Thursday, April 25மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

சவரக்கத்தி – சினிமா விமர்சனம்; ‘மாற்றுப்படங்களின் அட்டகாச ஆரம்பம்!’

படங்களில் எப்போதும் வித்தியாசமான கதாபாத்திரங்களை கையாளும் மிஷ்கின் மற்றும் ராம் என்ற இரு இயக்குநர்களின் நடிப்பில் காமெடி, குடும்பம், சென்டிமென்ட், காதல் என ரசனையான கலவையில் இன்று (பிப்ரவரி 9, 2018) வெளியாகி இருக்கிறது, ‘சவரக்கத்தி’.

நடிப்பு: ராம், மிஷ்கின், பூர்ணா மற்றும் பலர்

இசை: அரோல் குரேலி

ஒளிப்பதிவு: கார்த்திக்

தயாரிப்பு: லோன்லி உல்ஃப் புரடக்ஷன்ஸ்

இயக்குநர்: ஜி.ஆர். ஆதித்யா

கதை என்ன?:

கத்தி என்றாலே அது உயிரைக்கொல்லும் ஆயுதம் என்பதாகவே மனிதர்களின் பொதுப்புத்தியில் உறைந்து கிடைக்கிறது. ஆனால், அதே கத்திதான் உயிரை பிரசவிக்கும் கருவியாகவும் பயன்படுகிறது. பொருள் ஒன்று; நோக்கம் வேறானது என்பதுதான் படத்தின் ஒரு வரி கதை.

திரைமொழி:

கொடூரமான ரவுடியான மங்கா (மிஷ்கின்), சிறையில் இருந்து பரோலில் வெளியே வந்திருக்கிறார். பரோல் விடுப்பு முடிந்து, மாலை 6 மணிக்குள் மீண்டும் சிறைக்கு திரும்ப வேண்டும் என்ற ஒரு நாளில் திரைக்கதை நகர்கிறது.

அதேநாளில், மனைவி சுபத்ராவின் (பூர்ணா) தம்பிக்கும் அவர் காதலிக்கும் பெண்ணுக்கும் திருட்டுத்தனமாக கல்யாணத்தை முன்னின்று நடத்தி வைப்பதற்காக பிச்சை என்கிற பிச்சைமூர்த்தி (ராம்) தன்னுடைய நிறைமாத கர்ப்பிணி மனைவி, இரண்டு குழந்தைகளை அழைத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் செல்கிறார்.

நகரத்தின் ஏதோ ஒரு போக்குவரத்து சிக்னலில் மோட்டார் சைக்கிளை நிறுத்த முயற்சிக்கும்போது, மங்காவும், அவருடைய கூட்டாளிகளும் வந்த கார் திடீர் பிரேக் போட்டதில் பிச்சைமூர்த்தி நிலை தடுமாறி கீழே விழுந்து விடுகிறார். அதைப்பார்த்து அவருடைய பிள்ளைகளும், மனைவியும் கேலியாக சிரிக்க, அவர்கள் முன்பு தன்னை ஒரு பலசாலியாக காட்டிக்கொள்ள நினைக்கிறார் பிச்சை.

உடனே அவர், காரில் இருந்தவர்களை கன்னாபின்னாவென திட்டித் தீர்க்கிறார். ஆத்திரத்தில் அடிக்கவும் கையை ஓங்குகிறார். அப்போது கார் மீது மற்றொரு வாகனம் மோதியதில் ரவுடி மங்காவின் உதடுகள் கிழந்து, ரத்தம் வழிகிறது. ஆனால், பிச்சை அடித்ததில்தான் காயம் ஏற்பட்டதாக நினைக்கிறார் மங்கா.

தன்னை தாக்கியவனை உயிருடன் விடக்கூடாது; அவன் கையை வெட்டியே ஆக வேண்டும் என்ற கோபத்தில் மங்கா, பிச்சையை துரத்த ஆரம்பிக்கிறார். மனைவி, பிள்ளைகளை நடுத்தெருவில் தவிக்கவிட்டு மங்காவிடம் சிக்காமல் இருக்க பிச்சையும் ஓட்டம் எடுக்கிறார்.

மங்கா துரத்த, பிச்சை தப்பி ஓட, கணவருக்கு என்னாச்சோ என்ற பதைபதைப்பில் பிச்சையின் மனைவியும் ஓட….ஓடிக்கொண்டே இருக்கிறார்கள். ஒரு கட்டத்தில் ரவுடியின் கையில் பிச்சையின் மனைவி சிக்கிக் கொள்கிறார். அவரை ரவுடி மங்கா என்ன செய்தார்? அவர் சபதம் எடுத்தபடி பிச்சையின் கையை வெட்டினாரா? மங்கா மீண்டும் சிறைக்கு சென்றாரா? என்பதை அழகாகவும், காமெடியாகவும் சொல்லியிருக்கிறது ‘சவரக்கத்தி’.

