Thursday, April 25மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

8 லட்சம் கடனுக்கு 6 கோடி ரூபாய் சொத்தை வளைத்துப்போட்ட சங்ககிரி தொழில் அதிபர்கள் கைது! சிபிசிஐடி போலீசார் அதிரடி!!

FOLLOW-UP

 

சங்ககிரியில்,
எட்டு லட்சம் ரூபாய்
கடனுக்கு 6 கோடி ரூபாய்
மதிப்புள்ள நிலத்தை சட்ட
விரோதமாக கிரயம்
செய்துகொண்ட பிரபல
தொழில் அதிபர்களை
சிபிசிஐடி போலீசார்
கைது செய்துள்ளனர்.

 

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள காவடிக்காரனூரைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (52). விவசாயி. மனைவி, ஒரு மகள் உள்ளனர். இவர், சங்ககிரியைச் சேர்ந்த பிரபல தொழில் அதிபர்களான சண்முகம், அவருடைய தம்பி மணி ஆகியோரிடம் கடந்த 1998ம் ஆண்டு 8 லட்சம் ரூபாய் கந்துவட்டிக்கு கடன் வாங்கியிருந்தார். புதிதாக டிப்பர் லாரிகள் வாங்குவதற்காக கடன் பெற்றிருந்தார். 3 ரூபாய் வட்டிக்கு கடன் கொடுத்துள்ளனர்.

 

இதற்காக அவரிடம் இருந்து சண்முகமும், மணியும் 23 ஏக்கர் நிலத்தை ‘பவர்’ பத்திரம் எழுதி பெற்றுக்கொண்டனர். மேலும், வெங்கடேசன் தனித்தனியாக மூன்று வெற்றுக் காசோலைகளிலும், ஒரு வெற்று பாண்டு பத்திரத்திலும் கையெழுத்துப் போட்டுக் கொடுத்துள்ளார். வாங்கிய கடனில் இரண்டரை லட்சம் மட்டுமே திருப்பிய செலுத்திய நிலையில், மொத்தமாக செட்டில்மெண்ட் செய்து விடும் முடிவில் மேற்கொண்டு வட்டி, அசல் தொகை செலுத்தாமல் இருந்திருக்கிறார் வெங்கடேசன்.

சண்முகம்

இந்நிலையில் அவர், தான் கொடுக்க வேண்டிய பாக்கித் தொகை எவ்வளவு என்று சொன்னால் செட்டில்மெண்ட் செய்து விடுவதாகவும், நிலத்தை கொடுத்து விடுமாறும் கேட்டுள்ளார். அதற்கு சண்முகம் சகோதரர்கள், ‘உங்கள் நிலத்தை 2001ம் ஆண்டிலேயே வேறு ஒருவருக்கு கிரயம் செய்துவிட்டோம். உங்கள் நிலம் நீங்கள் வாங்கிய கடனுக்கும் வட்டிக்கும் சரியாகப் போச்சு,’ என்று கூறியுள்ளனர்.

 

இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த வெங்கடேசன், ‘நான் கொடுக்க வேண்டிய தொகையைவிட 20 லட்சம் ரூபாய்கூட எடுத்துக்கொள்ளுங்கள். ஆனால், எனக்கு என்னுடைய நிலம் வேண்டும்’ என்று அழுது புலம்பியும், கந்துவட்டி ஆசாமிகள் அசரவில்லை. அதன்பிறகே அவர், இதுகுறித்து சேலம் மாவட்ட எஸ்பியிடம் புகார் அளித்தார். அதன்பிறகு இந்த புகார், சேலம் சிபிசிஐடி போலீசார் வசம் ஒப்படைக்கப்பட்டது.

