Friday, April 26மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

சேலம் கூட்டுறவு தேர்தல்: அதிகாரிகள் கூட்டு சேர்ந்து கோல்மால் செய்தது அம்பலம்!

சேலம் மற்றும் நாமக்கல் மாவட்ட கூட்டுறவு வீட்டுவசதி சங்கப் பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன நாணய சங்க தேர்தலில், அதிகாரிகள் கூட்டு சேர்ந்து வேட்புமனுத் தாக்கல் செய்யாதவர்களை எல்லாம் நிர்வாகிகளாக நியமிக்க சதி செய்திருப்பது அம்பலமாகி உள்ளது.

சேலம் பள்ளப்பட்டியில் எஸ்.111, சேலம் மற்றும் நாமக்கல் மாவட்ட கூட்டுறவு வீட்டுவசதி சங்கப் பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன நாணய சங்கம், கடந்த 1998ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இந்த சங்கத்தில் சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களைச் சேர்ந்த வீட்டுவசதி சங்க பணியாளர்கள் 400க்கும் மேற்பட்டோர் அங்கத்தினர்களாக உள்ளனர்.

இதன் உறுப்பினர்களிடம் இருந்து நிரந்தர இட்டு வைப்புகளை பெறுவதும், அவர்களுக்கு கடனுதவிகளை வழங்குவதும் இந்த சங்கத்தின் பணிகளாகும். கூட்டுறவு தேர்தல் என்றாலே, ஆளுங்கட்சிகளே அனைத்துப் பதவிகளையும் சட்ட விரோதமாக கைப்பற்றுவதுதான் தமிழ்நாட்டில் காலங்காலமாக எழுதப்படாத சட்டமாக இருந்து வருகிறது.

எனினும், பணியாளர்கள் சங்கங்களைப் பொருத்தவரை அரசியல் தலையீடு இல்லாமல், முறையான தேர்தல் மூலமே நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு வந்தனர். அதுவும் கடந்த 2013ம் ஆண்டு நடந்த கூட்டுறவுத் தேர்தலின்போது தகர்க்கப்பட்டு, அரசியல் புகுத்தப்பட்டது. கூட்டுறவுத்துறை அதிகாரிகளும் ஆளுங்கட்சியினரின் ஊதுகுழலாக மாறிவிடுகின்றனர்.

இந்நிலையில், சேலம் மற்றும் நாமக்கல் மாவட்ட கூட்டுறவு வீட்டுவசதி சங்க பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன நாணய சங்கத்திற்கு புதிய நிர்வாகிகளைத் தேர்வு செய்ய கடந்த மார்ச் 31ம் தேதி வேட்புமனுத் தாக்கல் நடந்தது.

இந்த சங்கத்திற்கு மொத்தம் 7 இயக்குநர்கள் நியமி க்கப்படுவர். அதில் ஒருவர் பட்டியல் இனத்திலிருந்தும், பெண் பிரதிநிதிகள் 2 பேரும், பொது பிரதிநிதிகள் 4 பேரும் என மொத்தம் 7 பேர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.

இந்தமுறையும் ஆளுங்கட்சியினரே சுற்றி வளைத்துக்கொண்டு எல்லா பதவிகளுக்கும் வேட்புமனுத்தாக்கல் செய்வதும், அவர்களே போட்டியின்றி வெற்றி பெற்றதாக அறிவிப்பதுமாக இருந்தனர். முதல் இரண்டுகட்டத் தேர்தலிலும் அப்படிப்பட்ட முறைகேடுகளும், விதிமீறல்களும்தான் நடந்து வந்தது.

மேற்படி சங்கத்தில் ஆளுங்கட்சி மற்றும் இடதுசாரி கட்சியை சேர்ந்த இரு தரப்பினர் போட்டிப்போட்டு வேட்புமனுத் தாக்கல் செய்தனர். ஆத்தூரைச் சேர்ந்த ஆளுங்கட்சி பிரமுகர் ஜோதி பிரசாத் தலைமையில் 8 பேரும், நாமக்கல்லைச் சேர்ந்த இடதுசாரி கட்சி பிரமுகர் ஒருவர் தரப்பில் 7 பேரும், மாற்று வேட்பாளர்களாக 3 பேரும் என மொத்தம் 18 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்கள், ஏப்ரல் 2ம் தேதி பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இவற்றில் நாமக்கல் பிரமுகரின் அணியினரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டது. மாற்று வேட்பாளர்களாக தாக்கல் செய்தவர்களின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. ஜோதி பிரசாத் அணி தரப்பில் வேட்புமனு படிவத்தை சரியாக பூர்த்தி செய்யவில்லை என பானுமதி என்பவரின் மனு தகுதியிழப்பு செய்யப்பட்டது.

