Thursday, March 28மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

அதிமுக அரசுக்கு ஆதரவா?; ‘பொடி’ வைக்கும் புதிய ஆளுநர்

கடந்த ஓராண்டுக்கும் மேலாக தமிழக ஆளுநர் பொறுப்பில் இருந்த வித்யாசாகர் ராவ் நேற்று விடைபெற்றார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் அவரை முறைப்படி வழியனுப்பி வைத்தனர்.

பதவி ஏற்பு:

அதையடுத்து, தமிழக புதிய ஆளுநராக நியமிக்கப்பட்ட பன்வாரிலால் புரோஹித், ராஜ் பவனில் இன்று (அக்டோபர் 6) முறைப்படி பதவியேற்றுக் கொண்டார். சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்பு விழாவில் பன்வாரிலால் புரோஹித்தின் மனைவியும் கலந்து கொண்டார்.

பதவியேற்பு முடிந்ததும் முதல்வர், துணை முதல்வர் ஆகியோர் அவருக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.

மு.க.ஸ்டாலின் அதிருப்தி:

முதல்வர், துணை முதல்வர் ஆகியோரைத் தொடர்ந்து மரபுப்படி எதிர்க்கட்சித் தலைவரான மு.க.ஸ்டாலின்தான் ஆளுநருக்கு வாழ்த்துச் சொல்ல அழைக்கப்பட வேண்டும். ஆனால் அதற்குள் சில அமைச்சர்கள் அவருக்கு வாழ்த்துச் சொல்ல அழைக்கப்பட்டனர். இதைப் பார்த்த மு.க.ஸ்டாலின் எழுந்து சென்று அங்குள்ள அதிகாரி ஒருவரிடம் முறையிட, சில நிமிடங்கள் விழா அரங்கில் சலசலப்பு ஏற்பட்டது.

பின்னர் அவர், புதிய ஆளுநருக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்துச் சொன்னார். விழா மரபு மீறப்பட்டதால் அதிருப்தி அடைந்த மு.க.ஸ்டாலின், ஆளுநர் பதவியேற்பு விழாவையொட்டி நடந்த தேநீர் விருந்தை புறக்கணித்துவிட்டு, அங்கிருந்து வெளியேறினார்.

இதுகுறித்து மு.க.ஸ்டாலின் கூறுகையில், ”விழாவில் மரபு விதிகள் முறையாக கடைப்பிடிக்கப்படவில்லை. முதல்வர், துணை முதல்வர் ஆகியோருக்குப் பின்னர் எதிர்க்கட்சித் தலைவர்தான் ஆளுநருக்கு வாழ்த்துச் சொல்ல வேண்டும். ஆனால் அதிகாரி ஒருவர், நீதிபதிகள் வாழ்த்துச் சொன்ன பிறகுதான் எதிர்க்கட்சித் தலைவருக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்றார். அப்படி எனில், அமைச்சர்களுக்கும் அதே விதியை பின்பற்றியிருக்க வேண்டும். ஆனால் அப்படி நடக்கவில்லை.

முன்பிருந்த ஆளுநர் வித்யாசாகர் ராவ் செய்த அதே தவறுகளை புதிய ஆளுநரும் செய்து விடக்கூடாது. வாக்கி&டாக்கி கொள்முதலில் நடந்த ஊழல் குறித்து புதிய ஆளுநரிடம் விரைவில் முறையிடுவோம்,” என்றார்.

ஆளுநரின் முதல் பேட்டி:

பதவியேற்பு முடிந்ததும் புதிய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஊடகங்களிடம் கூறுகையில், ”நான் அரசியல் சாசன விதிகளை மதிப்பேன். நான் எடுக்கும் முடிவுகள் சின்னதோ, பெரியதோ அது அரசியல் சாசன அமைப்புக்கு உட்பட்டுதான் இருக்கும். ஆளுநர் அலுவலகம் என்பது அரசியலுக்கு அப்பாற்பட்டது.

சூழலைப் பொறுத்து என்னுடைய முடிவுகள் இருக்கும். அரசின் செயல்பாடுகளின் அடிப்படையில் என் ஆதரவு இந்த அரசுக்கு இருக்கும். நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை காக்கப்படும்,” என்றார்.

ஆளுநரின் பேட்டி, அரசின் கடிவாளம் என் கைகளில்தான் இருக்கிறது என்பதை ஆளுநர் மறைமுகமாக சொல்லிவிட்டதாகவே ஆளும்தரப்பினர் கருதுகின்றனர்.