சேலம் மாவட்டம் சங்ககிரியைச்
சேர்ந்த விவசாயிகளும், சிறு தொழில்
அதிபர்களும் சண்முகம் மற்றும் மணி
என்ற இருபெரும் கந்துவட்டி மாஃபியாக்களால்
சொத்து, சுகங்களை இழந்து நடுத்தெருவில்
தத்தளிக்கும் துயர நிலைக்குத்
தள்ளப்பட்டு உள்ளனர்.
கடந்த 7.2.2019ம் தேதியன்று சென்னையில் தங்களை, விவசாயிகள் என்று அறிமுகப்படுத்திக்கொண்ட சங்ககிரி சண்முகம் பிரதர்ஸ் தங்களுடைய, நிலத்தையும் இதர சொத்துகளையும் கேட்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் மைத்துனர் வெங்கடேஷ் மிரட்டுவதாக ஊடகங்களிடம் குமுறினர். ஆளுங்கட்சியினர்க்கு எதிரான குற்றச்சாட்டு என்பதால் அதை அப்படியே எல்லா ஊடகங்களும் பிரதிபலித்தன.
ஆனால், சண்முகம் சகோதரர்களின் பேட்டியைப் பார்த்த சங்ககிரிகாரர்களோ தலையில் அடித்து நொந்து கொண்டனர். உள்ள நிலவரம் வேறு; செய்தியாக சொல்லப்படுவதோ வேறு என்பதால் அந்த ஊர் மக்கள் ஊடகங்கள் மீதும் நம்பிக்கையற்றுப் போனார்கள். சிலர் நம்மை தொடர்பு கொண்டு, நீங்களாவது விசாரித்து எழுதுங்கள் என்ற வேண்டுகோள் வைக்க, நாமும் கள விசாரணையில் இறங்கினோம்.
நமது விசாரணையில், ஒட்டுமொத்த
சங்ககிரி மக்களுமே சண்முகம் குடும்பத்திற்கு
எதிராக நிற்பது தெரிய வந்தது.
சங்ககிரி மலைக்கோட்டை உச்சியில்
நின்று பார்த்தால் கீழே வானளாவ
தெரியும் பல கட்டடங்கள், பரந்த விவசாய
நிலங்களில் பெரும்பகுதி சண்முகம் மற்றும்
அவருடைய தம்பி மணி குடும்பத்திற்குச்
சொந்தமானது என்கிறார்கள்.
அத்தனையும் அப்பாவிகளிடம் இருந்து
ஏமாற்றி எழுதி வாங்கியது.
ஸ்ரீ பிஎஸ்ஜி கல்வி நிலையங்கள்,
சண்முகம் டிரான்ஸ்போர்ட் சர்வீஸ்,
ஸ்பின்னிங் மில் என மிகப்பெரும்
தொழில் சாம்ராஜ்யத்திற்கு அதிபதிகள்தான்
இந்த சண்முகம் பிரதர்ஸ்.
இவர்களை சங்ககிரியில், ‘3007’ என்ற
பட்டப்பெயர் மூலம் குறிப்பிடுகின்றனர்.
சண்முகம், மணி என்பதைக் காட்டிலும்
‘மூவாயிரத்து ஏழு’ குடும்பம் என்றால்
ரொம்பவே பிரபலம். அந்தப் பட்டப்பெயருக்கும்
ஒரு பின்னணி கதை இருக்கிறது.
சண்முகம் பிரதர்ஸின் தந்தை பழனிசாமி கவுண்டர்,
அந்தக் காலத்தில் ஒரு வேன் வைத்திருந்தார்.
அதனுடைய பதிவெண்தான் இந்த ‘3007’.
அதையே செண்டிமென்டாக கருதிய இவர்கள்,
தாங்கள் அடுத்தடுத்து வாங்கிய இன்னோவா,
பென்ஸ் கார்கள் உள்பட அனைத்து
வாகனங்களின் பதிவெண்களையும்
‘3007’ என்று வருமாறு பதிவு செய்திருக்கிறார்கள்.
அவர்களால் பாதிக்கப்பட்ட மோகன் மற்றும் அவருடைய மகன் தினேஷ் ஆகியோர் நம்மிடம் பேசினார்கள்.
