Thursday, April 25மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

நடிகர் தனுஷ் வலையில் ரஜினி?

திரைத்துறையில் கால் பதித்த நாள் முதல் தொடர்ந்து மூத்த இயக்குநர்களிடம் மட்டுமே பணியாற்றி வந்த ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த், ‘கபாலி’ படம் மூலமாக இளம் இயக்குநர்களின் பக்கம் கவனத்தை திருப்பி இருக்கிறார்.

கடந்த 1999-ல் வெளியான ‘படையப்பா’, பெரிய அளவில் பேசப்பட்டதைத் தொடர்ந்து, ‘முத்து’, ‘லிங்கா’ வரை ரஜினியின் ஆஸ்தான இயக்குநராக, இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் இடம் பெற்றிருந்தார்.

அதற்கு முன்பு, ரஜினி – தீபிகா படுகோன் நடிப்பில் ‘ராணா’ படத்தை இயக்கும் வாய்ப்பையும் கே.எஸ்.ரவிக்குமாரே பெற்றிருந்தார்.

ரஜினியின் மகள் சவுந்தர்யா இயக்கத்தில் வெளியான ‘கோச்சடையான்’ அனிமேஷன் படத்தில்கூட, திரைக்கதை உள்ளிட்ட பணிகளை கே.எஸ்.ரவிக்குமாரே ஏற்றிருந்தார்.

‘சிவாஜி‘, ‘எந்திரன்’ என பிரம்மாண்ட இயக்குநர் சங்கர் உடனும், ‘சந்திரமுகி’, ‘குசேலன்’ என இயக்குநர் பி.வாசுவுடனும் பணியாற்றி வந்தார் ரஜினி. இப்போது, இயக்குநர் சங்கர் உடன் ‘2.0’ படத்தில் இணைந்து பணியாற்றி வருகிறார்.

இதற்கிடையே, குறுகிய கால தயாரிப்பாக, ‘காலா’ படத்தில் நடித்து வருகிறார் ரஜினி. இதற்குமுன், ‘கபாலி‘யில் ரஜினியை இயக்கிய அதே பா.ரஞ்சித்தான் இந்தப் படத்தையும் இயக்குகிறார். தனுஷின் ‘வுண்டர்பார்’ நிறுவனமே இப்படத்தைத் தயாரிக்கிறது.

‘கபாலி’ படத்தை இயக்கும் வாய்ப்பு ரஞ்சித்துக்கு கிடைத்தபோதே, ரஜினியின் காஷ்ஷீட்டுக்காக காத்திருந்த மூத்த இயக்குநர்கள் பலரும் ஏக்கப் பெருமூச்சு விட்டனர்.

காரணம், ‘கபாலி‘ படத்திற்கு முன்பாக, ‘அட்டக்கத்தி’, ‘மெட்ராஸ்‘ என இரண்டு படங்களை மட்டுமே ரஞ்சித் இயக்கி இருந்தார்.

இந்த நிலையில், ‘காலா’ படம் முடிந்து, ரஜினியின் அடுத்த படத்தை இயக்குநர் வெற்றிமாறன் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இயக்குநர் வெற்றிமாறனும், நடிகர் தனுஷூம் நெருக்கமான நண்பர்கள் என்பது தமிழ்த்திரை உலகமே அறியும்.

தனுஷின் ஏற்பாட்டின் பேரிலேயே வெற்றிமாறன், ரஜினியைச் சந்தித்து கதை விவாதம் செய்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. வெற்றிமாறன் இயக்கத்தில் ரஜினி நடிப்பது உறுதி செய்யப்பட்டுவிட்டால், அந்தப் படத்தையும் நடிகர் தனுஷே ‘மெகா பட்ஜெட்டி’ல் தயாரிக்கவும் வாய்ப்பு இருக்கிறது.

அந்தப்படம் பெரிய அளவில் வெற்றிபெறும் நிலையில், ரஜினி – தனுஷ் கூட்டணி அடுத்தடுத்த படங்களுக்கும் தொடரலாம் என்ற பேச்சும் கோலிவுட்டில் வளம் வருகிறது.

– இளையராஜா சுப்ரமணியம்

contact: selaya80@gmail.comஇணையத்தில் தொடர: www.puthiyaagarathi.com