்டார். ‘புலிகளுடன் இணைந்து தன்னை கொல்லப் பார்ப்பதாகக் கூறி கட்சியில் இருந்து நீக்கினார் கருணாநிதி’ என்று வைகோ இப்போதும் சொல்லி வருகிறார். வைகோவின் நீக்கம் அப்போது, திமுகவில் ஏற்பட்ட ‘செங்குத்து பிளவு’ என்றே சொல்லப்பட்டது.

வைகோவுக்கு நேர்ந்த அவமானங்களை தாங்க முடியாமல் அவர் மீது அதீத நம்பிக்கை கொண்டிருந்த நொச்சிப்பட்டி தண்டபாணி, இடமழை உதயன், கோவை பாலன், மேலப்பாளையம் ஜஹாங்கீர், உப்பிலியாபுரம் வீரப்பன் ஆகியோர் தீக்குளித்து மாண்டனர்.

தமிழ்நாட்டுக்கு வைகோதான் இனி மாற்று அரசியலை முன்னெடுப்பார் என்ற எதிர்பார்ப்பு அப்போது எழாமல் இல்லை. ஆனால், அதெல்லாமே சில ஆண்டுகளில் காணாமல் போனது. மதவாதம் பேசும் பாஜகவுடன், ஜெயலலிதாவுடன் சேர்ந்து கொண்டு கூட்டணி வைத்த முதல் திராவிட இயக்க அரசியல்வாதி என்ற மோசமான சாதனையையும் வைகோ படைத்தார். இது நடந்தது 1998ல்.

அதுதான் அரசியல் களத்தில் வைகோவின் முதல் முரண்பாடு எனச் சொல்வேன். பாஜக அரசை அதிமுக கவிழ்த்ததால் அந்த இடத்தில் திமுக சேர்ந்தது. பிறகு, 1999ல் திமுகவுடனும் கூட்டணி வைத்து, தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பிடித்தார். அதன்பின் மீண்டும் அதிமுக, பிறகு திமுக, மக்கள் நலக்கூட்டணி என மாறிக்கொண்டே இருந்தார். நிலைத்த தன்மை இல்லை. சித்தாந்தமும் கிடையாது. அவரும் வழக்கமான அரசியல்வாதியாகிப் போனார்.

அரசியல் களத்தில் தன்னுடைய போட்டியாளராக யாரை உள்ளுக்குள் நினைத்து புலம்பினாரோ அதே மு.க.ஸ்டாலினைத்தான் முதலமைச்சராக்கியே தீருவேன் என இப்போது பொது மேடைகளில் முழங்குகிறார். இதுதான் காலம் செய்த மாயம்.

மக்கள் நலக்கூட்டணிக்கான பிரச்சார மேடையிலும்கூட கருணாநிதியையும், ஸ்டாலினையும் பெ £றுக்கி வாலிபனும் அவருடைய தந்தையும் என்ற தலைப்பில் குட்டிக்கதை கூறி விமர்சனம் செய்தார்.

ம.ந.கூ.வில் இருந்தபோது தேமுதிக தலைவர் விஜயகாந்தை முதலமைச்சராக்குவேன் என்று உறுதி பூண்டார். கடந்த 2016ல் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் விஜயகாந்த் உள்பட ம.ந.கூ.வின் அனைத்து வேட்பாளர்களும் படுதோல்வி அடைந்தனர்.

வைகோ செல்லும் இடமெல்லாம் தோல்வியையும் சுமந்து செல்வதாக பொதுவெளியில் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. இது, அவருடைய செவிகளுக்கும் சென்றிருக்கக் கூடும்.

அதனால்தானோ என்னவோ நேற்று மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசுகையில்கூட, ”என்னை ராசி இல்லாதவன் என்கிறார்கள். ஆனால் சங்கரன்கோயில், மயிலாடுதுறை இடைத்தேர்தல்களில் திமுகவை வெற்றி பெறச் செய்தவன் நான்,” என்ற தனது கடந்தகால நினைவலைகளை பகிர்ந்து கொண்டார்.

மதிமுகவை கருணாநிதி அழிக்க நினைக்கிறார்; மக்கள் நலக்கூட்டணியை சிதைக்க நினைக்கிறார் என கர்ஜித்த வைகோவால் மட்டுமே அதே நெஞ்சுரத்துடன் திமுகவை நெருங்கிப் போக முடிகிறது. திமுகவால் மட்டுமே அவரையும் அரவணைத்துக் கொள்ள முடியும் போலிருக்கிறது.

ஆனால், வைகோ மீதான எதிர்மறையான ‘சென்டிமென்ட்’ காரணமாக மு.க.ஸ்டாலின், மற்றும் திமுகவினரைவிட வெகுசன மக்கள் ரொம்பவே கவலை தெரிவிக்கின்றனர். வைகோவை, ‘சிங்கம் கிளம்பிடுச்சு’ என்றும், ‘கடைசி வரைக்கும் ஸ்டாலின் செயல் தலைவர்தான்’ என்றும் கிண்டலாக கருத்துகளை பதிவிட்டுள்ளனர்.

என்னதான் வைகோ உணர்ச்சிப் பிழம்பாக முழங்கினாலும், வரும் தேர்தல் வரையிலுமாவது அவர் திமுக கூட்டணியில் நீடிப்பாரா அல்லது கருணாநிதியின் மூப்பை கருதி நேசக்கரங்களை நீட்டியுள்ளாரா என்ற அய்யமும் எழாமல் இல்லை.

– நாடோடி.