”சங்ககிரி நகரின் மையப்பகுதியில் எங்களுக்குச் சொந்தமான இரண்டேகால் ஏக்கர் நிலத்தை, 1997ம் ஆண்டு சண்முகம் பிரதர்ஸிடம் அடமானமாக வைத்து 15 லட்சம் ரூபாய் கடன் வாங்கினோம். அப்போது எங்கள் நிலத்தை, சண்முகம் பெயருக்கு கிரயம் எழுதிக் கொடுத்தோம். மேலும், நாங்கள் கையெழுத்துப் போட்ட நிரப்பப்படாத பத்திரங்கள், பாண்டு பேப்பர்கள், வெற்று காசோலைகளையும் பெற்றுக்கொண்டனர். இதற்காக 2.25 ரூபாய் வீதம், ஒரு வருடம் வட்டி கட்டி வந்தோம். பின்னர் தொழில் நட்டம் ஏற்பட்டதால் தொடர்ந்து வட்டி செலுத்த முடியவில்லை.
நாங்கள் வாங்கிய கடனுக்கு வட்டி,
அசல் எல்லாம் சேர்ந்து 50 லட்சம்
ரூபாய்தான் வந்தது. அதனால் நிலத்தை
விற்று கடனை அடைத்துவிட முடிவு செய்து
சண்முகம் பிரதர்ஸை அணுகினோம்.
அவர்களோ, ‘காடு முடிஞ்சு போச்சு.
இப்போது வந்து கேட்கிறீர்கள்?’ என
அலட்சியமாக கூறினர். அவர்களின்
கால்களில் விழுந்து கெஞ்சி கதறினோம்.
ஒருவழியாக நிலத்தை விற்று
செட்டில்மெண்ட் செய்ய ஒப்புக்கொண்டனர்.
கடந்த 2018ல், எங்களுடைய சப்டிவிஷன்
செய்யப்படாத மேற்சொன்ன சொத்தை
வாங்கிக்கொள்ள ஒருவர் வந்தார்.
நாலரை கோடி ரூபாய்க்கு விற்க முடிவு
செய்யப்பட்டிருந்தோம். திடீரென்று சண்முகம்
தலையிட்டு, யாரைக் கேட்டு 6 கோடி
பெறுமானமுள்ள சொத்தை நாலரை
கோடிக்கு விற்கலாம்? என்று சொல்லிவிட்டு
அங்கிருந்து விருட்டென்று கிளம்பிவிட்டார்.
மீண்டும் மணியின் கால்களில் விழுந்து
கெஞ்சினோம். அவரும் தன் அண்ணனிடம்
பேசி சமாதானம் செய்வதாக கூறினார்.
ஒருகட்டத்தில், நீங்களே நிலத்தை வைத்துக்கொண்டு எங்களுக்கு நியாயமானதை கொடுங்கள் என்றும் சொல்லிவிட்டோம். அதற்கு சண்முகம் பிரதர்ஸ், 5 லட்சம் ரூபாய் தருகிறோம். வாங்கிக்கொண்டு ஓடிவிடுங்கள் என்றனர். அதன்பிறகுதான் நாங்கள் சங்ககிரி டிஎஸ்பி அசோக்குமாரிடம் புகார் அளித்தோம். டிஎஸ்பி அவர்களிடம், புகார் குறித்து கேட்டதற்கே, சண்முகம் பிரதர்ஸ் நேராக டிஜிபி ராஜேந்திரனிடம் தஞ்சம் அடைந்துவிட்டனர்.
நாங்கள் போலீசில் புகார் அளித்ததை அறிந்த ராமசாமி என்பவரும் ‘3007’ சண்முகம் பிரதர்ஸ் மீது கந்துவட்டி புகார் அளித்தார். அவர்கள் மீது, கடந்த 7.2.2019ம் தேதி, 14 பேர் சுமார் 100 கோடி சொத்துகளை அபகரித்துக் கொண்டதாக புகார் அளித்துள்ளனர். இதற்கிடையே, டிஜிபியின் மைத்துனர் சரவணன் என்பவர், டிஎஸ்பி அலுவலகத்திற்கு நேரில் வந்து, சண்முகம் பிரதர்ஸூக்கு ஆதரவாக பேசினார். இதை டிஎஸ்பி அசோக்குமார் நிராகரித்ததால், அவர் மீதும் சண்முகம் தரப்பினர் பொய்யான குற்றச்சாட்டுகளை சொல்லி வருகின்றனர்.
