Friday, June 21மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

5வது ஒருநாள் கிரிக்கெட்: தென்னாப்பிரிக்கா மண்ணில் இந்தியா வரலாற்று சாதனை; மிரட்டும் விராட் கோலி படை

தென்னாப்பிரிக்கா உடனான ஐந்தாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி, 73 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இத்துடன் 6 போட்டிகள் கொண்ட தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியதுடன், 25 ஆண்டுகால தொடர் தோல்வி என்ற சோகத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்து, வரலாற்று சாதனை படைத்துள்ளது.

தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 6 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. தொடர்ச்சியாக மூன்று போட்டிகளில் ‘ஹாட்ரிக்’ வெற்றி பெற்ற இந்திய அணி, நான்காவது போட்டியில் தோல்வி அடைந்தது.

இந்நிலையில் ஐந்தாவது ஒருநாள் போட்டி போர்ட் எலிசபெத் மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக நேற்று (பிப்ரவரி 13, 2018) நடந்தது.

 

ரோஹித் ஷர்மா சதம்:

 

டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா கேப்டன் மார்க்ராம், முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். தொடக்க வீரர்களான ஷிகர் தவான், ரோஹித் ஷர்மா ஆகியோர் முதல் விக்கெட்டுக்கு ஓரளவு நல்ல அடித்தளம் அமைத்துக் கொடுத்தனர்.

இந்த தொடரில் தொடர்ந்து சொதப்பி வந்த ரோஹித் ஷர்மா, அபாரமாக விளையாடி அசத்தலாக சதம் அடித்தார். அவர் 126 ப ந்துகளில் 11 பவுண்டரிகள், 4 சிக்ர்ஸர்கள் உள்பட 115 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

முன்னதாக, ஷிகர் தவான் 23 பந்துகளில் 8 பவுண்டரிகள் உள்பட 34 ரன்கள் சேர்த்து ரபாடா பந்து வீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார். இவர்களின் பார்ட்னர்ஷிப்புக்குப் பிறகு வலுவான பார்ட்னர்ஷிப் அமையவில்லை. பின்னர் வந்த கேப்டன் விராட் கோலி (36 ரன்), ஸ்ரேயாஸ் அய்யர் (30 ரன்) ஓரளவுக்கு கைகொடுத்தனர்.

கடைசி 10 ஓவர்களில் பெரிய அளவில் ரன் குவிக்க இயலாத வகையில் தென்னாப்பிரிக்காவின் வேகங்கள் மிரட்டினர். இதனால் இறுதிக்கட்ட 10 ஓவர்களில் இந்தியா 55 ரன்களுக்கு அடுத்தடுத்து நான்கு விக்கெட்டுகளை இழக்க நேர்ந்தது. 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 274 ரன்கள் குவித்தது.

தென்னாப்பிரிக்கா தரப்பில் லுங்கிசனி நிகிடி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதையடுத்து 275 ரன்கள் இலக்குடன் தென்னாப்பிரிக்கா களம் இறங்கியது. ஹஷிம் ஆம்லா, கேப்டன் மார்க்ராம் சிறப்பான தொடக்கம் தந்தனர். இந்த இணை 9 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 51 ரன்கள் திரட்டியது. சீரான ஆட்டத்தை வெளிப்படுத்திய மார்க்ராம், இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா பந்து வீச்சில் வீழ்ந்தார். அவர் 32 பந்துகளில் 4 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் உள்பட 32 ரன்களை சேர்த்தார்.

அதன் பின்னர் வந்த ஜே.பி.டுமினி ஒரு ரன்னுடன் திருப்தி அடைந்து பெவிலியன் திரும்பினார். அவருடைய விக்கெட்டை, ஹர்திக் பாண்ட்யா வீழ்த்தினார். மற்றொரு அபாயகர ஆட்டக்காரரான ஏபி டி வில்லியர்ஸையும் (6 ரன்) ஹர்திக் பாண்ட்யா வீழ்த்தினார்.

