Friday, April 26மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

சேலம் வாலிபர் மீது தாக்குதல்; பணம், நகை பறிப்பு

சேலம்: சேலம் வாலிபரை சரமாரியாக தாக்கி, பணம், நகைகளை பறித்துச்சென்றதாக அரசு ஊழியர் மீது புகார் எழுந்துள்ளது.

சேலம் ஆண்டாள் தெருவைச் சேர்ந்த சண்முகம் மகன் ராகேஷ் (37) (படம்). டெல்லியை தலைமை இடமாகக் கொண்டு செயல்படும் தனியார் நிறுவனத்தில் தென்னிந்திய ஒருங்கிணைப்பாளராக பணியாற்றி வருகிறார்.

இந்த நிறுவனம், விவசாயிகளுக்கு தேனீ வளர்ப்பு பயிற்சியும், பண்ணை அமைத்துக் கொடுக்கும் பணிகளிலும் ஈடுபட்டு வருகிறது. சேலம் கோரிமேட்டைச் சேர்ந்த சிவக்குமார் என்பவருக்கு ஏற்காடு முளுவி பகுதியில் சொந்தமாக தோட்டம் உள்ளது.

இவருடைய தோட்டத்தில், கடந்த ஜூலை 23ம் தேதி தனியார் நிறுவனம் சார்பில் 245 தேனீ வளர்ப்பு பெட்டிகள் வைக்கப்பட்டன. இதன்மூலம் சேகரமாகும் தேனில் ஒரு பகுதியை நிலத்திற்குச் சொந்தமானவருக்கு வழங்கப்படும் என்ற ஒப்பந்த அடிப்படையில் தேனீ வளர்ப்புப் பெட்டிகள் வைக்கப்பட்டன.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக, தேனீ பெட்டிகள் வைக்கப்பட்டதற்காக தனக்கு வாடகை பணம் கொடுக்க வேண்டும் சிவக்குமார் அடிக்கடி கேட்டு வந்துள்ளார். நிறுவனத்தின் ஒப்பந்த விதிகளில் அவ்வாறு இல்லை என ராகேஷூம் மறுத்து வந்துள்ளார்.

இதையடுத்து சிவக்குமாரின் நிலத்தில் பொருத்தப்பட்டு இருந்த தேனீ வளர்ப்பு பெட்டிகளை மீண்டும் எடுத்துச் செல்வதற்காக நேற்று மாலை ராகேஷ் முளுவி பகுதிக்குச் சென்றார். அப்போதும் சிவக்குமார், ராகேஷிடம் வாடகைப்பணம் வேண்டும் என்று கேட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர்களுக்குள் வாக்குவாதம் நடந்துள்ளது. அப்போது ஆத்திரம் அடைந்த சிவக்குமார் மற்றும் அவருடைய நண்பரான சேலத்தைச் சேர்ந்த வினோத் ஆகியோர் ராகேஷை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் முகம், முதுகுப்பகுதியில் பலத்த காயம்அடைந்த ராகேஷ், சேலம் அரசு மருத்துவமமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து ராகேஷ் கூறுகையில், ”சம்பவம் நடந்தபோது இரவு 8.30 மணி இருக்கும். இருட்டுப் பகுதியாக இருந்தது. அப்போது சிவக்குமார், வினோத் மட்டுமின்றி அவர்களுடைய கூட்டாளிகள் 5 பேரும் என்னை சரமாரியாக தாக்கினர். இதில் என்னுடைய இடதுபக்க கண்ணில் பலத்த காயம் ஏற்பட்டு, பார்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வலியும் அதிகமாக உள்ளது.

மருத்துவர்கள் நாளை (21/8/17) ஸ்கேன் பரிசோதனை செய்வதாக கூறினர். அந்த கும்பல் என்னை தாக்கிவிட்டு, என்னிடம் இருந்த ரூ.97 ஆயிரம் ரொக்கம், ஆண்டிராய்டு மொபைல், 5 பவுன் செயின் ஆகியவற்றையும் பறித்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டனர்,” என்றார்.

புகாரில் கூறப்பட்டுள்ள சிவக்குமார், அரசு ஊழியர் என்று கூறப்படுகிறது.