Wednesday, April 24மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

உலகக்கோப்பை ஏர் ரைஃபிள் போட்டியில் தங்கம் வென்றார் தமிழக வீராங்கனை!

பிரேசிலில் நடந்த
துப்பாக்கி சுடுதல்
(ஏர் ரைஃபிள்) போட்டியில்
தங்கப்பதக்கம் வென்று
சாதனை படைத்துள்ளார்
கடலூரைச் சேர்ந்த
இளம் வீராங்கனை
இளவேனில் வாலறிவன்.
அவருக்கு உலகம்
முழுவதும் பாராட்டுகளும்,
வாழ்த்துகளும் குவிந்து
வருகின்றன.

 

பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோவில், தற்போது மூத்தோர்களுக்கான உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் (ஏர் ரைஃபிள்) போட்டி நடந்து வருகிறது. உலகம் முழுவதும் 72 நாடுகளைச் சேர்ந்த 541 வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

 

நேற்று (ஆகஸ்ட் 28, 2019) நடந்த இறுதிப்போட்டியில் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த வீராங்கனை இளவேனில் வாலறிவன், 10 மீட்டர் ஏர் ரைஃபிள் பிரிவில் 251.7 புள்ளிகள் பெற்று தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார். இரண்டாம் இடத்தை, பிரிட்டனை சேர்ந்த வீராங்கனை சியோனட் மின்டோஸ் பெற்றார். அவர் 250.6 புள்ளிகள் எடுத்தார்.

உலகக்கோப்பை மூத்தோர் பிரிவில் இளவேனில் வாலறிவன், தங்கம் வெல்வது இதுதான் முதல்முறை. என்றாலும், அவர் இதற்குமுன் ஜெர்மனியில் நடந்த ஜூனியர்களுக்கான துப்பாக்கி சுடும் போட்டியிலும் தங்கம் வென்று சாதனை படைத்திருக்கிறார். அவருக்கு உலகம் முழுவதிலும் இருந்து பாராட்டுகளும், வாழ்த்துகளும் குவிந்து வருகின்றன. ட்விட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களிலும் இந்திய, தமிழக பிரபலங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

 

இதற்கிடையே, இளவேனில் வாலறிவன் சிறு பேட்டி ஒன்றை ஃபேஸ்புக்கில் பதிவேற்றம் செய்துள்ளார். அதில், சாதிக்கத் துடிக்கும் இளைஞர்களுக்கு ஆலோசனையும் வழங்கி, கவனத்தை ஈர்த்துள்ளார்.

 

”அடுத்த இரண்டு
மாதங்களுக்குள் சீனாவில்
நடக்க உள்ள உலகக்கோப்பை
துப்பாக்கி சுடும் போட்டிக்கு
என்னை தயார்
படுத்திக்கொள்ள வேண்டும்
என்பதில்தான்
என் கவனம் எல்லாம்
இப்போது இருக்கிறது.

என்னைப்போல்
விளையாட்டில் சாதிக்கத்
துடிக்கும் இளைஞர்களுக்கு
ஒன்றைச் சொல்லிக்கொள்ள
விரும்புகிறேன். எந்தவித
பின்புலமும் இல்லாமல்
சாதிக்க நினைக்கும்போது,
நிறைய ஏற்ற இறக்கங்களை
சந்திக்க வேண்டியது வரும்.
சோதனைகளைக் கண்டு
துவண்டு போகாமல்,
அதை துணிவுடன் எதிர்த்து
நின்று போராட வேண்டும்.
மீண்டும் மீண்டும் தொடர்ந்து
முயற்சிக்கும்போது, நாம்
நினைத்த இலக்கை
உறுதியாக அடைந்து
விட முடியும். சாதிக்க
நினைக்கும்
அனைவருக்கும்
வாழ்த்துகள்.

 

நானும் கடந்த நாள்களில்
எத்தனையோ சவால்களைச்
சந்தித்து இருக்கிறேன்.
அத்தனை சவால்களையும்
கடந்து, அனைத்து தொடர்களிலும்
சிறப்பாக செயல்பட்டால்
மட்டுமே முதல் மூன்று தர
வரிசைக்குள் இடம் பிடிக்க
முடியும். ஒவ்வொரு தொடரிலும்
கற்றுக்கொண்டதை முழுமையாக
வெளிப்படுத்தினால், நிச்சயம்
வெற்றி பெற முடியும்.
இதுவரை எனக்கு உறுதுணையாக
இருந்த பெற்றோருக்கு
இந்த பதக்கத்தை
அர்ப்பணிக்கிறேன்,” என்றார்
இளவேனில் வாலறிவன்.

 

‘புதிய அகராதி’ இணைய இதழ் சார்பிலும், வாசக தோழர்கள் சார்பிலும் தமிழகத்தின் தங்க மங்கை இளவேனில் வாலறிவனுக்கு உளம்கனிந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

 

– பேனாக்காரன்