 

யார் இந்த சண்முகம் பிரதர்ஸ்?:

 

சண்முகமும், மணியும்
சங்ககிரியில் ஸ்ரீபிஎஸ்ஜி
கலை அறிவியல் கல்லூரி,
பள்ளிக்கூடம், டிரான்ஸ்போர்ட்
சர்வீஸ், ஸ்பின்னிங் மில்,
நிதி நிறுவனம் என பல்வேறு
தொழில்களை நடத்தி
வருகின்றனர். அரசியல்,
காவல்துறை என பலமட்டங்களில்
செல்வாக்கை வளர்த்துக்கொண்டு
இருந்தாலும் எந்த ஒரு
அரசியல் கட்சியிலும் நேரடி
பொறுப்பு வகிக்கவில்லை.
உள்ளூரில் இவர்களை
‘மூவாயிரத்து ஏழு’ குடும்பம்
என்கிறார்கள். அதென்ன
மூவாயிரத்து ஏழு?.
அதையும் விசாரித்தோம்.

 

ஒரு காலத்தில்
சண்முகம் சகோதரர்களின்
தந்தை பழனிசாமி கவுண்டர்,
ஒரு வேன் வைத்திருந்தாராம்.
அந்த வாகனத்தின்
பதிவு எண் 3007.
அந்த எண் ராசியாக இருந்ததால்,
பின்னாள்களில் அவர்கள் வாங்கும்
கார்கள், வேன்கள், லாரிகள்,
கல்லூரி பேருந்துகள்
அனைத்திற்கும் 3007 என்பதையே
பதிவு எண்களாக பெற்றுள்ளனர்.
அதனால்தான் அவர்களை
3007 சண்முகம் குடும்பத்தினர்
என்கிறார்கள்.

 

இன்றைக்கு அவர்கள் பல ஆயிரம் கோடிகளுக்கு அதிபதி என்கிறார்கள் உள்ளூர்க்காரர்கள். ஆனாலும், சொந்த ஊரில் ஒருவர்கூட சண்முகம் மீதோ, அவருடைய தம்பி மணி மீதோ நல்ல அபிப்பிராயம் கொண்டிருக்கவில்லை என்பதும் நமது கள விசாரணையில் தெரிய வந்தது.

 

கந்துவட்டி மாஃபியா:

 

கடன் கேட்டு வருபவர்கள்,
எத்தனை கோடி கேட்டாலும்
அடுத்த சில நிமிடங்களில்
கொடுத்துவிடும் அளவுக்கு
பணத்தில் புரளக்
கூடியவர்கள்தான் சண்முகம்
சகோதரர்கள். ஆனால்,
என்னதான் தெரிந்தவராகவே
இருந்தாலும், அடமானமாக
அசையாச் சொத்துகளை பவர்
எழுதிக்கொடுத்தால்தான்
சல்லிக்காசு என்றாலும்
கொடுப்பார்கள். இன்று
அவர்கள் பினாமிகள்
பெயர்களில் குவித்து
வைத்திருக்கும் நிலபுலன்களில்
பாதிக்கும் மேற்பட்டவை,
கடன் வாங்கியவர்களிடம்
இருந்து வாரிச்சுருட்டியவைதான்
என்கிறார்கள்.

மணி

கந்துவட்டி மாஃபியாக்களான இவர்களிடம் சுமார் 100 கோடி ரூபாய் சொத்துகளை இழந்து, திக்கற்று நடுத்தெருவில் நிற்பதாகச் சொல்லி பதினான்கு பேர் எஸ்பி அலுவலகத்தில் கடந்த பிப்ரவரி மாதம் புகார் அளித்து இருந்தனர். 3007 சகோதரர்களின் முழு பின்னணி என்ன? கடன் வாங்கும் அப்பாவி மக்களின் சொத்துகள் முதலை வாயில் அகப்பட்ட விதம் குறித்தெல்லாம் கடந்த 4.3.2019ம் தேதியன்று ‘புதிய அகராதி’ இணைய இதழில் விரிவாக எழுதியிருந்தோம். இதற்கிடையே இந்த வழக்கு, சேலம் மண்டல சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டது.

