Saturday, April 20மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

சசிகலாவை வறுத்தெடுக்கும் ‘மீம்’ கிரியேட்டர்கள்!

அவசரகால பரோல் விடுப்பில் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ள சசிகலா மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை கிண்டலடித்து நெட்டிஸன்கள் மீம்களை பதிவிட்டுள்ளனர். சமூக வலைத்தளங்கள் முழுவதும் சசிகலா பற்றிய மீம்களே அதிகளவில் வைரல் ஆகி வருகின்றன.

சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் 15ம் தேதி முதல் அவர் சிறையில் இருந்து வருகிறார். கைதி எண்: 9234.

அவருடைய கணவர் நடராஜன் உடல்நலக் குறைவால் சென்னையில் உள்ள குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு இரு நாள்களுக்கு முன்பு, கல்லீரல், சிறுநீரகம் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அவரைக் காண்பதற்காக அவசரகால பரோல் விடுப்பில் இன்று (அக். 6) சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். அவருக்கு 5 நாள்கள் பரோல் விடுப்பு அனுமதிக்கப்பட்டு உள்ளது. சிறையில் அடைக்கப்பட்ட பின்னர் சரியாக 233 நாள்கள் கழித்து அவர் வெளியே வருகிறார்.

முன்பு அரசியல்வாதிகளை கிண்டல் செய்ய கேலிச்சித்திரங்கள் வரையப்படுவது நடைமுறையில் இருந்தது. இப்போது, ஃபோட்டோஷாப் உதவியுடன் வடிவேலு, கவுண்டமணி, சூரி, சந்தானம் போன்ற நடிகர்களின் காமெடி காட்சிகளை இணைத்து அரசியல்வாதிகளை கிண்டல் செய்து ‘மீம்’கள் உருவாக்கப்படுகிறது.

சசிகலா சிறைக்கு சென்றபோது அவருடைய தீவிர விசுவாசியாக இருந்த எடப்பாடி பழனிசாமியை முதல்வர் நாற்காலியில் அமர வைத்துவிட்டுச் சென்றார். கடந்த 233 நாள்களில் அக்கட்சி, அதிமுக என்ற பெயரை இழந்து ‘அதிமுக அம்மா அணி’, ‘அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணி’ என உடைந்தது. இரட்டை இலை சின்னமும் முடக்கப்பட்டது.

இதைக் கிண்டல் செய்யும் விதமாக, பரோட்டா சூரி காமெடி காட்சிகளை இணைத்து டுவிட்டர் பக்கத்தில் மீம் பதிவிட்டுள்ளனர்.

அதேபோல், சூரியவம்சம் படத்தில் சரத்குமார், மணிவண்ணன் ஆகியோர் தேவயானியிடம் இருந்து தப்பிக்க தங்கள் முகத்தை மறைத்துக்கொண்டு செல்லும் காட்சியை வைத்து, எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை கிண்டல் அடித்தும் மீம்களை உருவாக்கி இருக்கிறார்கள்.

சசிகலா வருகையால் எடப்பாடி பழனிசாமி பயந்து ஓடுவது போலவும் கிண்டல் செய்துள்ளனர். இன்னும் சிலர், ”கொள்ளை அடித்துவிட்டு சிறையில் இருந்து வெளியே வந்திருக்கு. என்னமோ சுதந்திர போராட்ட தியாகி மாதிரி செய்தி போடுகிறீர்களே?” எனவும் கிண்டல் செய்து மீம்களை பதிவிட்டுள்ளனர்.

டுவிட்டர் பக்கங்களில் சின்னம்மா, சசிகலா, சின்னம்மா பரோல் ஆகிய பெயர்களில் ஹேஷ்டேக் செய்து மீம்களை பதிவிட்டு வருகின்றனர். இது இணையவாசிகளிடம் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.