இதையடுத்து ஆம்லாவுடன் அதிரடி ஆட்டக்காரர் டேவிட் மில்லர் இணைந்தார். இந்த இணை 50 ரன்களை திரட்டியதால், இந்தியாவுக்கு ஒரு கட்டத்தில் நெருக்கடி அதிகரித்தது. ஒரு வழியாக யுஸ்வேந்திர சாஹலின் சுழலில் டுமினி வீழ்ந்தார். அவர், 36 ரன்கள் எடுத்தார்.

அதன்பின்னர் விக்கெட் கீப்பர் ஹென்ரிச் கிளாசன் ஆம்லாவுடன் இணைந்தார். அவர் 39 ரன்கள் எடுத்திருந்த நிலையில், குல்தீப் யாதவின் பந்தை அடிப்பதற்காக ஒரு அடி கிரீஸை விட்டு முன்னே நகர்ந்தபோது, அந்த பந்தை தோனி அழகாக பிடித்து ஸ்டம்பீட் செய்தார்.

 

ஹஷிம் ஆம்லா அபாரம்:

 

ஒருமுனையில் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் மற்றொரு முனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹஷிம் ஆம்லா, எதிர்பாராத விதமாக ரன் அவுட் ஆனார். ஹர்திக் பாண்ட்யா அவரை ரன் அவுட் ஆக்கினார். அவர் 92 பந்துகளில் 71 ரன்கள் எடுத்தார்.

பின்னர் வந்த வீரர்கள் யாரும் சோபிக்காததால் அந்த அணி 42.2 ஓவர்களில் 201 ரன்களுக்கு அனைத்து விக்கெட் டுகளையும் இழந்து படுதோல்வி அடைந்தது. நிகிடி மட்டும் 4 ரன்களுடன் களத்தில் இருந்தார். இதன்மூலம் இந்திய அணி 73 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியதுடன், தொடரையும் 4&1 கணக்கில் கைப்பற்றியது.

இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளையும், யுஸ்வேந்திர சாஹல், ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். 115 ரன்கள் குவித்த ரோஹித் ஷர்மா, ஆட்டநாயகன் விருது பெற்றார். ஆறாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி வரும் 16ம் தேதி செஞ்சூரியனில் நடக்கிறது.

 

வரலாற்று சாதனை:

 

தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணியுடன் இந்திய அணி, அதன் சொந்த மண்ணில் விளையாடிய ஒரு நாள் தொடர்களை கடந்த 25 ஆண்டுகளில் ஒருமுறைகூட கைப்பற்றியதே இல்லை. அந்த சோகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் முனைப்புடன்தான் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இந்தமுறை தென்னாப்பிரிக்காவுக்கு சென்றது. நடப்பு தொடரை கைப்பற்றி, 25 ஆண்டுகால சோகத்திற்கு முடிவு கட்டி, புதிய வரலாற்றை பதிவு செய்துள்ளது கோலியின் படை.

இந்திய அணி தென்னாப்பிரிக்காவில் 1992ம் ஆண்டில் 7 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. அப்போது 2-5 கணக்கில் இந்தியா தோல்வி அடைந்தது. அதன்பின் 2006ல் 0-4 கணக்கிலும், 2011ல் 2-3 கணக்கிலும், 2013ல் 0-2 கணக்கிலும் தோற்று இருந்தது குறிப்பிடத்தக்கது. அந்த வரலாறு இப்போது மாற்றி எழுதப்பட்டு உள்ளது.

 

கேப்டனாகவும் சாதனை:

 

ஒருநாள் கிரிக்கெட் அணிக்கு கேப்டன் பொறுப்பு ஏற்றதில் இருந்து நாற்பது போட்டிகளில் ரிக்கி பாண்டிங் (ஆஸ்திரேலியா) 33 போட்டிகளில் வெற்றி தேடித்தந்துள்ளார். அதற்கு அடுத்த இடத்தில் விராட் கோலி 32 போட்டிகளில் பெற்றி பெற்று அசத்தியுள்ளார்.

