Wednesday, May 29மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

சசிகலாவுக்கு ‘வாய்ப்பூட்டு’; 5 நாள் மட்டும் ‘பரோல்’

சொத்து வழக்கில் நான்கு ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்ட ஜெயலலிதாவின் தோழி சசிகலா, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அவருடைய கணவர் நடராஜனுக்கு, சென்னையில் உள்ள குளோபல் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இரு நாள்களுக்கு முன் அவருக்கு கல்லீரல், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது.

கணவரை காண்பதற்காக 15 நாள்கள் பரோல் விடுப்பில் செல்ல அனுமதி கேட்டு கர்நாடகா சிறைத்துறைக்கு சசிகலா விண்ணப்பித்து இருந்தார். சில தொழில்நுட்ப காரணங்களால் அப்போது பரோலில் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. சில ஆவணங்களும் போதிய அளவில் இல்லை என்றும் கூறப்பட்டது.

இதையடுத்து மீண்டும் நேற்று புதிய பரோல் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதை பரிசீலித்த கர்நாடகா சிறைத்துறை, தமிழக காவல்துறையிடம் சசிகலாவுக்கு பரோல் அளிப்பது குறித்து கருத்து கேட்டது. அதற்கு தமிழக காவல்துறையும் ஆட்சேபனை ஏதும் தெரிவிக்கவில்லை. ஆனால் சில நிபந்தனைகள் மட்டும் விதித்துள்ளது.

இதையடுத்து, கர்நாடகா சிறைத்துறை நிர்வாகம் சசிகலாவுக்கு 5 நாள்கள் மட்டுமே பரோல் விடுப்பில் செல்ல அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது. இன்று மாலையே அவர் சென்னைக்கு வந்து சேரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சிறையில் இருந்து வெளியே வரும் அவரை வரவேற்க டிடிவி தினகரன் மற்றும் உறவினர்கள் சிலர் சிறை வளாகத்தில் காத்திருக்கின்றனர்.

தற்போது அவருக்கு பரப்பன அக்ரஹாரா சிறையில் மருத்துவ பரிசோதனை நடந்தது. பரோலில் செல்லும் ஒருவர், அவர் சிறையில் இருந்து செல்லும்போது உடல்நலம் எப்படி இருக்கிறது என்பது பரிசோதிப்பது வழக்கமான நடைமுறைதான் என்கிறது காவல்துறை.

சிறைத்துறை உத்தரவின்பேரில்,  இன்று (அக்டோபர் 6) மதியம் 2.50 மணியளவில் அவர் பரோலில் விடுதலையாகி, சிறை வளாகத்தில் இருந்து வெளியே வந்தார். அவருடைய உறவினர்கள், ஆதரவாளர்கள் ஆகியோர் வரவேற்றனர். சசிகலாவும் அவர்களைப் பார்த்து கையசைத்தார்.

பெங்களூரில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் வருவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தது. எனிலும் அவர் சாலை மார்க்கமாக காரிலேயே புறப்பட்டு சென்னைக்கு வருகிறார்.

அவருடைய பரோல் விடுப்பு காலம் இன்று நள்ளிரவு 12 மணி முதல் தொடங்குகிறது. வரும் 12ம் தேதி மாலை 5 மணிக்குள் அவர் மீண்டும் சிறை திரும்பவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

பரோலில் வரும் சசிகலா, சென்னையில் இளவரசியின் வீட்டில் தங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கர்நாடகா அதிமுக பொறுப்பாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார். சசிகலா அரசியல் நடவடிக்கையில் ஏதும் ஈடுபடக்கூடாது என்பது உள்பட 18 நிபந்தனைகளை தமிழக காவல்துறை விதித்துள்ளது.

முக்கிய நிபந்தனைகள்:

பரோலில் வெளிவரும் சசிகலா, வீட்டில் இருந்து நடராஜன் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனைக்குச் செல்லலாம். அங்கிருந்து மீண்டும் வீடு திரும்பலாம். வேறு எங்கும் செல்லக்கூடாது.

காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே கணவரை பார்க்க முடியும்.

தனிப்பட்ட முறையில் உடல்நலம் சார்ந்த பிரச்னைகள் ஏதும் ஏற்பட்டால், அதுபற்றி சம்பந்தப்பட்ட எல்லைக்குட்பட்ட காவல்நிலையத்தில் தகவல் தெரிவித்துவிட்டு, மருத்துவமனைக்குச் செல்லலாம்.

தாமாக முன்வந்து கட்சி நிர்வாகிகள், தொண்டர்களை அழைத்துப் பேசக்கூடாது.

முக்கியமாக ஊடகங்களை சந்தித்து பேட்டி அளிக்கக்கூடாது.

தனியார் மற்றும் பொது நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளக்கூடாது. எனினும், அவரை பிறர் சந்தித்துப் பேசுவதற்கு எந்தக் கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை.

ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் சசிகலாவை மையப்படுத்தியே தமிழக அரசியல் நிலவரங்கள் இருந்து வருகிறது. இந்நிலையில் அவர் பரோலில் வெளியே வருவதால், மேலும் தமிழக அரசியல் களம் சூடாகும் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.