மேலும், மணி என்பவருக்கு முன்மொழிந்த நபர் சரியான படிவத்தை பூர்த்தி செய்யவில்லை என்றும், லட்சுமி நாராயணன் என்பவர் பரிந்துரைத்த நபர் கடன் வாங்கிவிட்டு நிலுவை வைத்திருப்பதாகக் கூறி, அவருடைய வேட்புமனுவும் நிராகரிக்கப்பட்டது.

இதனால் ஜோதி பிரசாத் அணி தரப்பில் அவர் உள்பட 5 பேரின் மனுக்கள் ஏற்கபட்டதாக, அந்த சங்கத்தின் தேர்தல் அலுவலர் பூபதி வாய்மொழியாகக் கூறியுள்ளார்.

ஆனாலும், வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்ட வேட்பாளர்களுக்கு அதற்கான காரணம் குறித்து எழுத்துப்பூர்வமாக தகவல் அளிக்கப்படவில்லை.

கர்ணன், மாவட்டத் தேர்தல் அலுவலர்.

இதனால் ஜோதி பிரசாத் அணியினரின் 5 வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டு, தேர்தல் நடத்தப்படும் என்ற நம்பிக்கையில் இருந்த அவர்கள் ஏப்ரல் 2ம் தேதி மாலை 4.30 மணி வரை சங்க அலுவலகத்தில் தேர்தல் அலுவலர் பூபதியுடன் பேசிக்கொண்டு இருந்துள்ளனர்.

அப்போது திடீரென்று துணைப்பதிவாளர் அலுவலகத்தில் இருந்து தனக்கு ஃபோன் வந்திருப்பதால் அங்கு செல்ல வேண்டும் என்றுகூறிவிட்டு விருட்டென தேர்தல் அலுவலர் கிளம்பிச் சென்றதாக சொல்கின்றனர்.

அன்று இரவு 7.30 மணியளவில் தகுதியுள்ள வேட்பாளர்கள் பட்டியல் என்றுகூறி சங்கத்தின் தகவல் பலகையில் ஒரு பட்டியலை ஒட்டியுள்ளனர்.

அந்தப் பட்டியலில் நாமக்கல் பிரமுகரின் அணியைச் சேர்ந்த சுகவனேஸ்வரி, விஜயலட்சுமி, ரமேஷ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன், சுந்தரன், முருகேசன் ஆகிய 7 பேர் கொண்ட பெயர் பட்டியல் ஒட்டப்பட்டது. அந்தப் பட்டியலில் தனது அணியினரின் பெயர்கள் இல்லாததால் ஜோதி பிரசாத் கடும் ஏமாற்றம் அடைந்தார்.

இது தொடர்பாக சங்கத் தேர்தல் அலுவலர், மண்டல இணைப்பதிவாளர் ஆகியோரிடம் முறைப்படி தேர்தல் நடத்த வேண்டும் என்று நேரில் முறையிட்டுள்ளார். ஆனாலும், சாதகமான தகவல்கள் இல்லாததால் ஜோதி பிரசாத் அணி தரப்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக மேற்கண்ட கூட்டுறவு சங்கத்தின் தேர்தல் அலுவலர் பூபதியிடம் அலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டோம்.

”வேட்புமனுவில் சிலருக்கு கையெழுத்து மாறி இருந்ததால் நிராகரித்திருக்கிறோம். சிலர் தவறான காலத்தில் பூர்த்தி செய்ததால் நிராகரிக்கப்பட்டுள்ளனர். எல்லாமே விதிமுறைகள்படிதான் நடந்துள்ளது.

வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதற்கான காரணங்களை வேட்பாளர்களுக்கு சொல்ல வேண்டும் என்று சட்ட விதிகளில் இல்லை. மேலும், தேர்தல் அலுவலராக இப்போதுதான் முதன்முதலில் பணியாற்றுகிறேன். எல்லாமே விதிகளின்படிதான் நடந்துள்ளது. அதுபற்றி மாவட்ட தேர்தல் அலுவலருக்கு தெரிவிக்கப்பட்டு உள்ளது,” என்றார்.