 

தென்னாப்பிரிக்காவின் சோகம்:

 

கடந்த 2013ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவை அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்தி, ஒருநாள் தொடரை கைப்பற்றியது. அப்போது அதுவும் வரலாற்று வெற்றியாக பதிவானது. இப்போது இந்தியாவும், அந்த அணியை சொந்த மண்ணில் வீழ்த்தி வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ளது.

 

அசத்தும் சுழல் கூட்டணி:

நடப்பு ஒருநாள் தொடரில் இந்திய அணியின் வெற்றிக்கு யுஸ்வேந்திர சாஹல் மற்றும் ‘சைனாமேன்’ குல்தீப் யாதவ் ஆகிய இருவரின் சுழல் பந்து வீச்சுக்கு பெரும் பங்கு உண்டு. வெளிநாட்டு மண்ணில் சாதிக்கக்கூடிய இதுபோன்ற மிரட்டலான சுழல் கூட்டணி இதற்கு முன்னர் இந்திய அணியில் இருந்ததில்லை என்றே சொல்லலாம். இவ்விரு பந்து வீச்சாளர்களும் இணைந்து நடந்து முடிந்த ஐந்து போட்டிகளிலும் சேர்த்து 30 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர். இன்னும் ஒரு போட்டி எஞ்சியுள்ளது. வெளிநாட்டு மண்ணில் எந்த ஒரு சுழல் கூட்டணியும் இந்தளவுக்கு விக்கெட்டுகளை கொத்தாக அள்ளியது கிடையாது.

 

விராட் கோலி பேட்டி:

 

”ஒரு கட்டத்தில் ரன் குவிப்பு மற்றும் பந்து வீச்சில் சற்றே தேக்கநிலை இருந்ததுபோல தோன்றியது. ஆனாலும், ஒரு குழுவாக முழு திறமையையும் வெளிப்படுத்தினால் இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்ற முடியும் என்ற நம்பி க்கையும் எங்களுக்குள் இருந்தது. அணியின் கூட்டு முயற்சி, கடின உழைப்பால்தான் தொடரை 4-1 கணக்கில் வென்று, வரலாற்று சாதனையும் படைக்க முடிந்திருக்கிறது.

எங்களின் ஆட்டத்திறனை எப்படி மேம்படுத்துவது என்பது ஒவ்வொரு முறையும் நாங்கள் ஒன்றாக அமர்ந்து ஆலோசிக்கிறோம். எல்லா அணிகளின் இலக்கும் 2019 உலகக் கோப்பையை நோக்கித்தான். நாங்களும் அதை நோக்கித்தான் சென்று கொண்டிருக்கிறோம். இந்த தொடரை 5-1 கணக்கில் முடிப்போம். அதில் எந்த மாற்றமும் இல்லை,” என்றார் இந்திய கேப்டன் விராட் கோலி.

 

மார்க்ராம் பாராட்டு:

 

”இந்த வெற்றிக்கு இந்திய அணி முழு தகுதி உடையது. துரதிர்ஷ்டவசமாக நாங்கள் சில முக்கிய விக்கெட்டுகளை இழந்து விட்டோம். அதனால் எங்களால் வலுவான பார்ட்னர்ஷிப் அமைக்க முடியாமல் போய்விட்டது.

முந்தைய ஆட்டத்தில் இருந்து நாங்கள் சிலவற்றை கற்றிருந்தாலும், இந்திய பந்து வீச்சாளர்கள் அதை எல்லாம் முறியடித்து விட்டார்கள். இன்றைய போட்டியில் இருந்தும் சில விஷயங்களை கற்றுக் கொண்டிருக்கிறோம். கடைசி போட்டியில் நிச்சயமாக வெற்றி பெறுவோம்,” என்றார் தென்னாப்பிரிக்கா கேப்டன் மார்க்ராம்.