 

நிலத்தை அடமானமாகப் பெறும்
சண்முகம் சகோதரர்கள்,
கடன் தொகை முழுதாக
செலுத்தப்பட்டாலும்கூட
நினைத்துப் பார்த்திராத
வகையில் ஒரு பெரும்
தொகையைக் குறிப்பிட்டு,
அவ்வளவு தொகை இன்னும்
பாக்கி இருக்கிறது. நீங்கள்
அடமானமாக எழுதிக்கொடுத்த
சொத்துகளை விற்றாலும்கூட
அந்த பாக்கித்தொகைக்கு
போதாது என்றெல்லாம்
கதை கதையாக அளப்பார்கள்
என்கிறார்கள்
பாதிக்கப்பட்டவர்கள்.
அதாவது,
எந்தக் காரணத்திற்காகவும்
‘பவர்’ எழுதி வாங்கிய
நிலமோ, வீடோ திரும்பவும்
கடன் பெற்றவர்களிடம்
போய்விடக்கூடாது என்பதில்
கவனமாக இருந்திருக்கிறார்கள்.
அதனால்தான் அவர்களால்
பல ஆயிரம் கோடி
சொத்துகளை குவிக்க
முடிந்திருக்கிறது.

 

இந்த நிலையில்தான் வெங்கடேசன் அளித்த புகாரின்பேரில், கடந்த செவ்வாய்  (ஆகஸ்ட் 27, 2019) அன்று மதிய வேளையில் சண்முகத்தையும், மணியையும் சிபிசிஐடி போலீசார் வீட்டில் வைத்தே கைது செய்திருக்கிறார்கள். போலீசார் சென்றபோது இருவரும் முண்டா பனியன், லுங்கி சகிதமாக கேஷூவல் உடையில் இருந்திருக்கிறார்கள்.

 

போலீசார் மப்டி உடையில் சென்றதால், அவர்களைப் பார்த்து யார் நீங்கள்? எதற்காக வீட்டுக்குள் நுழைகிறீர்கள்?’ என்றெல்லாம் கூச்சல் போட்டுள்ளார் மணி. ‘நாங்கள் இந்த சமுதாயத்தில் கவுரவமாக வாழ்ந்து வருகிறோம். எங்களைப் பார்த்து ஏறுங்கடா வண்டியில் என்று மரியாதைக் குறைவாக பேசுகிறீர்களே?’ என்று சண்முகமும் உதார் விட்டுள்ளார். அதற்கு போலீசார், அப்பாவி ஜனங்களோட சொத்தை எல்லாம் ஆட்டைய போடுற உனக்கு எல்லாம் எதுக்கு மரியாதை? என்று பதிலடி கொடுத்துள்ளனர்.

கந்துவட்டி மாபியாக்கள் சேலம் நீதிமன்ற வளாகத்தில்…

ஏற்கனவே கடந்த பிப்ரவரி மாதம் அவர் மீது சங்ககிரி போலீஸ் நிலையத்தில் சிலர் புகார் கொடுக்க, திடீரென்று கந்துவட்டி மாஃபியா சகோதரர்கள் தலைமறைவாகிவிட்டனர். முன்ஜாமினும் பெற்றார்கள். இந்தமுறை அவர்களை லேசில் விட்டுவிடக்கூடாது என்பதில் சிபிசிஐடி போலீசார் அவர்களை மிகத்தீவிரமாக கண்காணித்து வந்தனர். சரியான நேரத்தில் சிபிசிஐடி போலீஸ் ஐஜி சங்கரிடம் இருந்து கைது செய்ய ஒப்புதல் கிடைத்த அடுத்த சில நிமிடங்களில், கச்சிதமாக அவர்களை தூக்கி இருக்கிறது சிபிசிஐடி.