இதுகுறித்து சேலம் மண்டல கூட்டுறவு இணைப்பதிவாளரும், தேர்தல் பார்வையாளருமான ராஜேந்திர பிரசாத்திடம் கேட்டபோது, ”சார்… கூட்டுறவு தேர்தலுக்கென்று மாவட்ட தேர்தல் அலுவலர் ஒருவர் இருக்கிறார். அவரிடம் கேட்டால் விவரங்கள் கிடைக்கும்,” என்றார்.

நாமும் விடாமல் மாவட்ட தேர்தல் அலுவலரும், துணைப்பதிவாளருமான கர்ணனை அலைபேசி மூலம் தொடர்பு கொண்டு கேட்டோம்.

அப்போது அவர், ”கூட்டுறவு வீட்டுவசதி சங்கத் தேர்தல் எல்லாம் என் கட்டுப்பாட்டில் வராது. பிரைமரி சொசைட்டி தேர்தல்தான் எங்களுக்கு வரும். இணைப்பதிவாளர்தான் தேர்தல் பார்வையாளர். நீங்கள் அவரிடமே கேட்டுக்கொள்ளுங்கள்,” என்றார்.

இதையடுத்து நாம் மீண்டும் மேற்படி சங்கத்தின் தேர்தல் அலுவலரான பூபதியிடம் கேட்டபோது, ”இந்த சங்கத்தின் தேர்தல் விவரங்களை மாவட்ட தேர்தல் அலுவலரான கர்ணன் சாரிடம்தான் சமர்ப்பித்திருக்கிறேன். அவர் தவறாக புரிந்து கொண்டுகூட அப்படிச் சொல்லியிருக்கலாம்,” என்றார்.

சேலம் மற்றும் நாமக்கல் மாவட்ட கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்களின் பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன நாணய சங்கத் தேர்தல், மாவட்டத் தேர்தல் அலுவலரின் கட்டுப்பாட்டில் வருமா வராதா என அவருக்கே தெளிவில்லையோ என்னவோ.

இதற்கிடையே, மேற்படி சங்கத்தின் தேர்தல் அலுவலரான பூபதி ஜோதிபிரசாத் அணியைச் சேர்ந்த சக்திவேல் என்பவருடன் அலைபேசியில் பேசியதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

அந்த உரையாடலில், கூட்டுறவு சங்க மாவட்ட தேர்தல் அலுவலர், மேற்கண்ட சங்கத்திற்கு வேட்புமனுத் தாக்கல் செய்யாத ராஜேந்திரன், காடையாம்பட்டி குமார் உள்ளிட்ட சிலரின் பெயர் பட்டியலை கொடுத்து, இறுதி செய்யப்பட்ட வேட்பாளர்களாக அறிவிக்கும்படி தேர்தல் அலுவலருக்கு அழுத்தம் கொடுத்துள்ளார்.

அதற்கு பூபதி, பட்டியலில் உள்ளவர்கள் யாரும் வேட்புமனுத் தாக்கலே செய்யவில்லையே. அதனால் பிரச்னை ஏதும் வந்து விடப்போகிறது என அச்சம் தெரிவித்துள்ளார். அதற்கு அந்த மாவட்ட தேர்தல் அலுவலர், சில சார்பதிவாளர்கள் பெயர்களைச் சொல்லி, அவர்கள் என்ன சொல்கிறார்களோ அதன்படி செய்யுங்கள் என்று கறாராகக் கூறிவிட்டாராம்.

இதனால் நொந்துபோன பூபதி, இனிமேல் தேர்தல் அலுவலர் பணிக்கெல்லாம் தன்னை நியமிக்க வேண்டாம் என மாவட்டத் தேர்தல் அலுவலரிடம் கேட்டுக்கொண்டதாக அந்த உரையாடலில் குறிப்பிட்டுள்ளார்.

மாவட்டத் தேர்தல் அலுவலரும், இன்னும் சில கூட்டுறவு அதிகாரிகளும் கூட்டு சேர்ந்து கொண்டு சார்பதிவாளர் பூபதியை பலிகடாவாக்க திட்டமிட்டிருப்பதும் தெரிய வந்துள்ளது.

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட தரப்பு, தமிழ்நாடு மாநில கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் ஆணையர் ராஜேந்திரனுக்கு புகார் மனுவையும் தட்டிவிட்டுள்ளனர். இந்த சம்பவம், சேலம் மண்டல கூட்டுறவுத்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

– பேனாக்காரன்.