Saturday, April 20மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

கிரிக்கெட்: தென்னாப்பிரிக்காவுக்கு 290 ரன்கள் இலக்கு; ஷிகர் தவான் சாதனை சதம்

ஜோகன்னஸ்பெர்க்கில் இன்று (பிப்ரவரி 10, 2018) நடந்து வரும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான நான்காவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி 290 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. அபாரமாக விளையாடிய இந்திய தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் தனது 100 வது போட்டியில் சதம் அடித்து சாதனை படைத்துள்ளார்.

தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 6 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே தொடர்ச்சியாக மூன்று போட்டிகளை வென்றுள்ள இந்திய அணி, இன்றைய போட்டியிலும் வென்று, தொடரை கைப்பற்றும் முனைப்புடன் விளையாடி வருகிறது.

மார்பக புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக தென்னாப்பிரிக்கா வீரர்கள் இன்றைய போட்டியில் தங்களது வழக்கமான பச்சை நிற சீருடையை தவிர்த்து, பிங்க் நிற சீருடையில் களம் புகுந்தனர். போட்டி நடைபெறும் ஜோகன்னஸ்பெர்க்கின் வாண்டரர்ஸ் மைதானத்திலும் ஏராளமான ரசிகர்கள் பிங்க் நிற உடை அணிந்து வந்திருந்தனர்.

இந்திய அணி வீரர்கள் தங்களது வழக்கான ப்ளூ நிற சீருடையில் களமிறங்கினர்.

தென்னாப்பிரிக்கா அணிக்கும் இன்றைய போட்டி மிக முக்கியமானது என்பதால் அந்த அணியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு இருந்தன. அதிரடி ஆட்டக்காரர் ஏபி டி வில்லியர்ஸ் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார். சோன்டோவுக்கு பதிலாக டிவில்லியர்ஸ் சேர்க்கப்பட்டு உள்ளார். இம்ரான் தாகீருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு, மோர்னே மோர்கல் மீண்டும் சேர்க்கப்பட்டு உள்ளார்.

இந்திய அணியில் ஒரேயொரு மாற்றமாக கேதர் ஜாதவுக்கு பதிலாக ஷ்ரேயாஸ் அய்யர் சேர்க்கப்பட்டுள்ளார். டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி, முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தார்.

இதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி அணியில், தொடக்க வீரர் ரோஹித் ஷர்மா 5 ரன்னில் ரபாடா பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார். இந்த தொடரில் தொடர்ந்து சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ரோஹித் ஷர்மா, இன்றும் ஏமாற்றம் அளித்தார்.

நடப்பு தொடரில் சீரான ஆட்டத்தை தொடர்ந்து வரும் மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான ஷிகர் தவான், தனது 26வது ஒருநாள் அரை சதத்தை பூர்த்தி செய்தார். இது அவரது 100 வது ஒருநாள் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல், கேப்டன் விராட் கோலியும் அரை சதம் அடித்தார்.

கடந்த போட்டியைப் போலவே இன்றைய ஆட்டத்திலும் சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி, எதிர்பாராத விதமாக கிறிஸ் மோரீஸ் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். அவர் 83 பந்துகளில் 75 ரன்கள் எடுத்தார். இதில் 4 பவுண்டரிகள், ஒரு சிக்சரும் அடங்கும்.

விராட் கோலி, ஷிகர் தவான் இணை 158 ரன்கள் குவித்து நல்ல அடித்தளம் அமைத்தது. ஆனால், அதற்குப் பிறகு வலுவான பார்ட்னர்ஷிப் அமையாததால் ரன் ரேட் விகிதமும் குறைந்தது. ஆனாலும், அபாரமாக ஆடிய ஷிகர் தவான் ஒரு நாள் அரங்கில் தனது 13வது சதத்தை அடித்து அசத்தினார். 100வது ஒருநாள் போட்டியில் சதம் அடித்த வீரர்களின் வரிசையில் ஷிகர் தவான், 9வது வீரராக இணைந்தார்.

அவருக்கு முன்பு கிரீனிட்ஜ், கெய்ர்ன்ஸ், முகமது யூசுப், கெயில், சங்ககாரா, டிரெஸ்கோதிக், சர்வான், வார்னர் ஆகியோரும் தங்களுடைய 100வது போட்டியில் சதம் அடித்த வீரர்கள் ஆவர். இன்றைய போட்டியில் பெரிய இன்னிங்ஸ் ஆடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மோர்ன் மோர்கல் பந்து வீச்சில் ஷிகர் தவான் ஆட்டமிழந்தார். அவர் 105 பந்துகளில் 109 ரன்களை குவித்தார். இதில் 11 பவுண்டரிகளும், 2 சிக்ஸர்களும் அடங்கும்.

அடுத்து வந்த ரஹானே (8 ரன்), ஸ்ரேயாஸ் அய்யர் (18 ரன்), ஹர்டிக் பாண்ட்யா (9) புவனேஸ்வர் குமார் (5 ரன்) ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். 300 ரன்களை தாண்டும் என எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், ரன் விகிதம் மந்தமானது. விக்கெட் கீப்பர் தோனி மட்டும் ஓரளவு தாக்குப்பிடித்து, 43 பந்துகளில் 3 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் உள்பட 42 ரன்களைக் குவித்தார்.

தோனி 42 ரன்களுடனும், குல்தீப் யாதவ் ரன் ஏதுமின்றியும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 289 ரன்களை குவித்தது. தென்னாப்பிரிக்கா அணி தரப்பில் லுங்கி நிகிடி, ரபாடா தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர். 290 ரன்கள் இலக்குடன் தென்னாப்பிரிக்கா அணி விளையாடி வருகிறது.

வெளிச்சமின்மையால் ஆட்டம் பாதிப்பு:

வாண்டரர்ஸ் மைதானத்தில் போதிய வெளிச்சமின்மையால் இந்திய நேரப்படி இரவு 7.06 மணி முதல் 7.53 மணி வரை 47 நிமிடங்கள் ஆட்டம் நிறுத்தப்பட்டது. இதனாலும் இந்திய அணியின் ரன் குவிப்பு விகிதம் கணிசமாக குறைந்தது.