 

அரசியல் மற்றும் அதிகாரிகள் மட்டத்தில் செல்வாக்கில் இருக்கும் அவர்களை எந்த வகையிலும் முன்ஜாமின் பெற்று விடாமல் தீவிர கண்காணிப்பில் வைத்து இருந்ததால்தான் அவர்களை கைது செய்ய முடிந்திருக்கிறது என்கிறார்கள் சிபிசிஐடி தரப்பில் சிலர். பிறகு இருவரையும், சேலம் 4வது நீதித்துறை நடுவர் மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். நடுவர் உத்தரவின்பேரில் இருவரும் சேலம் மத்திய சிறையில் 15 நாள்கள் அடைக்கப்பட்டனர். ஏனோ இதுபற்றிய விவரங்கள் ஊடகங்களில் வெளிவராத வண்ணம் அடக்கி வாசித்துள்ளது காவல்துறை.

 

குற்ற வழக்குகளில் விசாரிப்பதில் கைதேர்ந்தவரான டிஎஸ்பி கிருஷ்ணனிடமே, இந்த கந்துவட்டி மாஃபியாக்கள் சரிவர பதில் சொல்லாமல் முரண்டு பிடித்துள்ளனர். பல கேள்விகளுக்கு சண்முகம் தெரியாது என்றே பதில் சொல்லி இருக்கிறார். மணி மட்டும், சிலருடைய நிலங்களையும், அசையா சொத்துகளையும் சட்டப்படிதான் கிரயம் செய்தோம். யாரையும் மோசடி செய்யவில்லை என்று மழுப்பலாக பதில் அளித்துள்ளார். தனக்கு முதுகுவலி இருப்பதால் தன்னால் நீண்ட நேரம் உட்கார முடியாது என்று கூறி, விசாரணையின்போது பலமுறை சண்முகம் தரையிலேயே படுத்துக் கொண்டாராம்.

 

உசுரோட கொல்றதுக்கு சமம்…:

 

இதுபற்றி சிபிசிஐடி காவல்துறை அதிகாரி ஒருவரிடம் பேசினோம்.

 

”சங்ககிரியைச் சேர்ந்த சண்முகம் பிரதர்ஸ் வெள்ளாளக் கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களும் சொந்த சாதியில் உள்ள விவசாயிகள், சிறு வணிகர்களாக தேடிப்பிடித்து கடன் கொடுத்துள்ளனர். கடன் வாங்கிய பலருக்கும் எந்தவித பின்புலமும் கிடையாது. கடன் கேட்ட அனைவருக்கும் சொத்துகலின் பேரில்தான் கடன் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கே தெரியாமல் மோசடியாக அவர்களின் சொத்துகளை பினாமிகள் பெயர்களில் கிரயம் செய்துள்ளனர்.

 

சண்முகம் சகோதரர்கள் செய்த குற்றம், அப்பாவி ஜனங்களை உயிரோடு கொன்று போடுவதற்கு நிகரானது. புகார் கொடுத்த வெங்கடேசன், சட்டைக்கு பட்டன்கூட இல்லாமல் ஊக்கை மாட்டிக்கொண்டு வந்து அமர்ந்திருக்கிறார். பார்க்கவே பரிதாபமாக இருக்கிறது. சண்முகமும், மணியும் எல்லாம் சட்டப்படிதான் நடந்திருக்கிறது என்று சட்டம் பேசுகிறார்கள். எப்படியும் ஆயிரம் கோடிக்கு மேல் சொத்து சேர்த்திருப்பார்கள். இவர்களால் பாதிக்கப்பட்டவர்கள் உடடியாக உள்ளூர் காவல் நிலையங்களில் புகார் கொடுக்கலாம்,” என்றார்.

 

கந்துவட்டி மாஃபியாக்கள் ஜாமின் கேட்டு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யும்பட்சத்தில், அவர்களுக்கு ஜாமின் வழங்கக்கூடாது என்று ஆட்சேபணை தெரிவிக்கவும் சிபிசிஐடி முடிவு செய்திருக்கிறது. மேலும் சிலரின் புகார்களின்பேரில் கந்துவட்டி மாஃபியாக்கள், அவர்களின் மகன், உடன்பிறந்த தங்கை ஆகியோர் மீதும் கைது நடவடிக்கைகள் பாயும் என்றும் தெரிகிறது.

 

– பேனாக்காரன்