மிஷ்கின்-ராம்-பூர்ணா:

வாயைத் திறந்தாலே பொய்தான். பொய்யைத்தவிர வேறு ஒன்றும் பேசத்தெரியாது என்கிற பிச்சை பாத்திரத்தில் வாழ்ந்திருக்கிறார் ராம். சலூன் கடை வைத்திருக்கிறார். பெரிய சோடா புட்டி கண்ணாடி, நரைத்த தாடி, கலைந்த தலைமுடி, அழுக்குச்சட்டை தோற்றமே, அவருடைய குடும்ப பொருளாதாரத்தைச் சொல்லிவிடும்.

காது கேளாத மாற்றுத்திறனாளி பாத்திரத்தில் சுபத்ரா பாத்திரத்தில் பூர்ணா. ராமின் மனைவியாக, இரண்டு குழந்தைகளின் தாயாக, நிறைமாத கர்ப்பிணியாக படம் முழுவதும் வருகிறார். முன்னெப்போதும் இல்லாத வகையில் அவருக்கு ரொம்பவே அழுத்தமான பாத்திரம். சுபத்ரா பாத்திரத்தில் கனகச்சிதமாக பொருந்திப் போகிறார். அவருக்கு, சவரக்கத்தி முக்கியமான படம் என்றே சொல்லலாம்.

மங்கா எனும் ரவுடி பாத்திரத்தில் மிஷ்கின். வெகு அனாயசமாக தன் பாத்திரத்தை கையாளுகிறார். கண்களாலேயே தன் உக்கிரமான மனநிலையை பார்வையாளர்களுக்கு கடத்தி விடுகிறார். இதெல்லாமே அவருக்கு ரொம்பவே எளிமையானதுதான். திரைக்கதை முழுவதும் இந்த மூன்று பாத்திரங்களைச் சுற்றியே நடக்கிறது.

எதெல்லாம் பிளஸ்?:

முதல் காட்சியில் இருந்தே கதைக்குள் பயணித்து விடுகிறார், இயக்குநர் ஆதித்யா. எப்போதும் சீரியஸான படங்களையே கொடுத்து வரும் இரண்டு முக்கிய இயக்குநர்களை வைத்துக்கொண்டு, படம் முழுக்க ‘பிளாக் ஹியூமர்’ காட்சிகள் மூலம் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்திருக்கிறார்.

தேவையில்லாமல் பாடல்களைச் சொருகி, அயற்சியை ஏற்படுத்தாமல் இரண்டு பாடல்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளது. அதுவும், படத்தின் முடிவில் இடம்பெறும் பாடல் நெகிழ வைக்கிறது. இசையமைப்பாளர் அரோல் கொரேலி, பின்னணி இசைக்கென தனியாக ஆடியோ சி.டி. வெளியிடலாம். கதாபாத்திரங்களின் தன்மைக்கு ஏற்பட கார்த்திக்கின் கேமராவும் நிறையவே ஓடியிருக்கிறது. ஒளியமைப்பு அத்தனை கச்சிதம்.

மையப் பாத்திரங்களின் உடன் வரும் துணை நடிகர்களின் தேர்வும், அவர்களின் பங்களிப்பும்கூட பரவலாக கவனிப்பைப் பெறுகின்றன. முதல் படத்திலேயே இயக்குநர் தன் திரை ஆளுமையை வெளிப்படுத்தியிருக்கிறார்.

எதெல்லாம் மைனஸ்?:

கதையில் வரும் எல்லா பாத்திரங்களுமே மிஷ்கின் போலவே நடிப்பதும், பேசுவதும் கொஞ்சம் அயற்சியை ஏற்படுத்துகிறது. சமயங்களில், படத்தை இயக்கியது மிஷ்கினா அல்லது அவருடைய தம்பி ஜிஆர். ஆதித்யாவா என்ற சந்தேகமும் எழுகிறது. மையப்பாத்திரங்கள் எல்லாமே சில நேரங்களில் மிகை நடிப்பை வழங்குவதும்கூட சற்று சலிப்பை ஏற்படுத்துகிறது.

கிளைமேக்ஸ்:

ஓரிடத்தில், ரவுடியின் கையில் கிடைத்த கத்தி கொலை செய்யப்பயன்படுகிறது. அதே ரவுடியின் கையில் இருக்கும் கத்திதான் தொப்புள் கொடி அறுத்து, குழந்தையின் உயிரைக் காப்பாற்றவும் செய்கிறது என்ற காட்சியுடன் நெகிழ வைக்கிறார் இயக்குநர்.

இந்த விமர்சனத்தை பதிவிடும்போதும், படம் முடிந்து வெகுநேரம் ஆகியும்கூட அந்தக் காட்சி நம்மை உணர்வுப்பூர்வமாக நெகிழ வைக்கிறது.

கரடு முரடான இயக்குநர் நடிக்கும் படத்தில் இப்படி ஒரு கவித்துவமான கிளைமாக்ஸ் காட்சியா? என்ற ஆச்சர்யமும் ஏற்படுகிறது. இந்தப் படத்தின் வெற்றியும் அதுதான். மாற்றுப்படங்களின் வரிசையில் கவனிக்கத்தக்க படம், சவரக்கத்தி. ரசிகர்கள் பார்க்கத் தவற விடக்கூடாத படமும்கூட.

 

– வெண்திரையான்.