இப்போது வரை எங்கள் நிலத்துக்கு நாங்கள்தான் கந்தாயம் வரி கட்டிக்கொண்டு வருகிறோம். சங்ககிரியில் யாராவது ஒருவர் ‘3007’ சண்முகம் பிரதர்ஸை பற்றி நல்ல விதமாகச் சொல்லிவிட்டால்கூட நாங்கள் புகாரை திரும்பப் பெற்றுக்கொள்கிறோம்,” என மோகனும், அவருடைய மகன் தினேஷூம் சொன்னார்கள்.
சண்முகம் பிரதர்ஸ் யாருக்கு வட்டிக்கு
பணம் கொடுப்பதாக இருந்தாலும்,
கடன் கேட்டு வந்தவரிடம் இருக்கும்
அத்தனை சொத்துகளையும் பவர் எழுதிப்
பெற்றுக்கொண்டுதான் கடன் கொடுக்கின்றனர்.
உஷாராக தங்கள் பெயருக்கு கிரயம்
செய்து கொள்வதும் உண்டு.
தொழில், குழந்தைகள் படிப்பு,
பிள்ளைகளின் திருமணம் என்ற
பிரச்னைகளில் சிக்கிக்கொண்டிருக்கும்
அப்பாவிகள், சொற்ப கடனுக்காக தங்களிடம்
உள்ள மொத்த சொத்துகளையும் ‘3007’
சகோதரர்களுக்கு தாரை வார்க்கும்
அவலம் நிலை ஏற்பட்டு விடுகிறது.
இவ்வாறு கொடுக்கப்படும் கடனுக்கும், செலுத்தப்படும் வட்டிக்கும் எந்த ஒரு ரசீதுகளும் வழங்கப்படுவதில்லை. ஆனால் சண்முகம் பிரதர்ஸிடம் இருந்து கடன் பெற்றதும், அதற்காக கோடிக்கணக்கில் வட்டி மட்டுமே செலுத்தியதும் அப்பட்டமான உண்மை என்கிறார்கள் பாதிக்கப்பட்டவர்கள்.
இது ஒருபுறம் இருக்க, மோகன் தனது தூரத்து உறவினரான எடப்பாடி பழனிசாமியின் மைத்துனர் வெங்கடேசனின் உதவியை நாடியுள்ளார். அவரும் இவர்களுக்காக பரிந்து பேசியதைத்தான் சண்முகம் பிரதர்ஸ் வெங்கடேஷ் தங்களை மிரட்டுவதாக புகார் அளித்துள்ளனர்.
இதுகுறித்து வெங்கடேஷிடம் கேட்டதற்கு,
”மோகன் என்பவர் என் தாத்தா வழியில்
எனக்கு உறவினர். ஆனால் நான்
யாருக்காகவும் எந்த பஞ்சாயத்துக்கும்,
எந்த ஞாய காரியத்துக்கும் போறதில்ல.
நான் உண்டு, என் பிஸினஸ் உண்டுனு
இருக்கேன். சங்ககிரியில் யாரிடம்
வேணும்னாலும் விசாரிச்சுக்குங்க,” என்றார்
ரத்தின சுருக்கமாக.
அதேநேரம், சேலத்தில் வசிக்கும் தமிழக டிஜிபி ராஜேந்திரனின் மைத்துனர் சரவணன் (டிஜிபி மனைவியின் சித்தப்பா மகன்), சண்முகம் பிரதர்ஸ்க்கு ஆதரவாக இரண்டுமுறை சங்ககிரி டிஎஸ்பியை நேரில் சந்தித்துப் பேசியிருப்பதும் நமது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இது தொடர்பாக சரவணனிடமும் கேட்டோம். அதற்கும் அவர், ”சண்முகத்தின் தம்பி மணியின் மகன் ஆனந்த். அவருடைய நண்பர்கள் எனக்கும் நண்பர்களாக இருந்தார்கள். அப்படித்தான் ஆனந்தின் நட்பு கிடைத்தது. நான் சண்முகம் தரப்புக்காக டிஎஸ்பியிடம் பேசினேன் என்று சொல்வதில் கொஞ்சம்கூட உண்மையில்லை. இந்த மாதிரியான பிரச்னைகளில் நான் தலையிடுவதில்லை,” என்று அவரும் அதிரடியாக மறுத்தார்.
இத்தனைக்கும், தினேஷின் தந்தை மோகன் தற்போது இரண்டு கிட்னியும் பாதிக்கப்பட்ட நிலையில் இருக்கிறார். அவருடைய மருத்துவச் செலவுகளுக்காகவாவது நிலத்தை விற்று கடனை அடைத்து விடலாம் என்றாலும் அதற்கும் குறுக்கே நிற்கிறார்கள் சண்முகம் பிரதர்ஸ்.
இந்நிலையில், சங்ககிரி அக்கமாபேட்டையைச் சேர்ந்த ராமசாமி என்பவர், சங்ககிரி போலீசாரிடம் அளித்த புகாரின்பேரில் சண்முகம், அவருடைய தம்பி மணி, சண்முகத்தின் மகன் கார்த்திகேயன், தங்கை பர்வதம் ஆகிய நான்கு பேர் மீதும் கந்துவட்டி தடைச்சட்டம் பிரிவு 4 மற்றும் இ.த.ச. பிரிவுகள் 420 (மோசடி), 467 (போலி ஆவணம் தயாரித்தல்), 468 (உள்நோக்குடன் போலி ஆவணம் தயாரித்தல்), 471 (ஏமாற்றுதல்) ஆகிய ஐந்து பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
இந்தப் புகார் குறித்து ராமசாமியை அவருடைய வீட்டில் சந்தித்துப் பேசினோம்.
”நான் மைன்ஸ் தொழில் செய்து வந்தேன். 1997ல் தொழில் விரிவாக்கத்திற்காக ‘3007’ சகோதரர்களிடம் 3 ரூபாய் வட்டிக்கு 25 லட்சம் ரூபாய் கடன் பெற்றேன். இதற்காக இப்போது நாங்கள் குடியிருக்கும் இந்த வீட்டை சண்முகமும், மைன்ஸ் தொழிலில் என்னுடைய 20 சதவீத பங்குகளை மணியும் பவர் எழுதி வாங்கிக் கொண்டனர். மாதம் 75 ஆயிரம் வீதம் 2006ம் ஆண்டு வரை 75 லட்சம் ரூபாய் வட்டி செலுத்தி வந்தேன். 27.1.2006ல் மணிக்கு பவர் கொடுத்திருந்த மைன்ஸ் பங்குகளை அவர் பெயருக்கு கிரயம் எழுதித் கொடுக்கும்படி சண்முகத்தின் மகன் கார்த்திகேயன் மிரட்டினார். அதனால் வேறுவழியின்றி நானும் கிரயம் செய்தேன்.
அப்போது, அசல் தொகையில்
10 லட்சத்தை அவர்களிடம் திருப்பிக்
கொடுத்தேன். பிறகு, எஞ்சியுள்ள
15 லட்சம் ரூபாய்க்கு மட்டும்
2012ம் ஆண்டு வரை 35 லட்சம் ரூபாய்
வட்டி செலுத்தினேன். 20.9.2012ம் தேதியன்று,
பாக்கி அசல் பணத்தை எடுத்துக்கொண்டு,
கணக்கு முடிப்பதற்காக சண்முகம்
வீட்டிற்குச் சென்றேன். அப்போதுதான்
அவர், 6.7.2001ம் தேதியே பர்வதம்
என்ற பினாமி பெயரில் என்னுடைய
வீட்டை போலி ஆவணங்கள் மூலம்
கிரயம் செய்திருப்பது தெரிய வந்தது.
ஏற்கனவே கடனுக்கு 1.10 கோடி ரூபாய்
வட்டி மட்டுமே செலுத்தியிருக்கும் நிலையில்,
இன்னும் அசல் மற்றும் வட்டி
எல்லாம் சேர்த்து, மேலும்
ஒரு கோடி ரூபாய் கொடுக்க
வேண்டும் என்றார் சண்முகம்.
இந்நிலையில், நாங்கள் குடியிருந்து வரும் இந்த வீட்டை உடனடியாக காலி செய்யும்படி சண்முகம் பிரதர்ஸ் நேரில் வந்து மிரட்டிவிட்டுப் போயிருக்கிறார்கள். நான், என் மனைவி, மகன் எல்லோரும் அவர்களின் கால்களில் விழுந்து கெஞ்சி பார்த்துட்டோம். ஒன்றும் வேலைக்கு ஆகவில்லை. இந்த ஊரில் பல பேர் அவர்களிடம் சொத்துகளை இழந்து சிக்கிக் கொண்டிருக்கிறார்கள். பல்லாயிரம் கோடிக்கு அதிபதிகளான அவர்களை, எங்களைப்போன்ற சாமான்யர்களால் என்ன செய்து விட முடியும்?,” என்கிறார் ராமசாமி.
இப்போது சண்முகம் பிரதர்ஸின் கல்லூரி அமைந்திருக்கும் இடமே மனோகர் என்பவருக்குச் சொந்தமான 15 ஏக்கர் நிலத்தை பறித்துக்கொண்டதுதான் என்ற தகவலையும் சொல்கிறார்கள் சங்ககிரிவாசிகள். கடந்த 2016 சட்டமன்ற தேர்தலின்போது தமிழ்மாநில காங்கிரஸ் சார்பில் சீட் கேட்டதாகவும், ஆனால் பொதுமக்களிடம் அவர் மீதுள்ள அதிருப்தி காரணமாக அவருக்கு பின்னர் சீட் மறுக்கப்பட்டதாகவும் ஒரு தகவலைச் சொல்கின்றனர். இவர்களிடம் கந்துவட்டிக்கு கடன் வாங்கியவர்கள், அதை திருப்பிச் செலுத்திய பிறகும், சொத்துகளை தராமல் இழுத்தடித்து வந்ததால், ஏற்பட்ட மன உளைச்சலில் இதுவரை 8 பேர் இறந்துள்ளதாகவும் அதிகாரப்பூர்வமற்ற தகவலையும் சொல்கிறார்கள் சங்ககிரி வாசிகள்.
வெளிப்படையாக எந்த ஒரு அரசியல் கட்சியையும் சாராமல் இருக்கும் 3007 பிரதர்ஸ், எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் ஆட்சியாளர்களையும், அதிகாரிகளையும் பணத்தால் வளைத்து விடுவது அவர்களின் ஸ்டைல். எங்கேயும் யாரிடமும் அண்ணன், தம்பி இருவருமே நேரில் சென்றோ அல்லது தங்கள் இடத்திற்கு வரவழைத்தோதான் பேசுகிறார்கள். இத்தனை குற்றச்சாட்டுகள் சொல்லப்பட்டாலும் ரவுடிகளைக் கொண்டு ஒடுக்குவதுபோன்ற வேலைகளில் அவர்கள் ஈடுபட்டதில்லை என்கிறார்கள், பாதிக்கப்பட்டவர்கள்.
இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து சண்முகம் பிரதர்ஸை தொடர்பு கொண்டபோது இருவரின் செல்போன்களும் ‘சுவிட்ச்ஆப்’ செய்யப்பட்டிருந்தன. அவர்கள் பல கோடி ரூபாய் செலவில் புதிதாக கட்டியிருந்த ஆடம்பர பங்களாவின் கிரக பிரவேச நிகழ்ச்சி கடந்த 10.2.2019ம் தேதி நடத்தப்படும் என்று உறவினர்களை அழைத்திருந்தனர். ஆனால் அவர்கள் மீதான புகார்களால் இருவருமே தங்களின் சொந்த வீட்டின் கிரகபிரவேச நிகழ்ச்சியில்கூட கலந்து கொள்ள முடியாமல் தலைமறைவாகிவிட்டனர்.
காவல்துறை உயரதிகாரிகளை நட்பாக்கிக் கொண்டு, அவர்களை தங்கள் கல்லூரி விழாக்களுக்கு விருந்தினர்களாக அழைத்து வந்து பேச வைக்கின்றனர். டிஜிபிக்கள் ராஜேந்திரன், சைலேந்திரபாபு உள்ளிட்ட முக்கிய காவல்துறை அதிகாரிகள் ஸ்ரீபிஎஸ்ஜி கல்லூரி விழாக்களில் கலந்து கொண்டுள்ளனர். இதையெல்லாம் பார்க்கும் பாதிக்கப்பட்டவர்கள், அவர்கள் மீது புகார்கள் சொல்ல முடியாமல் கையறு நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
அதேநேரம், 3007 சகோதரர்களிடம் நிலத்தையும், வீட்டையும் பறிகொடுத்த பலர் அதற்கான போதிய ஆதாரங்களை சமர்ப்பிக்காததும் இந்த குற்றச்சாட்டுகள் வலுவிழக்கக் காரணமாக இருக்கின்றன என்பதும் மறுப்பதற்கில்லை.
‘அதிகார திமிர, பணக்கார பவர தூக்கிப்போட்டு மிதிக்கத் தோணுது…’ என்று சங்ககிரி மக்கள் கிளர்ந்தெழத் தொடங்கி விட்டனர். சட்டமும், அரசும் நினைத்தால் கந்துவட்டி மாஃபியாக்களுக்கு தக்க பாடம் புகட்ட முடியும்.
– பேனாக்காரன்